மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துணைவேந்தர் பிரச்சனைகளால் உயர்கல்வித் திட்டம் பாதிக்கப்படுகிறதா?

அன்புசெல்வம்

Aug 2, 2014

 

கி.பி. இரண்டாயிரம் ஆண்டின் முன்னேற்றம் நோக்கிய கோட்பாடுகளின் ஆதார அமைப்பாக இருப்பது உயர்கல்வித் திட்டம். படிப்படியாக இதன் முன்னேற்ற அளவீட்டை 2025 -ஆம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்தி உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்குவதில் பல்கலைக்கழகங்களின் பணி மகத்தானது என உயர்கல்விக்கான மானியக்கோரிக்கை (20) 2013 -2014 வரையறுக்கின்றது. ஆனால் உயர்கல்விக்கண் ஊற்றாக விளங்கும் இன்றைய பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது தலை தூக்கும் துணைவேந்தர் பிரச்சனைகளால் அந்தக் கனவு எட்டப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

thunaivendhar1மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தை  ரத்து செய்து, ஜூன் 26 -ல் உயர்நீதி மன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு தமிழக பல்கலைக்கழகங்களில் இதுவரை நடந்திராத ஒன்று. இதனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் மீண்டும் ஒரு புதிய உயர்கல்வியாண்டை மாணவர்கள் தடுமாற்றத்துடனே தொடங்க வேண்டியுள்ளது. இந்த தொடக்கம் மதுரைக்கு மட்டுமல்ல இந்திய அளவில் உள்ள பிற பல்கலைக் கழகங்களில் எழும் துணைவேந்தர் பிரச்சனைகளுக்கும் பொதுவானது. பல கோடி ரூபாய் செலவழித்து நாட்டின் கல்விக் கொள்கைகளால் வகுக்கப்பட்ட உயர்கல்வித் திட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டு, தரமான மாணவர்களை சமுகத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் வழங்க முடியாமற்போவதாக கல்வியாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஒரு துணைவேந்தரை பல்கலைக்கழக மானியக்குழு விதி 2010 -ன்படி தேர்வு செய்வதா அல்லது அந்தந்த பல்கலைக்கழகங்களின் கடந்தகால நடைமுறை விதிகளின்படி நியமிப்பதா என்கிற விவாதம் தலை சிறந்த கல்வியாளர்களின் எண்ணிக்கை பெருகி வரும் சூழலில் மிக முக்கியமானது. கவனிக்கத்தக்கதும் கூட. எனினும் இதற்கு அப்பாற்பட்டு பார்த்தால் பெரும்பாலான துணைவேந்தர் நியமனங்களில் “அரசியல் குறுக்கீடும் – ஊழலும்” தான் பிரச்சனைக்குக் காரணம் என  உயர்கல்வித் திட்ட யஷ்பால் கமிட்டியின் (உயர்கல்வி சீர்திருத்த மற்றும் புத்தாக்கக் குழு) உறுப்பினர் அனந்த கிருஷ்ணன் பல முறை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு துணைவேந்தரை தேர்வு செய்ய நெருக்கமான அரசியல் சிபாரிசுகளும், 10 கோடிக்கும் அதிகமான தொகையும் செலவழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார். எனவே தான் சில பல்கலைக்கழகங்களில் வெளிப்படையான தேர்வு முறையில் ஆன் – லைன் விண்ணப்பம் பெறப்பட்டு, நேரடி கருத்துக் கேட்பு அமர்வுகள் மூலமாக துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

