மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொற்றுநோய் பரவலைக் காட்டும் மருத்துவ புவி-வரைபடங்களின் வரலாறு

தேமொழி

May 23, 2020

 

இன்று உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளைநோய் (COVID-19 pandemic) குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்று சொன்னால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. ஆம், நோயின் அறிகுறிகள் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் வழியே மக்களிடையே நடக்கும் உரையாடல், இணையத் தேடல் சொற்கள் போன்றவற்றின் மூலம் ஆராய்ந்து அந்தத் தரவுகளை உலக வரைபடத்தில் குறித்து மனிதர்கள் கவனிக்கும் முன்னரே பாஸ்டன் மருத்துவமனையின் “ஹெல்த் மேப்” (HealthMap – https://www.healthmap.org/) கணினியின் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial intelligence systems) கவனித்து பாஸ்டன் ஆய்வாளர்களை எச்சரித்துவிட்டது என்று ஒரு அறிவியல் கட்டுரை கூறுகிறது.

siragu health map

சென்ற டிசம்பர் 30, 2019 சீனாவின் ஊகான் பகுதியில் “கொள்ளை நோய் துவக்கத்தின் முதல் அறிகுறிகள்” தெரிவதையும், அங்குள்ள மின்னஞ்சல் செய்திப்பகிர்வின் வழியே துல்லியமாகக் கணித்துவிட்டிருக்கிறது, பின்னரே மனிதர்களும் அதைக் கவனித்துள்ளனர். தைவான் பகுதி ஆய்வாளர்கள் நியூயார்க்கில் உள்ள நோய் பரவலியல் மருத்துவ ஆய்வாளரின் (medical epidemiologist) கவனத்திற்கு அதைக் கொண்டு வந்திருக்கின்றனர். இது 2003 இல்உலகைப் பாதித்த சார்ஸ் (severe acute respiratory syndrome – SARS) நோயின் அறிகுறிகள் போலுள்ளதாகக் குறிப்பிட்டு அச்செய்தியையும் சமூக வலைத்தள வழியாகவே பகிர்ந்துள்ளார்கள். இது ஆய்வில் ஆர்வமுள்ள ஆய்வாளர்களுக்கிடையே நடந்த ஒரு செய்திப் பரிமாற்றம். ஹெல்த் மேப் எச்சரித்த ஒரு மணி நேரத்தில் இந்த நியூயார்க் ஆய்வாளரும் கொள்ளைநோய் பரவல் செய்தியைத் தனது மின்னஞ்சல் குழுவில் இருக்கும் 8000க்கும் மேற்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் என்னவோ செயற்கை நுண்ணறிவு மனிதர்களை முந்திவிட்டது என்பதை இதில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்பொழுது மருத்துவச் சிகிச்சை முன்னேற்பாடுகள் குறித்துத் திட்டமிட நோய் பரவல் தரவுகளை ஆராய்ந்து அரசுக்கு உதவும் வகையில் ஆய்வுகள் தொடர்கிறது.

siragu Dr. John Snowஇன்றைய நாளில் கொரோனா வைரஸ் தகவலைப் புவியின் வரைபடத்தில் குறிக்காமல் எவரும் வழங்குவதே இல்லை. எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் பாதிப்பு, எவ்வளவு பேர் மரணம் என எல்லா தரவுகளும் உலக வரைபடத்தில் ஒரு பார்வையில் அறியும் வண்ணம் நமக்குத் தெரிகிறது. ஆனால் சரியாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது போன்ற நோய் பரவல் செய்தி குறித்த அறியும் திறனும் நம்மிடம் இருந்ததில்லை. அவ்வளவு ஏன், எதனால் நோய் தாக்குகிறது என்ற விவரமும் மக்களிடம் இல்லை. இதை எல்லாம் மாற்றியமைத்த துவக்கம், குறிப்பாக வரைபட உதவியுடன் அறிந்து திட்டமிடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சியின் தோற்றம் 19ஆம் நூற்றாண்டு லண்டன் மாநகர் காலரா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பொழுதுதான் துவங்கியது. வரைபடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியியல் தரவுகளுடன் (data visualization on a map) நோய் பரவலை ஆராய முற்பட்டவர் மருத்துவர் ஜான்ஸ்னோ (Dr. John Snow) என்பவர். இவர் தொழில்முறையில் மயக்க மருந்தியல் மருத்துவர் (Anaesthesiologist), தொழில்முறை மருத்துவராக இருப்பினும் அடிப்படையில் ஒரு தீவிர அறிவியல் ஆய்வாளராகவே ஆர்வமுற்றிருந்தார்.

