மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேவகோட்டையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களும் அதன் விளைவுகளும்

ம. முத்து பாலகிருஷ்ணன்

Sep 10, 2022

siragu poraattam2
இந்திய நாடு தற்போது தனது விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டினைக் கொண்டாடி வருகிறது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபடவும்,  இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் பலர் போராடினர். இந்திய அரசியல் தலைவர்கள் பலர் இதற்காக தலைமை வகித்த நிலையில் இத்தலைமையை ஏற்று விடுதலை வேள்வியில் கலந்து கொண்டுத் தங்களின் உயிரை, பொருளை, குடும்பத்தாரை இழந்தவர்கள் பலர்.

தமிழ்நாட்டில் பற்பல இடங்களில் விடுதலைப் போராட்ட வேள்விகள் நடைபெற்றன. ஆங்கிலேயரை எதிர்த்து உப்புசத்தியாகிரகம் வேதாரண்யத்தில் மிகப் பெரும் அளவில் நடைபெற்றது. இதுபோன்று வரலாற்றில் குறிக்கத்தக்க விடுதலைப் போராட்ட செயல்கள் பல நடைபெற்றுப் பதிவுபெற்றுள்ளன. ஆனால் பதிவு பெறாமலும் கண்டு கொள்ளப்படாமலும் விடுபட்ட விடுதலைப் போராட்டங்கள் பல உண்டு. விடுதலைப் போராளிகளும் பலர் உண்டு. அவ்வகையில் தேவகோட்டை, திருவாடானை பகுதிகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள் ஓரளவிற்கு மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அவற்றை மீள மீள நினைவுபடுத்தவும், வரலாற்றில் பதிக்கவும் பல செயல்களைச் செய்யவேண்டியுள்ளது.

இவ்வியல் அவ்வகையில் தேவகோட்டையில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது.

இந்தியாவில் விடுதலைப் போராட்டம்

இந்தியா இரு நூற்றாண்டு காலமாக ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு கோழிக்கோடுக்குப் பகுதிக்கு  வருகை தந்து இந்தியாவில் அந்நியர்கள் நுழைய வழி வகுத்தார். இவரைத் தொடர்ந்து வாசனைப் பொருட்களைத் தேடி, அவற்றை வணிகமாக்க முயற்சித்து ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா வந்தனர்.

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போரில் பிரித்தானிய ராணுவம் பங்கெடுத்து வங்காள நவாபைத் தோற்கடித்தது. இதன்வழி இராபர்ட கிளைவ் என்பவர் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் காலூன்ற வைத்தார். இதன்பின் வங்காளம், பீகார், ஒரிசா, பஞ்சாப் ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்கள் தம் ஆட்சி அதிகாரத்தை மெல்லப் பரவலாக்கினர். இதன்பிறகு படிப்படியாக இந்தியா முழுவதும் ஆங்கிலேயே ஆட்சிக்கு உட்படடுச் செயல்படவேண்டிய நிலைக்குப்போனது.

இவ்வாட்சி அதிகாரத்தின் வலிமையைக் குறைக்கும் நோக்கில் பல இந்திய மன்னர்களும், மக்கள் குழுக்களும் செயல்பட்டன. இருப்பினும் ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுக்குப்பின்புதான் இவ்வியக்கம் தேசிய சுதந்திரப் போராட்ட இயக்கமாக மாறியது. இதன்வழி இந்திய சுதந்திரம் பற்றி சிந்தனை விரைவுபடுத்தப்பெற்று ஆங்கிலேய ஆட்சியில் இருந்து ஆயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் பதினைந்தாம் நாள் விடுதலை பெற்றது. இவ்விடுதலையைப் பெறுவதற்குப் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பெற்றன. அறப்போராட்டங்கள், மறப் பேராட்டங்கள் எனப் போராட்டங்கள் ஏற்பட்டன.

அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அறப்போராட்டம் விடுதலையை நோக்கிப் பயணித்தது. சமுதாய விடுதலையை நோக்கி பால கங்காதர திலகர், அன்னிபெசண்ட் அம்மையார் போன்றோர் செயல்பட்டனர். விடுதலையை வீரத்தின் வழி பெற சுபாஷ் சந்திரபோஸ் முயன்றார். இவ்வாறு இந்திய விடுதலை குறித்தான நடத்தைகள் இந்தியா விரைவில் விடுதலை பெற உதவின.

