மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருத்தேர்வளை திருக்கோயில் வரலாறு

என். சூர்யா

Apr 23, 2022

 siragu thiruthervalai1

திருக்கோயிலின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழகதத்தின் கலைச் சின்னங்களாக திருக்கோயில்களும், அவற்றின் சிற்பங்களும், கட்டக் கலை அமைப்புகளும் விளங்குகின்றன. இவையே உலகில் தனித்த சிறப்பான கலை உருவாக்கத்தைப் பெற்ற பகுதி தமிழகம் என்பதை மெய்ப்பித்து வருகின்றன.

தமிழகத்தில் காலந்தோறும் பல கோயில்கள் தோற்றம் பெற்று வளர்ந்துள்ளன. சங்க காலம் தொடங்கி, காப்பிய காலம் தொட்டு, பல்லவர் காலம், சோழர் காலம்,  பாண்டியர் காலம், நாயக்கர் காலம் என்று காலந்தோறும் தமிழகக் கோயில்கலை வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இக்காலங்களில் கட்டப்பெற்ற கோயில் அவற்றுக்கென தனித்த சிறப்பு கூறுகளையும் கொண்டு விளங்குகின்றன. ஒரு கோயிலின் அமைப்பினைப் பார்த்தால்  இது இக்காலத்தின் கோயில் என்று சொல்லும் அளவிற்கு வேறுபாடுகளும் தனித்துவங்களும் கோயில் கலையில் காணப் பெறுகின்றது.

மனிதனின் அகத்திற்கும், புறத்திற்கும் அரணாக அமைந்து ஒழுக்க நெறிக்கு ஊன்று கோலாவது திருக்கோயில்களும். அதன் வழிபாட்டு நெறிகளும் ஆகும். தொடக்கத்தில் மூல தெய்வத்தை மட்டும் கொண்ட திருக்கோயில்கள் காலவோட்டத்தில் மாந்தர்களின் எண்ணத்தாலும் செல்வ வளத்தாலும் பலவகையான கட்டிட அமைப்பைப் பெற்று வளர்ந்தன. மரத்தாலும் ,செங்கற்களாலும் கட்டப்பட்ட கோயில்கள் காலவோட்டத்தில் அழிந்து பட்டதால் பல்லவர் காலம் முதல் கருங்கற்களால் கட்டத் தொடங்கினார். இக்கோயில்கள் காலங்கடந்தும் நிலைத்து நிற்பனவாயின.

பல்லவர் காலத்தில் குடவரை, கற்றளி ஆகிய நிலைகளில் திருக்கோயில்கள் கட்டப்பெற்றன. கற்றளி என்ற நிலையில் கட்டப்பெற்ற கோயில்கள் மெல்ல வளர்ந்து  பிற்காலத்தில் செங்கல், சாந்து வைத்துக் கட்டப்படும் நிலையிலும் கற்றளி அமைப்பினைப் பெற்று வளர்ந்தன.

அவ்வகையில் திருத்தேர்வளை என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு ஆண்டு கொண்டேஸ்வரர் திருக்கோயில் கற்றளி  கோயிலாக விளங்குகிறது. அதன் வரலாறு, வளர்ச்சி குறித்து இவ்வியல் எடுத்துரைக்கின்றது.

திருக்கோயில் அமைவிடம்

”இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராஜசிங்க மங்கலம் வட்டம் திருத்தேர்வளையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இராஜ சிங்க மங்கல வட்டம் என்பது புதிதாக உருவாக்கப்பெற்ற வட்டமாகும்.  இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு இவ்வட்டம் உருவாக்கப்பெற்றது.  இது திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குள்ளும், இராமநாதபுர மக்களவைத் தொகுதிக்குள்ளும் அமைந்துள்ளது.

இராஜசிங்க மங்கல வட்டத்தில் பெரிய கண்மாய் ஒன்று அமைந்துள்ளது. இதனை நாரை தாவாத நாற்பத்தெட்டு மடை உள்ள கண்மாய் என்று சிறப்பித்து அழைக்கும் வழக்கம் உள்ளது.

