மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலய அமைப்பும், நிர்வாகமும்

ஜா. சுஜாபிரின்ஸி

Nov 6, 2021

siragu annai aalayam1

ஒவ்வொரு ஆலயமும் புனிதத் தன்மை உடையது. மேலும் தனக்கென தனித்தன்மைகள் உடையனவாக விளங்குகின்றன. தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலயமும் தனக்கென புனிதத் தன்மை உடையதாகவும், தனக்கென தனித்தன்மை உடையதாகவும் விளங்குகின்றது.

இவ்வாலயம் தொண்டியில் வாழும் மக்களால் வழிபடப் பெறுவதுமாகவும், பெரிதும் நம்பிக்கைக்கு உரியதாகவும் விளங்கி வருகின்றது. இவ்வாலயத்தின் அமைப்புமுறை பற்றியும், இவ்வாலயத்தின் நிர்வாகம் பற்றியும் இவ்வியல் எடுத்துரைக்கின்றது.

தேவாலயத்தின் அமைப்பு 

தொண்டியில் அமைந்துள்ள தூய சிந்தாத்திரை அன்னை தேவாலயம்   இருபத்தோரு   அடி அகலமும், நாற்பத்து நான்கு அடி நீளமும், பன்னிரண்டு அடி உயரமும் உடையதாகக் கட்டப்பெற்றுள்ளது.

இத்தேவாலயம் கிறிஸ்தவ தேவாலய அமைப்பிற்கு உரிய ஊசிக் கோபுர அமைப்பினை கொண்டுள்ளது. இதனுள் ஒரே நேரத்தில் நானூறு பேர் இருந்து வழிபாடு செய்யலாம்.

இத்தேவாலயம் மூன்று பிரிவுகளை உடையது ஆகும். அவை

  1.    ஸ்தலம்
  2.    பரிசுத்த ஸ்தலம்
  3.    மகா பரிசுத்த ஸ்தலம்

என்ற முப்பகுப்பு உடையதான இவ்வாலயம் கட்டப்பெற்றுள்ளது. அவற்றின் அமைப்பினைப் பற்றிய விரிவான செய்திகள் பின்வருமாறு.

ஸ்தலம்

“ஸ்தலம்” என்பது ஆலயத்திற்கு வரும் மக்கள் அமர்ந்து வழிபடும் இருக்கும் இடமாகும். இந்த இடத்தில் அமர்ந்தும், மண்டியிட்டும் மக்கள் பிரார்த்தனை செய்வர். இவ்வமைப்பு இவ்வாலயத்தில் உள்ளது.

பரிசுத்த ஸ்தலம்

”பரிசுத்த தலம்” என்பது ஆண்டவருக்கு காணிக்கை செலுத்தும் இடம் ஆகும். அங்கு காணிக்கை பெட்டியும் ஆண்டவர் மோசேக்கு கொடுத்த துளிர்த்த கோலும் இவ்வாலயத்தில் வைக்கப்பெற்றுள்ளது. இவ்விடத்தில் காணிக்கை செலுத்துபவர்கள் சென்று காணிக்கை செலுத்தலாம். இது ஆலயத்தின் இரண்டாம் பகுதியாகும்.

மகா பரிசுத்த ஸ்தலம்

”மகா பரிசுத்த ஸ்தலம்” என்ற இடத்திற்கு அனைவரும் செல்ல முடியாது ஆலயத்தில் குருவானவர் மட்டும் செல்ல முடியும். இவற்றை பீடம் என்று கூறுவர் இவ்விடத்தில் நின்று தான் அருட்தந்தையர்கள் திருப்பணியை நடத்துவர். திருவிவிலியம் வாசிப்போர் மட்டும் வாசிக்க அனுமதி பெற்று அவ்விடம் செல்லலாம். அவர்களும் அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது.

