மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (தமிழர் என உணர்தல் வேண்டும்!, சுதந்திர தாகம்!)

இல. பிரகாசம்

Jul 28, 2018

 

தமிழர் என உணர்தல் வேண்டும்!

Dec-23-2017-newsletter1

 

நாமெல்லோ ருந்தமிழர்கள் -அதை

நாமெல்லோ ருமுணர்தல் வேண்டும்.

 

உணர்ச்சி கெட்டுப் போனோம் தாய்தமிழ்

மொழிசீ ரழிந்து போனதென நாளைய

உலகம் தூற்றும் படிசெய்ய வோ?நாம்

உணர்ந்து தெளிதல் வேண்டும் இன்றே!

 

தெள்ளுதமிழ் இன்பத்தமிழ் எனப்புகழ் நூறுபாடி

தம்பிள்ளை கல்விமட்டும் பிறமொழி நன்றோ?

தாய்மொழிக் கல்வியல்லா பிறமொழி யாலே

வந்திடுமோ நல்லபுகழ் புவியிலே அதனாலே?

 

தாய்மொழிப் பற்றில்லா ஒருவனால் தாய்நாடு

ஒருபோதும் முன்னேற்றம் கொண்ட துண்டோ?

ஏய்ப்போரும் வந்துசேர்ந்து நம்மை கீழ்ப்படுத்தி

ஆண்ட வரலாறு உண்டென அறிவாயே

 

தொழில் நுட்பம்தோன் றினாலும் நாமதை

வாழ்வியல் மொழிக்கு மாற்றிட வேண்டும்

தாய்மொழி வழியாலும் நுண்கலை நுட்பம்

எல்லோரும் கற்றறிந் திடலாம் அதனாலே

 

வீட்டிலும் பணிவேலை யிடத்திலும் தாய்மொழி

வழங்குதல் நன்றென உணர்வோர் செய்யும்

தொழில்மேல் ஓங்கி வருமென நம்பிக்கை

கொண்டால் தாய்மொழி மேலும் வளருமே!

 

           சுதந்திர தாகம்!

 

அவைகள் அவன் உள்ளத்தின்

வன்மத்தை எண்ணியிருந்தபடி

அவனைக் கொலை செய்யவும்

சிறைப் பட்டவைகளை

சுதந்திரமாகவும் வெளியேற்ற வேண்டுமென

தந்திரம் செய்து கொண்டிருந்தன.

 

அவன் மேஜையின் எதிரே இருந்த

தாளொன்று

உயிர்விடும் சுதந்திர தாகத்தை

எண்ணியபடியிருந்தன.

அவைகள் அச்சொற் கட்டுக்களின் எழுத்துக்களில்

புலம்பியழுதபடி

ஓலங்களை ஓலித்துக் கொண்டிருந்தன.

 

அவைகள் எழுப்பிய இரங்கல் வரிகள்

காற்றினலைகளில் மிதந்தபடியிருக்க

எழுத்தொன்று வீறுகொண்டு

தன்னை கூர்தீட்டிக் கொண்டு

படைநடத்தி

அவனைக்  கொல் கொல்லென்று ஆனையிட்டன.

 

மேஜை மீதிருந்த தாள் படையெடுப்பில்

பெருவெற்றி கண்டது

அவன் எழுத்தெல்லாம்

சொற்கட்டுக் களினின்று நீங்கி

சுதந்திரம் சுதந்திரம் என்று

மந்திரமோதி தொலைவிலிருக்கும்

மலைமீது எதிரொலித்தது.

 

ஆ! சுதந்திரம்! சுதந்திரம்!

மறுநொடி சொற்கட்டுக்களிலிருந்து

கமழத் தொடங்கியது

புதியவகை இலக்கியமொன்று

அதற்கென்ன பெயரிட?

 

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (தமிழர் என உணர்தல் வேண்டும்!, சுதந்திர தாகம்!)”

அதிகம் படித்தது