மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தூரத்தில் நான் கண்ட உன் முகம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 25, 2020

siragu ilakkiya kaadhal1
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்

என்று நிழல்கள் படத்தில் பாடகி ஜானகி அவர்களின் ஒரு பாடல் உண்டு. தன் காதலனை எண்ணி பாடப்படுவதாக அந்தப் பாடல் இருக்கும், அதைப் போலவே புறநானூற்றில் நக்கண்ணையார் என்பவர் தன் காதலனை எண்ணி பல பாடல்கள் பாடியுள்ளார்.

யார் இந்த நக்கண்ணையார் ?

நக்கண்ணையார் சங்ககால பெண்பாற் புலவர். புறநானூறு, அகநானூறு, நற்றினையில் ஒரு சில பாடல்களை எழுதி உள்ளார். இவரின் புறநானூற்றுப் பாடல்களை, படிக்கின்றபோது நக்கண்ணையார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி மீது வைத்திருந்த காதல் நமக்கு நன்று புலப்படும். இந்தக் காதல் பாடல்களை ஏன் புறநானூற்றில் வைத்தனர் என அய்யம் எழலாம். ஏனெனில் புறநானூற்றுப் பாடல்கள் வீரத்தை, கொடையை, போர் பற்றிய செய்திகளைத் தான் மிகுந்து கொண்டிருக்கும். இதில் தலைவன் தலைவி பெயர்கள் வெளிப்படையாக இருப்பதாலும், இது கைக்கிளை துறையை (ஒருதலைக் காதல்) சார்ந்து இருக்கின்ற காரணத்தாலும் இந்த காதல் பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது என்பர்.

நக்கண்ணையாரின் காதல் தலைவன், உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன். தன் தந்தையோடு கொண்ட கருத்து வேறுபாட்டால் தன் வீட்டை விட்டு வெளியேறி, புல்லரிசிச் சோற்றை தின்று வாழ்ந்து கொண்டிருந்தான். ஆமூர் மல்லன் என்ற சங்ககாலக் குறுநில அரசனை போரில் எதிர்க்கொண்டு வெற்றி பெறுகிறான். அந்த வெற்றியைக் கண்ட நக்கண்ணையார் நற்கிள்ளி மீது காதல் கொள்கிறார். அந்தக்காதல் நிறைவேறி திருமணத்தில் முடிந்ததாக நமக்கு செய்திகள் கிடைக்கப்பெறவில்லை.

புறநானூற்றில் காணப்படும் இவரது 3 பாடல்களும் பழிச்சுதல் என்னும் துறையைச் சேர்ந்தவை. பழிச்சுதல் என்றால் புகழ்தல். இனி இந்த மூன்று பாடல்கள் சொல்லும் செய்திகளைக் காண்போம்.

புறநானூறு 83 பாடல்

அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே!

காலில் கழல் அணிந்து கருமையான தாடி வைத்திருக்கும் காளையால் என் வளையல்கள் பசலை என்னும் காதல் நோயால் கழல்கின்றன. என் வளையல்கள் கழல்வதால் என் தாய் என் காதலை கண்டுபிடித்து விடுவாளோ என அஞ்சுகின்றேன். வெற்றி பெற்று நிற்கும் அவன் தோள்களைத் தழுவிட வேண்டும் என மனது பெரிதும் விரும்புகின்றது, ஆனால் அவையில் பலரும் இருப்பதால் நாணம் தடுக்கின்றது. தாய் கண்டு நான் அச்சப்படுவதையும், அவையினரைக் கண்டு நான் நாணுவதைப்போலவும் இவை இரண்டிற்கும் இடைபட்டு என் மனது நடுங்குவதைப்போல, மற்போரில் தோற்ற மல்லன் தன் நாட்டு அரசன் என்பதால் அவனைப் புகழ்வதா? வென்ற நற்கிள்ளியின் திறமையைப் பாராட்டுவதா? இந்த ஊரும் குழப்பத்தில் நடுங்கட்டும்; என்கிறார்.
தன்னால் தன் காதலை எப்படி வெளிப்படையாக சொல்லி மகிழமுடையாமல் இருக்கின்றதோ அதே போல இந்த ஊரும் வெளிப்படையாக வெற்றியைக் கொண்டாட முடியாமல் குழம்பட்டும் என்பதே உட்கருத்து.