மிசாதடையுத்தரவு இருந்த 1970களில் ‘இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றால் இந்தியா’ (India is Indira, and Indira is India) என்று இந்தியா அறியப்பட்டது. இது போலவே ‘இந்தியா என்றால் காலரா, காலரா என்றால் இந்தியா’ என்று இந்தியா அறியப்பட்டது 1800களில். இதன் துவக்கம் 1817ஆம் ஆண்டு கங்கை ஆற்றில் நடத்தப்பட்ட கும்பமேளா விழா. இந்தியாவின் வெப்பமண்டலப் பகுதி (Tropical zone) இயற்கையிலேயே நோய்கள் பரவலுக்கான நுண்ணுயிர்கள் வளரும் சூழலைக் கொண்டது. நம் நாட்டில் 19 ஆம் நூற்றாண்டில் பரவலாக இருந்த பொதுவெளிக் கழிப்பிட முறையும், அத்துடன் பலகோடி மக்கள் குழுமும் விழாவும் ஒரு சுகாதாரமற்ற சூழ்நிலையை உருவாக்கியது. ஆனால் காலரா தொற்றுநோய் ஏன் உருவாகிறது, எதனால் பரவுகிறது என்ற காரணத்தை மக்கள் அறிந்திராத காலம் அது. எனவே கொள்ளை நோய் தாக்கினால் அது கடவுளின் தண்டனை, காத்து கருப்பு தாக்கம் என்ற அளவில் மட்டுமே மக்கள் காரணம் கற்பித்தனர்.

கும்பமேளாவிற்குப் பிறகு, கிபி 1817 முதல் 1824 வரை, பல்லாயிரக்கணக்கான மக்கள் காலரா தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். பலர் ஆயிரக்கணக்கில் இறந்தனர். ஆனால் யாரும் இதற்கெல்லாம் கணக்கு வைத்திருக்கவில்லை. பிறப்பு இறப்பு தரவுகள் பதிவு செய்யப்படாத காலம் அது. அவ்வாறு பிறப்பு இறப்பு பதிவு செய்யும், கணக்கெடுக்கும் ஒரு முறை இங்கிலாந்திலேயே பிற்பாடு 1837ல் தான் பிரிட்டிஷ் பாராளுமன்ற ஆணையின்படி சொத்து பரிமாற்றங்களைப் பதிவு செய்யும் நோக்கில் தோன்றியது. அப்பொழுது சாதாரண பொதுமக்களில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவரது இறந்த நாள், நேரம் காலம், இருப்பிடம், இறப்பின் காரணம் எல்லாம் அரசால் பதிவுக்குள்ளானது. ஆகவே அக்கால இந்தியா மண்ணின் இறப்பு எண்ணிக்கை கணக்கு எவருக்கும் தெரியாது. நூற்றுக்கணக்கில் மக்கள் இறப்பது மட்டுமே மக்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஜெஸ்ஸூர், வங்க தேசத்தில் நோய் துவங்கியதாகக் கூறப்படுகிறது. கல்கத்தா வணிக துறைமுகம் என்பதால் காலரா இந்தியாவிலிருந்து கடல் வழியாக உலகின் பல இடங்களுக்கும் பரவியது. அடிமை இந்திய மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்க்காவிட்டாலும் காலரா கொடுத்த அச்சுறுத்தலில் ஆங்கிலேயர் பலர் கப்பலேறி நாடு திரும்பினார்கள். தங்களுடன் காலராவையும் எடுத்துக் கொண்டேதான் சென்றார்கள்.

