மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரு. சுடலைமுத்து பழனியப்பன் நேர்காணல்

ஆச்சாரி

Jan 14, 2012

முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழறிஞரும், இந்தியவியல் அறிஞரும் ஆவார். இவர் தெற்காசிய அமைப்புகள் பலவற்றில் ஈடுபட்டு குமுகாயத்திற்குத் தேவையான  அரியக் கட்டுரைகப் பலவற்றைத் தொடர்ந்து படைத்து, பல கருத்தரங்களிலும், மாநாடுகளிலும் தனது கட்டுரைகளை வாசித்து வருகிறார். பலபோக்குவரத்து மற்றும் தகவற்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பழனியப்பன் அவர்கள் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-Madras) இளங்கலைப் பட்டம் (B.Tech) பெற்று அமெரிக்காவின் ஐயோவாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (M.S.) பெற்றார். அதன்பின் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் வணிகவியலில் முதுகலைப் பட்டமும் (M.B.A),  போக்குவரத்துத் துறையில் முதுகலைப் பட்டமும் (M.S.),  முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றவர்

சில ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய ஆய்வு மற்றும் தகவல் கழகம் எனும் வரிவிலக்குப் பெற்ற பொதுத்தொண்டு அமைப்பைத் (South Asia Research and Information Institute – SARII) துவக்கி, அதன் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம் ஆண்டுதோரும் இந்தியவியல் சார்ந்த தலைப்புகளில் மாநாடு நடத்தி வருகிறது. புகழ் பெற்ற அறிஞர்கள் பலர் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு இச்சுட்டியைச் சுட்டவும் www.sarii.org. பழனியப்பன் அவர்களின் பல கட்டுரைகள் இத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. தமிழ்க் குமுகாயத்தை அழித்து வரும் சாதிப்பிரச்சினைகளைக் களைய தமிழர் அனைவரும் தமிழரின் உண்மை வரலாற்றை அறிய வேண்டுமென வலியுறுத்தும் பழனியப்பன், சங்கக்காலத் தமிழரிடத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை என்று அவரது கட்டுரையொன்றில் இலக்கியம், மொழியியல் மற்றும் கல்வெட்டுக்கள் மூலம் நிறுவியுள்ளார். சாதியால் பிரிந்து கிடக்கிற தமிழ்க் குமுகாயத்தைச் சீர்திருத்த   சரியான தமிழ் வரலாற்று விழிப்புணர்வைத் தமிழர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பது இவரது இலக்காகும். சங்ககாலத் தமிழர்கள் சாதியாலும் சமயத்தாலும் பிரிந்திருக்கவில்லை என்றும், பழங்காலத் தமிழர் மத்தியில் சாதி ஏற்றத்தாழ்வு என்றுமே இருந்ததில்லை என்றும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். அதனைத் தமிழர் உணர்ந்து கொண்டால்,  சாதியால் பிரிந்திருக்க மாட்டார்கள் என்பது இவரது முடிபு. இப்படைப்பானது, சமூக உணர்வாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமானதொரு கட்டுரையாகும். இக்கட்டுரையின் தமிழாக்கத்தைச் பகுதி பகுதியாக விரைவில் சிறகு இதழில் வெளியிடப்படும். தமிழ்க் குமுகாயம் குறித்த இவரது மற்ற கட்டுரைகளைத் தொடர்ந்து சிறகு இதழில்வெளியிடப்படும். தமிழுக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துத் தமிழ்ப் பணியாற்றிவரும் பழனியப்பன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்

சிறகுத் திங்களிதழ் சார்பாக திரு. க. தில்லைக்குமரன் முனைவர் பழனியப்பன் அவர்களை கடந்த டிசம்பர் திங்களில் அவரது இல்லத்தில் நேரில் கண்டு உரையாடினார். திரு. அறிவன் தில்லைக்குமரன்  இந்நேர்காணலை ஒளி/ஒலிப்பதிவுச் செய்தார்.

எழுத்து வடிவத்தில் படிக்க பக்கத்தின் கீழே செல்லுங்கள்.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

சிறகு: உங்களின் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்கள்?

திரு.பழனியப்பன்- நான் பிறந்தது மதுரை மாவட்டம் கொடைக்கானலில். வளர்ந்தது மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில். காரணம் எனது தந்தை தமிழக வருவாய்த்துறை ஊழியராக இருந்ததால் பல ஊர்களுக்கு மாறிப் போகவேண்டிய சூழல் இருந்தது. அதனால் நான் முதலில் பள்ளியில் சேர்ந்தது மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்ற ஊரில். பிறகு மேலூர், பெரியகுளம், கூடலூர், மதுரை, திண்டுக்கல் என்று பல ஊர்களில் பள்ளிப் படிப்பை முடித்தேன். பிறகு ’புகுமுக வகுப்பு மதுரைக் கல்லூரி’ என்ற மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தேன். பிறகு சென்னையில் உள்ள  இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) கல்லூரியில் படித்தேன்.1975 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்தேன். எழுபத்து ஐந்து முதல் எழுபத்து ஏழு வரை ஆய்வா பல்கலைக் கழகத்தில் படித்தேன். பின்பு பென்சில்வேனியா பல்கலைக் கழகம் போய் அங்கு பொறியியலும் வணிகவியலும் படித்து எண்பத்து ஐந்தாம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றேன்.

சிறகு: நீங்கள் படித்த கல்லூரிகளையும் படிப்பையும் பார்க்கும்போது- வணிகவியல் துறையில் பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். நீங்கள் ஏன் அந்தத் துறையை விட்டுவிட்டு தமிழ் படித்து போக்குவரத்துத்  துறையிலேயே பணிபுரிகிறீர்களே ஏன்?

திரு.பழனியப்பன்- நான் அயோவா பல்கலைக் கழகத்தை விட்டு முனைவர் பட்டத்துக்காக மற்ற பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தபோது சில பல்கலைக் கழகங்களில் இருந்து நுழைவு கிட்டியது. எடுத்துக்காட்டாக கார்னகி மெலன் பல்கலைக் கழகத்திற்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு காரணமாக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் அப்போது உலகத்திலேயே சிறந்த ஒன்றான தெற்காசியத் துறை இருந்தது. அங்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றால் என்னுடைய தமிழ் அறிவும் இந்திய இயலைப் பற்றிய அறிவும் கூட வாய்ப்புள்ளது என எண்ணினேன். அதைக் கருதியே நான் கார்னகி மெலன் பல்கலைக் கழகத்தை விடுத்து பென்சில்வேனியா பல்கலைக் கழகத்துக்கு வந்தேன். அந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்த வேன்பல் என்ற நூலகத்தில் நிறைய நேரம் செலவழித்து புத்தகங்களைப் படிப்பேன். அதனால் என்னுடைய தமிழறிவு பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் இருந்தபொழுது நன்றாக வலுப்பெற்றது. வளர்ந்தது. அங்கு பல பேராசிரியர்களும் மொழியியல் வரலாற்றுத் துறை வல்லுநர்களும் இருந்தார்கள். அவர்களுடன் அளவளாவிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. மற்றொன்று வணிகவியல் துறையிலும் பொறியியல் துறையிலும் வல்லுநர்களாகிப்  பணம் ஈட்ட பல பேர் இருக்கிறார்கள். தமிழில் ஈடுபாடுகொண்டு சரியான முறையில் ஆய்வு செய்து தமிழுக்காக தமிழருக்காக பணிகளைச் செய்யக்கூடிய ஆட்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். அதனால் செய்வன திருந்த செய் என்று திருந்தச் செய்யக்கூடியதைத் தமிழில் செய்யலாம் என்று தமிழில் ஈடுபாடுகொண்டு தமிழில் ஆராய்ச்சி செய்துகொண்டு வருகிறேன்.

சிறகு: இந்த தெற்காசிய ஆய்வு – செய்திக் கழகம் (south asia  research and information  insititute –sarii) ஏன் துவங்க வேண்டும்- எப்பொழுது துவங்கியது? அதனுடைய சாதனைகள் என்ன?

திரு.பழனியப்பன்- தெற்காசிய ஆய்வு செய்திக் கழகத்தை நாங்கள் 2006 ஆம் ஆண்டு துவங்கினோம். துவங்கியதற்கான காரணம்- அமெரிக்காவில் குடியேறிய பெரும்பாலான தெற்காசிய மக்கள் இந்தியர்கள், இலங்கையினர் மற்றோரும் பெரும்பாலும் பொறியியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் இந்தத் துறைகளைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு நமது பண்பாட்டைப் பற்றி சரியாகத் தெரிந்திருக்கவில்லை.. இந்நிலையில் தீவிரவாதக் கொள்கையுடையோர் தங்களுடைய கருத்துகளை இவர்களிடம் பரப்பி தவறான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடக்கூடிய செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதை மாற்றுவதற்கு பல பல்கலைக் கழகப்  பேராசிரியர்கள் செய்யும் ஆராய்ச்சிகளின் முடிவுகளும் மற்ற செய்திகளும் நம்முடைய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த அமைப்பைத் தொடங்கினோம். இந்த அமைப்பின் வழியாக ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தலைப்புகளை எடுத்துக் கருத்தரங்கம் நடத்துகிறோம். அதில் பங்கு பெறுவதற்கு உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பேராசிரியர்கள் வருகிறார்கள். அவர்கள் தரமான ஆராய்ச்சிகளின் பின்னணியில் தாங்கள் அறிந்த செய்திகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் கருத்துகளை முன்வைக்கிறார்கள். இங்கு வாழும் தென்னாசியப் பின்னணி கொண்ட மக்களும் அமெரிக்கப் பின்னணிகொண்ட மக்களும் அவர்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள். அதனால் நம்முடைய வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைகின்றன. இது இன்னும் மிகவும் தேவையான ஒன்று. ஆண்டுக்கு ஒருமுறைதான் கருத்தரங்கு நடத்துவது என்பது போதாத ஒன்றுதான். ஆனால் இது புரூகின்ஸ் கழகத்தைப் போலவோ மற்ற அறிவு சார்ந்த நிறுவங்கள் போலவோ கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். போதிய பண வசதி இல்லாதததால் ஆண்டுக்கு ஒருமுறை கருத்தரங்கு நடத்துகிறோம். ஆனால் கூடவே இந்தியாவில் உள்ள சில முக்கியமான சிக்கல்களுக்கு அறிவு சார்ந்த அறிவுரைகளை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக அண்மையில் கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (யூனிகோட்) எவ்வாறு கொண்டு வருவது என்ற சிக்கலுக்குத்  தவறான தகவலை இந்திய அரசு ஒருங்குறி (யூனிகோட்) அமைப்புக்கு அனுப்பியது. அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, அங்குள்ள நண்பர் திரு. மணிவண்ணன் அவர்களோடு சேர்ந்துழைத்து திருத்தங்களைக் கொண்டுவந்து முதலில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மத்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த திருத்திய பரிந்துரையை மத்திய அரசு யூனிகோட் அமைப்புக்கு அனுப்பியது. அதை ஒருங்குறி (யூனிகோட்) அமைப்பு ஏற்றுக்கொண்டது. இதுபோன்ற சில வேலைகளை தெற்காசிய ஆய்வு அமைப்பு செய்துகொண்டு வருகிறது.