தமிழகத்திலும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குரிய பல குறிக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தன. வடநாட்டிலும் தென்நாட்டிலும் நடந்த சிப்பாய்க் கலகங்கள்  இந்திய தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றன. வங்கப் பிரிவினை, ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்றன இந்திய தேச விடுதலையை விரைவுபடுத்தின. இவற்றில் மிக முக்கியமாக 1942 ஆம் ஆண்டு காந்தியடிகளால் தொடங்கப்பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகச் சிறந்த முறையில் நாடு முழுவதும் பரவி, இந்திய விடுதலைக்கு வழி அமைத்துத் தந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழக மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இப்போராட்டம் மிகு வெற்றியைப் பெற்றது.

தேவகோட்டை இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையக் களமாக விளங்கியது. இங்குத் தேவகோட்டைக்கு அருகில் உள்ள பல ஊர்களில் இருந்து மக்கள் வருகை தந்து இந்திய தேச விடுதலை குறித்த செய்திகளை அறிந்து அதன் வழியாக நடத்தப்படும் போரட்டங்களில் கலந்து கொண்டனர். இவ்வளவில் தேவகோட்டை முக்கியமான இந்திய தேச விடுதலைக்கான போராட்டக் களமாக விளங்கியது.

1920 ஆம் ஆண்டு தியாகி சுப்பிரமணிய சிவா மேல ஊரணிக்கரையில் பாரதமாதா ஆசிரமத்தை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜீவாவும் சிறாவயலில் நடந்த  காந்தி ஆசிரமம் என்ற ஆசிரமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே இந்திய விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொண்டார். இவ்வாறு சிவகங்கை மாவட்டத்தில் காந்தியடிகள் காட்டிய அறவழியில் தேசிய இயக்கம் நடைபெற்று வந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்கள், வீர மங்கை வேலு நாச்சியார் போன்றோர் மறவழியில் தேச விடுதலைக்குப் போராடினர்.

இவற்றின் காரணமாக தேவகோட்டையும் இந்த இந்திய தேச விடுதலையில் முக்கிய பங்கு வகித்தது.

தேவகோட்டையில் காந்தியடிகள்

இந்திய தேச விடுதலையில் காந்தியடிகள் தலைமையேற்றபின் அதன் போக்கு மாறியது. அகிம்சை வழியில் அறப்போராடடம் நடத்த  வழி வகுத்தார். இதற்காக அவர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் காரைக்குடிக்கு வருகை தந்தபோது தேவகோட்டைக்கும் வருகை தந்துள்ளார்.

1937 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் அவர் காரைக்குடி முனிசிபல் அலுவலகத்திற்கு வருகைதந்து ஹரிஜன முன்னேற்றத்திற்கு வழி வகை செய்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தேவகோட்டைக்கு வருகை தந்து அப்போது நடைபெற்ற பீகார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பெற்ற மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார். மேலும் அடுத்தநாள் தேவகோட்டையில் உள்ள கண்டதேவி கோயில் சிக்கல் குறித்தும் நாட்டார்களிடம் பேசினார்.

இதன் பின் திருப்பத்தூர், பாகனேரி, வழியாக மானாமதுரைக்குச் சென்றுள்ளார். மகாத்மா காந்தியடிகள் வந்ததை ஒட்டி அவர் வந்த சாலை ஒன்றுக்குத் தேவகோட்டையில் காந்தி ரோடு என்று பெயர் வைக்கப்பெற்றுள்ளது.

இவ்வகையில் மகாத்மா காந்தியடிகளுக்கும் தேவகோட்டைக்கும் தொடர்பு  அமைந்தது. இதனோடு காரைக்குடி சார்ந்த தேசியவாதிகளான கம்பனப்பொடி சா. கணேசன், தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார், தேசிய போராட்ட வீரர் சொ. முருகப்பா போன்றோரும் காரைக்குடி பகுதிகள் சார்ந்து தேசிய போரட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார், தேசியப் போரட்ட வீரர் சொ. முருகப்பா ஆகியோர் காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் உள்ள அமராவதி புதூர் சார்ந்தவர்கள் என்பதும் இங்குக் குறிக்கத்தக்தது.

இவ்வகையில்  தேச விடுதலைக்கான அறப்போட்டாங்களில் தேவகோட்டை சார்ந்த தொண்டர்கள் பங்கேற்று வந்தனர்.
காரைக்குடி சார்ந்த பகுதிகளில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகப் பெரும் அளவில் நடத்தப்பெற்றது. 17.8.1942-ல் தொண்டர்கள் மக்களைத் திரட்டி அரசாங்க எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்தினர். இவர்கள் மீது போலீசார் சுட்டனர். காரைக்குடியில் ஒருவர் உயிர்துறந்தார்.