மகா பரிசுத்த ஸ்தலம் என்பது ஆண்டவர் வசிக்கும் இடம் ஆகும். அதே இடத்தில் திருப்பணி நிறைவேற்றுவதற்காக அருட்தந்தை மட்டும் சென்று மறையுரை ஆற்றுவார் இப்பகுதி ஸ்தலம், பரிசுத்த ஸ்தலம் ஆகியவற்றை விட  உயரமாக அமைக்கப்பட்டிருக்கும்.  இது ஆலயத்தின் மூன்றாம் பகுதியாக விளங்குகிறது. இதுவே புனிதப் பகுதியுமாகும்.

இப்பகுதியில் மரவேலைப்பாடுடன் கூடிய நிலையில் பின்புற அமைப்பு அமைக்கப்பெற்றுள்ளது. மேலும் நடுவில் திருச்சிலுவைச் சின்னம் காட்சி தருகிறது. அதன் ஒரு புறத்தில் குழந்தை இயேசுவைத் தாங்கிய நிலையில் தூய ஜோசப்பும், மற்றொரு புறத்தில் குழந்தை இயேசுவைத் தாங்கியன நிலையில் தூய சிந்தாத்தி்ரை அன்னையும் நின்ற வடிவில் காட்சி் தருகின்றனர். இவ்வுருவங்கள் அன்பும் ,அருளும்,அழகும் நிரம்பிக் காட்சி தருகின்றன. தூய சிந்தாத்திரை அன்னை ஒரு கையில் குழந்தை இயேசுவையும், மற்றொரு கையில் மீனவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நிலையில் மின் விசைப்படகையும் ஏந்தியுள்ளார். இதன்வழி கிழக்குக் கடற்கரை மீனவர்களைக் காக்கும் தெய்வமாக தூய சிந்தாத்திரை அன்னை விளங்குகிறார்.

தூய சிந்தாத்திரை அன்னையின் அருள் வரலாறு

அன்னை மரியாள் முதல் நற்கருணை பேழையாக இருந்து இயேசுவை பெற்றெடுத்துக் காத்தவர் ஆவார். அன்னையானவள் அகிலத்தை ஆள்பவரை தன் உதிரத்தில் வைத்து காத்த அருள் பெண்மணியாவாள்.

அன்னை மரியாள் உயிரின் பிறப்பிடம்,  அன்பின் அடித்தளம், அழகின் அச்சாரம், அன்னை மரியா இறைவனின் தாய், இறைமகன் இயேசுவை தன் உதிரத்தில் சுமந்து கருவறையில் வைத்து காத்ததினால் அன்னை மரியா இயேசுவின் புனித தாயாவாள். அவளே தூய சிந்தாத்திரையாகத் தொண்டியில் காட்சி தருகிறாள்.

அன்னை மரியாள் உலகின் பல இடங்களில் காட்சி தந்து, கருணை மழை பொழிந்து வருகிறாள். அவற்றில் சில இங்கு எடுத்துரைக்கப்பெறுகின்றன.

வேளாங்கண்ணிக் காட்சி

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிறிய கிராமத்தில் பதினாறாம்  நூற்றாண்டில் பால் கொண்டு சென்ற இடையே சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியாள் காட்சி தந்தாள். அவ்வாறு தோன்றிப் பால் பொங்கி வழியும் அற்புதத்தை நிகழ்த்தினார். எழுந்து நடக்க இயலாத கால் ஊனமுற்ற சிறுவனுக்கு அன்னை மரியாள்  தோன்றி அவனது  இயலாமையைக் குணமடையச் செய்தாள்.

மேலும்  ஊரில் இருந்த செல்வந்தர் ஒருவருக்கும் நேரில் தோன்றி  ஆலயம் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டுக் காட்சியளித்தார்.

பின்னர் ஒரு நாள் கடலில் இந்த புயல் காற்று வீசியது பெருங்காற்றில் போர்ச்சுகீசிய மாலுமிகள் மாட்டிக்கொண்டனர். அன்னை மரியா அவர்களை அந்தப் பேராபத்தில் இருந்து காப்பாற்றினார்.