சிறகு: ஒருங்குறி (யூனிகோட்) என்றதும் ஞாபகம் வருகிறது. இந்த கிரந்தப் பிரச்சினையில் நிறைய பேருக்குக் குழப்பம் இருக்கிறது. காரணம் சரியாகப் படிக்காததால் படித்தால் தெரியும். தமிழில் இருந்து ஐந்து சிறப்பு எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்ப்பதில் என்ன தவறு? ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது போன்ற தவறான கருத்துகள் இடம் பெற்று வருகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

திரு.பழனியப்பன்- இதற்கு விடை- நுணுக்கமான தொழில்நுட்பம், வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். முதலில் தமிழகத்தின் வரலாறு, தமிழரின் வரலாறு என்பதே கல்வெட்டு, செப்பேடு போன்றவற்றின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்வெட்டுகளைப் படிக்க வேண்டும் என்றால் உங்களுக்குக் கிரந்த எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துகள் இல்லாமல் நாம் வரலாற்றை உருவாக்கவோ மாற்றவோ முடியாது. அப்படிப் படிக்கும்போது நாம் காண்பது கிரந்த எழுத்துகள் வடமொழியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இடையிடையே தமிழ் எழுத்துகளும் வரும். ஒரு கல்வெட்டில் அந்தக் கல்வெட்டை எழுதியவனே சொல்கிறான்- தமிழும் ஆரியமும் விரவி வந்துள்ள கல்வெட்டு என்று சொல்கிறான். ஆதலால் கிரந்தமும் நமக்குத் தேவை. அதேசமயம் மொழி வரலாற்றைப் பொருத்தவரையில் தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, வடமொழி சொல்லுக்கு நடுவில் தமிழும் இருக்கிறது. தமிழுக்கே சிறப்பாக உள்ள எழுத்துகள் – வல்லின ‘ற’கரம் சிறப்பு ‘ழ’கரம் போன்றவை- மற்ற எழுத்துகளெல்லாம் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இவை மட்டும் தமிழில் எழுதப்பட்டிருக்கும். இது மொழிப் பயன்பாட்டு வரலாற்றுக்கு முக்கியமான ஆவணமாகும். எல்லாவற்றையுமே கிரந்த எழுத்தில் எழுதி அதை கணினிப்படுத்தும்போது எல்லாமே கிரந்த எழுத்துக்கள் ஆகிவிட்டால் அங்கு தமிழ் மொழி பயன்படுத்தப்பட்ட தடயமே போய்விடும். தமிழ் மொழி வரலாற்றுக்கே இது பெரிய இழப்பாகிவிடும். நாம் கிரந்தத்தை எதிர்க்கவில்லை. கிரந்த எழுத்துக்களும் வேண்டும்- தமிழ் எழுத்துக்களும் வேண்டும். ஆவணங்களில் எப்படி இருக்கிறதோ அதேபோன்று மாறாது ஒருங்குறியை உருவாக்கும் எழுத்துமுறை ஆவணங்களிலும் இருக்க வேண்டும். நாம் எதையும் புதிதாகப் புகுத்தப்போவதில்லை. இருப்பதை அப்படியே காக்க வேண்டும் என்றுதான் நாம் சொல்கிறோம். அதற்கு இந்த ஐந்து எழுத்துகளையும் கிரந்த எழுத்துகள் என்று மாற்றிவிட்டால் பிற்காலத்தில் தமிழ் பயன்படுத்தப்பட்ட தடயமே அழிந்துவிடும்.

சிறகு: நீங்கள் நீண்ட காலமாக சங்க இலக்கியத்தில் பல ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதில் வடமொழி சம்பந்தப்பட்ட செய்திகள் நிறைய வருகிறது. தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. சங்க இலக்கியம் படிப்பதற்கும் வடமொழி அறிவுக்கும் என்ன தொடர்பு?

திரு.பழனியப்பன்- தமிழர்கள் எப்பொழுதும் ஒரு தீவாக இருந்தது கிடையாது. எந்தச் சமுதாயமும் எப்பொழுதும் ஒரு தீவாக இயங்குவதில்லை. தமிழரும் அப்படித்தான். தமிழரைப் பற்றி பிற மொழியினரும் தங்களது நூல்களில் எழுதியிருக்கிறார்கள். இது தமிழரைப் பற்றி அவர்களின் வரலாற்றைப் பற்றி பண்பாட்டைப்  நாம் அறிந்துகொள்ள சிறந்த கருவூலமாகவும் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சங்க இலக்கியத்தில் ‘இழிபிறப்பாளன்’ ‘இழிபிறப்பினோன்’ என்ற சொல்லாட்சி வருகிறது. இதுபோன்ற சொல்லாட்சிகள் பிற்காலத்தில் –‘இழிபிறப்பாளன்’ ‘இழிபிறப்பினோன்’ இவைகள் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் உண்மையான கருத்து என்னவென்று பார்த்தால் அதற்கு நீங்கள் சமண நூல்களின் உதவியை நாட வேண்டும். சமண நூல்களின் அடிப்படையைப் பார்த்தால் ‘இழிபிறப்பினோன்’ ‘இழிபிறப்பாளன்’ என்ற சொற்கள் சமணர்கள் ‘நரகத்தில் உழல்பவன்’ ‘நரகத்திற்குச் செல்லக்கூடியவன்’ என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இதற்கு ப்ராகிருத சமண நூல்களில் உள்ள செய்யுள்கள் தேவையாய் இருக்கும்.

இதைப்போல் தமிழைப் பற்றி அறிந்துகொள்ளவே நமக்கு பிற மொழியின் நூல்கள் தேவைப்படுகின்றன. வடமொழியைப் பற்றி ஒரு எடுத்துக்காட்டு. அகநானூறு 361 ஆம் பாடலில் ‘அழலெழு தித்தியம் அடுத்தயாமை’ என்ற வரி  வருகிறது. இந்த ‘அழலெழு தித்தியம் அடுத்தயாமை’ என்ன என்பதற்கு சரியான பொருள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்- வடமொழி வேத மரபில் அவர்கள் நடத்தும் ஒரு வேள்வி – வேள்வியைப் பற்றிய செய்திகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால்தான் அவர்கள் எப்படிப்பட்ட சூழலில் இந்த யாமையை புலவன் காண்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். இதுபோன்ற பல செய்திகளுக்கு வடமொழி அறிவு உங்களுக்கு இருந்ததென்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல சொற்களின் வேர்களை அறிந்துகொள்வதற்கு வடமொழி பயனுள்ளதாக இருக்கும். அதை வைத்து அவர்கள் தமிழ்ப் பண்பாட்டில் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது புரியும்.

சிறகு: ஆதித்தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமை இல்லை என்று நீங்கள் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். அக்கட்டுரையில்; தாழ்த்தப்பட்டவர்கள் கீழ் பிறப்பாளர்கள் என்பதெல்லாம் சமண மதத்தின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

திரு.பழனியப்பன்- தமிழகத்தில் நிலவி வந்த தீண்டாமைக்கு சமணர்கள் நேரடிக் காரணம் என்று நான் சொல்லவில்லை. சமணர்களுக்கு உயிர்க் கொலை ஒப்புக்கொள்ளாத ஒன்று. உயிர்க் கொலை புரிந்த எவரையுமே அவர்கள் கொடியவர்களாகப் பார்த்தார்கள். உயிர்க் கொலை செய்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அந்த அடிப்படையில் அவர்கள்-  உயிர்க் கொலை செய்யக்கூடிய வேடர்கள், மீனவர்கள் போன்றோரை நரகத்திற்குச் செல்லக்கொடியவர்கள் என்று குறை கூறினார்கள். சமண மதத்தின் கொள்கைப்படி நரகம் நிலவுலகுக்குக் கீழே இருக்கிறது. ஒருவன் அவன் வாழ்நாள் முடிந்து நரகத்திற்குச் செல்லும்போது சமண மத கொள்கைப்படி அவன் மீண்டும் பிறக்கிறான். அவன் கீழே உள்ள நரகத்தில் பிறப்பதால் அவனை இழிபிறப்பினன் என்று கருதினார்கள். நம்முடைய தமிழ் இலக்கண முறைப்படி இழிபிறப்பு என்பதை வினைத்தொகை என்று சொல்லலாம். அது இழிந்த பிறப்பாகவும் இருக்கலாம் இழியும் பிறப்பாகவும் இருக்கலாம். சமணர்கள் இழியும் பிறப்பு என்ற பொருளில் சொல்ல வந்தார்கள். சமணர்கள் சொல்ல வந்தது இழியும் பிறப்பு என்ற பொருளில். அதாவது இங்குள்ள வேடன் இறக்கும்போது கீழே உள்ள நரகத்தில் பிறப்பான் என்ற பொருளில் இழியும் பிறப்பு என்று சொன்னார்கள். ஆனால் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு- காலம் கடந்த பெயரெச்சம் ஆதலால் பிற்காலத் தமிழர்கள் அவனை தாழ்த்தப்பட்டவனாக கருதத் தலைப்பட்டார்கள்.

இவ்வாறு அடிப்படை சமணக் கொள்கையைப் புரிந்துகொள்ளாததால் மற்றவர்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கிவிட்டார்கள். அதேபோன்று ‘புலை’ என்ற சொல்லிலும் –அடிப்படை திராவிட மொழியியல் அறிவு இல்லாததால் ‘புலை’ என்ற சொல் ‘பொலி’ என்ற சொல்லிலிருந்து வருகிறது என்ற உண்மை தெரியாததால் ‘புலை’ என்பது ‘புன்மை’ என்ற வேரிலிருந்து வருகிறது என்று சொல்லி அவர்கள்- தாழ்த்தப்பட்டவர்கள், புலையர் என்று கருத்தில் கொண்டார்கள். இப்படி திராவிட மொழியியல், சமணக் கோட்பாட்டு மரபு, தமிழ் இலக்கணக் கூறுபாடு எல்லாம்  சேர்ந்து குழம்பி அதன் விளைவுதான் பிற்காலத்திய தீண்டாமை. அது தொன்றுதொட்டு தமிழர் மரபில் இருந்து வருகிறது, திராவிடர் மரபில் இருந்து வருகிறது என்பது மிகவும் தவறான கருத்து.

சிறகு: பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்த தமிழ் ஆய்வு, மேலை நாட்டில் நடந்த தமிழ் ஆய்வையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். தமிழ் அறிஞர்கள் சொன்னது எல்லாம் உண்மையா என்று கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டு அறிஞர்களின் ஆய்வுக்கும் வெளிநாட்டு அறிஞர்கள் ஆய்வுக்கும் உள்ள வேறுபாடு என்ன? எது தேவை? நாம் எங்கு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்?

திரு.பழனியப்பன்- பொதுவாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது- ஒரு குறிப்பிட்ட திருக்குறள்- எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. யார் சொன்னாலும் அதைக் கேள்வி கேட்கக் கூடிய உரிமை நமக்கு வேண்டும். பெரியவர்கள் சொன்னார்கள், நமது மரபினர் சொன்னார்கள் என்பதால் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேலை நாட்டு ஆய்வு முறையில் அறிவுக்கு, அளவை இயலுக்கு இன்றியமையாமை உண்டு. பல வகைச் செய்திகள் இருந்தால் அவை ஒன்றுக்கொன்று எப்படி முரண்படுகின்றன, எப்படி ஒத்துப்போகின்றன – ஒரு கொள்கை என்று வைத்தால் அடிப்படை செய்திகள்தான் முதன்மையானவை. செய்தியோடு கொள்கை ஒத்துப்போகவேண்டுமே தவிர கொள்கைக்காக செய்திகளை மாற்றுவது தவறு. இதுபோன்று மேலைநாட்டு ஆய்வு தமிழர்களுக்கு மிகவும் தேவை. – பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் நான் அறிந்துகொண்டது அங்குள்ள பேராசிரியர்களிடம் பேசும்போதும் நூல்களைப் படித்து அறிந்துகொண்டது தமிழக ஆய்வு முறையில் பெரும்பாலும் இது இல்லை. அதுவும் கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் இது போன்று ஆய்வு செய்பவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். நீங்கள் தொல்காப்பியத்தின் உரை ஆசிரியர்களின் உரைகளைப் பாத்தால் அவர்களுடைய கூற்றுகள் மிக நுணுக்கமானவை ஆய்வு மிக்கவை. அதனால் தற்காலத் தமிழாசிரியர்கள் தமிழ் ஆராய்ச்ச்சியாளர் என்று சொல்லிக் கொள்பவர்களின் கட்டுரைகளைப் பார்த்தால்- அடிப்படைக் கோளாறுகள் ஏராளமானவற்றை நீங்கள் காணலாம். அதற்குக் காரணம் நம்முடைய ஆராய்ச்சி அணுகுமுறை.

பெரும்பாலும் தமிழ் ஆசிரியர், ஆராய்ச்சியாளர் என்போருக்கு அக்குறிப்பிட்ட துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் அறிமுகம் இருக்காது. தமிழ் ஆசிரியர்களுக்கு வரலாறு தெரியாது, வரலாற்று ஆசிரியருக்குத் தமிழ் தெரியாது, இரண்டு பேருக்கும் சமூகவியல் தெரியாது. இதுபோல பல கோளாறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு செய்தி – வைணவ அடியார்களை தமிழர்கள் இலக்கியத்தின்படி ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதன் முதலில் அந்தச் சொல் ‘ஆள்வார்’ என்றுதான் இருந்திருக்கிறது. இதற்கு கல்வெட்டுக்களில் நாம் சான்றுகளைக் காட்ட முடியும். ஆனால் வைணவ மரபைப் பின்பற்றுவோர் இன்னும் ஆழ்வான் என்றும் ஆழ்வான் என்றால் திருமாலை வழிபடும் பக்தியில் ஆழங்கால் படுபவன் என்ற பொருளிலேயே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அந்த மரபில் உள்ள தவறை மறுத்துப் பேசும் துணிச்சல் அவர்களுக்குக் கிடையாது. கேள்வி கேட்கும் மரபும் கிடையாது. இது மாறினால்தான் நம் பண்பாட்டிலேயே உள்ள தவறுகளைத் திருத்தி சிறந்த கூறுபாடுகளைத் தக்கவைத்துக் கொண்டு தீங்கானவற்றைக் களையக்கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும்.

