மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)

தொகுப்பு

Oct 13, 2018

அர்ச்சனைகள்

                                                 -இல.பிரகாசம்

sirau maanudam1

 

அந்தநாள் கனிந்து வந்து கொண்டிருக்கிறது

ஆமாம், அது வெகுதொலைவில் இல்லை.

 

எந்தநாளில் எவரெழுதி வைத்த சாத்திரமோ

எந்தநாளில் எவருக்காக எவரெவரோ எழுதி வைத்த நீதியோ

எந்தநாளில் எவரெவர் ஒடுக்கப்பட வேண்டுமென

எவனெவனோ கடைபிடித்த சடங்குகளோ.

 

அந்தநாளில் அவரெழுதி வைத்த

சாத்திரத்தை, நீதியை, சடங்குகளை

குருதிக் குளியலால் இனியும் நாங்கள்

ஏன் புனிதப்படுத்த வேண்டும்?

 

நாங்கள் தீயிலிட்டெரித்து புனிதப்படுத்த

நந்தனார்களோ? இல்லை.

நந்தனின் பக்தியை சோதிக்கும் காலம் முடிந்து போயிற்று.

கோயிற் கருவறையிற் எம்மனார் ஓதும் மந்திரம் கேள்மின்!

 

அர்ச்சனை செய்கிறோம் பார்

நன்றாகப் பார் இன்னும்

நன்றாகக் கேள் செவிகளைத் தீட்டிக் கொண்டு கேள்

 

அர்ச்சனைகள்

 

உம்… மனுச்சாத்திரம் ஒழிக

எம்… மானுடம் வாழ்க

எம்… மானுடம் வாழ்க

உம்… சடங்குவழக் கொழிக!

 

உம்… சடங்குவழக் கொழிக

எம்… மானுடம் வாழ்க!

 

எம்… மானுடம் வாழ்க

உம்… அநீதி வீழ்க!

 

உம்… அநீதி வீழ்க

எம்…மனார்நீதி பெறுகவே!

 

தம்பிக்கு

-மீனாட்சி சுந்தரமூர்த்தி

 

Siragu-thambikku2'

 

தம்பி !
இன்றுனக்குப்
பிறந்த நாள் !
ஆண்டுகள் எத்தனை
வேகமாய்
உருளுகின்றன.

அம்மா நோயுற்ற
வேளை உன்
துடுக்குத்தனம் தாளாது
கட்டி வைத்தேன்
தூணில்,
ஊரிலிருந்து வந்த
மாமா
கடிந்து
கொண்டார் உன்னை,

சாக்லெட் டப்பாவில்
சேர்த்திடும்
சில்லறைகளை
நீ எடுப்பாய்
எனக்குத் தெரியாது.

ஒருநாள் பாட்டெழுதிய
ஏடுகளை
எடுத்துச் சென்று
போட்டு விட்டாய்
தெருமுனைக் கடையில்,
தேடிப்பார்த்து
கேட்டபோது சொல்லி
விட்டாய்,
அம்மா சென்று
ஐந்து ரூபாய் தந்து
மீட்டு வந்தாள்.

உன்னை விட
உயரமான
கிரிக்கெட் மட்டையோடு
வீட்டில்
நுழைந்தவன் வசமாய்
மாட்டினாய்,
கல்லூரிப் பையன்
நமச்சு,
உனக்கு
கண்டதும் வாங்கித்
தருவது
அம்பலமானது, அப்பா
போட்டார்
தடை உத்தரவு.

தினம் அப்பா
சொன்ன
வாய்ப்பாடுகளை என்னிடம்
ஒப்பிக்க
வேண்டும்,அதில்.
காட்ட மறப்பேன்
கருணை.

தெரிய வேண்டாம்
அப்பாவிற்கென,
புகுந்த வீட்டிலிருந்த
எனக்கு
எழுதுவாய்
பயிற்சிக்காலக்
கடுமை,
நடந்து கால்கள்
கொப்புளம் கண்டதை
கப்பலின்
காரிடாரில்  பலமணி
உருண்டதை,

விழி பூக்கும்
ஈரம்
எழுத்து தொடாமல்
“சோதனை
வென்று சாதனை
காண்பாயடா தம்பி”
எனத் தேறுதல்
கடிதம்
அனுப்பி அஞ்சல்காரர்
வரவு
பார்த்திருப்பேன்.

இன்று
ஊரும் உறவும்
பிள்ளைகளுக்குச்
சொல்லும் முன்மாதிரி
நீ ஆனாய்  !.

சென்ற விடுமுறையில்
கைவலிக்காக
அழைத்துச் சென்றாய்,
மருத்துவமனை.
எப்போதும் வராத
நீ வந்ததால்
பரபரப்பு
தொற்றிக் கொள்ள
ஒரு மணி
நேரத்தில் அத்தனை
பரிசோதனை
முடிவுகள்.

அஞ்சிடத் தேவையில்லை
என
தலைமை மருத்துவரே
எளிய பயிற்சி
கற்றுக் கொடுத்ததை
எப்படி
மறப்பேன் தம்பி !

பேரிழப்பில் நானமிழ்ந்து
பரிதவித்த
வேளையில் தேற்றிட
நீ பட்ட
பெரும்பாடு என்ன சொல்ல?

பொன்னியின் செல்வன்
படித்த
நாள் முதலாய்
குந்தவையே
நானென்பாய் நீ
ஆதித்த சோழனாய் !
இனியும் பிறவி
உண்டானால்
வருக தம்பி நீயே
என்னுடன்,

உற்ற நல்ல துணைவி,
நன் மக்களோடு
ஆதித்தனே  நீ
வாழிய
நலமென்று
வாழ்த்தினேன்
குந்தவை !.

 

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (அர்ச்சனைகள், தம்பிக்கு)”

அதிகம் படித்தது