மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருச்சி பெரியார் மாளிகை

தேமொழி

Jan 20, 2018

சென்ற நூற்றாண்டின் தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்குக் காரணமான முடிவுகள், திட்டங்கள் தீட்டப்பட்ட இடங்கள் சில திருச்சி மாநகரில் உண்டு.  அவற்றில் ஒன்று திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை (புவியிடக் குறிப்பு: 10.814159, 78.675790).   இந்த இடத்தைப் பெரியார் இயக்கத்திற்காக வாங்க சுயமரியாதை இயக்கத் தொண்டரான தி. பொ. வேதாசலம் பெரும் முயற்சி செய்தார் எனவும், பின்னர் இவர் திருச்சியில் பெரியாரால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத் தாளாளராக அமர்த்தப்பட்டார் என்றும் வே. ஆனைமுத்து அவர்களின் நூல் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்) குறிப்பிடுகிறது.

தமிழக அரசியலில் திருப்புமுனையாக, 1967-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பொழுது, முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்னர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள், கலைஞர் கருணாநிதியுடனும் நாவலர் நெடுஞ்செழியனுடனும்  திருச்சி பெரியார் மாளிகையில் தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து தங்கள் கட்சியின் வெற்றியைச் சமர்ப்பித்து அவரது வாழ்த்தைப் பெற்றார்.  திராவிடக்கழகத்தில் இருந்து பிரிந்து சென்றதால் அவர்கள் மீது கசப்புணர்வுடன் இருந்த பெரியார், அவர்களுக்கு எதிராகவும் தேர்தலிலும் பிரச்சாரம் செய்திருந்தார். இருப்பினும் அந்தப் பிரிவினையைப் பொருட்படுத்தாது அவரை மதித்து, மறக்காமல் வாழ்த்துப் பெற வந்தவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று பாராட்டி வாழ்த்தியிருக்கிறார் பெரியார்.

இந்த நிகழ்வை ‘பெரியார்’ திரைப்படம் காட்சிப்படுத்தியிருந்தது. அதில் “சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க” என்று எவ்வாறு பெரியார் போலப் பேசவேண்டும் என்பதைக் கலைஞர் கருணாநிதி சொல்லிக்கொடுத்தபடி நடித்ததாக பெரியாராக நடித்த நடிகர் சத்தியராஜ் மாலைமலர் செய்தித்தாள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் (மாலைமலர், பதிவு: ஏப்ரல் 05, 2016).  இந்த சந்திப்புக் காட்சி திரைப்படத்திற்காக திருச்சி பெரியார் மாளிகையிலேயே எடுக்கப்பட்டது (பார்க்க: https://youtu.be/3ckLE5lzyxc?t=2h31m19s).

திருச்சியிலேயே 20 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும் பெரியார் மாளிகையைப் பார்க்கும் வாய்ப்பு இருந்ததில்லை. பெரியாரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளத் துவங்கியதும் பெரியார் மாளிகையை, அவர் வாழ்ந்த இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் துளிர் விடத் துவங்கியது. சென்ற முறை இந்தியப் பயணத்தில் அதற்கு ஒரு வாய்ப்பும் கிட்டியது.  திருச்சி- வயலூர் சாலையில், பிஷப் ஹீபர் கல்லூரிக்கு எதிரே பெரியார் மாளிகை வளாகம் உள்ளது. அங்கு இப்பொழுது பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (Periyar Training Institute) இயங்குகிறது. மஞ்சளும் பச்சையும் வர்ணம் பூசப்பட்ட பழங்காலக் கட்டிட அமைப்பில் பெரியார் இல்லம் தோற்றம் தருகிறது.

siragu periyar maligai office

டிசம்பர் இறுதி வாரத்தின் ஓர் நாளில் நண்பகல் பெரியார் மாளிகையில் இயங்கும் மாவட்ட திராவிட அலுவலகத்திற்குச் சென்று, பெரியார் வாழ்ந்த இல்லத்தின் உள்ளே சென்று பார்க்க அனுமதி கோரிய பொழுது, அலுவலகத்தின் பொறுப்பில் இருந்த தோழர் ஒருவர் பார்வையாளர்களின் பெயர், விவரம், நோக்கம் போன்ற தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, தனது மேலாளர் யாருடனோ தொலைப்பேசியில் பேசி அனுமதி பெற்ற பிறகு பெரியார் வாழ்ந்த இல்லத்தைத் திறந்து விட்டு, எங்களுக்கு வழிகாட்டியாக விளக்கங்களும் கொடுத்து உதவினார்.

அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இடப்பக்கத்தில் ஊர்தி நிறுத்துமிடத்தில் பெரியார் இறுதியாகப் பயணித்த TMZ 9595 என்ற பதிவெண்ணைக் கொண்ட, வெள்ளை-நீல வண்ண வேன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வேன் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கங்கள் கொண்ட பலகைகளும் காணப்பட்டன. இந்த வண்டி மக்களால் பெரியாருக்கு 1973 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் திங்கள் தஞ்சையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்பகுதிக்கும் சென்றுவர அரசால் இவ்வண்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டதாம். இந்த வண்டியில் இருந்துதான் பெரியார் தனது இறுதிப் பேருரையை ஆற்றியிருக்கிறார். இந்த வண்டி பெரியாருக்கு உதவிய காலம் வெறும் நான்கு மாதங்கள் மட்டுமே. அதே ஆண்டில் டிசம்பர் 24, 1973 அன்று பெரியார் மறைந்துவிட்டார்.