சிறகு- ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் என்று நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில்- திராவிட இயக்கம்தான் லஞ்சம் போன்றவைகளை உருவாக்கியது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் லஞ்சம் என்பது ஆதி காலத்தில் இருந்தே இருக்கிறது என்று அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றி?

திரு.பழனியப்பன்- சிலப்பதிகார கதையை எடுத்துக் கொள்ளுங்கள்- தவறு செய்தவன் பொற்கொல்லன். பாண்டியனின் மனைவியின் சிலம்பைக் கையாடிவிட்டு அந்தப் பழியைக் கோவலன் மீது போட்டு விடுகிறான். இது ஒரு வகையில் ஊழல்தான். அரசு என்று ஒன்று இருக்கும்போது தவறுகளும் இருக்கும், அதாவது மக்கள் ஒரு கூட்டமாக இருக்கும் வரை அதில் தவறு செய்பவர்களும் இருப்பார்கள். திராவிட இயக்கம் வந்துதான் மக்கள் தவறு செய்ய ஆரம்பித்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் டி.டி. கிருட்டினமாச்சாரி மீது ஒரு ஊழல் குற்றச்சாற்ற இருந்தது. இன்னும் பல குற்றச்சாற்றுகள் வழக்குகள் நடந்துகொண்டுதான் இருந்தன. இந்திய விடுதலைக்கு முன்னாலேயே மதுரையில் ஆங்கிலேயர்கள் பங்குபெற்ற ஊழல்கள் பற்றி டேவிட் வாஸ் புரூப் என்பவர் தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருக்கிறார். மதுரை கோவிலில் நடந்த ஊழல்கள் பற்றியெல்லாம் அவர் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் ஆண்டுகொண்டிருக்கும்போதே ஒரு அரசு வேலைக்கு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை தர பெரும்புள்ளிகளின் பரிந்துரைகள் இப்படி நடந்துகொண்டுதான் இருந்தன.

ஆதலால் ஊழல்கள் இருந்துகொண்டுதான் வந்துள்ளது. இன்னொன்று- உத்திரமேரூர் என்ற ஊருக்கு இந்தியாவின் குடியாட்சி முறைக்கு அந்த ஊருக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. இந்திய அரசியல் சட்டம் உருவாக்கிய குழுவிலும் அதைப் பற்றிப் பேச்சு நடந்திருக்கிறது. குடவோலை முறைப்படி குடியாட்சி நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு நமக்கு விளக்குகிறது. அந்தக் கல்வெட்டு வாரிய உறுப்பினர்களாக இருப்பதற்கு பல தகுதிகளைச் சொல்கிறது. ஒரு பொது அமைப்பு சரிவர இயங்க வேண்டும் என்றால் ஊழல்கள் நடக்காமலிருக்க அதற்கான அரண்களை அந்தக் கல்வெட்டு நன்றாகக் காட்டுகிறது. ஆதலால் உத்திரமேரூர் கல்வெட்டு உண்டான காலத்திலேய ஊழல்கள் இருந்திருக்கக் கூடும். அதைத் தடுப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட பட்டியல்தான் அந்தத் தகுதிகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஊழல்கள் பல ஆண்டுக் காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. அது திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தொடங்கியதல்ல.

சிறகு: ஊழல்களை நீக்க முடியாது. அதைக் குறைப்பது எப்படி?

திரு.பழனியப்பன்- ஒரு ஆட்சி அமைப்பு ஆளுகைக்கு உட்பட்ட மக்களிலிருந்து மிகத் தொலைவுக்குப் போகும்பொழுது – அதாவது ஆளுகிறவர்களுக்கும் மக்களுக்கும் இடைவெளி கூடும்போது ஊழல் நிறையவே கூடும். ஆட்சி மக்களுக்கு அண்மையில் வந்துவிட்டால் – ஊழலின் தாக்கமும் குறையும். தமிழகத்தில் உள்ள ஒருவர் ஒரு வீடு வாங்குகிறார். அந்த வீட்டுக்கு விலையாகக் கொடுக்கும் விலை- வெள்ளைப் பணத்தில் கொடுப்பதைவிட கறுப்புப் பணத்தில் கொடுப்பது மிகுதியாக இருக்கும். ஏனென்றால் வீட்டின் விலையில் ஒரு பங்கை வரியாகக் கொடுக்க வேண்டும். அதை மிச்சம் பிடிப்பதற்காக வேண்டுமென்றே வீட்டு விலையைக் குறைத்து பத்திரம் பதிவு செய்து- அரசாங்கத்திற்கு வரும் வரிப் பணம் குறைக்கப்படுகிறது. வரிப் பணம் யாருக்கோ போகிறது – அதனால் நமக்கு என்ன பயன் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாய் அடிமையாய் இருந்து வந்ததால்- ஆட்சியும் வரியும் நம்மைச் சார்ந்தவை என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. இதை மாற்றுவதற்கு ஆட்சி அமைப்பை மக்களுக்கு நெருக்கமானதாக ஆக்க வேண்டும். அதாவது சிற்றூரில் உள்ள அலுவலரே அந்த வரியைத் திரட்டி அதைப் பயன்படுத்தக் கூடிய உரிமையும் இருந்ததென்றால் – அந்த ஊரில் தெருவை சாலையாக மாற்ற வேண்டும் என்றால்- அதற்குத் தேவையான பணம் அந்த வரியில் இருந்துதான் வரவேண்டும் என்றால் ஒழுங்காக அந்தப் பத்திரம் பதியப்படும். உண்மையான விலையும் அங்கு கொடுக்கப்படும். அதனால் எவ்வளவுக்கெவ்வளவு ஆட்சி மக்களை நெருங்கி வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஊழலைக் குறைக்கலாம்.

சிறகு: அண்மையில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் – பறையர் என்பது ஒரு சாதி அல்ல, ஒரு குடி. அதிலிருந்து பல பிரிவுகள் உருவானது என்கிறீர்கள். அதைப் பற்றி?

திரு.பழனியப்பன்- புறநானூறு 335 ஆம் பாடல். அந்தப் பாடலில் ‘துடியன் பாணன்  பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியுமில்லை’ என்ற வரிகள் வருகின்றன. அந்தப் பாடலில் மிகத் தெளிவாக பறையன் என்பது ஒரு குடிப் பெயராகத்தான் வருகிறது. நான் எனது மற்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பது போல் தமிழகத்தில் பழந் தமிழர்களிடம் சாதியோ தீண்டாமையோ இல்லை. அப்படிப் பார்க்கும்போது பறையர்களும் சாதி அடிப்படையில் இருந்திருக்கவில்லை. பிற்கால கல்வெட்டுகளை நாம் பார்க்கும்போது- மகேந்திர வர்மன் காலத்து கல்வெட்டில் ‘சாக்கைப் பறையனார்’ என்ற படைத் தலைவரைப் பார்க்கிறோம். ‘பறையனார்’ என்று உயர்ந்த பன்மையில் குறிப்பிடப்படும்பொழுதே அவர் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதேபோன்று பாண்டிய நாட்டுக் கல்வெட்டிலும் அரசனுக்கு அணுக்க அலுவலராக ஒரு பறையன் இருந்திருக்கிறார். அதேபோன்று கோவை மாவட்டத்து கல்வெட்டுகளைப் பார்க்கும்போது பல வேளாளர்கள் பறையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கே இருந்த பறையன் என்ற குடியைச் சேர்ந்தவர்கள், பலவித அரசியல் போர்ச் சூழல் காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேறி இருக்கிறார்கள். அதுபோன்று அவர்கள் கோவை மாவட்டத்திலும் குடியேறி இருக்க வேண்டும்.

அவர்கள் சென்று குடியேறியபோது பிற்காலத்திய வேளாண்மைச் சமுதாயம் வளர்ந்திருக்கவில்லை. அவர்கள் சென்றபோது மற்ற மக்களும் குடிவழியாக வாழ்ந்திருக்க வேண்டும். சாதியாக வாழவில்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் கோவையில் குடியேறி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தருமபுரி கிருட்டிணகிரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் ஈழச் சான்றான் என்பவர் நாட்டுக் கவுண்டர் என்ற பட்டத்துடன் இருந்திருக்கிறார் என்பதை அறிகிறோம். அப்படி பல மக்களும் சென்று குடியேறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களெல்லாம் சேர்ந்து உருவான ஒரு வேளாண்மைச் சமுதாயம்தான் பிற்காலத்தில் வேளாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால்- பறையர், வேளாளர் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதிகளாக இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் ஒரு குடிகளாக இருந்தவர்கள் பிற்காலத்தில் வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டில் அவர்கள் முன்னேறியதால் பிற்காலத்தில் தங்களை வேளாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். பிற்காலத்தில் அங்கு குடியேறிய பறையர்களை அவர்கள் வேற்று ஆட்களாகக் காணத் தலைப்பட்டார்கள். இதுதான் என்னுடைய முடிவு.

சிறகு: அதாவது பறையர்களை பிற்காலத்தில் வேளாளர்கள் அடக்குமுறை செய்திருக்கிறார்கள். கவுண்டர்களை சண்டாளர்கள் எனும் வார்த்தையும் நிகண்டுகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்தால் கவுண்டர்களும் பறையர்களாகப் பார்க்கப்பட்ட காலம் ஒன்று இருந்திருக்கிறது.

திரு.பழனியப்பன்- நிகண்டுகள்- குறிப்பாக திவாகர் நிகண்டுகள் உருவாகிய காலத்தில் நான் ஏற்கனவே சொன்னதுபோல சமணத்தின் தாக்கம் இருந்தபொழுது, காடுவாழ் மக்களாக இருந்தவர்கள் சமணக் கொள்கைப்படி கொடியவர்களாகக் கருதப்பட்டிருக்கிறார்கள். அதுபோன்று அங்கிருந்த கவுண்டர் என்ற பட்டம் வைத்திருப்பவர்களை சமண மதத்தினரும் அந்த மதத்தைப் பின்பற்றும் மற்றவர்களும் கொடியவர்களாகப் பார்த்ததால் கவுண்டர்களை சண்டாளர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். திவாகரத்தில் கவுண்டர் என்ற சொல் சண்டாளர் என்று வருகிறது. அடுத்து வந்த பிங்கலந்தையில் நீங்கள் பார்க்க முடியாது. வேட்டுவச் சமுதாயம் மாறி வேளாண்மைச் சமுதாயமாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது பண்பாடு மாறுகிறது, அப்போதிருந்த சிற்றூர் தலைவர்கள் எல்லாம் வேளாண்மைத் தலைவர்களாக மாறும்போது சண்டாளர் பட்டியலில் இருந்து கவுண்டர்கள் எடுக்கப்பட்டு விட்டார்கள்.