தன் காதலை வெளிப்படுத்த இயலாத பெண்ணின் ஒரு கையறு நிலையால் ஊரின் மேல் கோபம் கொள்வதை இந்தப் பாடலில் காண முடிகிறது.

புறநானூறு 84

என் ஜ புற்கை உண்டும் பெருந்தோளன்னே;
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறைய அன்னன்னே.

என் தலைவன் நற்கிள்ளி புல்லரிசி கூழ்யுண்டபோதும் அவனின் பரந்து விரிந்த தோள்களை உடையவன்; நானோ அவனை எண்ணி ஏங்கி அவன் இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்தும் அவனை கூட முடியாமையால் பசலைகொண்டு பொன்னிறமாக உள்ளேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களம் நுழைந்ததால் இவ்வூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. போர்களத்தில் செருக்குடன் நுழையும் வீரர்களின் நிலைமை உப்பு விற்கச் செல்லும் உமணர் தாங்கள் செல்லும் பாதை எப்படி இருக்குமோ என அஞ்சுவார்களே அது போல உள்ளது.

தன் தலைவன் சரியான உணவு இல்லை என்றாலும் வீரத்தோடு போரிட்டு இந்தப் போரில் வெல்வான், அவனை எதிர்ப்பவர்களின் நிலை தான் கவலை என தன் தலைவனைப் பற்றி நக்கண்ணையார் கொண்டுள்ள பெருமிதம் இப்பாடலில் நமக்கு புலப்படுகிறது.

புறநானூறு 85

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே,
ஆடன்று என்ப ஒரு சாரோரே,
நல்ல பல்லோர் இரு நன் மொழியே,
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே.

என் தலைவனின் ஊரும் நாடும் இதுவல்ல, அதனால் இந்தப் போரில் ஒரு சாரர் நற்கிள்ளி வெற்றி பெற வேண்டும் என்றும் மறுதரப்பு அவனுக்கு வெற்றி இல்லை என்றும் கூறுகின்றனர். இருபக்கமும் உள்ள நல்லவர்களின் கூற்று இதுவென்றாலும் என்னால் அங்கு நிற்க இயலவில்லை; நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க என் வீட்டிற்குள் ஓடி முரசு போல அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்த்து நின்றவாறு அந்தப்போரில் என் தலைவனான நற்கிள்ளி வெற்றி பெருவதைக் கண்டேன்.
தலைவன் தன் ஊரைச் சார்ந்தவன் இல்லை என்றபோதும் அவன் போரில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் பதட்டம் கொண்டு தன் இல்லத்து பனை மரத்தின் மீது சாய்ந்துக்கொண்டு நற்கிள்ளியின் வெற்றியை நக்கண்ணையார் உள்மனதில் இரசித்து காண்பதை இப்பாடல் மூலம் நாம் அறியலாம்.

இப்படி தன் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் தான் கொண்டிருந்த அழகிய ஒருதலைக் காதலை வெளிப்படுத்துகின்றார் நக்கண்ணையார். ஒரு தலைக்காதல்கள் என்றாலே மீரா, ஆண்டாள் என பக்தி காலத்தை நாடாமல் சங்க இலக்கியத்தில் நக்கண்ணையார் என்ற தமிழ்ப்பெண் நற்கிள்ளி என்ற தமிழ் அரசனிடத்தில கொண்ட ஒருதலைக் காதல் அறிவிற்கு பொருந்துவதாகவும் இனிப்பாகவும் உள்ளது; அதை படிப்போம், பகிர்வோம்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தூரத்தில் நான் கண்ட உன் முகம்”

அதிகம் படித்தது