indhiyaavil kalviyin nilai5பேராசிரியரோ, கல்லூரி முதல்வரோ, ஆய்வு நிறுவன இயக்குனரோ யாராக இருந்தாலும் துணைவேந்தராக  பொறுப்பேற்பவர்  அடிப்படையில் அவர் ஒரு கல்வியாளர். அவர் தகுதியானவரா – இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பணியில் உயர்கல்வி வளர்ச்சிக்காகத் திட்டமிட்டதை சாதித்தாரா, ஆக்கப்பூர்வமான ஆய்வாளர்களை உருவாக்கினாரா, கற்றல் – கற்பித்தலில் புதிய நுட்பங்களை வளர்த்தெடுத்தாரா, பின்னடைவுப் பணிகளை துரிதப்படுத்தினாரா என்று மதிப்பிடுகிறபோது துணைவேந்தர்களால் ஏற்படும் பிரச்சனைகள் மிகவும் கவலைக்கிடமளிக்கிறன. இதனை அலசி ஆராய்ந்து கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட “மாநில கல்வித் தணிக்கை மற்றும் தர மதிப்பீட்டு மன்றங்கள்” துணைவேந்தர் பிரச்சனைகளால் ஏற்படும் பின்னடைவுப் பணிகளை தங்கள் பணியாக ஏற்று மதிப்பீடு செய்கிறார்களா? என்பதும் தற்போது விவாதத்துக்குட்படுகின்றன.

இவற்றுக்கு எல்லாம் அடிப்படை ஒரு துணைவேந்தர் கல்வியாளர் என்பதற்கும் மேலாக சக அரசியல்வாதிகளைப் போன்ற தன்னாட்சி அதிகாரத்திற்கு உரியவராக கருதப்படுவதே காரணம். இந்த அதிகாரத்தை அவருக்கு வழங்க சாதகமாக இருப்பது எது என்றால் இன்றைய பல்கலைக்கழகங்கள் ஒரு வேலை வாய்ப்பு மையமாகவும், தனியார் ஒப்பந்ததாரர்களின் வருவாய்க் கூடமாகவும் கருதப்படுவது. இந்த இடத்தில் தான் அரசியல் குறுக்கீடும், சிபாரிசுகளும், ஊழலும் ஒரு சேர கை கோர்த்து தகுதியற்றவரையும் தகுதியுள்ளவராக்க முயற்சிக்கிறது. பல்கலைக்கழகத்தின் மூலமாக வருவாய் ஈட்ட முடியுமா என்றும் சிந்திக்க வைக்கிறது. இதனால் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்படாமலும் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. வேண்டப்பட்டவரின் பணி நியமனங்களில் தனக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படாததால் சிலர் ராஜினாமாவும் செய்துள்ளனர். கட்டமைப்பு வசதி உருவாக்கத்தில் தனியார் ஒப்பந்ததாரருடன் ஊழலில் ஈடுபட்டு வழக்குகளை சந்தித்தவர்களும் உண்டு. இன்னும் சிலர் நீதிக்காக வழக்கு மன்றங்களில் காத்திருக்கின்றனர்.

சற்றேரக் குறைய ஒரு எம்.எல்.ஏ – எம்.பி -க்களின் மீது வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் துணைவேந்தர் ஆட்படுகின்றார். இப்படியான துணைவேந்தர் நியமனங்களை ஆட்சியின் தலைமையில் இருப்பவரும், ஆளுநரும், குடியரசு துணைத்தலைவரும் ஒருபோதும் தேர்வு செய்ய மாட்டார்கள் என்றாலும் இடைப்பட்ட அரசியல் சிபாரிசுதாரர்களாலும், கோப்பு நகர்த்துனர்களாலும் தான் தவறான அணுகுமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்கின்றனர் வாய்ப்பு நழுவிய பேராசிரியர் பெருமக்கள். உயர்கல்வித்துறையும், தேர்வுக்குழுவும், ஆட்சிமன்றங்களும் முன் எச்சரிக்கையோடு செயல்பட்டிருந்தால் ஒவ்வொருவரின் கால விரயமும் தவிர்க்கப்பட்டு, கல்வி வளர்ச்சியில் கவனம் மேலோங்கியிருக்கும். அது நடைபெறாததால் வேறு வழியில்லாமல் நீதிமன்றங்கள் குறுக்கிட வேண்டியுள்ளன என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

thunaivendhar3இதனால் ஆண்டு முழுவதும் பாதிக்கப்படுவது மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்கள் எதிர் நோக்கியுள்ள உயர்கல்வித் திட்டங்களும் தான். இவர்களின் பெரும்பாண்மையான கல்வி ஆண்டு நாள்கள் துணைவேந்தரை நீக்கக் கோறும் போராட்டங்களில் வீணழிவதால் படிப்பு – தேர்வு – கள ஆய்வு – ஆராய்ச்சி போன்றவை முற்றிலும் தடைபடுகின்றன. உயர்கல்வியை எட்டும் அவர்களின் காட்சிக்கனவு தகர்க்கப்பட்டு தேவையற்ற ஒழுங்கு நடவடிக்கை, கைது, வழக்கு, வன்முறை என அவர்களின் எதிர்காலம் உயர்கல்விச்சாலையின் வளாகத்திற்கு வெளியே தள்ளப்படுகிறது.