சிறகு: ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் இசை, நாட்டியம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏன் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் இசை, நாட்டியத்தில் கவனம் செலுத்தவில்லை? ஒரு காலத்தில் தேவதாசிகள் எல்லாம் இசைக்காக நிறையப் பாடுபட்டிருக்கிரார்கள். பிற்காலத்தில் இசை ஒடுக்கப்பட்டு இப்போது இசை படிப்பவர்கள் மிகவும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

திரு.பழனியப்பன்- காரணத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம். இசை வேளாளர் குடும்பத்திலேயே இசை அருகிப் போனது ஒரு காரணம். பெரும்பாலும் அவர்களின் சொத்துப் பிரிவினை- தேவதாசி ஒழிப்புச் சட்டத்திற்குப் பிறகு சொத்து எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற நிலை வந்துவிட்டது. மரபு வழித் தலைவர்களாக இருந்த இசை வேளாளர் குடும்பங்களில் ஒருசில குடும்பத்தினர்தான் இசையைத் தொடர்ந்து பயிலக்கூடிய வசதி இருந்தது. மற்றவர்கள் கால வெள்ளத்தில் பொருளாதாரச் சிக்கல்களின் அடிப்படையில் மற்ற வேலைகளுக்குச் செல்லவேண்டிய சூழல் வந்துவிட்டது. ஆனால் இசை வேளாளர் அல்லாத மற்றவர்களை எடுத்துகொண்டால் இசை படிக்காததற்குக் காரணம் இசை பெரும்பாலும் சமயத்தோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. சமயத்தில் ஈடுபாடு கொள்ளாத பலர் இசைத்துறைப் பக்கமே செல்லவில்லை. அதனால் இசையில் ஈடுபாடு காட்டக்கூடிய பலரும் இசை அறிவே இல்லாமல் உள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக நமது மரபில் கோவிலில் நடனமாடுவோர், தேவதாசி முறை இவற்றைப் பற்றி பிற சாதியினர் ஏளனமாக எண்ணிக்கொண்டு அந்தக் கலைகளைப் புறந்தள்ளினர். பிறகு நூறு ஆண்டுகளாக இந்தக் கலையை அந்தணர்கள் எடுத்துக் கொண்டு சிறப்புறப் பயின்று அதில் திறமையடைந்து பல வகையில் முன்னேறிய பின்னரும் கூட அது தமிழர் பண்பாட்டுக்கு ஒத்துக்கொள்ளாதது என்று கூறி –அதாவது ஒரு பெண் மேடை ஏறிப் பாடுவதோ ஆடுவதோ தங்கள் குல மரபில் ஒப்புக்கொள்ள முடியாதது என்று கூறி கலைகளை வெறுக்கிறார்கள். மறுக்கிறார்கள். அதனால்தான் இந்தக் கலைகளைக் கற்று மேலும் முன்னேறி பல படைப்புகளைத் தமிழர்களுக்கு அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

சிறகு: தேவதாசி முறையை ஒழித்தது தவறு என்கிறீர்களா?

திரு.பழனியப்பன்- அதைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதே காலக்கட்டத்தில் கலைகளை வளர்க்க பல அமைப்புகள் அரசு செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். சென்னையில் கலாசேத்ரா அமைப்பைப் போல மற்றவர்களும் பல அமைப்புகளை நிறுவி இருக்கலாம். ஏன் அவர்கள் செய்யவில்லை. அதைத்தான் குறைகூற வேண்டும். தேவதாசி முறையை ஒழித்ததை குறை சொல்லவில்லை.

சிறகு: தமிழில் நிறைய பாடல்கள் இருந்தும் தமிழில் பாட முடியாது என்று கூறிய காலம் உண்டு. இப்போது தமிழில் பாடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் தமிழில் பாடுவதே தீட்டு என்று கூறி தெலுங்கு, வடமொழிப் பாடல்களைப் பாடியது இசையை பாமர மக்களிடம் போகாமல் தடுத்தது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அது உண்மையா? உங்கள் கருத்து என்ன?

திரு.பழனியப்பன்- உ.வே. சாமிநாத ஐயர் அவருடைய ‘என் சரித்திரம்’ என்ற நூலில் அவர் சொல்வது, அவர் இளைஞராக இருந்தபோது கச்சேரிகளில் பாடப்பட்ட பல தமிழ்ப் பாடல்கள் அவருக்கு வயது முதிந்த பிறகு கேட்பதே அரிதாகப் போய்விட்டதாக அவரே குறை கூறுகிறார். இது பலவித காரணங்களால் மாறியிருக்கலாம். நிலவுடைமையாளர்கள், சிற்றரசர்கள் போன்ற ஆட்கள் தெலுங்குப் பாடல்களுக்கு சாகித்தியங்களுக்கு வரவேற்பு அளித்திருக்கலாம். அதற்கு மற்றவர்களும் தெலுங்குப் பாடல்கள் பாடுவதே சரியென்று கருதியிருக்கலாம். தமிழர்கள் தமிழில் பாடுவோரை சிறப்பு செய்து அவர்களை ஆதரித்து வந்திருந்தால் தமிழ்ப் பாடல்களும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றவரைக் குறை சொல்லிப் பயனில்லை.

சிறகு: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதுமட்டுமே காரணமல்ல. பின்னால் வந்தவர்கள் தியாகராசர், சியாமா சாஸ்திரி போன்றவர்கள் பாடியதுதான் இசை.  தமிழில் பாடிய முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் பாடியது இசை இல்லை என்ற நிலைமைக்குப் போனதற்கு ஒரு காரணம். தமிழைப் புறக்கணித்ததும் காரணம். அதைப்பற்றி?

திரு.பழனியப்பன்- ஒரு குறிப்பிட்ட இசைச் சபையில் தெலுங்குப் பாடல்தான் சிறப்பான பாடலாகக் கருதப்படும் என்றால் இருந்துகொள்ளட்டுமே. நூற்றுக்கு தொண்ணூற்று ஏழு பேர் இருக்கின்றவர்கள் அவர்களுக்கு என்று ஏன் தனி அமைப்புகளைத் துவக்கி இருக்கக் கூடாது? எல்லோரும் சொல்வது, இசைச் சபைகளில் தெலுங்குப் பாடல்களுக்குத்தான் சிறப்பளிக்கிறார்கள். தமிழுக்குச் சிறப்பில்லை என்று. அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள்- அண்ணாமலை செட்டியார் உருவாக்கிய தமிழிசைச் சங்கம் போல பல சபைகளை உருவாக்கி தமிழில் பாடினால் சிறப்பு என்ற ஒரு மரபு வந்திருந்தால் தமிழில் பாடியிருப்பார்களே? ஏன் செய்யவில்லை? சென்னையில் உள்ள இசை சபை மட்டும்தான் தமிழைக் கட்டியாள வேண்டுமா? மற்றவர்கள் ஏன் செய்யக் கூடாது? ஒரு எடுத்துக்காட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்த குமாரி, தியாகராச பாகவதர் இவர்களுடைய பாடல்கள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் கேட்கப்பட்டன. அவர்களின் திரைப் படங்களெல்லாம் ஆண்டுக்கணக்கில் ஓடி சிறப்புப் பெற்றன. ஊருக்கு ஊர் திரையரங்கு கட்டியது போல இசை அமைப்புகளை உருவாக்கியிருந்தால் மக்கள் தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருப்பார்களே.

சிறகு: பல இடங்களில் பல ஊர்களில் யூசுடன், வளைகுடா, வாசிங்டன் போன்ற இடங்களில்  இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்க இலக்கியம் படிப்பதால் பயன் என்ன? அந்த இலக்கியக் குழுக்களுக்கு, இலக்கியத்தை எப்படி தரமாகப் படிப்பது என்பது பற்றி நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

திரு.பழனியப்பன்- சங்க இலக்கியம் படிப்பதால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கிறார் என்றால்- இதற்கான விடை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள பலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடையாகும். பேராசிரியர் இராமானுசம் சொன்னது போல, இந்தியாவில் செம்மொழியாகத் தமிழ் கருதப்படுகிறது. இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் வடமொழியில் மட்டுமல்ல தமிழிலும் உண்டு. இந்தியாவில் பெரும்பாலோரின் சமயமான இந்து சமயத்தில் சில அடிப்படைக் கூறுபாடுகள் தமிழில் இருந்து வந்தவை. எடுத்துக்காட்டாக வேத மரபு மிகப் பழமையானது என்று சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இந்திய மக்கள் பயின்று சமய வரும் மரபு- பக்தி சமய மரபு. பக்தி மரபு தமிழகத்திலிருந்துதான் தொடங்கியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தொடங்கி வைத்த மரபுதான் பிறகு கன்னடம்,தெலுங்கு, மலையாளம், மராத்தி, குசராத்தி, என்று பல மரபுகளிலும் சென்று புகுந்து இன்று இந்தியா முழுவதும் பயின்று வரும் இந்து சமய மரபில் இன்றியமையாத பகுதியாக விளங்குகிறது. இதற்கு அடிப்படை சங்க இலக்கியம்.

விரக பக்தி என்ற நூலை நீங்கள் பார்த்தால்- தமிழ்ச் சங்க மரபு ஆழ்வார்கள் பாடல்களில் எப்படி ஊன்றியிருக்கிறது என்று விளக்கப்பட்டிருக்கும். இந்தியர்கள் அனைவருக்குமே சங்க இலக்கியம் முக்கியமானது. அது தமிழருடைய சிறந்த மரபு வழிக் கருவூலம் என்றால் மிகையல்ல. கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல, நம்மிடமே இப்படிப்பட்ட ஒரு கருவூலம் இருக்கும்போது சிறந்த இலக்கியங்களைத் தேடி மற்ற இடங்களுக்கு செல்லத் தேவையில்லை. நம்மிடமே உள்ளன. அதற்காக மற்ற இலக்கியங்களை குறை சொல்லவில்லை, சிறந்த இலக்கியம் கையில் இருக்கும்போது அதைப் புறக்கணிக்கும் போக்கு மாறவேண்டும் என்பது எனது குறிக்கோள். ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற குழுக்கள் அமைத்து தமிழர்கள் பயின்று வந்தால் நல்லதுதான். அப்படிப் பயிலும்போது வெறும் மரபு வழி உரைகளை மட்டும் பயிலாது மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துகளையும் அண்மையில் ஆய்வு வழி வெளிவந்துள்ள கருத்துகளையும் எடுத்துக் கொண்டு அவற்றையும் கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தி ‘குணம்நாடி குற்றமும்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்ற கொள்கைப்படி எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து சரியானவற்றை ஏற்றுக்கொண்டு தவறானவைகளை நீக்கிவிட்டு புது அணுகுமுறையோடு நாம் நமது இலக்கியங்களை அணுகவேண்டும். அதுதான் என்னுடைய வேண்டுகோள்.

சிறகு: கடைசியாக ஒரு கேள்வி. அடுத்த தலைமுறை சார்பாகவும் அவர்களின் பெற்றோர்களின் சார்பாகவும் கேட்பது- தமிழ் கற்றுக்கொடுக்கும் பல்கலைக் கழகங்கள் பெருகியிருக்கின்றன. ஆனால் தமிழ் படிக்கும் மாணவர்கள் பெருகவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் மட்டுமல்ல பொதுவாக நீங்கள் அவர்களுக்குக் கூறும் அறிவுரை என்ன?

திரு.பழனியப்பன்- இளையோருக்கு ஒரு செய்தி சென்று சேர பெற்றோருக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். அதனால் பெற்றோர்களே, தமிழைப் பற்றி, தமிழ் வரலாற்றைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது. உலகம் முழுதும் தொலைபேசித் தொடர்பாலும் செய்திப் பரிமாற்றத்தாலும் பலவித பண்பாடுகளோடும் பழக வேண்டிய நிலை உள்ளது. இந்த உலக அங்காடியில் நமது பண்பாடு நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அவற்றின் சிறப்புகள் என்ன, உண்மையான வரலாறு அவற்றால் என்ன பயன் என்பதை நாம் அறிந்திருந்தால்தான் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல முடியும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள இலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் இருந்துதான் ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் இருந்தது என்று நாம் அறிந்துகொள்ள முடியும். நமது சங்க இலக்கிய மரபின் இன்றியமையாமை பெற்றோர்களுக்குத் தெரிந்திருந்தால் அதை அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தெரிவிப்பார்கள். ஆகவே தமிழ் பெற்றோர்கள் நமது இலக்கியம், பண்பாடு, வரலாறு பற்றி ஓரளவேனும் தெரிந்திருந்தால், உலக அறிவு அங்காடியில் தமிழ்ப் பண்பாடு எவ்வளவு சிறப்பானது உலகிற்கு என்னென்ன கொடுத்திருக்கிறது என்பது போன்றவை தெரிந்திருந்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்வார்கள். அப்படி இல்லை என்றால் இளையோர் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று படிக்கும்போது இந்தியவியல் பாடங்களைப் படித்தால் ஓரளவிற்குத் தெரியும். இளையோர், உலகின் வருங்காலம் என்பதால் இளையோருக்கு பெற்றோரும் மற்றோரும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

சிறகு: முனைவர் திரு.பழனியப்பன் அவர்கள் நல்ல செய்திகளையும் விழிப்புணர்வுகளையும் கொடுத்ததற்கு நன்றி. திரு.பழனியப்பன் அவர்களின் கட்டுரைகளை நமது ‘சிறகில் வெளியிடவுள்ளோம். மீண்டும் நன்றி.

