மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (கொடூரம், ஆண்டாள்)

தொகுப்பு

Aug 18, 2018

கொடூரம்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல் கல்லூரி,கோவை.

siragu kodooram1

 

எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும்

கனவுகளாக்கினாய்!

அழகையும் ஆசையையும்

காதலாக்கினாய்!

அறிவையும் ஆக்கத்தையும்

கல்வியாக்கினாய்!

பந்தத்தையும் பாசத்தையும்

உறவுகளாக்கினாய்!

உணர்வையும் காமத்தையும்

குழந்தையாக்கினாய்!

துக்கத்தையும் துயரத்தையும்

கண்ணீராக்கினாய்!

பசியையும் பட்டினியையும்

வறுமையாக்கினாய்!

சிந்தனையையும் செயலையும்

வெற்றி ஆக்கினாய்!

பொறுமையையும் போராட்டத்தையும்

வாழ்க்கையாக்கினாய்!

இவ்வளவையும் நன்மையாக்கிய நீ

ஏன் மரணத்தை மட்டும் கொடூரமாக்கினாய்?

 

ஆண்டாள்

- மீனாட்சி சுந்தரமூர்த்தி

 

siragu aandaal1

 

விழிக்கதவின்

தாள் நீக்க

வைகறையில்

அழைப்பு

ஆண்டாளின்  குரல்.

அவசரமாய் எழுந்து

வாயிலின்

தாள் திறக்க

அன்றாடப் பணி

முடிக்க வந்தாள்

 

வாசலில் நீர் தெளித்துக்

கூட்டி இட்டாள்

மாக்கோலம்

சமையலறைப்

பாத்திரங்கள்

இடம் பெயர்ந்தன

குழாயடிக்கு,

துணிகள் சோப்பு

நீரில்

மூழ்கடிப்பு.

 

காபிக் குவளையை

அவளிடம்தந்தேன்,

அக்கா

உனக்கு

எனக்கும்தான்,

 

அள்ளிச் செருகிய

கொண்டையில்

அழகு

கனகாம்பரம்

என்றேன்,

அக்கா செதம்பரத்துப் பூ

அவுரு

வாங்கியாந்தாரு

கண்கள்

நாணத்தில் சிரித்தன.

 

ஆண்டாள்! சட்டை

கழுத்தில்

அழுக்கே போகலயாம்

பாரு

அவ்ளோதாங்கா

போவும்,

தூக்கிப் போட்டு

அண்ணனுக்கு

புதுசு எடுத்துக் குடு,

என்றாளே உரிமையாய்.

சரி சரி உன்னிடம்

பேசவா முடியும்?

நகர்ந்தேன்.

பாத்திரங்கள்

அவளிடம்

பந்தாகும்,வாயிருந்தால்

புலம்பும்.

 

ஆளுயரத் துடைப்பம்

எடுத்தாள்

வீடு கூட்ட,

நானும் எடுத்தேன்

மல்லிகையைத்

தொடுக்க.

 

அக்கா, உனக்குப்

பொறுப்பு

பத்தாது,இந்தா

கீழ கெடக்குது,

என்று

தந்தாள் மோதிரம்.

நீயிருக்க

எனக்கென்ன

கவலை என்றேன்.

 

இப்படிப் பல முறை

துவைக்கப் போட்ட

சட்டையில்

மறந்த பணம்,

 

அலமாரி புக

மறந்த

நகைகள் எதுவும்

தொலையாது.

 

நெடு நெடுவென

உயரம்,

கருப்பு நிறம்,

கணுக்கால் தெரியக்

கட்டிய சேலை,

 

ஒரு வேலையும்

சுத்தமாய் இருக்காது

பாத்திரத்தில்,

துணியில்

போகாது அழுக்கு.

 

ஆனால் அவளின்

மனம் பளிங்கு,

கபமடமில்லா

முகம்,

வெள்ளைச் சிரிப்பு

நேரந்தவறாமை,

 

கடந்த பத்து

ஆண்டுகளாய்

வருகிறாள்,

பொய் தெரியாது,

அக்கம்,பக்கம்

எவரிடமும்

வம்பு

பேசமாட்டாள்.

 

வேறென்ன

வேண்டும்?

எனக்குப்

பிடிக்கும் அவளை.

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (கொடூரம், ஆண்டாள்)”

அதிகம் படித்தது