siragu-periyar-van-board1

கழக அலுவலகத்தின் நுழைவாயிலின் வலது பக்கம் அக்கால ஸ்ப்ரிங் கேட் என அழைக்கப்படும் இரும்புக்கம்பி நுழைவாயிலுடன் கூடிய பெரியாரின் மாளிகையும், அதற்கு அடுத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனக் கட்டிடமும் உள்ளது. கம்பி வாயிலைக் கடந்தால், சிறிய வராந்தாவிற்குப் பிறகு வரவேற்பறை உள்ளது. இதன் சுவர்களைப் பெரியார் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளையும், அவருடன் தொடர்பு கொண்டிருந்த பல பெரியோர்களைக் கொண்ட படங்கள் அலங்கரிக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில படங்கள்: தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் பெரியார் உரையாடும் படம், ஜின்னா மற்றும் அம்பேத்கருடன் மும்பையில் நடந்த சந்திப்பு குறித்த படங்களுமாகும்.

siragu periyar maligai

siragu periyar home entrance

siragu periyar home reception

siragu periyar adigalar

siragu periyar jinna ambedkar

siragu periyar bedroom2

வரவேற்பறைக்கு அடுத்துள்ள, தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய அறைக்கு (படுக்கையறை) செல்லும் வாசலுக்கு மேற்சுவரில் பெரியாரின் படமும், அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் உள்ள படங்களும் உள்ளன. பெரியார் வாழ்ந்த காலத்தில் இருந்த பொருட்களுடன் இக்காலத்தில் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும், வாழ்த்துகளும் வரவேற்பறையிலும் பெரியாரின் அறையிலும் காணப்படுகின்றன.

siragu periyar bedroom1

siragu periyar

பெரியாரின் படுக்கை அறையில், (திரைப்படத்திலும் காட்டப்பட்ட அறையில்) நடுவில் கட்டிலும் அதில் பெரியாரும் அவரது அருகில் உடன் துணையாக இருந்த அவரது செல்ல நாயும் அமர்ந்திருந்த காட்சியை நினைவூட்டும் வகையில் படுக்கையின் மேலே சிறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கட்டில்மேலே உள்ள கொசுவலை கட்டும் கம்பிச்சட்டத்தில் படுக்கைக்குப் பின்னே அவர் பயன்படுத்திய கைத்தடியும் மாட்டப்பட்டுள்ளது. அதைத் தொட்டுப் பார்க்கலாமா என்று வழிகாட்டிய அலுவலகத் தோழர்களிடம் அனுமதி பெற்று, பெரியார் பயன்படுத்திய கைத்தடியை தொட்டுப் பார்த்த அனுபவம் என்றும் நினைவில் இருந்து மறையாது. அறையில் சுற்றிலும் நிறையப் புத்தக அலமாரிகள் புத்தகங்களுடன் நிரம்பியிருந்தன.

siragu periyar books

இல்லத்தில் இருந்து வெளியேறியதும் இடது புறம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின்  கட்டிடம்  உள்ளது. எங்கள் காரோட்டி திரு. குணசேகர் அவர்கள், பெரியார் உயிருடன் இருந்த சமயம் அந்தக் கட்டிடத்தின் வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, தனது நாய் அருகில் தரையில் அமர்ந்திருக்க படித்துக் கொண்டிருப்பார் என்றும், தனது பிள்ளைகள் அங்கு வந்து விளையாடும் பொழுது இவரும் பெரியாரின் அருகே படியில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

siragu periyar training center

தொடர்ந்து சென்றால், கட்டிடத்தின் பக்கவாட்டில் உள்ள சிறு திடலில் மார்ச்  1993 அன்று திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையும், சிலையின் அடிப்பகுதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள்  பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.

siragu periyar statue

பொன்மொழிகள்

siragu periyar teaching

கடவுள் இல்லை  கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கற்பித்தவன் முட்டாள்

கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கையாலாகாதவனுக்கு கடவுள் துணை

அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்

தவறை உணரமுடியாதவனுக்கு தலைவிதி

கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான்

விதியை நம்பினவன் மதியை இழப்பான்

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம். பகுத்தறிவு என்பது மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்கவேண்டுமென்பதையும் மற்ற மனிதர்களுக்குத் தன்னாலான தொண்டு உதவி செய்யவேண்டும் என்பதையும் பெரிதும் தத்துவமாகக் கொண்டது ஆகும்.

பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி மனிதர் வாழ்க்கைத்தரம் என்னவோஅதன்படி நடந்து கொள்வதை நடப்புலட்சியமாகக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

பக்தி என்பது தனிச்சொத்து

ஒழுக்கம் என்பது பொதுசொத்து.

பக்தி இல்லாவிட்டால் நட்டமில்லை;

ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால்

எல்லாமே பாழ்.

அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து

வராததை பயத்தால் நம்புகிறவன்

பக்குவமடைந்த மனிதனாகான்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படியே எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கம் ஆகும்.

மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால் மாணவப் பருவத்தில்தான் முடியும்.

நாத்திகர்கள் என்றால் அறிவுவாதிகள் பகுத்தறிவைப் பயன்படுத்துபவர்கள் என்றுதான் பொருள்.

கல்வியறிவும், சுயமரியாதையும் எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

                — பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

திருச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையையும் படம் எடுக்க விரும்பினாலும், அவரது மறைவுநாளுக்கு அஞ்சலி செலுத்தி ஒருவாரமே ஆன நிலையில் பெரியாரின் முகம் முழுவதும் மறைக்கும் வண்ணம்  மாலைகள் பல சூட்டப்பட்டிருந்ததால்  அடுத்தமுறை திருச்சிப் பயணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருச்சி பெரியார் மாளிகை”

அதிகம் படித்தது