இவ்வாறு இவ்வூரில்  அன்னை மரியா நான்கு முறை காட்சியளித்தது அறியமுடிகின்றது.  இன்று உலக மக்கள் அனைவராலும் போற்றப்படும் புனித திருத்தலமாக வேளாங்கண்ணி மாதா பேராலயம் திகழ்கின்றது வேளாங்கண்ணியில் அன்னை காட்சி அளித்ததன் காரணமாக வேளாங்கண்ணி அன்னை என்ற காட்சிப் பெயரில் அவள் அழைக்கப்படுகிறாள்.

பாத்திமா நகர் காட்சி

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள பாத்திமா நகரில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து பதினேழாம் ஆண்டு அக்டோபர் மாதம் அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார். மூன்று சிறுவர்களுக்கு இவ்வரிய காட்சி தரப்பட்டது.  செபமாலை அன்னை என்ற நிலையில் ஆடுமேய்க்கும்  சிறுவர்களுக்கு பாத்திமா நகரில் காட்சி தந்தமையால் பாத்திமா நகர் காட்சி என்று இது அழைக்கப்படுகிறது.

லூர்து நகர் காட்சி

கிபி 1858ஆம் ஆண்டில்,  பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியாள்,  பெர்னதெத் ஜூனியர் என்ற இளம் பெண்ணுக்கு பதினெட்டு முறை காட்சி அளித்தார்.  ”அவளிடம் ஆலயம் எழுப்ப வேண்டும் செபமும் தவமும் செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டு அருளினாள்.

இக்காட்சியின் சாட்சியாக ஒரு அற்புத நீரூற்று அங்குத் தோன்றியது இக்காட்சியின் நினைவாக உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள் பலவற்றில் லூர்து அன்னை காட்சி அளித்த குகை வடிவில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக்கு லூர்துநகர் காட்சி என்று பெயர் ஏற்பட்டது.

கடவுளின் தாய் மரியாள்

அன்னை மரியா தாவீது மரபினராகிய யோசேப்பு என்பவருக்கு மணம் முடிக்க முடிவு செய்யப்பட்டவர். ஆனால்  திருமணத்திற்கு முன்பே  பரிசுத்த ஆவியினால் கருவுற்று கடவுளின் திருவுளப்படி கடவுளின் விருப்பத்திற்கேற்ப அவருடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை வயிற்றில் சுமந்தாள்.  கருணை உள்ளத்துடன் ஞானம் நிரம்பியவராய இயேசுபிரானை அவர் வளர்த்தார்.

இயேசுவைச் சிலுவையில் இட்டபோது, நான்காம் நிலையில் அன்னை மரியாள் இயேசுவை கண்டு எதுவும் கேட்கவில்லை. அவர்கள் இருவரிடையே கண்ணீரும் மௌனமும்  நிலவியது இறுதியில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பேதுருவிடம் ”இவரே உன் தாய்”  என்று அன்னை மரியாவை அனைவருக்கும் தாயாக இயேசு பிரான்  கொடுத்தார். இறுதியில் அன்னை மரியாவும் உயிருடன் விண்ணகத்திற்கு  எடுத்துக்கொள்ளப்பட்டு விண்ணக மண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டார். இத்தகைய மாட்சி பொருந்திய அன்னை மரியா கடவுளின் தாயாகவும் உலகின் தாயாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அன்னை மரியாவின் விழாக்கள்

அன்னை மரியாளின் விழாக்கள் பல கத்தோலிக்க திருச்சபையால் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் குறிக்கத்தக்கன பின்வருமாறு.

  • ஜனவரி 1 தூய கன்னி மரியா இறைவனின் தாய் விழா
  • மார்ச் 25 இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு விழா
  • ஆகஸ்ட் 15 -அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா
  • டிசம்பர் 8 -அன்னை மரியாவின் அமல உற்பவம்
  • செப்டம்பர் 8- மரியாவின் பிறப்பு விழா
  • செப்டம்பர் 12 -கன்னி மரியாவின் திருப்பெயர் விழா
  • செப்டம்பர் 15 -வியாகுல அன்னை நினைவு விழா
  • அக்டோபர் 7- ஜெபமாலை நினைவு விழா
  • மே 24 -சகாய அன்னை நினைவு நாள் விழா
  • ஜூலை 16- தூய கார்மேல் அன்னை நினைவு விழா
  • மே 17-  கண்ணீரின் அன்னை நினைவு விழா

இவ்வாறு பல்வேறு திருவிழாக்களும் நினைவுநாள் விழாக்களும் கொண்டாடப்படுகின்றது.