தேவகோட்டையில்

• கிருஷ்ணன்
• தர்மராஜன்
என்ற இரு இளைஞர்களும், வள்ளியம்மை என்ற மூதாட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேவகோட்டை நீதிமன்றம், திருவேகம்பத்து தாலுகா கச்சேரி, ஜமீன் களஞ்சியம் ஆகியவைகளுக்கு தீவைக்கப்பட்டன. தொண்டர்கள் 24.8.1942-ம் தேதி பனங்குடி நடராஜபுரம் ரயில் நிலையத்திற்கு தீ வைத்து தகர்த்தனர். இந்த நிகழ்வுகளை அடுத்து தேவகோட்டை வக்கீல்கள்

• முகுந்தராஜ ஐயங்கார்,
• முத்துச் சாமி,
• வல்லத்தரசு ஆகியோரும்,
• வளமாவூர் இராமகிருஷ்ணத் தேவர்,
• திருநாவுக்கரசு செட்டியார்,
• ஆர்.வி.சுவாமிநாதன்,
• இரவிசேரி நடராஜன்,
• சின்ன அண்ணாமலை,
• தியாகி கண்ணுச்சாமி அம்பலம்
ஆகியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அக்கிரம நடவடிக்கைகளால் ஆறுதல் அடையாத அன்றைய அரசாங்கம், தேசியத் தொண்டர்களான சிவகங்கை கே.இராமசாமி, சிவகங்கை பி.சுப்ரமணியன் ஆகியவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு உத்திரவிட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பெண்மணிகளிடம் மிருகத்தனமாக நடந்து பெண்மைக்கு பழியும் பாதகமும் சேர்க்கும் பணியில் போலீஸ் ஈடுபட்டது. ஊர்கள் தோறும் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, ஊர்மக்களிடம் மொத்தமாக கூட்டு அபராதத் தொகை என்ற தண்டத் தீர்வையை வசூலித்தது. இப்படி வசூலிக்கப்பட்டது ரூ.2,93.000ஃ- எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேவகோட்டை மிகப் பெரும் போராட்ட களமாக விளங்கியது. இவ்வாறு தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றிய சில விபரங்கள் பின்வருமாறு.

முதல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டவர்கள்

1920 -21 ஆம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் திருவாடானையைச் சார்ந்த பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

1. திரு. அள.சுப திருநாவுக்கரசு செட்டியார்
2. அப்துல் மஜித் ,
3. பழனியப்பன் ,
4. திருவேங்கடம்,
5. பொ. செல்லத்துரை
6. மற்றும் அன்றைய நகரத்தார் உயர்நிலை பள்ளி மாணவர்கள்
ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

1930 -31 ஆம் ஆண்டு நடைபெற்ற  கள்ளுக்கடை மறியலிலும் திருவாடானை சார்ந்த மக்கள்  பங்கு பெற்றனர்.

1. சங்கரம்பிள்ளை,
2. மெ.சி.மாணிக்கவாசகம் செட்டியார்.
3. டைரி அருணாச்சலம் செட்டியார்,
4. மீன முகைதீன்,
5. சித. மு.மாரியப்பா,
6. பொ. செல்லத்துரை

முதலியோர் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டனர். இதில் செல்லத்துரை  என்பவர் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் நகரத்தார் உயர்நிலைபள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். மற்றவர்கள் சிறை தண்டனை அடைந்தார்கள்.

தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டோர்

1940 -41 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பெற்ற தனிநபர் சத்தியாகிரகத்திலும் பலர் கலந்து கொண்டனர்.

