மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொகுப்பு கவிதை (நினைவுகள் ஊன் கிழிக்கும்!, மந்தையிலிருந்து பிரிந்த ஆடு!)

தொகுப்பு

Nov 13, 2020

நினைவுகள் ஊன் கிழிக்கும்!

 -வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி

 

siragu ilayuthir kaalam1

இலையுதிர் காலத்தின் தொடக்கம், இன்பம்
ஈயும்,  இயற்கை மனம் நிறைக்கும்;
தளிர்கள் காய்ந்து சருகாகும் காலமிது
தாழும் கொடிகளும் முடங்கும் நேரமிது
பழுப்பு சிவப்பு ஊதா நிறங்களில்
பச்சை இலைகள் மாறிடும் பருவமிது
இளந்தென்றல் நீங்கி ஊதற்காற்று தழுவிடும்
ஈ எனப் பற்களும் குளிரில் கூத்தாடும்
வெண்பனித் தூவல் உறைய வைக்கும்
வயலும் காடும் வெண்ணுடைத் தரிக்கும்
ஒளிரும் கதிரோன் சோம்பல் முறிக்கும்
ஓடிடும் முகிலும் ஒண்ணொளி மறைக்கும்
சிகரமும் உடுத்தும் கொண்மூவின் பஞ்சாடை
சீண்டும் காற்றும் நடுக்கம் கூட்டும்- ஆங்கு
இலையொன்று உதிர்தல் கண்டு கண்ணீரும்
இறங்கி கன்னம் நனைக்கும்,  வெலவெலக்கும்;
கொரானாவில் மண்மூடி கனவாய் கனப்பொழுதில்
உதிரும் உயிர்கள் நினைக்கையில் தளரும்,
உள்ளிழுக்கும் நெஞ்சம் துக்கத்தில் ஊளையிடும்;
இளவேனிலில் இலைகள் மீண்டும் துளிர்க்கும்;
உதிர்ந்த உயிர்கள் துளிர்க்குமோ? உதிக்குமோ?
உள்ளன்பு உணர்வுகள் மௌனம் கடத்தும்
கடந்த காட்சிகள் மனதை வாட்டும்
பேசிய பொழுதுகள் ஆடிய கனங்கள்
மெல்லியதாய் நிழலாடும் , உதிரா நினைவுகள்
ஊன் கிழித்து வலி ஏற்றும்;

 

மந்தையிலிருந்து பிரிந்த ஆடு!

- குமரகுரு அன்பு

siragu aala vizhuthu1

அவன் சிரிக்க மாட்டான்!
யாரோடும் பேசவும் மாட்டான்
மெதுவாக கால் தேய்த்து நடப்பான்
எதிலுமே ஈடுபாடு காட்டவும் மாட்டான்!
படிப்பிலும் சுட்டியில்லை
மாலைகளில் விடுதி நடு
ஆலமரத்தின் கீழே
விழுதோடு விழுதாகியிருப்பான்!
எதோ வரைந்து கொண்டிருப்பான்?
நெருங்கி சென்றால்
திரும்பி பார்த்துவிட்டு
மீண்டும் வரைவான்…
அவன் எங்கும் சென்று பார்த்ததில்லை?
அவனை பார்க்கவும்
யாரும் வருவதில்லை!
பேராலய உதவியில் படித்து
வருவதாக வார்டன் சொன்னார்!
கயிற்றில் விழுதுகளின் நடுவே
தொங்கிய அவன் பிணத்தின்
கைகளில் இருந்த ஓவியங்கள்
அனைத்தும் மந்தையிலிருந்து
பிரிந்த ஆடுகளை பற்றியது!
மறுநாள் ஆலத்தின் விழுதுகள்
நடுவில் புதிதாக ஒரு விழுது
தெரிந்தது…


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (நினைவுகள் ஊன் கிழிக்கும்!, மந்தையிலிருந்து பிரிந்த ஆடு!)”

அதிகம் படித்தது