திரு.பழனியப்பன்- கலிபோர்னியாவிலிருந்து இங்கு வந்து நேர்காணல் கண்டு தமிழைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்ததற்கு தில்லைக்குமரன் அவர்களுக்கும் ‘சிறகு’ இதழுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

28 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “திரு. சுடலைமுத்து பழனியப்பன் நேர்காணல்”
  1. சு. பழனியப்பன் says:

    மேலும் நான் தெளிவுபடுத்த விரும்புவன இரண்டு.

    1. தமிழில் ளகரம் ழகரம் ஆகும் மிகைத்திருத்தத்தைப் பற்றிய என் கூற்று என்னுடைய தனிப்பட்ட எண்ணம் அல்ல. திராவிட வரலாற்று மொழியியல் வல்லுநர்களின் முடிபு அது. அதைப்பற்றி Michail S. Andronov என்ற அறிஞரின் “A Comparative Grammar of the Dravidian Languages” என்ற நூலில் கூறுவதைக் காணச் சொடுக்குக http://tinyurl.com/78pzvvk .

    2. நான் “வைணவ மரபைப் பின்பற்றுவோர்” எனக் குறிப்பிட்டவர்கள் வைணவ மரபுவழி விளக்கங்களைப் பின்பற்றி ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லும் தமிழ் ஆராய்ச்சியாளர்களே.

    அன்புள்ள
    சு. பழனியப்பன்

  2. வன்பாக்கம் விஜயராகவன் says:

    “தமிழில் ளகரம் ழகரம் ஆகும் மிகைத்திருத்தத்தைப் பற்றிய என் கூற்று என்னுடைய தனிப்பட்ட எண்ணம் அல்ல. திராவிட வரலாற்று மொழியியல் வல்லுநர்களின் முடிபு அது”

    தமிழில் எந்த இடத்தில் ழ வந்தாலும் அது ள வாக மிகைத்திருப்பட்டு விடும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத மிகை . சில இடங்களில் அப்படி கூரலாமே தவிர , அது ஜெனரல் ரூல் இல்லை.

    In linguistics or usage, hypercorrection is a non-standard usage that results from the over-application of a perceived rule of grammar or a usage prescription. A speaker or writer who produces a hypercorrection generally believes that the form is correct through misunderstanding of these rules, often combined with a desire to seem formal or educated.[1][2]

    Linguistic hypercorrection occurs when a real or imagined grammatical rule is applied in an inappropriate context, so that an attempt to be “correct” leads to an incorrect result.

    மிகைத்திருத்தம் என்பது ஒரு சொல்லை கேட்பவர் , அது இப்படி இருக்க வேண்டும் என உண்மை அல்லது புனை இலக்கண விதிகளை கேட்ட சொல்லின் மீது போட்டு, அதை மாற்றுவது.

    பல முறை அது மாற்று மொழிகளை கேட்பதினால் வருவது, தாய்மொழியை பேசுவதினால் அல்ல. தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் ள கரத்தில் வருவன , யாரும் அதை ழ வாக “மிகைத்திருத்தம்” செய்வதில்லை.

    விஜயராகவன்

  3. க. தில்லைக்குமரன் says:

    திரு ந.து. லோகநாதன் அவர்கள் மின் தமிழ் எனும் குழுமத்தில் எழுதியதையும் அவருக்கு நான் எழுதியப் பதிலையும் கீழேக் கொடுத்துள்ளேன்.
    ———

    அன்புமிகு
    தில்லைக் குமரன் அவர்களுக்கு,

    (௧) நிறைய எடுத்துக்காட்டுகள் கிடைக்கும் எனினும் தற்போது ஒன்றினை மட்டும் வைக்கின்றேன் காண்க
    The temple also has inscriptions of later Pandya period belonging to 13th century AD and Chola ruler named Kulothunga Cholan-I (1070-1120 AD) at the teppakulam of the temple.
    During 1259 AD, Jadavarman Sundarapandian implemented renovation works at the temple and installed the deity of Sakkraathalwar. An inscription has a reference to ‘Vinnagara Alwar’ referring to Lord Vishu.

    It refers to a god Vikarama Pandya Vinnagar Alwar, which probably means the small shrine of the reclining Vishnu situated between the central shrine and that of Moola Mahalinga. But this epigraph has nothing to speak on the present shrine.

    பல சிவன் கோயில் இறைவன் ஆழ்வார் என குறித்ததைப் படித்த நினைவில் எழுதினேன். திருவாளர் பானுகுமார் அவர்கள் தீர்தங்காரர்களையும் ஆள்வார் என குறிப்பதை க் காட்டினார் என நினைக்கிறேன். ஒரு சொல் பல காலகட்டங்களில் பல இடங்களில் வேறுபாடு உடைய பொருளுடன் வருவது இயற்கைதானே நான் முற்றிலும் மறுக்கும் கருத்தில் வைக்கவில்லை அப்படியும் உண்டு என காட்ட நினைத்தேன் அவ்வளவே இது நிற்க

    சிறகு பக்கங் களையும் கண்டேன் திரு பழனியப்பனை யூனிகோடு கிரந்த பற்றிய ஆவணத்தில் பார்த்தவர் என் நினைக்கிறேன் பிறகு தொடர்பு கொள்வோம்

    நூ த லோ சு

    —-
    அன்புமிகு திரு லோகசுந்தரம் அவர்களுக்கு வணக்கம்.

    தாங்கள் எழுதியதைதான் முனைவர் பழனியப்பன் தனது கட்டுரையில் கூறியுள்ளார். http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf. இக்கட்டுரையில் பக்கங்கள் 76 & 77 பார்க்கவும். பக்கங்கள் 80 & 81-ல் சமணர்களின் பார்வையையும் பழனியப்பன் அவர்கள் குறித்துள்ளார்கள். தயவு செய்து இக்கட்டுரையை முழுதும் படிக்கவும்.

    திரு பானுகுமார் அவர்கள் கூறுவதை பழனியப்பன் அவர்களும் குறித்துள்ளார், பார்க்கவும் பக்கம் 80 & 81 பின்குறிப்பு 104. திரு பானுகுமார் அவர்களின் மின் தமிழில் எழுதியது கீழே…
    http://groups.google.com/group/mintamil/msg/1fe63f5d1a438d8a

    அன்புடன்,
    க. தில்லைக்குமரன்
    இளந்தமிழரணி – http://www.ilantamilar.org

  4. வே.தொல்காப்பியன் says:

    இந்நேர்காணலில் பல பயனுள்ள சிந்திக்க வைக்கும் கருத்துகள் உள்ளன. திரு.சு.ப. சுட்டியுள்ளவாறு ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ (திருக்குறள்: 423) என்பதைப் பின்பற்றுவோம்.

    பழந்தமிழர் பண்பாட்டில் மன்னர்கள் பலர் சான்றோர்களாக இருந்துள்ளதைப் பார்க்கிறோம். மேலும் அவர்கள் சான்றோர்களைப் போற்றியவர்களாகவும் இருந்துள்ளதைப் பார்க்கிறோம்.

    பழந்தமிழர் வீரத்தை (திட்பத்தை / ஈகத்தை) மீட்க முயலும் போது அக்காலத்தில் நிலவிய சான்றாண்மையும் சேர்த்து மீட்கப் பட்டால் தான் ஒன்றை ஒன்று சமப்படுத்தியும் பலப்படுத்தியும் நிலைக்கும்; பயன்படும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பது பழந்தமிழர் மூதுரை.

    இக்காலத் தமிழரில் அத்தகைய சான்றோர் தொகையும் குன்றியுள்ளதைக் காண்கிறோம். எனவே சு.ப. மற்றும் இதில் பங்கு கொண்டுள்ளவர்கள் போன்ற சான்றோர்கள் பெருக வேண்டும். இத்தகைய பண்பான, பக்குவமான கருத்துப் பரிமாற்றங்கள் அதற்கு வழி வகுக்கும். அதற்கு இடம் தந்து புரக்கும் ‘சிறகு’ வாழ்க! வளர்க!

    இங்கு ஆய்வு செய்யப்படுபவை குறித்துக் கருத்து சொல்லும் அளவுக்கு இலக்கியப் பயிற்சியோ, புலமையோ வரலாற்று ஆராய்ச்சி அறிவோ எனக்கு இல்லை. ஆனால் பழந்தமிழ் சமுதாயத்தில் சாதிப் பாகுபாடுகள் இல்லை என்பதை சார்பற்ற ஆய்வு அடிப்படையில் நிறுவுவது என்பது இன்றைய‌ தமிழரிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் ஒரு முக முயற்சியே. பரிணாம வளர்ச்சி அறிவியல், சமூக உளவியல், பொருளியல், நடைமுறை வாழ்வியல், மெய்யுணர்தல்… எனப் பல முகங்களிலும் முயற்சி தேவை.

    தமிழறிவுடன் வடமொழி, வரலாற்று, சமூகவியல் புரிதல்களும் இருக்கும் போது தான் இலக்கிய‌ ஆய்வு பக்குவமாக இருக்கும் என்று திரு.சு.ப. சுட்டிக் காட்டியுள்ளது போல் நாமும் இலக்கியம் சமூகவியலுடன் அரசியல் பொருளியல் அறிவியல் மெய்யியல்… புரிதல்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதே ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகலாக’ (திருக்குறள்: 140) இருக்கும். இல்லாவிடில் யானையைப் பார்த்த குருடர்களைப் போல் நாம் ஒவ்வொருவரும் ‘காணாதான் காட்டியதாக‌’ (திருக்குறள்: 849) வெற்று அறிவால் வெட்டிக் கொண்டு நிற்போம்.

    ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ (திருக்குறள்: 1110) என்று அறிவின் எல்லையையும் உணரும் போதே அதை ஒதுக்க வேண்டிய நேரத்தில் ஒதுக்கி ஒற்றுமையைக் காக்க முடியும். அதே சமயம் ‘செவி கைப்பச் சொற் பொறுக்கும்’ (திருக்குறள்: 389) தன்மை கொண்டு அறிவுக்குத் தலைமை தர வேண்டிய அளவுக்குத் தந்து ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ (திருக்குறள்: 448) போல் ஆகாமல் ‘இடிக்கும் துணையாரை ஆள்வாரை’ (திருக்குறள்: 447) யாரும் கெடுக்க முடியாத வண்ணம் வாழ்வோம்; செழிப்போம்.

    குறிப்பு:1 திருக்குறள்களை அள்ளித் தெளித்திருப்பது என் ‘அறிவைக்’ காட்ட அன்று. எழுதியவனைப் புறக்கணித்து திருக்குறள்களை உண்ணுக.

    குறிப்பு:2 எனக்கு தெரிந்த ‘ஆள்வாரை’ எப்படியோ கொண்டு வந்து சொல்லி விட்டேன்!

    வே.தொல்காப்பியன்

  5. S. Palaniappan says:

    இந்த நேர்காணலில் நான் பேசியதில் ஒரு பிழை உள்ளது. இரண்டாவது பகுதியின் இறுதியில்(13:03) நான் பேசியிருப்பது, “இது மாறினால்தான் நம்முடைய பண்பாட்டிலேயே உள்ள தவறுகளை நாம் திருத்திச் சிறந்த கூறுபாடுகளைத் தக்கவைத்துக் கொண்டு மோசமானவற்றைக் களையக்கூடிய ஒரு ஆற்றல் நமக்கு இராது.” இங்கு “இராது” என்பது பிழை. “இருக்கும்” என்பதே நான் சொல்ல வந்தது. இப்பிழைக்காக வருந்துகிறேன். இதை யாரும் சுட்டிக்காட்டவில்லை என்பதற்கு அவர்கள் சூழலை வைத்து நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம். எப்படி இருப்பினும் இனிமேல் இதைப் பார்ப்போருக்கு இத்திருத்தம் உதவியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    இந் நேர்காணலின் பின்னீடுகளில் எழுந்த சில கேள்விகளுக்கு மறுமொழியளிக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். மக்கள் சொற்பிறப்பியல் (folk etymology) வேற்று மொழிச் சொற்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. http://www.answers.com/topic/folk-etymology#ixzz1kXUfjLc4 என்ற வலைப்பக்கத்தைப் பார்க்கவும். Fowler’s Modern English Usage என்ற நூல் மக்கள் சொற்பிறப்பியலின் விளக்கமாகக் கூறுவது:
    “is ‘a popular modifying of the form of a word or phrase in order to make it seem to be derived from a more familiar word’. Examples are cockroach (from Spanish cucaracha), sparrow-grass (a dialect and colloquial name for asparagus), and hiccough (a later spelling of hiccup under the mistaken impression that the second syllable was related to cough). The term is also applied more generally to any popular but mistaken account of the origin of a word or phrase, such as Amazon(explained by the Greeks as derived from amazos ‘breastless’, as if from a- ‘without’ + mazos ‘breast’, referring to a fable that the Amazons cut off the right breast so as to draw a bow more easily) and posh (that it is formed from the initials of port out starboard home, referring to the more comfortable accommodation on ships formerly sailing between England and India).” குறிப்பாக “The term is also applied more generally to any popular but mistaken account of the origin of a word or phrase” என்பதைக் கவனிக்கவும். முதலில் வைணவத் தொண்டர்களைக் குறித்த ஆள்வார் என்ற சொல்லே பின்பு ஆழ்வார் என்று மாறியிருக்கிறது என்பது தெரியாமல் பின்னால் வந்த வைணவர்கள் ஆழ்வார் என்பதே என்றுமுள்ள வடிவம் என்று தவறாக எண்ணிவிட்டார்கள். அதன் விளைவாக அவர்கள் ஆழ்வார் என்ற சொல்லுக்கு ஆழ்- என்ற வேரிலிருந்து பிறக்கும் பொருளை வைத்து விளக்கம் சொல்வது தவறான சொற்பிறப்பியல் கூற்றாகும் (“mistaken account of the origin of a word or phrase”).

