மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுக் குடிகள்! (கவிதை)

இல. பிரகாசம்

Apr 29, 2017

Siragu-tamilan1

 

தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ? –என்

தென்னாட்டுக் குடிகளே கேட்டீரோ?

நரிமுகமாம் வடநாட்டுக் குடியொருவன்

நஞ்சை கண்டத்தில் ஒளித்து வைத்து

நற்குடி வாழுந் தென்னாட்டு இனத்தார்

வாழ்கவென புகழ்ந்தார் முன்னே! கேட்டீரோ?

 

வள்ளுவர் “திருக்குறள் வாழ்க” வென –தம்

வஞ்சம் மறைத்து தமிழிழை வாழ்த்திய

நரிமுகத் திருவினை யாதென அறிந்தீரோ?

வள்ளுவர் திருவுருச் சிலைதனை வடக்கே

கங்கை நதிக்கரை யோரம் வைத்து

கலங்க மேற்படுத்திய நிலையினை அறிந்தீரோ?

 

வளநாடாம் தென்னாட்டுக் குடிகள் கருப்பர்கள்

“அவா”ளுடன் நாங்கள் வாழ வில்லையா?

“அவா”ளுடைய பண்பாடும் எம்பண் பாடும்

வேறே”யென பேதமை சனாதனக் கொடியை

ஊன்றும் வேலை யினைத்தான் கேட்டீரோ?

தென்னாட்டுக் குடிகளே இதனைக் கேட்டீரோ?

 

“இந்திய தேசமெனும் நாட்டிற் கொருமொழி

இந்தியே”என்னும் கொலை வாளினை

வீசும் முகமூடியை பார்த்தீரோ? என்செய்தீர்?

பலமொழி பலபண்பாடு பலதேசம் என்னும்

பெருமை இந்திய நாடெனும் புகழினை

புதைத்து அழிக்கும் கதைதான் கேட்டீரோ?

ஓர்மொழி ஓர்பண்பாடு ஓர்தேசம் என்னும்

சர்வாதி காரமதனை எதிர்த்துப் போரிட

தென்னாட்டுக் குடிகளே ஒன்று சேர்வீர்

சிந்துநதி கங்கைநதி காவிரி நதியோரம்

செழித்த திராவிடக் குடிகளே –ஓர்

நாகரிகக் குடிகளே ஒன்று சேர்வீர்!

 

தென்னாட்டுக் குடிகள் பண்பாட்டுக் கூறினை

எதிர்க்கும் நரிக்குண முடையோ ரினைநத்தி

வாழி வாழியென வாழ்த்துவதும் முறையோ?

தென்னாட்டுத் திண்தோள் வீரரே பண்பாட்டுப்

படையெடுப்பினை வென்று செழுந்தமிழ் திராவிட

நாகரீக மதனை நிலைநாட்டப் போரிடுவீர்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுக் குடிகள்! (கவிதை)”

அதிகம் படித்தது