தூய மரியாள் தொண்டியில் தூய சிந்தாத்திரை அன்னையாக வணங்கப்படுகிறார். இவ்வாறு ஆலயத்தின் மிக முக்கிய தெய்வமாக அன்னை சிந்தாத்திரை விளங்குகிறாள்.

ஆலயத்தின் அமைப்பும் வசதிகளும் 

தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் தொடக்கப் பகுதியில் கொடி மரம் அமைந்துள்ளது. இதனை அடுத்து  தேவாலயத்திற்கு செல்ல  இருவழிகள் ஏற்படுத்தப் பெற்றுள்ளன.

தேவாலயத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பின்புறம் தண்ணீர் தொட்டியும் தண்ணீர் குழாயும் உள்ளது ஆலயத்தின் வடபுறம் குடி  தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

தேவாலயத்தை சுற்றி தென்னை மரங்கள், புங்கை மரங்கள், வேப்ப மரங்கள் வளர்க்கப்பெற்றுள்ளன. மேலும்  பூச்செடிகள்  வளாகத்தில்  வளர்க்கப்பெற்று அழகுடன்  ஆலயம் விளங்குகிறது.

ஆலயத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பெற்றுள்ள கம்பிக் கதவுகளிலிருந்து,  ஆலயம் செல்லும் வரை காரைப் பலகைகளால் அமைக்கப்பெற்ற சாலை போடப்பட்டுள்ளது.

செடிகளும் கொடிகளும் நிறைந்து பசுமைச் சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் கடலும் கடல் சார்ந்த இடங்களும் உள்ளன.

தேவாலயத்தின் நிர்வாகம் 

இத்தேவாலயம்  சிவகங்கை மறைமாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இம்மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு ஆயர் சூசை மாணிக்கம் ஆவார்.  இம்மறைமாவட்டமானது எழுபதிற்கும் மேற்பட்ட பங்கு ஆலயங்களைக் கொண்டுள்ளது. அனைத்துப் பங்கிற்கும் தேவையான வசதிகளையும் மறைமாவட்ட குழுவானது அவ்வப்போது செய்து வருகின்றது.

இதேபோன்று தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலய பங்கானது இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டுள்ளது இது அவர்களுக்கு தேவையான வசதிகளை பங்கின் மூலம் செய்யப்படுகின்றது.

சிவகங்கை மறைமாவட்டத்தில் மாதாமாதம் பங்கு  தந்தைகளுக்கு கூட்டம் ஏற்படுத்தி அவர்களை வரவழைத்து பங்கின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டு அறியப்படும். பின்பு அவை நிறைவேற்றப்படும்.

ஆலயத்தில் வரவு செலவு கணக்குகள் பங்கு தந்தையார் சரிபார்க்கப்பட்டு பின்னர்  ஆயரிடம் காண்பிக்கப்படும்.  ஞாயிறு திருப்பலி காணிக்கை சேகரிக்கப்பெற்று அவை ஒவ்வொரு வாரமும் வாசிக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் பங்கு தந்தையால் கிராம நிர்வாகிகள் நிர்ணயிக்கப்பட்டு இவ்வாலயத்திற்கான வரவு-செலவு கணக்குகள் கையாளப்படும். இவ்வாறாக இவ்வாலயத்தின் நிர்வாக அமைப்பானது அமைகின்றது.

தேவாலயத்தின் பணியாளர்கள்

தேவாலயத்திற்கு தேவையான உதவிகளை விருப்பமுள்ளவர்கள்  விரும்பிய வண்ணம் செய்கிறார்கள். மேலும் அமலாவை சபையில் உள்ள அருட்சகோதரிகள் பங்கிற்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

திருப்பலியின் போது ஆலயங்கள் அலங்கரித்தல், பீடத்தினை பூக்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற உதவிகளையும் சிறுவர் சிறுமியர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றையும் அருட்சகோதரிகள் செய்துவருகின்றனர்.