அப்பொழுது இலண்டன் மாநகர் உலகின் முதன்மையான மிகப்பெரிய நகர், தொழிற்புரட்சிக்குப் பின்னர் நகரம் விரிவடைந்து கொண்டே சென்று மக்கள் தொகை பெருகி வழிந்தது. 25 இலட்சம் மக்கள் இலண்டனில் 1850களில் குடியிருந்தனர். அடிமட்ட பணிகளிலிருந்தவர் தக்க வாழுமிடங்கள் இன்றி நெருக்கியடித்துக் கொண்டு அடைசலான குடியிருப்புகளில் வாழ்ந்தனர். அவர்களுக்குச் சரியான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவையும் இருக்கவில்லை. போதாக்குறைக்கு தங்களுடன் கால்நடைகளையும் வளர்த்து வந்தனர். அப்பகுதியே இந்த சூழலினால் துர்நாற்றம் வீசிய வண்ணம் இருந்தது. கப்பலில் வந்திறங்கிய காலரா நோய் பரவ இச்சூழ்நிலை ஏதுவாக இருந்தது. இதன் காரணமாக இலண்டன் மக்கள் பலமுறை பாதிப்பிற்குள்ளானார்கள்.

1854 இல்சோஹோ (Soho) பகுதியில் வாழ்ந்த ஒரு சிறுமியைக் காலரா தாக்கியது. இது இலண்டனைத் தாக்கிய மூன்றாவது காலரா தொற்று அலை. இதற்கு முன்னர் பல ஆயிரக்கணக்கானவர்கள் 1831 மற்றும் 1849 ஆண்டுகளின் முதல் இரண்டு காலரா தொற்றுநோய் பரவல் அலைகளின் தாக்குதல்களில் உயிரிழந்தது, மக்கள் நினைவிலிருந்து அந்த வடு இன்னமும் நீங்கியிராத நேரம். மூன்றாவது தொற்றுநோய் பரவல் துவங்கிய ஒரு வாரத்திற்குள் அப்பகுதியில் பத்து நாட்களுக்குள் 500க்கும் மேற்பட்டோர் நோயால்மாண்டனர். பத்து விழுக்காடு மக்கள் உயிரிழந்த பின்னர் பலரையும் மரண அச்சம் தொற்றிக் கொண்டது. ஆனால் யாருக்கும் தொற்றுநோயின் காரணம் தெரியவில்லை. தூய்மையற்ற நச்சுக் காற்று உயிர்களைக் காவு வாங்குவதாக நம்பினார்கள். இவ்வாறாகக் கொள்ளை நோய் பரவலுக்கு நச்சுக்காற்று காரணம் என்று கொண்டிருந்த நம்பிக்கையை அக்காலத்தில் ‘மியாஸ்மா’ என்று ‘மியாஸ்மேட்டிக்’ கோட்பாட்டின் (Miasma theory) மூலம் விளக்கினர். நம் ஊரிலும் கொள்ளை நோய் தாக்குதல் காத்து கருப்பு என்று நம்பப்பட்டது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கத்து.

