மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருக்குறள் இரவு அதிகாரம் – பகுதி -2

சு. தொண்டியம்மாள்

Nov 19, 2022

siragu-thirukkural

யாரைக் கண்டால் பசி பறக்கும்

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். (திருக்குறள் எண்:1056)

மறைக்காமல் கொடுப்பவரைக் கண்டபொழுதே பசியெல்லாம் பறந்து போய்விடும்.

உதவி கேட்டு வருவோர்க்கு கொடுக்க மனமில்லாமல் பொருளை மறைத்துப் பதுக்கிவைத்தல் ஒரு நோய். அவ்வகைக் ‘கரப்பு இடும்பை’ அதாவது மறைக்கும் நோய் இல்லாதவர்களைக் கண்டவுடன் இரவலரது ‘நிரப்பிடும்பை’ அதாவது வறுமைத் துன்பம் எல்லாமே அவரைவிட்டு அடியோடு அகன்றுவிடும்.

இரக்கத்தக்கவர் யார் என்று அறிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவது. மறைக்காமல் கொடுப்பவரா என்று அறிந்து செல்ல வேண்டும் என்பது திருவள்ளுவரின் அறிவுரையாக அமைகிறது.

‘ஒவ்வொரு மனிதனும் தன்னிடத்தில் இருக்கிற பொருளை அது இல்லாத ஒருவன் கேட்டவுடனே இல்லையென்று மறைக்காமல் கொடுக்க முடியுமானால், உலக சமுதாயம் ஒரு சர்வோதய சமுதாயமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் பிச்சை கேட்கிற துன்பம் இருக்காது’ என வேறொரு பார்வையில் இத்திருக்குறளுக்கு பொருள் கொள்ளலாம் இவ்வகையில் ‘இத்திருக்குறள் மிகவும் ஆழ்ந்த கருத்துள்ளதாக அமைந்துள்ளது.

இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து (திருக்குறள் எண்:1057)

இகழ்ச்சியின்றி பெறும் பொருள் ஆழ்மனத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.

பொருள் குவித்த சிலர் கொடை நல்லது என்று எல்லோரும் சொல்கிறார்களே என்று கொடுக்கத் தொடங்குவர். ஆனால் அவர்களில் சிலர் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவராகவும் இருப்பர். அவர்கள் ஈயும்போது பெறுபவரின் ஏழ்மை நிலையைக் குத்திக்காட்டி உள்ளம் புண்படும்படி ஏதாவது உரைத்தே கொடுப்பர். மற்றவர்கள் உள்ளம் நோகச் செய்வதில் இருந்து இன்பம் பெறும் இத்தகையர் இரக்கத்தக்கவர் அல்லர். மாறாக, இகழாமல், எளக்காரம் செய்யாமல், இரப்பவருக்கு கொடுத்து உதவ வல்ல வள்ளன்மையோடிருக்கும் ஈவாரைக் காணும்போது, இரவலர் உள்ளம் மிக்க மகிழ்ச்சி எய்தும், அவர்களது ஆழ்மனத்தில் உவகை பொங்கும்.

சங்கப் பாடல் ஒன்றில், புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி (அகம் 32 1-4 பொருள்: செல்வன் போல் உடைகளும் உடுத்தியிருந்தவன் தான்! ஆனால், இரத்தல் செய்யும் மக்களைப் போல எளிய சொற்களால் பணிந்த மொழிகளைப் பலகாற் பேசினான்.) என்று காதலனைப் பற்றி நகையாடிப் பேசுகிறாள் தலைவி. அதுபோல், பொருள்மிகக் கொண்டிருந்தாலும் ஈபவன் இகழாமல் எள்ளாமல் இரவலன்போல் பணிவாகப் பேசவேண்டும். வந்தவன் வறியவன் என்றாலும் பழித்துத் தாழ்வுபடுத்தாது ஆதரவுடன் மதித்துப் பேசி பொருள் வழங்கி அனுப்ப வேண்டும். இத்தகைய நல்லோரைக் கண்டால், தன்மான உணர்ச்சி மிகுந்த இரவலர் மனம் மகிழ்ந்து உள்ளாரக் களிப்புறும்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று (திருக்குறள் எண்:1058)

இரப்பார்-ஈவார் இல்லாத நிலவுலகம் மரப்பொம்மைகள் போன்ற மாந்தர் உலவும் குடியிருப்புபோல் தோன்றும்.

