மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துளுக்காணத்தம்மன்

காசி விசுவநாதன்

Feb 15, 2012

நண்பர் ஒருவர் சிறந்த அம்மன் பக்தர். அவர் என்னிடம், தான் அம்மன் கோவில் திருத்தலங்கள் போய் வந்த செய்திகளை பகிர்ந்துகொள்வார். கணியன் பூங்குன்றனார் பிறந்து வளர்ந்த பூங்குன்ற நாட்டின் பூங்குன்றை அம்மன், சமயபுரம் மாரியம்மன், செங்கிப்பட்டி வீரமாகாளி அம்மன், மருவத்தூர் அருகில் உள்ள சின்னக்கன்னியம்மன், சூலூர்ப்பேட்டையில் உள்ள செங்காளியம்மன் என்ற வரிசையில் துளுக்காணத்தம்மன் என்பது பற்றியும் அதன் பெயர்க்காரணம் பற்றியும் என்னிடம் விளக்கம் கேட்டார். அது துளுக்காணத்தம்மன் என்பது இசுலாமிய பெயரா? மாரியம்மன் – மேரியம்மன் என்பதும் ஒன்றா? இதுவெல்லாம் குறித்த, நண்பரின் ஆவலைப்புரிந்து கொண்டு, விளக்கம் வேண்டுமாயின் என்னிடம் சிறிது நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் பேர் உவகையுடன் என்னுடன் நடந்தார். அது அழகிய மாலைப்பொழுது.

தமிழரின் வாழ்வும் வளமும் நிலம் சார்ந்தது. ஐவகை நிலம் பிரித்து, நிலம், நீர், இயற்கை சார்ந்த வாழ்வும், அதன் சுவை கூறும் இலக்கியப்பதிவும், அவர்கள் செய்தது – உலகின் எந்த இனத்திற்கும் எட்டாத வாழ்வியல் முறை. பழந்தமிழரிடம் மதம் என்ற நிலைப்பட்ட ஆதிக்கபீடம் உருவாகாத நிலையில் அந்த அந்த நிலம் சார்ந்த தெய்வ வழிபாடு என்பது இருந்துவந்தது. அது நிலைப்பட்ட மத நிறுவனங்கள் என்பது வரும் முன், பலவாறு இருந்தது. காடு கிழாள், கொற்றவை என்பது எல்லாம் பலவாறு நம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவையெல்லாம் அண்மைக்காலம் வரையிலும் மக்களின் வாழ்வியலோடு பிணைந்து, நம்முடன் நடந்து வருகின்றது. இது தமிழரின் வாழ்வில் ஒரு அங்கம். இந்த வழிபாட்டிற்கு எந்த மத நிறுவனங்களும் உரிமை கோர முடியாது. ஆனால் அது பிற்கால, மதம் என்ற பெரிய ஆதிக்க சக்திகளின் விரிவாக்கத் திட்டத்தில் கபளீகரம் செய்யப்பட்டது. அது தான் இன்றைய அம்மன் வழிபாடு என்பது. அதாவது தமிழருக்கு தெய்வ வழிபாடு வழக்கு என்பது இருந்துள்ளது ஆனால், நிறுவன அமைப்பு என்பது உருவாகவில்லை.

பெரும்பாலும் தெய்வ வழிபாடு, அன்று மரத்தடிகள் தான். விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமை. தெய்வத்தை அழகுபடுத்த இயற்கையின் கொடை.  உழவும், தொழிலும் செய்து உணர்ந்தவை எல்லாம் இலக்கியமாய்ப் பதிவு செய்ய பனை கொடுத்த ஓலையில் பதித்து தம் வாழ்வியலை செவ்வியலாக்கியவர்கள் அல்லவா ? அப்படியானால் இயற்கையை, இயற்கையாக வழிபட்ட, பண்பட்ட நெறிதான் பிற்கால வழிபாட்டிலும் தொடர்ந்தது.

என் நண்பரிடம், சிறு தெய்வம் எனப்படும் இவ் வகைத்தெய்வங்களின் விழாக்களை கவனித்தது உண்டா ? என்று கேட்டேன். அவரும், ஆம் பல இடங்களில் கிராம தேவதைகள் எனப்படும் இவ்வகைத்தெய்வங்கள் எல்லாம் திறந்த வெளியில் இருக்கும். விழாக்களின் போது வேம்பு, தென்னை போன்ற மரக் குழைகளைக் கொண்டு கூரை வேயப்படும் என்றார்.