    நாம் இங்கு ஆயும் ஆழ்வார், ஆள்வார் ஆகிய வடிவங்களில் எது முதல் வடிவம் என்பதற்குச் சான்றுகள் ஏராளம். சான்றுகளின் அடிப்படையில் வந்த ஆய்வு முடிபையே தில்லைக்குமரன் ஏற்கெனவே சுட்டிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் நான் கூறியுள்ளேன். என்னுடைய கட்டுரையை வாசிக்க வசதியில்லாதோருக்காகச் சுருக்கமாக என் ஆய்வு முடிபுகளை இங்கே சொல்கிறேன்.

    தமிழகத்தில் தோன்றிய இறையன்பு இயக்கம் இறையன்புத் தொண்டர்களை இறைவனுக்கு நிகராகவே போற்றியது. சைவத்தில் அப்பர் கூறுவது:

    சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
    தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
    மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
    மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
    அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
    ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
    கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்
    அவர்கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே (தேவாரம் 6.95.10)

    வைணவத் தொண்டரடிப்பொடியின் கூற்று இதோ:

    பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
    இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில்
    தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்று நின்னொடும் ஒக்க
    வழிபட அருளினாய் போன்ம் மதிள் திருவரங்கத்தானே (திருமாலை 42)

    மேலும் பெரியபுராணத்து விறன்மிண்ட நாயனார் கதையையும் பார்க்கவும்.

    இந்த அடிப்படையில் இறையன்பு இயக்க மரபினர் இறைவனைக் குறிக்கும் சொற்களைத் தொண்டர்களைக் குறிக்கவும் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக ஆள்வார், நாயனார், பெருமாள், உடையார், ஆண்டவன்/ஆண்டான்/ஆண்டவர்/ஆண்டார், எம்பெருமான், சுவாமி, ஈசன், என்ற சொற்கள் எல்லாமே இறைவனைக் குறித்தன. இவற்றில் நாயனார் என்ற ஆண்பாலுக்கேற்ற பெண்பால் சொல் நாச்சியார் என்பது. அது போலவே ஆண்டான் என்ற சொல்லின் பெண்பால் சொல் ஆண்டாள் என்பது. உண்மையில் ஆள்வார் என்ற சொல்லும் ஆண்டாள் என்ற சொல்லும் அடிப்படையில் ஒரே பொருள் கொண்டவைதான். ஒரே கோயிலில் உள்ள இறைவனை நாயனார் என்றும் இறைவியை நாச்சியார் என்றும் கூறுவதையும் நாம் பல கல்வெட்டுக்களில் காணலாம். சிவ நெறித் தொண்டர்களை நாயனார் என்றனர். திருமால் நெறித் தொண்டர்களில் ஒருவரைப் பாண் பெருமாள் என்றனர். கோதையை நாச்சியார் என்றும் ஆண்டாள் என்றும் அழைத்தனர். இராமானுசரை உடையார் என்ற சொல்லின் மாற்று வடிவான உடையவர் என்று அழைத்தனர்.

    ஆள்வான்/ஆள்வார் > ஆழ்வான்/ஆழ்வார் ஒலிமாற்றம் வைணவத் தொண்டர்களைக் குறிக்கும் வழக்கில் மட்டும் தோன்றிய ஒன்றல்ல. திருமால், சிவன் ஆகிய கடவுள்களைக் குறிக்கும் சொற்களிலும், தமிழ் மன்னர்களையும், மன்னர் குடும்பப் பெண்களையும் குறிக்கும் சொற்களிலும் இவ்வொலிமாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆதலால் ஆழ்வார் என்ற சொல்லின் விளக்கம் இம்முவகைச் சொல்லாட்சிக்கும் பொருந்தவேண்டும்.
    ஆழ்வார் என்ற சொல்லிற்குத் இறையன்பில் ஆழ்ந்தவர்கள் என்பதே விளக்கம் ஆனால் அவ்விளக்கம் கடவுள்களுக்குப் பொருந்தாது.

    ஆள்வான்/ஆள்வார் > ஆழ்வான்/ஆழ்வார் போன்ற மிகைத்திருத்தங்கள் பலவற்றைக் கல்வெட்டுக்களில் காணலாம். மிகைத்திருத்தம் (hypercorrection) என்பதற்கு விளக்கம் காண
    http://www.highbeam.com/doc/1O36-hypercorrection.html என்ற பக்கத்தைக் காணவும். பேச்சு வழக்கில் ழகரம் வரவேண்டிய சொல்லில் தவறக ளகரம் வருவதை அடிக்கடி நாம் காணலாம். இந்தத் தவறில்லாமல் பேசவேண்டும் என்று நினைக்கும் ஒருவர் உண்மையிலேயே ளகரம் வரும் சொற்களிலும் ழகரத்தைப் பெய்து பேசுவது மிகைத் திருத்தம் ஆகும். இதற்குக் கல்வெட்டுக்களில் நாம் காணும் ஏராளமான சான்றுகளில் சில:

    திருவாய்க் கேள்வி > திருவாய்க் கேழ்வி
    வெள்ளாளன் > வெள்ளாழன்
    ஆளுடையானான… நாடாள்வானேன் > ஆழுடையாநாந…நாடாழ்வாநேந் (ன > ந என்பதும் கல்வெட்டுக்களில் காணலாம்)
    அழகப்பெருமாள் விண்ணகர ஆள்வார்கோயில் > அழகப் பெருமாள் விண்ணகர ஆழ்வார்கோயில்

    வைணவ மரபினர் ஆள்வார்களைப் போற்றும் மரபும் ஆள்வார் என்ற சொல்லாட்சியோடு மிகவும் பொருந்துகிறது.
    நாலாயிரத்திவ்வியப் பிரபந்தப் பதிப்பில் மதுரகவியாரைப் போற்றும் நாதமுனியின் தனியன் மதுரகவியின் கண்ணி நுண்சிறுத்தாம்புக்கு முன் வருவது.

    வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
    மாறன் சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள்
    வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
    ஆள்வார் அவரே அரண்

    ஒவ்வொரு ஆள்வாரின் பாடல் தொகுதிக்குப் பின்னும் அந்த ஆள்வாரின் “திருவடிகளே சரணம்” என்று இறைவனை வணங்குவதைப் போலவே ஆள்வார்களையும் வணங்குவதைக் காணலாம்.

    அடியாரை ஆண்டாராக அழைக்கும் இந்த மரபு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சபரிமலைக்குச் செல்லும் நோன்பு மேற்கொண்ட ஐயப்பன் அடியார்கள் ஒருவரையொருவர் ‘சுவாமி’ என்று அழைப்பது இம்மரபின் தொடர்ச்சியே.

    ஆதலால் வைணவ அடியார்களைக் குறிக்கும் ஆழ்வார் என்ற சொல்லின் வடிவம் மிகைத்திருத்தமானது என்பதில் ஐயமே இல்லை. மிகைத்திருத்தத்தின் விளக்கம் “The use of an incorrect form by a speaker trying to avoid ones that are stigmatized”. இங்கு ஆங்கிலத்தில் மிகைத்திருத்த விளக்கத்தில் “incorrect form” என்று சொல்வதையும் மக்கள் சொற்பிறப்பியல் பற்றிய விளக்கத்தில் “mistaken account of the origin of a word or phrase” என்று சொல்லியிருப்பதன் அடிப்படையில்தான் நானும் வைணவ மரபில் அடியார்களைக் குறிக்கும் சொல்லில் தவறு நேர்ந்திருக்கிறது என்றேன்.

    என்னுடைய நோக்கில் அடியார்கள் இறையன்பில் ஆழ்ந்தவர்கள் என்பது மிக எளிய விளக்கம். ஆனால் அடியார்கள் இறைவனுக்கு நிகராகக் கருதப்பட வேண்டும் என்பதில்தான் மிகச் சிறந்த கொள்கை பொதிந்துள்ளது. இக்கொள்கை ஆட்களுக்கும் இறைவனுக்கும் இடையில் உள்ள உறவை மட்டுமல்லாமல் ஆட்களுக்கிடையில் இருக்கவேண்டிய உறவையும் காட்டுகிறது. திருமாலை 42 ஒரு சமுதாயப் புரட்சிப் பாடல் என்றே சொல்லலாம்.

    அன்புள்ள
    சு. பழனியப்பன்

    • வன்பாக்கம் விஜயராகவன் says:

      “பேச்சு வழக்கில் ழகரம் வரவேண்டிய சொல்லில் தவறக ளகரம் வருவதை அடிக்கடி நாம் காணலாம். இந்தத் தவறில்லாமல் பேசவேண்டும் என்று நினைக்கும் ஒருவர் உண்மையிலேயே ளகரம் வரும் சொற்களிலும் ழகரத்தைப் பெய்து பேசுவது மிகைத் திருத்தம் ஆகும்.”

      If many people say ளகரம் where lot of others say ழகரம், we cannot pass value judgement on it as wrong. If a sizeable section of Tamils drop ழகரம், that means Tamil is changing and perhaps splitting between தமிழ் and தமிள்.

      Value judgements are to be avoided when consdering how people speak.

      Vijayaraghavan

    • வன்பாக்கம் விஜயராகவன் says:

      I don’t understand what your point is.

      If you say “the Twelve” (i.e. the 12 Tamil vaishnavite saints) were once called ஆள்வார் and about 800 years back , this term to refer to “The Twelve”changed to ஆழ்வார் , that is possible. So far, you are in academic territory whether right or wrong.

      If you say it is due to folk-etymology and hyper-correction, that is a speculation and not a correct usage of the term “folk etymology”.

      And since you are saying the term ஆழ்வார் to refer to “The Twelve” , and if you think that is தவறு , it makes no sense to call a well-known usage as தவறு .

      We only point out mistakes in the usage of the words by referring to it’s ordinarily understood meaning. To call an ordinarily understood meaning – in this case ஆழ்வார் referring to the 12 vaishnavaite saints – as தவறு is bizarre and nothing to do with philology or linguistics.

      As an extension of this to call வைணவ மரபினர் as lacking in துணிச்சல் is personal prejudice and a statement which clarifies nothing.

      Regards

      V.C.Vijayaraghavan

    • வன்பாக்கம் விஜயராகவன் says:

      இந்த இண்டெர்வியூவில் இன்னொரு அடிப்படை பிழை இப்போதுதான் பார்க்கிறேன். சு.ப. சொல்வது போல் “வைணவர்களை தமிழர்கள் இலக்கியத்தின்படி ஆழ்வார்கள் என்று சொல்வார்கள்.” என்பது சரியில்லை.

      லக்ஷக்கணக்கான தமிழ் வைணவர்கள் வாழ்கின்ரனர், வாழ்ந்துள்னர்; அனைவரும் ஆழ்வார்கள் அல்ல. ஆழ்வார்கள் என்றால் 12 பேர்தான்.

      மேலும் “ஆதலால் வைணவ அடியார்களைக் குறிக்கும் ஆழ்வார் என்ற சொல்லின் வடிவம் மிகைத்திருத்தமானது என்பதில் ஐயமே இல்லை” என்று சு.ப.விற்க்கு ஐயம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஐயமின்மை தர்க்கம், உண்மை, மொழியியல் ஆகிவவற்றிற்க்கு சமானம் அல்ல.