1. திரு. என். ஜெயராமைய்யா,
2. ஆதி சண்முகம் செட்டியார்,
3. பொ. செல்லத்துரை,
4. எஸ்.பி நடராஜன்,
5. சித.மு. மாரியப்பா,
6. மெ. சி.மாணிக்கம் செட்டியார்,
7. டி.ஆர். அருணாச்சலம் செட்டியார்,
8. அள.சுப. திருநாவுக்கரசு செட்டியார்,
9. கே. ஆர். எஸ். முத்து
10. விஸ்வநாதன் கொண்டனர்
11. முத்தப்பா
12. பி. ஆர். ராமசாமி

இப்போராட்டத்தில கலந்து கொண்டதன் காரணமாக இவர்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு சிறைப்பட்டார்கள். சத்தியாகிரத்தில் பங்கு கொண்டோர் டெல்லி நோக்கிச் செல்ல முற்பட்டவர்கள் சிறைத்தண்டனை பெற்று சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

வெள்ளையனே வெளியேறு இயக்கப் போரில் கலந்து கொண்டோர்

1942ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டி முடிவ செய்த “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தின் காரணமாக காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தியை அந்நியநாட்டு வானொலிச் செய்தி மூலம் தெரிந்து மக்கள் குமுறி எழுந்தார்கள். தமிழகமெங்கும் பூமியதிர்ச்சி போன்ற நிலை ஏற்பட்டு கருணமூர்த்தி காந்தியடிகளின் வாயிலிருந்து முதலாவதாகவும் முடிவானதாகவும் வெளிவந்த மந்திரமான “செய் அல்லது செத்துமடி” என்ற சொல்லை ஏற்று நாட்டு மக்கள் தங்களுக்கு இயன்ற வகையில் தாய் நாட்டின் விடுதலை போரில் கலந்து கொண்டனர்.

சின்ன அண்ணாமலை கைது

தேவகோட்டையைச் சார்ந்த தேச பக்தர் சின்ன அண்ணாமலை என்பவர் ஆவார். இவர் காந்தியவாதி ஆவார். இவர் ஆங்கிலேயே அரசின் முறைகேடான செயல்களை மக்களிடத்தில் எடுத்துரைத்து அவர்களை தேச நலன் காக்கத் தூண்டும் நிலையில் பேசினார். இவரின் பேச்சால் ஆங்கில அரசாங்கம் சற்று கலகலத்தது. இதன் காரணமாக இவரைக் கைது செய்ய ஆங்கிலேய அரசு முயற்சித்தது.

தேவக்கோட்டை நகரில் 14-8-42 ஆம் நாளில்; 144 ஊடரங்குச் சட்டத்தை மீறி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றன. தடையை மீறி பொது கூட்டத்தில் பேசிய திரு. சின்ன அண்ணமலையும், திரு.டி.எஸ். இராமனாதனையும் போலீசார் ஆகஸ்டு 16 ம் தேதி கைது செய்து திருவாடானை துணை சிறையில் அடைத்தார்கள்

17ஆம் தேதி நீதிமன்றத்தில் நடந்த மறியலின்போது போலீசார் துப்பாக்கி சூட்டால் பலர் மரணமடைந்தனர். ஆத்திரம் கொண்டெழுந்த பொது மக்களும் தேசிய தொண்டர்களும் போலீசாரை தாக்கி ஆர்ச்சின் அருகில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டிடத்தை 17 ஆம் தேதி தீ வைத்து கொளுத்தியும், வெள்ளையர் நடத்திய சிம்ஸன் கம்பெனி பஸ்களை கொளுத்தியும்,  நீதிமன்ற கட்டிடத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களையும், சாமான்களையும் எரித்தும் எதிர்வினை புரிந்தனர்.

இந்தச் செய்தியறிந்த அதிகாரிகள் ரிசர்வ் போலீஸ் படையுடன் வந்ததும் அறிவிப்பும் இல்லாமல் பொதுமக்களையும் தொண்டர்களையும் நோக்கி சுட்டார்கள். துப்பாக்கி சூட்டில் ஐம்பது பேர்களுக்கு மேல் அந்த இடத்திலேயே இரத்தபெருக்கில் வீழ்ந்து மாண்டார்கள். எழுபது பேர்களுக்கு மேல் துப்பாக்கி குண்டு காயம் அடைந்தார்கள். மரணமடைந்த வீரர்களின் உடல்களே போலீசாரும் பொதுமக்களும் எடுத்து மறைத்து அடக்கம் செய்துவிட்டார்கள். ஆகவே சரியான புள்ளி விபரங்கள் கிடைக்கவில்லை.

காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டவர்களின் பெயர்கள்

கீழ்க்காணும் தொண்டர்கள் காவலர்களால் சுட்டுக் கொல்லப் பெற்றனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் இன்னும் கிடைக்காமல் உள்ளது.

1. வி.தருமராஜன்
2. மணிவண்ணன்
3. பால்கார நடேசன்
4. கிருஷ்ணன்
5. சாவல்கட்டு
6. மணியன்
7. சிவனாண்டி செட்டியாரின்; தாயார்

என்ற நிலையில் ஐம்பது பேர்களில் இவர்கள் மட்டும் கொலையுண்டது தெரியவருகிறது.