இராஜசிங்கமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும்  இராஜசிங்கமங்கலம்  என மூன்று உள்வட்டங்களையும், முப்பத்தொன்பது  வருவாய் கிராமங்களையும்  கொண்டது. இக்கிராமங்களில் ஒன்று திருத்தேர்வளை ஆகும்.

திருத்தேர்வளை இராமநாதபுரத்திலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர்  தூரத்தில் அமைந்துள்ளது .ஆனந்தூரிலிருந்து சுமார் மூன்று கல் தொலைவில் அமைந்துள்ளது. இராமநாதபுரத்திலிருந்து ஆனந்தூர் செல்லும் வழித்தடத்தில் மேற்கே மூன்று கல் தொலைவில் திருத்தேர்வளை என்ற ஊர் அமைந்துள்ளது.

திருத்தேர்வளை – ஊர் அறிமுகம்

திருத்தேர்வளை ஊராட்சி ஒன்றியமாக விளங்குகிறது.  இதனுள் பல கிராமங்கள் அடங்கியுள்ளன.

  1. ஓடக்கரை
  2. மேலப்பச்சசேரி
  3. திருத்தேர்வளை
  4. இந்திராநகர்
  5. வெள்ளாரேந்தல்
  6. திருத்தேர்வளை காலணி
  7. கனக்கனேந்தல்
  8. கப்பகுடி
  9. கீழப்பச்சோரி
  10. கீழக்கோட்டை
  11. நாடார்கோட்டை
  12. சேந்தமங்கலம்
  13. தப்பகுடிதச்சநேந்தால்
  14. கிழக்குகுடியிருப்பு
  15. அழகாபுரி

என்ற பதினைந்து சிற்றூர்களைக் கொண்ட ஊராட்சி ஒன்றியமாகத் திருத்தேர்வளை விளங்குகிறது.

திருத்தேர்வளை பெயர்க்காரணம்

திருத்தேர்வளை என்று இந்த ஊருக்கு ஒரு காரணம் கருதி பெயர் அமைந்துள்ளது. இதற்கான காரணம் வாய்மொழிக் கதையாக விளங்கி வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பெற்ற தேர்  ஒன்று இவ்வூரில் இருந்தது. ஒருமுறை அத்தேரினை இழுத்து வரும் போது சிவனுக்கு உரிய குளத்தில் அது மூழ்கி மறைந்து விட்டதாக ஒரு வாய்மொழிக் கதை உள்ளது. மறைந்த தேர் என்றாவது வெளிவரும் என்ற நம்பிக்கை இன்னமும் உள்ளது. இதன் காரணமாக,  அதாவது, திருத்தேர்வளைந்து குளத்துக்குள் சென்று விட்ட காரணத்தால் இவ்வூருக்குத் திருத்தேர்வளை எனப் பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.1

திருத்தேர்வளை ஊர் சிறப்பு

திருத்தேர்வளை ஊரில்  அனைத்து இன மக்களும் அமைதியுடனும், அன்புடனும், இணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.  இவ்வூரில் நெல் விளைச்சலே முக்கியமான தொழில் ஆகும். மேலும் வெளிநாட்டில் பணியாற்றுவோர் அதிகமாக இருப்பதால் இவ்வூர் செல்வச் செழிப்பான ஊராக விளங்கி வருகிறது.

இவ்வூரில் உள்ள இரண்டு தெய்வங்களும் மண்ணில் இருந்து  சுயம்பாக தோன்றின என்பது இவ்வூருக்குக் கிடைத்த சிறப்பாகும். இங்குள்ள கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம் மண்ணில் இருந்து தானாகவே வெளியே வந்து மக்களை ஆண்டு கொண்டதால் அந்த லிங்கத்திற்கு ஆண்டு கொண்டீஸ்வரர் எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவ்வூரில் உள்ள அருள்மிகு ஆகாச முத்துக் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள தெய்வமும் சுயம்பாக எழுந்ததாகும். இத்தெய்வம் மண்ணில் பாதி உருவத்தை வைத்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி காட்சி அளிக்கிறது.

இவ்வாறு இரு சுயம்பு வடிவங்களும் இவ்வூரில் அமைந்து இவ்வூரைச் சிறப்பித்து வருகின்றன.