குளிர்ந்த இடத்தையுடைய இப்பெரிய உலகில் வறுமையால் இரந்து கேட்பவர் இல்லாமற்போயின், இங்குள்ள மக்கள் மரப்பாவை சென்று வந்து இயங்கிக் கொண்டிருந்தால் எவ்விதம் இருக்குமோ அவ்விதம் சிறிதும் உணர்ச்சியற்றவராகக் காணப்படுவர்.

இரவலர்கள் இல்லா உலகம் மரப்பாவைகள் நடமாடும் இடம்போல் காட்சியளிக்கும் என்கிறது பாடல். இரப்பார் இல்லையெனில் ஈவாருமிருக்க வழியில்லையாதலால் அவ்விடத்தில் இரக்க உணர்வு இல்லை, அன்பு இருக்காது. அன்பின் வழியது உயிர்நிலை, எனவே அங்கு உயிரும் இல்லை, அவ்வுலகிலுள்ள மாந்தரின் அசைவுகள் எல்லாம் உயிர்ப்பும் உணர்வுமில்லா வெறும் மரப்பாவைகள் போல்வனவாகும்.

இரத்தல் இல்லாமல் இருத்தல் என்பது இலக்கியலான கோட்பாடு. ஆனால் நடைமுறை என்பது வேறு. ஏழை பணக்காரன் என்பதும் உள்ளவன் – இல்லாதவன் என்பதும் என்றும் மறையப் போவதில்லை. புறவாழ்வின் அனைத்து பரப்புக்களிலும் ஏற்றத் தாழ்வு ஒழிந்துவிட்ட, யாரும் யாரிடமும் ஏற்க வேண்டிய தேவை இல்லாத ஒர் உயர்ந்த சமுதாயத்தில் எதனையும் இரப்பாரும் இல்லாது, கொடுப்பாரும் இல்லாத ஒரு முழுமையான சீர்மை நிலை வரும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் அன்புக்கோ மனித நேயத்துக்கோ இடம் இல்லை. இப்பெரிய உலகம் அருளற்று ஈரம் இல்லாமல் போகும், மாந்தர் வாழ்வு சுவையற்றதாக இருக்கும். அப்போது இவ்வுலகின் இயக்கம் செயற்கையானதாகவும், முடுக்கிவிடப்பட்டதாகவும் இருக்கும், ரோபோக்கள் (Robots) அதாவது எந்திரன்கள் நடமாடும் உலகமாக ஆகிவிடும். இரப்பவர்கள் இருந்தால்தான் அன்பு, மனித உணர்வு போன்ற உயர் பண்புகள் சிறந்து விளங்கும். உலகோர் இயக்கம் சுவையானதாகவும் இருக்கும்.

மணிமேகலை எனும் பௌத்த காப்பியத்தில் வரும், “ஆபுத்திரன் தனது அமுதசுரபியிலிருந்து எடுத்து வாடியோர்க்குச் சோறு கொடுத்து வந்தான். அவனைத் தண்டிக்க விரும்பிய இந்திரன் சோறு கேட்க ஒருவரும் அவனிடம் வராதபடிச் செய்துவிட்டான்” என்ற கதை இந்த உண்மையைத்தான் விளக்குகிறது. பிறரிடம் உதவி பெறுபவர்கள் இல்லாதபோது எங்கே ஒற்றுமையும் மனித மதிப்புகளை வெளிப்படுத்தவும் இடம்? இப்படி இருப்பவர்கள் இல்லையானால் நம்மிடம் அன்பு என்பது எப்படி வெளிப்பட்டு விளங்கும்? அன்பிற்கு இடமில்லாதபோது சமுதாயம் மரப்பொம்மைகளின் நடமாட்டமாகவே முடியும்’ எனக் கூறி ‘ஒருவரையொருவர் நாடிவாழ்வது பிச்சையாகாது. கூட்டுறவு வாழ்க்கையின் விளக்கம் அது கூட்டுறவு வாழ்வின் எதிர்மறை வழியாகக் கூட்டுறவுத் தத்துவத்தை வள்ளுவர் விளக்குவது மிகச் சுவை உடையது’ என்று இக்குறளுக்கு விளக்கம் அளித்துள்ளார் நம் திருவள்ளுவர்.

அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (அன்புடைமை 78 பொருள்: உள்ளத்தில் அன்பில்லாது உயிர் வாழ்தல் என்பது வன்மையுடைய நிலத்தின்கண் வற்றல் மரம் தளிர்த்தல் போலும்) என்ற குறளில் கூறப்பட்டது. இங்கு இரக்க குணத்திற்கு வாய்ப்பில்லா இடத்தில் மாந்தர் வாழ்க்கை சிறக்காது எனச் சொல்லப்படுகிறது.
எடுப்பார் இல்லையென்றால் கொடுப்பார் எங்கிருப்பார்?

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை (திருக்குறள் எண்:1059)

ஒரு பொருளை இரந்து கேட்டுப் பெற விரும்புவோர் இல்லாதபோது பொருள் தருவோர்க்கு என்ன பெருமை உண்டாகும்? ஒன்றுமில்லை.

உலகம் உயிர்ப்புடன் விளங்க இரப்பாரும் ஈவாரும் தேவை என்று முந்தைய குறள் (1058) கூறியது. இங்கும் தமது இல்லாமையைப் போக்க இரந்து பெற்றுக் கொள்ளுதலை, மேற்கொள்பவர் சிலர் உலகில் இருத்தலும் வேண்டத் தக்கதே என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ஈவார் எடுப்பான தோற்றம் தரும் புகழை விரும்புவர். அது இசைபட வாழ்தலாகிய புகழ்த்தோற்றம். ‘இவர் கருணைமிகுந்த வள்ளல்’ என்று பெயர் தோன்றும்படி இருக்கவே கொடையாளிகள் விரும்புவர். அவ்விதம் புகழப்படவேண்டும் வண்ணம் தோற்றம் இருக்க வேண்டும் என்றால், அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள இரப்பாரும் இருக்கவேண்டும். இரப்பாரின்றி ஈவாரில்லை; ஈகையின்றிப் புகழில்லை. எனவே கொடுப்பாரின் தோற்றத்துக்கு இரப்பாரே காரணமாகிறார்.

வறுமைத் துன்பம் சான்றாவது எங்ஙனம்?

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி (திருக்குறள் எண்:1060)

இரக்கச் செல்பவன், இரக்கப்பட்டாரிடம் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அவன் அடைந்துள்ள பசித் துன்பமே அதை அவனுக்கு அறிவுறுத்தும் சான்றாக அமையும்.

வள்ளல்களுக்கும் கொடுக்கமுடியாத காலம் வருவதுண்டு. இதை உணர்ந்து உதவி வேண்டுபவர் தான் இரந்தபொருள் கிடைக்கவில்லையானாலும் கொடுப்பவரிடம் தகாத முறையில் நடந்து வசவு மொழிகளை வழங்கக்கூடாது. தான் வறுமையில் பட்ட துன்பத்தை நினைந்து, இரப்பவன் தன் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இரப்பவர் உரிமை பாராட்டி ஈவாரிடம் தனக்குப் பொருள் கொடுத்தே ஆகவேண்டுமா என வற்புறுத்த முடியாது. அவர் தன் வறுமையைத்தான் பழிக்க வேண்டும். கொடையாளியையல்ல. இவ்வாறு ஈகை அறத்தைச் செல்வர்க்குப் பல இடங்களில் அறிவுறுத்திய வள்ளுவர் ‘அவர் கொடுக்காவிட்டாலும் நீ வெகுளாதே’ என இங்கு இரப்பவர் தன் உள்ளத்தைப் பண்படுத்திக் கொள்ள அறிவுரையும் கூறுகிறார்

முடிவுரை

இரவு என்ற இவ்வதிகாரத்தில் யாசித்தல், என்பதை அதிகம் வலியுறுத்தாமல், யாசிப்பவர்களுக்கு மறைக்காமல் கொடுத்தல் வேண்டும் என்பதையே அனைத்து குறட்பாக்களிலும் கூறப்பட்டுள்ளன. மறைத்தால் பெரும்பழி உண்டாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருக்குறள் இரவு அதிகாரம் – பகுதி -2”

அதிகம் படித்தது