இப்பங்கின் குருவிற்கு உதவியாக வேதியர் ஒருவரும்  இருக்கின்றார். அவர் திருப்பணியின் பொழுது பீடச் சிறுவர்களை வழிநடத்துதல், பாடல் குழுவினை கண்காணித்தல், கிராமங்களில் திருப்பணி நிகழும் பொழுது பங்கு தந்தைக்கு உதவியாக செல்லுதல்,  திருப்பலியின் இறுதியில் அறிவிப்புகள் ஏதும் இருப்பின் அறிவிப்புகளை மக்களுக்கு வாசித்தல் போன்றவற்றைச் செய்து வருகின்றார்.

இதே போன்று பீடச் சிறுவர்களும் திருப்பலியின் போது தந்தைக்கு தேவையான உதவிகளை செய்வார். கோவிலைப் பராமரித்தல், ஜெபங்கள் கூறுதல், திருப்பலிக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்ற பணிகளில்  கோவில் பிள்ளைகள் ஈடுபடுவர்.

இவ்வாறாக தேவாலயத்தில் பணியாளர்கள்  பணிகளை மேற்கொள்கின்றனர் .

ஆலயத்தில் இயங்கும் இயக்கங்கள்

இவ்வாலயத்தில் பல்வேறு இயக்கங்கள் மறைமாவட்டத்தில் உதவியுடன் பங்கு தந்தை மற்றும் மக்களின் ஒத்துழைப்பாலும் இயங்கி வருகின்றன. அவை

1. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

2. தூய வின்சென்ட் தே பவுல் சபை ஆண்கள் பிரிவு

3. தூய வின்சென்ட் தே பவுல் சபை பெண்கள்  பிரிவு 

4. மரியாவின் சேனை 

போன்றனவாகும். இவற்றின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் பின்வருமாறு.

இயேசுவின் கண்மணிகள் இயக்கம்

இப்பங்கில் உள்ள இயேசுவின் கண்மணிகள் இயக்கம் வெல்கம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்றது. இயக்கத்திற்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் பங்கில் உள்ள அமலவை அருட்சகோதரிகள் ஆவர். ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் மறைக்கல்வி வகுப்பில் இயேசுவின் கண்மணிகள் கலந்து கொண்டுப் பயன்பெற்று வருகின்றனர்.

தவ காலங்களில் சிலுவைப்பாதை வழிநடத்துதல் பணியிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் பங்கின்  மறைமாவட்ட அளவில் நடைபெறுகின்ற விவிலிய போட்டிகளிலும்,  கலை நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்பர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை பாலகர் தினம் கொண்டாடப்பெற்றுவருகிறது.  இவ்வியக்கத்தின் மூலம் திருப்பலி முன்னுரை வாசகங்கள் வாசித்தல்,   விசுவாசிகள் மன்றாட்டு காணிக்கை பெறல்,  பவனி நன்கொடை பெறல் ஆகிய  செயல்களில் இயேசுவின் கண்மணிகள்  முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர்.  அருட்சகோதரிகளின் வழிகாட்டுதலால் இயேசுவின் கண்மணிகள் இயக்கம் சிறப்பாக இவ்வாயலயத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

தூய வின்சென்ட் தே பவுல் சபை ஆண்கள் பிரிவு

கத்தோலிக்க விசுவாசத்தை நிலைநிறுத்திக்  காண்பித்து உலக அளவில் பறந்து விரிந்து செயலாற்றி வரும் தூய வின்சென்ட் தே பவுல் சபையும், தூய சிந்தாத்திரை அன்னை ஆலயப் பணிகளில் கலந்து கொள்கின்றது.