 siragu cholera 1850s

இலண்டன் மருத்துவர் ஜான்ஸ்னோமியாஸ் மேட்டிக் கோட்பாட்டை ஏற்காதவர். அவர் காலரா நோய் நீர் வழியாகப் பரவுவதாகக் கணித்தார். நோயாளிகளின் வயிற்றுவலி காரணமாக இதன் துவக்கம் காற்று அல்ல, நீர் என்று கருதினார். மேலும் அறிய விரும்பும் ஆர்வத்தின் காரணமாக பிணக்கிடங்கில் வந்து சேருவோர் வாழ்ந்த இடங்களைப் பற்றி அறியும் ஆய்வைத்துவக்கினார். சோஹோ பகுதியில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த, அப்பகுதி மக்களை நன்கு அறிந்த, அவர்களின் நம்பிக்கைக்குரிய சமயப் போதகர் ‘ஹென்றி ஒயிட்ஹெட்’ (Henry Whitehead) என்பவர் உதவியுடன் மக்களை அணுகி தரவுகளைச் சேகரித்தார். சார்லஸ் செஃபின்ஸ் (Charles Cheffins) என்ற ஓவியர் வரைபடம் உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஜான்ஸ்னோ கிடைக்கும் தரவுகளைத் தொகுத்து இப்பகுதி மக்களில் இத்தனை விழுக்காடு மரணம் போன்ற வழக்கமான வழங்கும் ஒரு புள்ளியியல் அறிக்கை கொடுக்கும் வழியிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய முறையினைக் கையாண்டார். அப்பகுதியின் நிலவரைபடத்தில் ஒவ்வொரு காலரா மரணத்தையும் வீட்டின் முகவரிக்கு அருகில் கோடுகளாகக் குறித்தார். அவர்கள் எங்குத் தண்ணீர் பெறுகிறார்கள் என்றும் குறித்துக்கொண்டார். அவரது நிலவரைபடம் ஒரு புதிய தகவலைக் கொடுத்தது. நகரில் பிராட்ஸ்ட்ரீட் தெருவில் மக்கள் நீர் எடுக்கும் அடிகுழாயின் அருகாமையில் இறந்தவர் எண்ணிக்கை அதிகம் இருந்தது. அதே பகுதியில் வாழ்ந்தாலும் வேறு ஒரு கிணற்றின்குழாயில் நீர் எடுத்தவர் அல்லது அதே பகுதியில் நீர் குடிக்காமல் பீர் மட்டும் குடித்தோர், அல்லது பீர் தயாரிக்கக் கொதிக்க வைக்கப்பட்ட நீரை அருந்தியோர் பாதிக்கப்படவில்லை. பிராட்ஸ்ட்ரீட் அடிகுழாயின் சுற்று வட்டாரத்திலிருந்து தொலைவு அதிகரிக்க அதிகரிக்க இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது என்பது மற்றொரு தரவு. அவர்கள் குடிநீர் பயன்பாடு வேறு என்பதும், பிராட்ஸ்ட்ரீட் பகுதியில் நீர் குடிக்க நேரிட்டதால் (அதாவது அந்த வழியாகப் பள்ளி செல்லும் குழந்தைகள் வழியில் நீர் குடித்துவிட்டுச் செல்வது போன்ற காரணம்) இறந்தனர் என்பது புரிந்தது.

இதன் மூலம் நீரினால் காலரா பரவுகிறது என்பதை ஜான்ஸ்னோவால் விளக்க முடிந்தது, ஆனால் ஏன் எவ்வாறு என அவரால் விளக்கம் தர இயலவில்லை. இதனிடையில் மக்கள் பலர் அந்த இடத்தை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறத் துவங்கி விட்டிருந்தனர். நகராட்சியிடம் அவர் கருத்துகளைச் சான்றுடன் விளக்க அவரால் இயலவில்லை. ஆகவே, பிராட்ஸ்ட்ரீட் அடிகுழாயின் கைப்பிடியை நீக்கி மக்கள் நீர் எடுப்பதைத் தடை செய்தால் காலரா குறையும் என்று கூறினார். நகராட்சியும் இறுதியில் அவரது வரைபட தகவலின் அடிப்படையில் கைப்பிடியை நீக்கியது. இறப்பின் எண்ணிக்கை மளமளவெனச் சரிந்தது. நகராட்சி ஜான்ஸ்னோவைப் பாராட்டியது. ஆனால் ஜான்ஸ்னோ ஒரு உண்மையான ஆய்வாளராக அதற்கு முழுப்பொறுப்பும் ஏற்க மறுத்துவிட்டார். மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியதும் நோய் குறைய ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டினார். அவரது ஆய்வு முடிவை ‘On the Mode of Communication of Cholera’ என்ற ஒரு நூலாக வெளியிட்டார். தனது கைப்பொருளை, 200 பிரிட்டிஷ் பவுண்டைச் செலவழித்து அவர் அச்சிட்டு வெளியிட்ட இந்த நூல் வெறும் 56 பிரதிகளேவிற்றது என்பது காலராவுக்குத் தொடர்பற்ற மற்றொரு கதை. இன்றும் பிராட்ஸ்ட்ரீட் அடிகுழாய் 1846 – 1860 கால இலண்டனின் காலரா வரலாற்றின் சான்றாக அங்குக் காட்சிக்கு இருக்கிறது.