ஆண்டு கொண்டேஸ்வரர் பெயர் காரணம் 

இத்திருக்கோயில் ஆண்டுகொண்டீஸ்வரர் மூல தெய்வமாக காணப்படுகிறார் இறைவனைப் பற்றி மக்கள் பலவாறு பேசி வருகின்றனர். அதாவது பல வருடங்களுக்கு முன்பு ஊரில் மக்கள் மழை இல்லாமல் நோய் முடியிலும் பசி பட்டினியாலும் வருந்தி வாழ்ந்திருந்தனர். அதே காலத்தில் முதியவர் ஒருவர் வழிநடையாக செல்லும் பாதையில் ஒரு கல் இருந்ததைப் பார்த்துள்ளார்.

ஒருநாள் அவ்வழியே அவர் செல்லும்போது அக்கல் முழுமையாக வெளியே தெரிந்துள்ளது. இது  அவரை வியப்படையச் செய்தது. அக்கல்  லிங்கவடிவில் பார்ப்பதற்கு பரவசமூட்டும் நிலையில் இருந்தது. அதனைக் கண்ட முதியவர் அதனை வழிபட ஆரம்பித்தார் அதனால் அவரது வறுமையும் துன்பமும் நீங்கி வளத்தோடும் நலத்தோடும் வாழ்ந்தார்.இதனை அறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இறைவனை வழிபட்டு சிறப்புச் செய்தனர்.

மக்களின் வழிபாட்டின் மூலம் நல்ல மழை பெய்தது.  மக்கள் அனைவரும் நோய் நீங்கி பசி பட்டினி நீங்கி வளத்தோடு வாழ்ந்து வந்தனர். இறைவன் தானாக தோன்றி மக்களை ஆண்டு அருள் புரிந்து வந்ததால் ஆண்டு கொண்டீஸ்வரர் என இக்கோயில் இறைவன் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவ்வூரில் சுயம்புவாகத் தோன்றி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் லிங்கத்தை மனதார வேண்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று மக்கள் காலங்காலமாக நம்பி வருகின்றனர்.

திருக்கோயில் தோற்றம் வரலாறு

திருத்தேர்வளை பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிவலிங்கம் ஒன்று  மண்ணிலிருந்து சுயம்பாக தோன்றியிருந்தது.  இந்த லிங்கம் பூமியில் ஒரு திட்டு வடிவில் இருந்துவந்தது.

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரின் கனவில் ‘‘இராமநாதபுரத்தின் வடபாகத்தில்  நான் சுயம்பாக தோன்றி இருக்கிறேன்.  எனக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும்”  என்று இச்சுயம்பு லிங்கம் சொல்லியது.  இதனைக் கண்ட அக்கால சேதுபதி மன்னர் கோவில் கட்டுவதற்காக கற்களையும், தூண்  போன்ற கட்டுமானப் பொருட்களையும் கொண்டு வந்துள்ளார். ஆனால் சில பல காரணங்களால், தடைகளால் கோயில்  கட்ட முடியாமல் போனது.

அதன் பிறகு சில காலம் கழித்து இராமநாதபுர சமஸ்தானத்தைச் சார்ந்த தளவாய் சேதுபதி என்பவர் கோவிலைக் கட்டலாம் என முடிவு செய்து திருப்பணியை மேற்கொண்டார்.   கோயில்  கட்டி முடிப்பதற்கு முன்பு அவர் இறப்பினைத் தழுவிய நிலையில்  கோயில் பணி நிறைவடையாமல் போய்விட்டது. அதன் பிறகு நெடுங்காலம் கழித்து,  இத்தெய்வத்தின் குலதெய்வக்காரர்களும் தேவகோட்டையைச் சேர்ந்த ஜமீன்தார் நாராயணன் செட்டியார் என்பவரும் முன்னெடுத்து, கோயில் கட்டும்  பணிகளை தொடர்ந்தனர். அவர்கள் இத்திருக்கோயில் திருப்பணியை இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கி இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முடித்துக் கும்பாபிடேகத்தைச் செய்தனர்.