தேவக்கோட்டையில் நீதி மன்ற எரிப்பு நடந்ததன் காரணமாக தேவகோட்டை  நகர சாலையில் போலீசார் வலம்வந்து  கண்டவர்களையும் அடித்து உதைத்தனர். காவல்துறை வன்முறை கட்டவிழ்த்து விடப்பெற்றது.

குறிப்பாக நீண்ட கால காங்கிரஸ் தொண்டரான வீரர் ஆர. எம். அண்ணாமலை என்பவரை காவல் நிலையத்தில் வைத்துச் சித்திரவதை செய்து அவரது வாயில் போலீசார் சிறுநீர் கழித்து அவதிப்படுத்தினர்.

தீவிர தேசியவாதிகளான திருவாளர்கள் வல்லரசு, லெட்சுமிநாதன் பாரதி, முகுந்தராஜ ஐய்யங்கார், டி.ஆர் அருண் போன்றோர் காப்புக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டார்கள். தேவக்கோட்டையில் இயக்கத்தை தீவிரமாக நடத்த ஏற்பாடு செய்தவர்களில் காலம் சென்ற திரு.அள. சுப. திருநாவுக்கரசு செட்டியார் குறிப்பிடத்தக்கவர். தேவக்கோட்டை நகரத்திலும் சுற்றப்புற கிராமங்களுக்கும் இரண்டு லட்சம் ரூபாய் கூட்டபராதம் விதித்து கொடுமைப்படுத்தி வசூல் செய்யப்பட்டது.

தேவக்கோட்டையில் நடைபெற்ற விடுதலை போரில் பங்கு கொண்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பெற்றது.  120 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 73 பேர்கள் 2வருடம் முதல் 14 வருடங்கள் வரை சிறைவாசத்தில இருக்கும்படித் தண்டிக்கபட்டார்கள். திருவேம்பத்தூர் என். ஜெயராமய்யர் போராட்டத்தில் பங்கு கொண்டு தலைமறைவாகிவிட்டார்.  இவ்வாறு தேவகோட்டை சார்ந்த தேசத் தொண்டர்கள் காந்திய வழியில் போராடிப் பல இன்னல்களைப் பெற்றனர்.

இவர்களை நினைவு கொள்ளும் வகையில் தியாகிகள் பூங்கா ஒன்று தேவகோட்டையில் அமைக்கப் பெற்றுள்ளது. மேலும் பழைய நீதிமன்றம் எரிக்கப்பட்ட நிலையில் அது இருந்த வழி தற்போது தியாகிகள் ரோடு என அழைக்கப்படுகிறது.

முடிவுரை

சிவகங்கை மாவட்டம் சார்ந்த தேவகோட்டைப் பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலைக்காக பெரிதும் போராடினர். காரைக்குடி பகுதி சார்ந்த தேச பக்த வீரர்களின் தொடர்பாலும் காரைக்குடியில்  நடைபெற்ற தேச எழுச்சி நிகழ்ச்சிகளாலும் தேவகோட்டை மக்கள் கவரப் பெற்றனர்;. இதன் காரணமாக தேவகோட்டை மக்கள்  தேச விடுதலைக்கு ஆர்வம் கொண்டனர்.

ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு இயக்கம் பொன்ற பல முக்கியமான தேச விடுதலைப் போராட்டங்களில் தேவகோட்டை தேசத் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறைவாசம், மரண தண்டனை போன்றவற்றைப் பெற்றனர்.

சின்ன அண்ணாமலை, இராமநாதன் ஆகிய இருவரும் வெள்ளையனே வெளியேறு இயக்கப் பிரச்சாரத்தின் காரணமாக காவல் துறையால் கைது செய்யப்பெற்ற நிலையில் அவர்களின் கைது என்பது மிகப்பெரும் பின்விளைவுகளை ஆங்கிலேயே அரசிற்குத் தந்தது.

திருவாடனை சிறை உடைப்பு, தேவகோட்டை நீதி மன்ற உடைப்பு எரிப்பு போன்ற பல எதிர்விளைவுகளை ஆங்கிலேய அரசிற்கு இக்கைது நடவடிக்கை தந்தது.


ம. முத்து பாலகிருஷ்ணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேவகோட்டையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களும் அதன் விளைவுகளும்”

அதிகம் படித்தது