siragu cholera 1850s1தொற்றுநோய் புள்ளி விவரங்களை ஜான்ஸ்னோவுக்கும் முன்னரே வரைபடங்களில் குறித்தவர் உள்ளனர். நியூயார்க் எல்லோ ஃபீவர் தொற்றுநோய் பரவலை ‘வேலன்டைன்சீமேன்’ (Valentine Seaman -1795) என்பவரும், பிரான்ஸ் நாட்டின் ஆய்வாளர் ‘சார்லஸ்பிக்கெட்’ (Charles Piquet -1832) என்பவர் காலரா தொற்று நோய் பரவலை நில வரைப்படத்தில் குறித்திருந்தார்கள். இருந்தும் அவை வெறும் ஹீட்மேப் என்ற அடிப்படையில் நிலவரைப்படத்தில் தரவுகளைத் தரும் முறை மட்டுமே. அதாவது இன்றும் தேர்தல் வரைபடங்கள் காட்டுவது போல, எந்தெந்த இடத்தில் எந்த கட்சிகள் வெற்றிபெற்றது என்று காட்டுவது போன்ற ஒரு தரவு அறிவிக்கும் வகையில் அடங்குவது. இந்தப்படங்களில் வெற்றி தோல்விக்கான காரணம் இருப்பதில்லை.

siragu first gis

siragu Valentine Seaman; yellow feverஜான்ஸ்னோ மற்றவர்களிலிருந்து மாறுபட்டிருந்தார். ஜான்ஸ்னோ ஆய்வுக் கோணத்தில் நோயின் காரணம் ஏன் என அறிந்திடும் விதம் வரைபடத்தைப் பயன்படுத்தி இருந்தார். அது நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பதன் அடிப்படையில் அமைந்திருந்தது என்பது அவரது முறையின் தனிச்சிறப்பு. துப்பறியும் முறையில் தரவுகளைப் பயன்படுத்தி பிராட்ஸ்ட்ரீட் அடிகுழாய் காரணத்தை விளக்கி விட்டிருந்தார்.

siragu Dr. John Snow2

siragu john snow gisஇருப்பினும், 1854ல் காலரா நோயால் இலண்டன் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதன் அறிவியல் அடிப்படை பின்னர்தான் தெளிவானது. மாசடைந்த நீர் காரணம் என்ற அறிவியல் அடிப்படை உண்மை உறுதிப்படுத்தப்பட்டது. கழிவுநீர் வடிகால் வழியாக மக்களின் மலம் நிறைந்த சாக்கடைக் கழிவுகள் தேம்ஸ் நதியில் வெளியேற்றப்பட்டது. சேதமடைந்த சாக்கடைக் குழாய் வழியே காலரா நோய் உருவாக்கும் ‘விப்ரியோகாலரே’ (Vibrio cholerae) என்னும் பாக்டீரியா நிலத்தடியில் கசிந்த நீர் வழியாக பிராட்ஸ்ட்ரீட் குடிநீர் கிணற்றில் இறங்கிவிட்டது. அத்துடன் மலக்கழிவுகள் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் (septic tank or cesspit) எனப்படும் தரையடி சேமிப்புக் கிடங்கிற்கு வெகு அருகாமையில், சுமார் 3 அடிக்கும் குறைவான தொலைவில் அடிகுழாய் போடப்பட்டிருந்த குடிநீர் கிணறும் அமைந்திருந்தது என்பதால் அந்த நீரைப் பயன்படுத்தியவர்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். இதன் காரணம் விப்ரியோ காலரே பாக்டீரியா என்பதைப் பின்னர் ராபர்ட்கோச் (Robert Koch) என்ற ஜெர்மானிய மைக்ரோ பயாலஜி ஆய்வாளர் கண்டறிந்தார். பாக்டீரியாலாஜி என்ற துறை இவராலும் லூயிபாஸ்டர் ஆய்வுகளாலும் உருவானது. நுண்ணுயிர்களுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ‘நுண்ணுயிர் கோட்பாடு’ (ஜெர்ம்தியரி – germ theory) ராபர்ட்கோச் அவர்களால் முன்வைக்கப்பட்டது. ராபர்ட்கோச் 1884இல் இந்தியாவில் பாம்பே நகரில் தங்கி ஆய்வு செய்த பொழுது காலரா நோய்க்குக் காரணம் விப்ரியோகாலரே என்னும் பாக்டீரியா என்று கண்டறிந்தார். நீர் மூலம் காலரா ஏன் பரவுகிறது என்று ஜான்ஸ்னோவால் விளக்க முடியாமல் போன ஒரு அறிவியல் புதிருக்கு ராபர்ட்கோச் தனது ஆய்வுகள் மூலம் பாக்டீரியா என்று விடை கண்டுபிடித்தார்.

மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்புமுனையான இந்த நிகழ்வால், நவீன நோய்ப் பரவலியல்துறையின் (நோய்ப் பரவல் இயல்/எப்பிடீமியாலஜி -Epidemiology) தோற்றுனராக, ஒரு முன்னோடியாக ஜான்ஸ்னோ ( father of epidemiology) அறியப்படுகிறார். காலரா நோய் நீர் மூலம் பரவுகிறது என்பதை இவரது ஆய்வுக்குப் பின்னரே மருத்துவ உலகம் அறிந்தது. நீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பது, சுற்றுப்புற மற்றும் தன் தூய்மை பற்றிய விழிப்புணர்வு உருவாக்கியதும், தொடர்ந்து பெரிய நகரங்கள் காலரா அச்சுறுத்தல் இன்றி இயங்கவும் வளரவும் ஜான்ஸ்னோவே காரணம். உலகம் முழுவதும் இந்த அடிப்படை சுகாதார முன்னெடுப்புகள் துவங்கியது. இது சென்னை வரை அக்காலத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பம்பாய் மற்றும் கல்கத்தா நகரக் கழிவுநீர் வடிகால் வசதிகள் நிறுவப்பட்டன. ஆனால் உலகிலேயே இரண்டாவது மாநகராட்சி என்று அறியப்பட்டமெட்ராஸ் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி கட்டமைக்கப்படவில்லை. இலண்டன் காலரா காலத்தில் அங்கு மருத்துவ உதவியில் ஈடுபட்டிருந்தவரான கைவிளக்கேந்திய காரிகை என அறியப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கவனத்திற்குச் சென்னையின் நிலை சென்றது. சென்னையின் நிலை அறிந்து, 1864 இல் இருந்து பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடர்ந்து ஆங்கிலேய அரசுடன் போராடினார். சென்னை கழிவுநீர் வடிகால் கட்டமைப்பிற்காக, அதில் அக்கறை காட்டாத இங்கிலாந்தின் பிரதமர் சாலிஸ்பரி (Prime Minister Lord Salisbury) அவர்களிடம் தனது கோரிக்கையை வைத்துக் கொண்டே இருந்தார். அவரது தோழரானரிப்பன் பிரபு (Viceroy Lord Ripon) வைஸ்ராயாக பொறுப்பேற்ற காலத்தில் சென்னையின் கழிவுநீர் வடிகால் திட்டம் வேகம் பிடித்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல்லின் ஒரு கால் நூற்றாண்டு கால இடைவிடா முயற்சிக்குப் பிறகு 1881களில் திட்டம் நிறைவேறியது. சென்னை மக்கள் நலனில் அக்கறை கொண்டு, இந்தியாவிற்கே வந்திராத பிளாரன்ஸ் நைட்டிங்கேல்லின் தொடர் முயற்சி சென்னை கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்பட உதவியது என்பது ஒரு வியப்புக்குரிய வரலாற்று உண்மை.