தளவாய் சேதுபதி கட்டிய கோயில்

இராமநாதபுர சேதுபதி மன்னர்களின் ஆட்சியானது உடையான் சேதுபதி என்பவரின் ஆட்சிக்காலம் முதல் ஆரம்பமாகின்றது. இதன்பின்  கூத்தன் சேதுபதி என்பவர் ஆண்டார்.  இம்மன்னருக்குத் தம்பித் தேவர் என்ற மகன் இருந்து வந்தார் ஆனால் ராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த முதியவர்கள் தம்பித்தேவரது உரிமையைப் புறக்கணித்துவிட்டுக் கூத்தன் சேதுபதியின் இளைய சகோதரரான சடையக்கத் தேவரை இரண்டாவது சடையக்கன் சேது பதியாக அதிகரித்து சேதுபதி பட்டத்தினை அவருக்கு சூட்டினர் . இவருக்கு தளவாய் சேதுபதி என்று மற்றொரு பெயரும் உண்டு.

இராமநாதபுரம் அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பிநாட்டு மறவர் குல பெண்மணியின் மூலமாக பிறந்த மகனுக்கு மட்டுமே சேதுபதிப் பட்டம் மட்டும் உரியதாக இருந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவி செம்பினாட்டு மறவர் இனத்தைச் சாராத பெண்மணிக்குப் பிறந்தவர் தம்பி தேவர் என்பதால் அவர் சேதுபதி பட்டத்திற்கான தகுதியை இழந்தவராக அவர்கள் கருதினர். இச் சடையக்கன் சேதுபதி கி.பி. ஆயிரத்து அறுநூற்று முப்பத்தைந்தாம் ஆண்டு  முதல் கிபி, ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் மன்னராக. இருந்துவந்தார்.

தமது பேரரசுக்கு கீழ் உள்ள மறவர் சீமையின்  வலிமை நாளுக்குநாள் பெருகி வருவதை விரும்பாத மதுரை மன்னர் திருமலை நாயக்கர் சேது நாட்டின்மீது மிகப்பெரிய படையெடுப்பினை கி.பி. ஆயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பதாம் ஆண்டளவில் நிகழ்த்தினார்.  அதுவரை  கண்டறியாத மிகப்பெரிய போர் அணிகளை அவர் சேது நாட்டிற்குள்  அனுப்பி வைத்தார். வடக்கே கொங்கு நாட்டில் இருந்து தெற்கே நாஞ்சில் நாடு வரையிலான நீண்ட பகுதியில் அமைந்திருக்கும் நாயக்க மன்னரின் எழுபத்தியிரண்டுப் பாளையங்களைச் சார்ந்த வீரர்கள் இந்த படையெடுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டனர்.  இந்த படையெடுப்பைத் தலைமை தாங்கி நடத்தியவர் திருமலை நாயக்க மன்னரின் தளவாய் இராமப்பையன். நாயக்கர் படைகள் தொடக்கத்தில் சேது நாட்டிற்குள் புகுந்து எளிதாக போகலூர், அரியாண்டிபுரம்  ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றின. மேலும் கிழக்கே முன்னேறி சென்றனர்.

இப்போது .சேது நாட்டு மறவர்கள் நாயக்கர் படைகள் மீது  கடுமையான தாக்குதலைத் தொடங்கினர். இதனைத் தாங்க முடியாத மதுரை படைகள் சோர்ந்தன. மேலும் மதுரை பேரரசிற்கு வடக்கே பிஜப்பூர் சுல்தானின் படையெடுப்பு அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தமையால்,  சேது நாட்டின் மீதான படையெடுப்பு நிறுத்தப்பட்டது.  பின்பு போர்த்துகீசியர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் வடக்கு அபாயம் நீங்கியது. மீண்டும் சேது நாட்டுப் போர் தொடங்கியது.

இதனிடையில் வலிமை வாய்ந்த நாயக்கர் படையைச்  சமாளிப்பதற்கு ஏற்ற இடமாக கருதி சேதுபதி மன்னர் ராமேஸ்வரத்திற்கு சென்றார். இருப்பினும் நாயக்கர் படையானது பாம்பனிற்கும்   மண்டபத்திற்கு இடையே  கடலின் மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக சேதுபதி மன்னரை நாயக்கர் படைகள் பின்தொடர்ந்தன.

இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள தங்கச்சிமடம் அருகே இரு படைகளும் மோதிக்கொண்டன.  இரண்டாவது நாள் போரில் சேது மன்னரது படைகளுக்குத் தலைமை தாங்கிய போகலூர் கொட்டை வன்னியத் தேவன் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தான். வீரனாக விளங்கிய வன்னியத்தேவனது திடீர் மறைவு சேதுபதி மன்னருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது.

சேதுபதியை எளிதில் சிறைபிடித்து மதுரையில் உள்ள திருமலை நாயக்கரிடம் நாயக்கர் படை ஒப்படைத்தது. இதனை இராமப்பையன் அம்மானை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் சடையக்க தேவர் சிறைபிடிக்கப்பட்டார். ஏற்கனவே சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய தம்பித் தேவரை திருமலை நாயக்க மன்னர் சேதுபகுதிக்கு தனக்கு உள்பட்ட  மன்னராக நியமனம் செய்தார் . அந்நியரது கைப்பாவையான தம்பித்தேவரை மன்னராக ஏற்றுக் கொள்ள மறுத்த மறக்குடி மக்கள் மறவர் சீமையெங்கும் போர் கொடி உயர்த்தினர். இதனால் சேது சீமையில் குழப்பங்கள், கலகங்கள், சீரழிவுகள் நிகழ்ந்தன.

இந்த சூழ்நிலையை மேலும் தொடர விரும்பாத திருமலை நாயக்க மன்னர் இரண்டாவது சடையக்கன் சேதுபதியைச் சிறையினின்று விடுவித்து போகலூருக்குத் திரும்பி அனுப்பிவைத்தார். இந்நிகழ்வுகளின் காலம் கி.பி. ஆயிரத்து அறுநுற்று நாற்பதாம் ஆண்டில்  என அறிய முடிகிறது.

இத்தளவாய் சேதுபதி திருத்தேர்வளை கோயிலைக் கட்ட முன்வந்தவர் என்பதை மேற்கண்ட செய்திகள் வழி அறியமுடிகிறது. மேலும் இம்மன்னர் திருத்தேர்வளை ஆண்டுகொண்ட ஈசுவரர் கோயிலுக்காக கொங்கமுத்தி, தண்டலக்குடி ஆகிய கிராமங்களை அளித்துள்ளார் என்ற குறிப்பு சேதுபதி மன்னர்களின் வரலாறு1 வழியாகக் கிடைக்கின்றது. இது ஆயிரத்து ஐநூற்று முப்பத்தொன்பதாம் ஆண்டு தரப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தளவாய் சேதுபதி காலத்தில் ஓரளவிற்குக் கோயில் செழுமையுடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதும்.அக்கோயிலுக்கு நிவந்தம் அளிக்கும் நிலையில் இக்கோயில் இருந்துள்ளது என்பதும் தெரியவருகிறது.

இவ்வாறு இக்கோயிலின் வரலாறு சேதுபதி மன்னர்களின்வரலாற்றுடன் ஒன்றிணைந்து காணப்படுவதாக உள்ளது.

தொகுப்புரை        

இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜ சிங்க மங்கல வட்டத்தில்  திருத்தேர்வளை என்ற ஊரில் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

தானே தோன்றிய சுயம்புலிங்கமான ஆட்கொண்டீஸ்வரர் திருத் தேர்வளை திருக்கோயிலில் விளங்குகிறார். இந்த சுயம்பு லிங்கம் ஒரு பெரியவரால் முதலில் வணங்கப்பெற்றது. அதன்பின்பு இவ்வீசர் சேதுபதி மன்னர்தம் கனவில் தோன்றி கோயில் கட்டி வழிபடக் கூறினார். இரண்டாம் சடைக்கத்தேவர் என்ற தளவாய் சேதுபதி திருத்தேர்வளை திருக்கோயிலைக் கட்ட முயற்சித்து, அம்முயற்சி முடிவடையாமல் போனது. தற்போது ஊர்மக்கள் மற்றம் பலரின் உதவியால் இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பெற்றுள்ளது.

இக்கோயில் இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் இயங்கிவருகிறது.

சான்றெண் விளக்கம்

  1. இராமநாதபுரம் சரகத்தின் அமைந்துள்ள திருக்கோயில்களின் தல வரலாறு தொகுதி – 1

என். சூர்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருத்தேர்வளை திருக்கோயில் வரலாறு”

அதிகம் படித்தது