தொண்டிப் பங்கில் சிவகங்கை மத்திய சபை நிர்வாகத்தினரால் கடந்த 10.01.97 ஆம்நாள்  கிளை சபையாக உருவாக்கப்பட்டது. 12.05.99 ஆம் நாளில் இது உலக மகா சபையுடன் இணைக்கப்பட்டது.  மத்திய சபையில் முயற்சியால் வெளி நாடான ஆஸ்திரேலியா நாட்டுடன் இது இணைக்கப்பட்டது. இடைக்காலத்தில் நடைமுறையில் ஏற்பட்ட சில தொய்வுகளை நீக்கி இப்போது பங்கின் மாபெரும் முயற்சியால் ஐம்பது சகோதர சகோதரிகளை இணைத்து சபை புதுப்பிக்கப்பட்டு புதியதோர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் வார  கூட்டங்கள் பங்கின் விழா  நாட்கள் தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேறிய பின் சரியாக காலை பத்து முப்பது மணிக்கு ஆலய வளாகத்தில் நடைபெறும். மேலும் வட்டார சபை மத்திய சபைக் கூட்டங்களில் கிளை சபையின் பொறுப்பாளர்கள் முறைப்படி கலந்துகொள்கின்றனர். ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து நிதி உதவி மூன்று மாதத்திற்கு ஒருமுறை கிடைத்து வருகிறது.

இது தவிர கிளை சபையின் தலைமை பணியாளர் மற்றும் பொறுப்பாளர்கள் பலரிடம் அன்பளிப்புகளைப் பெற்று ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கல், உடை வழங்கல், மருத்துவ வசதி செய்து தருதல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர்.

இவ்வமைப்பில் மகளிர் எண்ணிக்கை அதிகமானதால் கடந்த 2008ஆம் ஆண்டு பெண்களுக்கென தனி கிளைச் சபை ஒன்றும் உருவாக்கப்பட்டது. அது  தூய செபஸ்தியர் பெண்கள் கிளைச் சபை என்ற பெயர் சூட்டப்பட்டுச் சிறப்புடன் பணிகளைச் செய்துவருகிறது.

அக்கிளைச் சபை இன்றளவிலும் தனியாக இயங்கி வருகிறது. இவ்விரண்டு கிளைச் சபைகளுமே வாரங்கள் தோறும் தனித்தனியாக, இயங்கி வருகின்றன. இரு சபை கூட்டங்களிலும் பங்கு தந்தையான சபையின் ஆன்மீக குரு  தவறாது பங்கேற்று அவர்களுக்கு எல்லா நிலைகளிலும்  வழி நடத்தி வருகின்றனர்.

தூய சிந்தாத்திரை அன்னை கிளை சபை சார்பில் கறவை மாடுகள் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பெற்று வருகின்றது.

தூய வின்சென்ட் தே பவுல் சபை பெண்கள் பிரிவு

தொண்டி பங்கு தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில்  செயல்பட்டுவந்த தூய வின்சென்ட் தே பவுல் சபையில் பெண்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில் இப்பெண்கள் பிரிவு உருவாக்கப்பெற்றது. 31 உறுப்பினர்களுடன் 2008ஆம் ஆண்டு தூய செபஸ்தியர் பெண்கள் கிளை சபையாக தனியாக இயங்க ஆரம்பித்தது.

தூய சிந்தாத்திரை அன்னை ஆலயத்தைச் சார்ந்த இப்பெண்கள் கிளைச் சபை தலைமை பணியாளர்  திருவாளர் தி. ஜோசப் அமல்ராஜ்  அவர்களால் முன்மொழியப்பட்டு,  ஆன்மிக குரு அருள்திரு எஸ். எட்வின்  ராயன் அடிகளார் அவர்கள் முன்னிலையில்,  தனி நிர்வாக சபை தலைவர் திருவாளர் எஸ் ஆர் டி ஜேசுதாஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது . இச்சேவையானது ஏழை எளியவர்க்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது.

ஆதரவற்றோர் நோயாளிகள் துன்பப்படுகிறவர்கள் ஏழைகளின் வீடுகளில் சந்தித்து இவர்கள் ஆதரவு அளித்துவருகின்றனர்.