ஆம், இது தான் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சித்தர் பாடல்கள் என எல்லா இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பிற்காலங்களில் பல்லவர் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்கள் தெய்வங்களுக்கு செய்வித்த காவணங்கள் எல்லாம் பல உண்டு. நெல்லூர் மாவட்டத்திலும் பல காவணங்கள் இருந்ததும் அது அன்மைக்காலத்தில் கிருட்டினப்பட்டினம் போன்ற பெயர்மாற்றங்கள் அடைந்ததும் உண்டு. பல்லவரின் ஆட்சியில் பல காவணங்கள் செய்விக்கப்பட்டுள்ளது கல்வெட்டுக்களில் அறியப்படுகிறது.

காவணம் என்பது என்ன ?
வாவியெல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் வெண்ணீறு
காணும்
காவணங்கள் எல்லாம் கன நாதர்
, பூவுலகில்
ஈது சிவ லோகம் என்று மெய் தவத்தோர் ஓதும் திரு வொற்றியூர்
“.
பட்டினத்தார் பாடல்.
இங்கு காவணம் என்பது திடமாக வேயப்பட்ட பந்தல். அங்கு வழிபடும் தெய்வங்களை வைத்து வழிபாடு நடத்துவது என்பதும், அதனைக் காணும் இடமெல்லாம் தனக்கு கன நாதர் தெரிவதாகப் பட்டினத்தார் பதிவு செய்கிறார். இவரது இந்தச் சொல்லோவியம், வழி வழியாக வந்த காவணங்களின் தொடர்ச்சிதான்.

ஆக, காவணம் என்ற சொல் எவ்வாறு நம் தமிழர் வாழ்வில் இன்று வரை புழக்கத்தில் உள்ளது என்பதனை புரிந்து கொள்வதே நமக்கு நல்ல பயன் தரும். முதலில் ‘கா’ என்பது சோலை, காடுகள் நிறைந்த, செழித்த என்பதாக பொருள் படுவது. இது மிகப்பழங்காலம் தொட்டு வருவது.

அணம் – என்பது மேம்பட்ட, மேலுள்ள ( upon ), உயர்வான, உயரமான (elevated) என்பதாகப் பன்முகப்பொருள் தருவது, ஆகவேதான் அண் என்பது அண்ணல் என்ற உயர் பண்புச்சொல்லாகவும் தமிழில் வருவதைக் காணலாம். இது தவிர அணத்தல் என்றால் – மேல் நோக்குதல் என்பதாகும், இதைத்தான் தேவ நேயப்பாவாணர் அவர்கள் – தன் தலையை அடிக்கடித் தூக்குதலால் ஓணான் அணத்தான் என்று பெயர் பெற்றது என்று கூறுகிறார். இப்போது கா+ அணம்= காவணம் என்பது தலைக்கு மேல் உயரமாக சோலை போன்ற பந்தல் என்பது விளங்கும். அப்படியானால் உயரத்தில் அமைந்தது இப்படியிருக்க தாழ்வாக இருந்தால் அதனை எப்படி அழைத்தார்கள் ? அதற்கும் நம் இலக்கியம் சான்று கூறுகிறது. குறிஞ்சி நிலத்தில் இருப்பவர்களுக்கு தன் நிலத்தின் (அடியில் உள்ள ) கீழே உள்ள ஊர்ப்பகுதிகளில் விரிந்து செழித்த பூஞ்சோலைகளை “தாழ்கா” என்று பதிவு செய்கின்றனர். இடம் பொருளைச்சுட்டுவதற்கு தமிழரின் சொல்லாட்சித்திறம் அவர்களின் உள்ளம் போல செழித்திருந்தமைக்கு இது ஒரு சான்று.