2011 -ல் டெல்லியில் நடை பெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இது குறித்து விரிவாகப் பேசியும், வழிகாட்டுதல் தந்தும் கூட தொடர்ந்து பிரச்சனைகள் நீடிப்பது தான் போராடுகின்ற மாணவர்கள் மீதும், பேராசிரியர்கள் மீதும் நீதிமன்றங்கள் காட்டிய சட்டத்தின் ஜனநாயக இரக்கம் சரி எனப்படுகிறது.

இந்தியாவின் 471 பல்கலைக் கழகங்களில் 9 பல்கலைக் கழகங்கள் மட்டுமே பல்கலைக் கழக மானியக்குழுவின் சிறப்புத் தகுதி பெற்றவை. அந்த தகுதியோடு ஒப்பிடுகையில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அடுத்த படியாக நேனோ அறிவியல் போன்ற உயர்கல்வியை வழங்குவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது மதுரை காமராசர் பல்கலைக் கழகம்.  1966 -ல் வெளியான கோத்தாரி கமிட்டியின் பரிந்துரைப்படி ஆக்கப்பூர்வமான முதல் துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பணியாற்றிய முன்னோடிப் பல்கலைக்கழகம் இது. விலங்கு நடவடிக்கை மற்றும் உடலியல், உயிர் வேதியியல், மரபியல், நோய் எதிர்ப்பியல், நுண்ணுயிர்த் தொழில் நுட்பம், தாவர அறிவியல், மரபணு பொறியியல், மூலக்கூறு நுண் உயிரியியல், சூரிய இயற்பியல், யோகா, பூகோள தகவலியல் ஆகிய தலைப்புகளில், உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தரமான ஆராய்ச்சியாளர்களின் – பேராசிரியர்களின் 122 ஆய்வுக் கட்டுரைகளை நாட்டின் வளர்ச்சித்திட்டத்துக்கு வழங்கிய மகத்தான பல்கலைக் கழகமும் இது தான் என்பதை உயர்கல்வித்துறையே பெருமையாகப் பதிவு செய்துள்ளது. விளிம்புநிலை மக்களின் மிகவும் பின் தங்கிய விருதுநகர், மதுரை, தேனி மாவட்ட  எதிர்கால மாணவச் சமுதாயத்தின் உயர்கல்வியைப் பூர்த்தி செய்யப்போகும் பல்கலைக்கே இந்த நிலை என்றால் சாமானிய பல்கலைக் கழகங்களின் உயர்கல்வித் திட்டத்தின் நோக்கமும், எதிர்கால லட்சியமும் என்னவாகும்?

துணைவேந்தர்கள் தன்னாட்சி அதிகாரத்துக்குரியவர் என்கிற அரசியல் மனநிலையிலிருந்து விலகி எவ்வித சோதனைகளுக்கும் – பிரச்சனைகளுக்கும் ஆட்படாமல் உயர்கல்வியாளர் என்கிற ஒற்றைத் திசையில் பயணிக்க வேண்டியது இந்திய பல்கலைக்கழகங்களின் உயர்கல்வித்தர மதிப்பீட்டுக்கு விடப்பட்ட ஒரு சவால். எப்போதுமே அரசியல்வாதிகளைக் குறை சொல்லும் வேண்டப்பட்டவரின் சிபாரிசு, அனுபவக்குறைவு, ஊழல் போன்ற சோதனைச் சவால்களை வரலாற்றில் முறியடித்த பல துணைவேந்தர்களை பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக அதனை மீண்டும் மீளச்செய்வோம்.


அன்புசெல்வம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துணைவேந்தர் பிரச்சனைகளால் உயர்கல்வித் திட்டம் பாதிக்கப்படுகிறதா?”

அதிகம் படித்தது