இதன் நிர்வாகப் பொறுப்பில்

  • தலைவர்  – திருமதி எஸ் அன்னம்மாள்
  • துணைத் தலைவர் – திருமதி எலிசபெத் மேரி
  • செயலாளர் -  சந்தன மேரி
  • துணைச் செயலாளர் -  மெர்சி ராணி
  • பொருளாளர் ரோஸ்மேரி பெண்கள் பிரதிநிதி ஜெயராணி

போன்றோர் இருந்து இவ்வமைப்பினைத் திறம்பட நடத்தி வருகின்றனர்.

புதிய பலிபீடம் அமைத்தல்

ஆலயமானது வருட புதுப்பித்தல் பணியில் பொழுது பங்குத்தந்தை அருட்திரு சவரிமுத்து அவர்களின் ஆலோசனையால் ஆலயம் புதிதாக அர்ச்சிக்கப்பட்டது. ஆலயமானது புதிய மர வேலைப்பாடுகளுடனும் கட்டிட வேலை பாடுகளுடன் புதிதாக எழுப்பப்பட்டது.  இதற்கு ஏற்பாடு செய்த பங்குத்தந்தையின் முயற்சிக்கு  பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து உதவிகள் பல செய்தனர்.

ஆலயத்தில் புதிய பலிபீடம் அமைத்து ஆலயம் முழுவதும் தூய்மை  ஆக்கப்பட்டு வர்ணம் அடிக்கப்பெற்று,  தூய ஆரோக்கிய அன்னையின் அமல உற்பவம் நாளான டிசம்பர் 8-ஆம் நாளன்ன்று மாலை 5 மணி அளவில் புதிய பலிபீடம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஊரிலிருந்து குருக்களும் அருட் சகோதரிகளும் கலந்து கொண்டனர் மேலும் இவ்விழாவில் தொண்டி பங்கிற்கு அருகே உள்ள குருமிலாங்குடி, சம்பை, காரங்காடு பங்கு இறைமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழா இணையத்திலும் இடம்பெற்றுள்ளது.

சிந்தாத்திரை அன்னையின் அருள் அடையாளங்கள் 

சிந்தாத்திரை அன்னையின் அருட்செயல்கள் பலவும் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவற்றில் இரண்டு  நிகழ்ச்சிகள் முக்கியமானவை

நிகழ்வு 1

தொண்டிக்கு அருகே உள்ள சம்பை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு  பெண் குழந்தை எதிர்பாராத வகையில் இரும்பு ஊக்கினை விழுங்கிவிட்டது. அக்குழந்தையின் பெற்றோர் இவ்வாறு நடந்ததை எண்ணி வருந்தினர். தூய சிந்தாத்திரை அன்னையிடம் குழந்தையை இந்த இக்கட்டில் இருந்துக் காப்பாற்ற வேண்டினர்.

மருத்துவர்களின் உதவியோடு அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் ஊக்கு வெளியில் எடுக்கப் பெற்றது. இது சிந்தாத்திரை  அன்னையின் இரக்கத்தினால் நடைபெற்றது என்று அக்குடும்பம் மகிழ்ந்தது.  அன்னையின் இரக்கத்திற்கு நன்றியாக அக்குழந்தையின் குடும்பமானது தங்கத்தினாலான ஊக்கினை  அன்னைக்கு காணிக்கையாக அளித்தனர் .

நிகழ்வு 2

ஒருமுறை தேவகோட்டையில் இருந்து வந்த ஒரு பெண் தொண்டி சிந்தாத்திரை அன்னையின் ஆலயத்தில் அமர்ந்து அன்னையிடம் வேண்டி  கொண்டிருந்தார். அப்பொழுது அவ்விடத்தில் ஒரு மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை வந்தது.

அப்பொழுது அன்னை அவரிடம் இந்த மனம் எப்பொழுதும் இவ்விடத்தில் வீச வேண்டும் என்றும் அன்னையின் கொடியின் முன் எப்பொழுதும் அணையா விளக்கு  ஒன்று எரிய வேண்டும் என்று சிந்தாத்திரை அன்னை கூறியதாக அப்பெண் உரைத்தார்.

