மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி!)

தொகுப்பு

Aug 11, 2018

ஓயாது உழைத்த கலைஞர்

- தேமொழி

siragu karunanidhi5
உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப்
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக
மேற்கே மறையும் சூரியன்
கிழக்கே மறையும் ஒருநாளும் வந்தது
தெரிந்து கொண்டோம் இன்று அந்த
இயற்கையை மாற்றியவர் யாரென்று
தமிழ்த்தாயின் தங்கமகனே !
ஓயாது உழைத்த கலைஞரே !
உறங்குமிடமாகக் கடற்கரை ஏனோ?
ஓயாதஅலைகளுக்கும் சவால் விடுக்கத்தானோ?

கலைஞருக்கு கவிதாஞ்சலி!


-இல.பிரகாசம்

siragu karunanidhi4

(தமிழகத்தின் முதுபெரும் தலைவரும் இந்திய அரசியலின் சிறந்த
ஆளுமையும் ஆன தலைவரும் முன்னாள் முதல்வரும்கலைஞர் கருணாநிதி
அவர்களின் மறைவு தமிழுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பெரும் இழப்பு.)

தமிழகம் இருளில் ஆழ்ந்ததோ அந்தோ
தமிழரை யாற்றுவார் யாரோ?
தமிழர் யாவரும் இனியுன் உரத்தமிழ்
மொழியை கேட்கநீதா னிலையே!

ஈரோட்டுப் பள்ளியிலே திராவிட கல்விதனை
கற்றாய்! திராவிட மாணவ!
சீருகெட்டுப் போயிருந்த தமிழர் வாழ்வை
மீட்கும் பொறுப்பை ஏற்றாய்!

காஞ்சித் தலைவனாம் பேறிஞர் அண்ணாவின்
இதயத்துள் நீங்காது இருந்தாய்!
வாஞ்சை யுடனே உன்னை அழைத்தார்
என்தம்பி கருணா நிதியென்றே!

எப்பணிக்கும் முதல்பணி தமிழர்க்குத் தொண்டு
செய்வதே முதல்;பணி யென்றாய்!
எப்போதும் மேடைதோ றேறும் போதும்
தமிழர்க் குரலாய் ஒலித்தாய்!

தமிழர் வாழ்விற்கு துயர்நேர்ந்த போது
சமர்புகுந்து களமாடி வென்றாய்!
தமிழை தமிழர் வாழ்வை மீட்டதை
கல்லக் குடிப்போர் சொல்லும்!

சுயமரி யாதை தமிழர் உரிமை
என்றே பெருமுழக்கம் செய்தாய்!
சுயமரி யாதை யோடு ஆட்சியில்
மக்களை வழிநடத்திச் சென்றாய்!

சொத்துரிமை பெண்ணிற்கு சட்ட உரிமை
என்றே சட்டம் கொணர்ந்தாய்!
சொத்தான உன்னை இழப்பேம் என்றே
அழுகின்றார் அந்தோ வென்றே!

சாதிமதம் கடந்த சுயமரியாதை மணத்தை
சட்டத்தால் அங்கீ கரித்தாய்!
சாதிமதம் பாராத தமிழர் பண்புநலம்
சுயமரி யாதையை மீட்டாய்!

குறளோ வியத்தால் அருந்தமிழ்த் தொண்டுதனை
ஆற்றிய அருந்தமிழ்ப் புதல்வ!
அறத்தோ டிருந்தாய் சாற்றிய பெரும்புலவர்
வழிநின்று ஆற்றிச் சென்றாய்!

இழப்பேம் உன்னை இழப்பேம் என்றே
நாடே அழுகிறதே அந்தோ!
இழந்தோம் உன்னை இழந்தோம் அந்தோ
நாதழுக்க குரல்தான் இழந்தோம்!

திருவா ரூர்ப்புகழ் மகனாகப் பிறந்தாய்
தமிழர் தலைவனாய் வாழ்ந்தாய்!
திருப்பு கழ்பாடும் தமிழர் வாழ்வில்
தெளிந்த ஒளியென்றும் வீசும்!

போராடிப் பலவெற்றி பெற்றாய் மன்னவ
இறப்பிலும் பெற்றாய் பெருவெற்றி!
போராட்ட வாழ்வில் இறுதிப் பெருவெற்றி
மெரினாவில் அண்ணாவின் அருகில்நீ!

ஆதவன் ஒருநாளும் மறையாது அதுபோல்
திராவிடச் சூரியன் மறையாது!
ஆதவா நின்புகழ் ஒளிவீச இயற்கை
மடியில் சற்றுஇளைப் பாறுவாய்!


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி!)”

அதிகம் படித்தது