அண்மைக்காலம் வரை கல்வெட்டுக்களும், பண்டைக்காலங்களில் நம் இலக்கியங்களும் பறைசாற்றும் காவணங்கள் இன்றும் நமக்கு புரியாமலேயே நம்முடன் புழக்கத்தில் உள்ளன. ஆம் கோவில்களில் வேயப்படுவன எல்லாம் திருக்காவணங்கள் என்றிருக்க எளிய மக்கள் பயன்பாட்டிற்கு வீட்டிலும் பொது இடங்களிலும் வேயப்படும் பந்தல்கள் எல்லாம் காவணங்கள் என்றும் அழைத்தனர். ஆகவேதான் பட்டினத்தடிகள் “…. காணும்காவணங்கள்எல்லாம்கனநாதர்..” என்று, தான் கால் போன போக்கிலே நடந்தலைந்த போது பார்த்தவையெல்லாம் தன்இறைவனாகத்தெரிவதாகப் பதிவு செய்கிறார். அது அவரது உணர்வுகள் மட்டுமல்ல, தமிழரின் வாழ்வியலும் கூடத்தான்.

நம்மைச் சுற்றி உள்ள பல ஊர்களின் பெயர்கள் ( இன்றளவும் தமிழ்ப்பெயரை வடமொழிப்படுத்தாமல் இருக்கும் சில ) காவணங்களாகத்தான் உள்ளது.

1. அணக்காப் புத்தூர் (சென்னை அருகே ).

2. சின்னக்காவணம் (சென்னையை அடுத்த பொன்னேரி என்ற ஊரின் வடக்கே அமைந்த ஊர். இங்கு தான், தந்தையை இழந்த வள்ளல் இராமலிங்க அடிகளார் தன் தாயுடன் சிறிது காலம் மாமன் வீட்டில் வளர்ந்து வந்தார் ).

3.சிற்றணக்காவூர்.

4.மேல் அணக்காவூர்

5.கீழ் அணக்காவூர் (இரண்டும் திருவண்ணாமலை மாவட்டம்)

இப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவணங்கள் உண்டு.

தில்லைக் கூத்தனின் திருக்கோவிலில் மூன்றாம் திருச் சுற்றில் பண்டைய காவணத்தின் மாதிரி கல் மண்டபம் ஒன்று சில வருடங்களுக்கு முன் அதன் கிடுகு வேய்ந்த சிற்ப சான்றுகள் எல்லாம் இன்று கற்சாந்து (cement) பூசி தடம் மறைந்து போனதாகத் தகவல்.

நமது கோவில்களின் முன் மண்டபங்கள் எல்லாம் காவணங்களின், கட்டிடக் கலையின் சான்றாக வந்த நீட்சியே. கோவில்களில் திருக்காவணம் அமைக்க பொருளுதவி செய்தவர்கள் எல்லாம் அதற்கான காரணமும், பொருட் தொகையும் குறித்த கல்வெட்டுக்கள் தமிழகம் எங்கும் உள்ளன.

இன்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே உள்ள சுண்டைக்காட்டு வேலங்குடி என்ற சிற்றூரில், கிராம மக்களாலும் அண்டை ஊர் மக்களாலும் வழிபடப்படும் வாசனைக்கருப்பர் மற்றும் சங்கிலிக்கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கு தென்னை மற்றும் பசும் தழை கொண்ட கிடுகுகளால் ( கீற்று ) வேயப்படும் காவணங்களைக்காணலாம். (குறிப்பு: இது போன்ற வழிபாடுகள் வைதீக மரபுகளில் சாராது. இது தொன்றுதொட்ட வழிபாட்டின், தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சான்று கூறும் எச்சமே.)

இப்படிக் கிடுகு வேயப்படுவதும், அவை அன்றலர்ந்த மலர் போன்ற துளிர்களால் வேயப்படும் போது, துளிர்க்காவணம் என்பதும் உள்ளது உள்ளபடி சான்று கூறும் தமிழரின் சொல்லாட்சித்திறமே. ஆகவே துளுக்காணத்தம்மன் என்று சென்னையை ஒட்டியும் இன்று ஆந்திராவாகப் பறிபோன தமிழ் நிலங்களில் உள்ள அம்மன் ( கொற்றவை ) வழிபாடுகள் எல்லாம் காவணம் கொண்ட காடு கிழாள் அன்றி வேறு என்ன ?

நண்பரின் முகத்தில் மகிச்சியும்,சிந்தனையும் கலந்து நின்றன.நன்றி.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துளுக்காணத்தம்மன்”

அதிகம் படித்தது