அன்னையின் விருப்பத்திற்கு இணங்க அப்பெண் ஒரு பெரிய விளக்கையும் எண்ணெயையும் ஊற்றி அணையா விளக்கு ஒன்று எரிய ஆவன செய்தார். இன்றளவிலும் கூட ஆலயத்தினுள்ளே அணையாமல் விளக்கு எரிந்து கொண்டே தான் இருக்கின்றது. இவ்வாறாக தூய சிந்தாத்திரை அன்னை பல அருள் அடையாளங்களை மக்களுக்கு செய்துள்ளார்

ஆலயத்திற்கு சொந்தமான கடைகள்

தூய சிந்தாயாத்திரை அன்னை ஆலயத்திற்கு சொந்தமான இடங்களில் பத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன் ஆலயத்தில் சுற்றுச்சுவரோடு ஒட்டிய நிலையில் இக்கடைகள் இயங்கி வருகின்றன. கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இதன் மூலம் ஆலயத்திற்கு மாதா மாதம் பணம் கிடைக்கின்றது.  இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு ஆலயத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன

பங்கு ஒருங்கிணைப்புக் குழு

பங்கின்  ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒரு குழு இவ்வாலயத்தில் அமைக்கப்பெற்றுள்ளத, இது இப்பங்கின்  கிளைக் கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் ஆனதாகும்.

இக்குழுவின் பணிகள் பங்கினையும் இறை மக்களையும் ஒருங்கிணைத்தல்,  விழாக்களின் பொழுது தகுந்த ஏற்பாடுகளைச் செய்தல், ஆலயங்களை அலங்கரித்தல், பங்கின் நிர்வாக கூட்டங்களில் பங்கெடுத்தல், திருவிழா நாட்களில் ஆலயங்களில் சுத்தம் செய்தல், ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தல் போன்றனவாகும்.

தொகுப்புரை

உலகை மீட்க வந்த வழி இயேசு கிறிஸ்து ஆவார். இவரின் தாய் தூய அன்னை கன்னி  மரியாள் ஆவார். அன்னை மரியாள் அனைவருக்கும் நல் அன்னையாகவும் விளங்குகிறாள்.

]இயேசுவை நல்லொழுக்கம் உடையவராக,  ஞானத்தில் சிறந்தவராக,  இறைப் பற்று கொண்டவராக வளர்த்து  உலக மக்களின் நன்மைக்காக வாழ வைத்தார்.

இயேசுவை தன் உதிரத்தை வைத்து காத்தவர் அன்னைமரியா பல இடங்களில் பல அற்புதங்களையும் பல காட்சிகளில் நிகழ்த்தியவர் அன்னைமரியாள்.  இவரின் அற்புதங்களையும் அவரின் நெறிகளையும் பின்பற்றி அமைக்கப்பட்டதே  தொண்டியில் உள்ள தூய சிந்தாத்திரை அன்னை ஆலயம் ஆகும்.

இவ்வாலயம், கொடிமரம், ஸ்தலம், தூய ஸ்தலம், மகாபுனித ஸ்தலம் என்ற நிலையில் மூன்று அடுக்கு அமைப்புகளை உடையதாக உள்ளது.

தொண்டி தூய சிந்தாத்திரை  அன்னை ஆலயத்தில் நிர்வாகப் பணிகளில் குருக்கள், அருட்சகோதரிகள், வேதியர்,  கோவில்பிள்ளை போன்றோர் பங்கு பெறுகின்றனர்.  பங்கு ஒருங்கிணைப்பு குழு ஒன்றும் செயல்பட்டு மக்களையும் தேவாலயத்தையும் ஒருங்கிணைத்து வருகின்றது.

சிவகங்கை மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் இறைபணிகளுடன் சமுதாயப் பணிகளை நாளும் செய்துவருகின்றது.


ஜா. சுஜாபிரின்ஸி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொண்டி தூய சிந்தாத்திரை அன்னை ஆலய அமைப்பும், நிர்வாகமும்”

அதிகம் படித்தது