      வகொவி

    • க. தில்லைக்குமரன் says:

      அன்பின் பழனியப்பன்,

      ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
      இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில்
      தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்று நின்னொடும் ஒக்க
      வழிபட அருளினாய் போன்ம் மதிள் திருவரங்கத்தானே (திருமாலை 42)”

      இந்த பாடலின் மூலம் தொண்டரடிப்பொடியின் சமூகச் சீர்த்திருத்தப் பார்வையைக் காட்டியுள்ளீர்கள், நன்றி! ”இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில் தொழுமினீர் கொடுமின் கொள்மின்” என்கிற வார்த்தை எத்துனை பலமானது. சாதியின் அடித்தளத்தையே அசைக்கக் கூடியது என்று இன்றுதான் நான் உணர்கிறேன். இழிகுலத்தில் பிறந்தவர்களாகவிருந்தாலும் அவர்கள் அவர்களைத் தொழுவீர் என்று மட்டும் கூறாமல் ‘கொடுமின் கொள்மின்’ என்று கூறுவதில் தொண்டரடிப்பொடி பெரியார் ஈவெரா-வை மிஞ்சி விட்டார் என்றுதான் கூறவேண்டும். ‘கொள்வினை-கொடுப்பினை’ என்று நீங்கள் என்னிடம் கூறியது எவ்வளவு பொருத்தம். இழிகுலத்தில் பெண்/பிள்ளை எடுப்பதும் கொடுப்பதும் வேண்டும் என்று தொண்டரடிப்பொடி கூறுவதிலிருந்து மிகப் பெரிய சமூகச் சீர்த்திருத்தவாதியாகி விட்டார். விளக்கத்திற்கு நன்றி.

      அன்புடன்,
      தில்லை

    • க. தில்லைக்குமரன் says:

      பழனியப்பன் அவர்களின் ஆள்வார்/நாயன்மார் கட்டுரையைப் படிக்க சுட்டவும்
      http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf

      - தில்லை

  6. malar selvan says:

    சாதி குறித்த ஆய்வுகள் தமிழ்ச் சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று ! மேலும் முனைவர்.பழனியப்பன் ‘சாரி’ என்ற அமைப்பின் மூலம் அமெரிக்க பல்கலை ஒன்றின் ஒத்துழைப்புடன் நடத்தி வரும் கருத்தரங்குகள் பெரும்பயன் கொண்டது.

  7. kasi visvanathan says:

    இதுவும் சரியே. சான்றாக மெய்கண்ட நாயனார் எழுதிய ” சிவஞான போதம் ” என்ற சைவ இலக்கியம் வட மொழியில் இருந்து வந்தது என்று முனைப்பு கொண்டவர்களிடம், அண்ணல் சிதம்பரனார், மேற்படி இலக்கியம் வட மொழியிலும் இருப்பதாலும், ஒன்று மற்றொன்றின் படியாகவே இருப்பதாலும் அதனை வட மொழியில் இருந்து வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தன் விளக்கவுரையில் குறிப்பிடுகிறார். மேலும் தமிழில் இருந்து எடுத்துக்கொண்ட பல சொற்களை நாம் அடையாளம் காண்பதும், அதனை படிப்பதின் வாயிலாகவே முடியும். வெறும் மொழிக்காழ்ப்பு என்பது பயன்படாது. பெருங்காப்பியங்கள் என்ற முறை வந்தது என்னவோ வட மொழியில் இருந்து தான். அது தமிழுக்கான இலக்கிய அமைப்பே கிடையாது. இதனை மு.வா. அவர்கள் அழகுற சான்று கூறுகிறார்.

    • க. தில்லைக்குமரன் says:

      அன்பின் காசி, இந்தியாவில் இன்றுள்ள பக்தி முறை நமது பக்தி இயக்கத்திலிருந்து சென்றதுதான். நாயன்மார்களும் ஆள்வார்களும் உருவாக்கியப் பக்தி முறையே இன்று இந்தியா முழுதும் உள்ளது. 9ஆம் நூற்றாண்டில் தமிழ் பிராமணர் ஒருவரால் எழுதப்பட்ட ‘பாகவத புராணம்’ என்கிற நூல் மூலம்தான் வட நாட்டில் பக்தி இயக்கம் பரவியது. இது ஒரு வடமொழி நூல். ’தூய்மையான பரவசத்தால்’ இறைவனை வணங்கும் பக்தி முறை இந்தியாவிற்கு தமிழர்களின் அன்பளிப்பு. நாவுக்கரசர் ஆரியமும், தமிழும் சிவனின் இரு கண்கள் போல என்பார். அந்நாளில் வடமொழியும், தமிழும் ஒன்றிற்கு ஒன்று அளித்து வளப்படுத்தின.

      • kasi visvanathan says:

        திரு. தில்லைக்குமரன், நீங்கள் சொல்வது சரியே. இதனை பன் மொழிப்புலவர் அப்பாதுரையாரும் கி.பி.7, 8 ம் நூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்த சைவ, வைனவ சமைய மரபுகளே, இன்று இந்தியா முழுமைக்கும் பக்தி இயல்பின் ஆணி வேராக இருப்பதற்கும், தமிழிசையால் – இறைவனை தொழுவதற்கு மட்டுமல்ல, (பண்டைய )இந்திய நிலப்பகுதிகளுக்கும் சமயம் பரப்ப இசை வடிவத்தை, சமயக்குரவர்கள் எடுத்துக்கொண்ட பரபுரை உக்தி முறையையும் நிறுவுகின்றார். ஆகவே தான் அண்ணல் சிதம்பரனார் இதனை வடமொழிப்படுத்திய கூறுகள் இருப்பதை எடுத்துச் சொல்கிறார். இன்றும் கூட பிராகிருத மொழியறிஞர் மு.கு.செகன் நாதராசா என்பார், பிராகிருத மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒப்பாய்வுகளும், அது தவிர்த்த ” சம்ஸ்க்ரிதா” என்ற வட மொழியின் செவ்வியல் தகுதியை தமிழர்களின் பங்களிப்பினாலேயே பெற முடிந்தது என்பதனையும் கூறுகிறார். இன்று நமது பங்களிப்பிற்கு உள்ள எவ்வித சான்றுகளையும் உணராமல், தமிழ் மொழி அழிப்பே ப்றவிக்கடனாக செயல்படுவோரைப்பற்றி என்ன சொல்வது ?

  8. rajkumar says:

    தமிழ் இலக்கியங்களை புரிந்துகொள்ள சமஸ்க்ரிதத்திர்க்கு போக வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது… சங்க காலத்தில் சமஸ்க்ரிதம் என்ன அவ்வளவு வளமையோடா இருந்தது?? சுடலை பழனியப்பனுக்கே வெளிச்சம்…

    • க. தில்லைக்குமரன் says:

      திரு. ராஜ்குமார், முனைவர் பழனியப்பன் அவர்கள் கூறுவது அறிவார்ந்த அறவுரை. வடமொழித் திணிப்பிற்கும், வடமொழி அறிவிற்கும் இடையுள்ள வேறுபாட்டை உணரவேண்டும். வட மொழித் திணிப்பை, வடமொழிப் பயன்பாட்டை எதிர்க்க வேண்டும். ஆனால் வடமொழியை அல்ல. பழனியப்பன் கூறுவது தமிழறிஞர்களுக்கு, குறிப்பாக மொழியிலாளர்களுக்கு குறைந்த பட்சம் வடமொழியும் ஒருசில திராவிட மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். சங்க இலக்கியத்தில் வட மொழியும், வடவர் பண்பாடும் கலந்திருக்கிறது. அதற்கு சங்க இலக்கியத்திலும், அதற்குபின் வந்த இலக்கியங்களிலும் சான்றுகள் பலவுள்ளன.முதுபெரும் தமிழறிஞரான பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் தனது நூலான ’Smile of Murugan, The Tamil Literature’ என்கிற நூலில் (பக்கம் 11) ”The very beginnings of Tamil literature manifest clear traces of Aryan influence – just as the very beginnings of Indo-Aryan literature, the Rgvedic hymns, and show traces of Dravidian influence”.

      பழனியப்பன் கூறுவது படி பல சங்கப் பாடல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள வட மொழி இலக்கிய அறிவு தேவை. அவர் மேலும் கூறுவது போல் அகம் குறுந்தொகை 361-ம் பாடல்களைப் புரிந்துகொள்ள ஆரியரது அக்னி வேள்வி குற்த்த அறிவு தெரிந்திருக்க வேண்டும். இப்பாடலைக்குறித்த கீழ்க்கண்ட விவாதங்களைப் பார்க்கவும்.
      http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9807&L=INDOLOGY&P=R8806&I=-3
      http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9807&L=INDOLOGY&P=R12404&I=-3

      சங்கப் பாடலில் வடமொழியின் தாக்கம் இருந்ததை போல் வடநூலிலும் (இருக்கு வேதம்) திராவிடச் சொற்கள் பலவுள்ளன. எனவே வடமொழி அறிஞர்களுக்கும் திராவிட மொழியறிவு இருப்பது அவசியம். அக்காலத்தில் இவ்விருமொழிகளும், பண்பாட்டு முறைகளும் நன்கு புழக்கத்திலிருந்தன என்பதை அகம் 361 பாடல் தெளிவாகக் காட்டுகிறது. அப்பாடலை எழுதியவர் ’எயினந்தை மகன் இளங்கீரனார்’ என்பவர் வேட்டுவச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் (எயின் – வேடன்). அக்காலத்தில் வேடர்களும் வடமொழியும் வடவர் பண்பாட்டும் தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. பார்க்கவும்: http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9807&L=INDOLOGY&D=0&I=-3&P=29035.

      சங்கக் காலத்தில் வாழ்ந்த பல மன்னர்கள் வடமொழியும், வடவர் பண்பாட்டையும் போற்றியிருந்தனர் என்பது ‘பாண்டியன் பல்யாகசாலை முடுகுடிமிப் பெருவழுதி’ போன்றப் பெயர்களின் மூலம் தெரியும். பதிற்றுப்பத்தில் கபிலர் (கபிலர் ஓர் ஆரியர்) பாடிய ஏழாம் பாட்டில் ‘உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அருங்கலம் ஏற்ப’ என்கிற பாடலில் சேரமன்னன் ‘செல்வக்கடுங்கோவாழியாதன்’ ‘உயர்ந்த புகழமைந்த வேள்விகள் பல செய்தான்’ என்று உரையாசிரியர் ஔவை துரைசாமிப்பிள்ளையவர்கள் கூறுகிறார். எனவே தமிழறிஞர்கள் வடமொழியும், வட நூலறிவும் தேவை என்பது தெள்ளத்தெளிவு. இது வடமொழியியலாளர்களுக்கும் பொருந்தும்.

      1970-க்கு முன்பு வாழ்ந்த அனைத்து தமிழறிஞர்களுக்கும் வட மொழியறிவு நிறைந்திருந்தது அனைவருக்கும் தெரியும். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் போன்ற பலர் வடமொழியில் அறிவார்ந்தவர்களாக இருந்தனர். அதனாலேயே அவர்கள் இருமொழி நூல்களும் பயின்று தமிழ்ப் பணி பல செய்தனர்.

      • kasi visvanathan says:

        நண்பர் தில்லை அவர்களுக்கு, – சங்க இலக்கியத்தில் வடமொழியின் தாக்கம் இருந்தது என்பதும் கூட சங்க இலக்கியத்தின் பிற்கால இலக்கியங்களில் தான் காண முடிகிறது. அதாவது சான்றாக முல்லைப்பாட்டு மற்றும் சில ஆற்றுப்படைகளில். ஆக சங்க இலக்கிய தொகுப்பும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளின் இடைப்பட்ட தொகுப்பாகத்தான் உள்ளது. அதாவது நமக்கு கிடைக்கும் சங்க இலக்கியங்களின் கால நிலை என்பது பல நூறு ஆண்டுகள் இடைவெளி கொண்டதாகவே உள்ளது. நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் தொகுக்கப்பட்டு நமக்கு கிடைக்காமல் போனதும் பல, அகப்படாமல் அழிந்து போனதும் பல. மொழிக்காழ்ப்பின்றி நமது ஆய்வுகள் தொடர்ந்தால் நல்ல பலன் கிட்டும். நல்ல கருத்தாடல். நன்றி.

      • க. தில்லைக்குமரன் says:

        இரு திருத்தங்கள்‘கபிலர்’ ஆரியரல்ல. அவர் ஒரு அந்தணர். ஆரியரும் அந்தணரும் ஒன்றல்ல.

        இன்னொன்று அகநானூறு 361, குறுந்தொகையல்ல.

        மன்னிக்கவும்.

        தில்லை

  9. kasi visvanathan says:

    ஆழ்வார் – ஆள்வர் குறித்த விவாதம், இவ்வளவு தேவையில்லை. திரு. பழனியப்பன் கூறியது தகுந்த சான்றுகளின் படியான ஆய்வு விளக்கமே.
    சமணர்களின் வருகை தமிழர் பண்பாட்டில் எவ்வளவு சீர் கேடுகளை உருவாக்கியது என்பதனை, தமிழ் இலக்கியம் படிப்போர் நன்றாக உணர முடியும். சமணர்களின், தங்கள் மத அடையாளத்தை முன்னிலைப்படுத்த, பகுப்புகளை புகுத்திய அவலம் தான் இன்று நாம் இந்த கதிக்கு வந்த நிலை.
    பிற காலத்தில் மேற்படி மதத்தின் மாற்றாக – அவர்களின் சைவ ( புலால் உண்ணாமை ) கருத்தியலை சீரணித்து எழுந்த தமிழகத்தின் சைவ – வைணவ வைதீக மதங்களும், அவர்களால் ஏற்ப்பட்ட பகுப்பினையை தங்களின் சனா தனத்திற்கு இலை போட்டு பசியாற்றிக் கொண்டது.
    பரி வள்ளல் சைவரும் அல்ல சைவமும் அல்ல. அவரை ஏற்று வாழ்ந்த கபிலரும் அவ்வண்ணமே. அப்படியானால் இன்று ஒடுக்கப்பட்ட பல மக்கள் பாரி, காரி, அதியன் போன்ற மண்ணின் மைந்தர்களின் வழித் தோன்றல்களே. வந்தவர்கள் எல்லாம் மேய்ப்பவர்கள் ஆனா பின்பு, உரிமையாளர்கள் அடிமையானார்கள்.
    சங்க இலக்கியங்களே தமிழரின் வாழ்வியலில், பல அந்நியர்கள் வருகையை பதிவு செய்து உள்ளது.
    திரு. பழனியப்பன் அவர்கள் நேர்காணல் ” சிறகு ” தமிழர் வாழ்வில் செய்த மறுமலர்ச்சி.
    இவர் போன்ற சிந்தனையாளர்கள் பலரை ” சிறகு ” தமிழ் வானில் கொண்டுவர வேண்டும்.

  10. வன்பாக்கம் விஜயராகவன் says:

    About “சிறப்பு ‘ழ’கரம்”

    2 samples of formal Tamil speech.
    The first is a TV newsreader and the second a Tamilnadu PWD Engineer explaining Mullaiperiyar issue

    http://www.youtube.com/watch?v=vWf-tAjevQU&list=PLFC55914CEDCC2978&index=2&feature=plpp_video

    http://player.vimeo.com/video/18283950?autoplay=1)%E0%AE 95

    ‘ழ’ missing !!

    While this is not majority – actually there have been no quantitative studies of Tamil speech variations , such absent ‘ழ’ are widespread

    Vijayaraghavan

  11. வன்பாக்கம் விஜயராகவன் says:

    “தமிழுக்கே சிறப்பாக உள்ள எழுத்துகள் – வல்லின ‘ற’கரம் சிறப்பு ‘ழ’கரம் போன்றவை-”

    தற்காலத் தமிழில் ற சிறப்பு ஒன்றும் இல்லை, ர வுடன் மெர்ஜ் ஆகி விட்டது.ழ பல தமிழர்களின் உச்சரிப்பில் இது ள அல்லது ல ஆகி விட்டது.

    வகொவி

  12. வன்பாக்கம் விஜயராகவன் says:

    பழனியப்பன் படி “வைணவர்களை தமிழர்கள் இலக்கியத்தின்படி ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதன் முதலில் அந்தச் சொல் ‘ஆள்வார்’ என்றுதான் இருந்திருக்கிறது. இதற்கு கல்வெட்டுக்களில் நாம் சான்றுகளைக் காட்ட முடியும். ஆனால் வைணவ மரபைப் பின்பற்றுவோர் இன்னும் ஆழ்வான் என்றும் ஆழ்வான் என்றால் திருமாலை வழிபடும் பக்தியில் ஆழங்கால் படுபவன் என்ற பொருளிலேயே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அந்த மரபில் உள்ள தவறை மறுத்துப் பேசும் துணிச்சல் அவர்களுக்குக் கிடையாது. கேள்வி கேட்கும் மரபும் கிடையாது.”

    பழனியப்பன் ஒரு அடிப்படை தவறு செய்கிறார். ஒரு சொல்லின் அர்த்தம் அதன் பயனர்கள் கொடுப்பதுதான். ஒரு சொல்லிற்க்கு “உள்குணமாக” ஒரு பொருளும் இல்லை. இதுதான் மொழியியலின் அடிப்படை.

    அதனால் தான் கொடுக்கும் அர்த்தம் தான் சரி, மற்றவர்கள் கொடுப்பது தவறு என்பது இந்தாலஜியைப் பற்றி பேசுபவரிடம் இருந்து ஆச்சர்யமாக உள்ளது.

    விஜயராகவன்

    • க. தில்லைக்குமரன் says:

      திரு விஜயராகவன், முனைவர் பழனியப்பன் அவர்களின் ‘ஆள்வார்/நாயனார்’ குறித்தக் கட்ட்ரையைப் படித்துப் பார்க்கவும். அதில் அவர் விரிவாக இதை விளக்கியுள்ளார்.
      http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf

      - தில்லை

      • வன்பாக்கம் விஜயராகவன் says:

        Hi Thillai

        To explain what is folk-etymology, this definition from Wikipedia is handy.

        “Folk etymology is change in a word or phrase over time resulting from the replacement of an unfamiliar form by a more familiar one.[1][2][3][4][5][6] Unanalyzable borrowings from foreign languages, like asparagus, or old compounds such as samblind which have lost their iconic motivation (since one or more of the morphemes making them up, like sam-, which meant “semi-”, has become obscure) are reanalyzed in a more or less semantically plausible way, yielding, in these examples, sparrow grass and sandblind.[7]”

        In the case of Azvar, it is NOT a folk-etymologic developement of Alvar. People know Alvar / Azvar have different meanings, the change in denoting the 12 vaishavite saints, knowing fully well the meaning of words.

        Folk-etymology comes from variations on foreign words, to make it sound like a native word, and which also makes sense to the native speakers. Alvar is NOT a non-Tamil word and therefore no folk-etymology is involved here.

        Regards

        Vijayaraghavan

      • வன்பாக்கம் விஜயராகவன் says:

        திரு.தில்லைகுமரன்

        நான் அந்த கட்டுரையை படிச்சுருக்கிறேன். சு.ப. படி

        1. 800 ஆண்டுகளுக்கு முன் ஆள்வார் என்ற பிரயோகம் நிறுத்தப்பட்டு ஆழ்வார் என்பது பயன்பட தொடக்கம் ஆகியது

        2. அதன் காரணம் ஹைபர் கரெக்ஷன் , ஃபோக் எடிமொலொஜி

        3. அதனால் ஆழ்வார் சொல் தவறு, ஆள்வார்தான் கரெக்ட்

        4. வைணவர்களுக்கு “ஆழ்வாரை” மாத்தி “ஆள்வார்”என சொல்ல வைணவர்களுக்கு துணிச்சல் இல்லை.

        #1 சரியாக இருக்கலாம்
        #2 ஆதாரமற்றது. ஆழ்வார் என்றால் ஆள்வார் என்பதை விட இன்னும் பக்தி ததும்பி நிற்பது, அதனால் அந்த 12 பேரை ஒருமுகமாக குறிக்க ஆழ்வார் என்ற பிரயோகம் வந்திருக்கலாம்.

        ஃபோக் எடிமாலஜி என்பது இது அல்ல. அது என்ன என்று விகிபீடியா சென்று பாருங்கள்

        இந்த பிரயோக மாற்றத்தை ஹைபர் கரெக்ஷன் என்பதும் சரி இல்லை , ஃபோக் எடிமொலொஜி என்பதும் சரி இல்லை. வேண்டும் என்றால் ஹைபர்-பயடி (அதீத பக்தி) என சொல்லலாம்.

        800 ஆண்டுகளாக 12 பேர்களை குறிக்கும் சொல் தவறு என்பது தனிமனித விருப்பு/வெறுப்பே தவிர ‘ஆய்வு’, ‘ஸ்காலர்ஷிப்’ என சொல்ல முடியாது.

        மொழியியலின் முதல் பிரின்சிபிள் எல்லோரும் சரியாக, புரியும்படியாக பேசுகின்றனர், பேச்சை தவறு என்பது ப்ரெஜுடிஸ். தனிமனித ப்ரெஜுடிஸ் ஒருநாளும் விவேகம் ஆகாது.

        விஜயராகவன்

  13. Innamburan says:

    ‘சிறகு’ அடிக்கட்டும். ‘புள்’ பறக்கட்டும். தமிழ் செழிக்கட்டும். நான் இந்த வாழ்த்தை இங்கிலாந்திலிருந்து அனுப்புகிறேன். அடுத்த தலைமுறை பற்றி திரு.பழனியப்பன் சொல்வது சரியே. முதலில் ஒரு காரியம் செய்வோம். இளையோர் பலர் தமிழ் பேசுவர்; புரிந்து கொள்வோர். ஆனால், படிக்கத்தெரியாது. எழுததெரியாது. அவர்களை, ஆடியோ/வீடியோ மூலம் திட்டமிட்டு அணுகுவோம். அதற்காகவே ‘ஒலித்தமிழ்’ என்ற திட்டத்தை, பொங்கலன்று துவக்கியுள்ளேன். இது முதல் படி. அமெரிக்கா வந்து மேலும் உழைக்கத் திட்டம். இந்த தமிழ்ப்பணியில் அமெரிக்கவாழ் தமிழர்கள் கை கொடுக்க வேண்டும். விருப்பமிருந்தால் கொ டொ: ஹ்ட்ட்ப்://ஒலிடமிழ்.சொம்
    துவக்க நிலை தான். பொறுத்தாளவேண்டும். நாம் எல்லரும் சேர்ந்து தான் வடம் பிடிக்கவேண்டும். எனக்கு அஞ்சல் அனுப்பினால், உடனே பதில் அனுப்புகிறேன்.
    அன்புடன்,
    இன்னம்பூரான் (innamburan@gmail.com>

  14. சண்முகம் says:

    திரு. பழனியப்பன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் சிந்திக்கவைக்கும் கருத்துக்கள்.. ஒரு மொழியினம் தொழில் சார்ந்த பிரிவினைகளால், மொழி அறிவு இல்லாமையால் எப்படி கெடுகிறது என்பது இவரது கருத்துக்கள் வாயிலாக உணர முடிகிறது.. ஆங்கிலக் கல்வி பல நன்மைகளை கொடுத்திருந்தாலும் அது தமிழரிடையே தமிழின் மரபுகளை மறக்க ஒரு காரணியாக அமைந்துவிட்டது.. மீண்டும் தமிழ் மரபுகள் தமிழரை ஒருங்கிணைக்க வரவேண்டும் என்பதே கட்டுரையாளரின் கருத்தாக இருக்கிறது..

  15. நாக.இளங்கோவன் says:

    திரு.பழனியப்பன் அவர்களின் கருத்துக்களை நேர்காணலில் கொண்டு வந்திருக்கும் சிறகுக்குப் பாராட்டுகள். சாதியத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தமிழர் ஒருப்படவும் உருப்படவும் முடியவே முடியாது.

    சிறகு தமிழ்வானில் பரவிப் பெருக வாழ்த்துக்கள்.

    அப்பாதுரையாரின் “தென்னாட்டுப் போர்க்களங்கள்”
    ஒரு அரும்பெரும் கருவூலம். இதனைத் தமிழர் அனைவரும் படிக்க வேண்டும். தமிழர் இனி என்ன செய்ய வேண்டும் என்ற சித்தாந்தத்தை வடித்தெடுக்க இந்நூல் இன்றியமையாதது. அதனை
    இணையத்தில் கொண்டுவரும் சிறகின் குறிக்கோள் வெல்லும்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

அதிகம் படித்தது