நோய் பரவலில் துறை என்ற மருத்துவக்கல்விப் புலம் மட்டுமல்ல, விக்டோரியா கால இலண்டனில் காலரா பரவலை மருத்துவர் ஜான்ஸ்னோ நோய்த்தாக்க-நில வரைபட தரவுகளாகப் பதிவு செய்த முறையும் வரலாற்றில் ஒரு திருப்புமுனையே. இன்று தொழில் நுட்ப உதவியுடன் நவீன முறையில் வளர்ந்துவிட்ட ஜி.ஐ.எஸ் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் புவியிடக் குறிப்புதரவுகள் ஆய்வுகள் (ஜியாகரஃபிக் இன் ஃபார்மேஷன்சிஸ்டெம் /Geographic or geospatial Information System – GIS) முறையின் தோற்றத்திற்கும் ஜான்ஸ்னோ உருவாக்கிய இலண்டன் நகர் நிலவரைப்பட ஆய்வு முறைதான் முன்னோடியாகக் காட்டப்படுகிறது. அந்த வகையில் எப்பிடீமியாலஜி படிக்கும் மாணவரோ அல்லது ஜியாகரஃபிக் இன் ஃபார்மேஷன்சிஸ்டெம் படிக்கும் மாணவரோ அடிப்படையில் ஜான்ஸ்னோ ஆய்வையும் அணுகுமுறையையும் படிக்காமல் அவர்கள் துறைக்கல்வியைத் துவக்க இயலாது. (நகராட்சி மேலாண்மையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்ற கோணத்தில் ஜிஐஎஸ் பயன்பாட்டை கற்றபொழுதுதான் நானும் பாட நூல்வழியாகவே இலண்டன் காலரா நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வு என்ற திருப்புமுனையை அறிந்து கொண்டேன்).

 siragu Map of a later cholera outbreak in London in 1866

சிறுகுடலுக்குள் சென்று கூடலின் சுவரில் தங்கும் நுண்ணுயிரான பாக்டீரியா காரணமாக உடலின் நீர் முழுவதும் குடலுக்குள் உறிஞ்சப்பட்டு விடும். காலராவின் கடுமையான தாக்குதலால் ஓரிரு நாட்களுக்குள் உடலின் நீர் அனைத்தும் நோயின் அறிகுறிகளான கக்கல், கழிச்சல் (வாந்தி, பேதி) ஆகியவற்றால் உடலைவிட்டு வெளியேறிவிடுவதால் நீர்ச்சத்து உடலில் இல்லாது, சிறுநீரகங்களும் செயலிழந்து இறுதியில் இறப்பது காலரா நோய் தரும் முடிவு. எதிரி மீது ஆத்திரம் கொண்டு வயிறெரிந்து அவர் கொள்ளை நோயான காலராவினால் ஒழிந்து போக வேண்டும் என்று திட்டுபவர் “நீ பேதியில போக, நீ கொள்ளையில போக” என்றுதான் அருள்வாக்கு தருவது வழக்கம். இன்று இந்த தொற்றுநோய், கொள்ளை நோயாக வளர விடப்படுவதில்லை. வயிற்றுப்போக்கு விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. உடலில் எலக்ட்ரோலைட் நிறைந்த சலைன் (0.9% Normal Saline/NS, 0.9NaCl, or NSS) செலுத்தப்படுகிறது. நீரைக் கொதிக்கவைத்துக் குளிரவைத்த குடிநீராகமாற்றிப் பயன்படுத்தும் முறை பொதுச் சுகாதாரக்கல்வியாக வழங்கப்படுகிறது. இன்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைக்குடிப்பதும் ஒருவகையில் நீரினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. நன்றாக உயர்ந்த வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவும், உணவு வழியே பரவும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. நகராட்சிகளின் குடிநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் வெளியேறத்திட்டமிடப்பட்ட நகர கழிவுநீர் வடிகால் மாறுதல்களும், நீர்வழி உணவு வழி நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தடுப்பூசிகளும், மருந்துகளும் என்று மருத்துவத்துறையின் வளர்ச்சியும், அடிப்படை சுகாதாரம் என்ற விழிப்புணர்வும் மக்களைச் சென்றடைகிறது. 1960களுக்குப் பிறகு காலரா உலக அளவில் கொள்ளை நோயாக மாறவில்லை. இக்காலத்தில் ஒரு சில வளரும் நாடுகள் மட்டும் அவ்வப்பொழுது காலரா பாதிப்பிற்கு உட்படுவதாக அறியப்படுகிறது.

தொற்றுநோய், கொள்ளைநோய் தோன்றிப் பரவும் காரணங்கள், நில வரைபடத்தில் புள்ளியியல் தரவுகள் மூலம் நோய் பரவல் குறித்து அறிதல், தடுப்பூசிகள், மருந்துகள், விழிப்புணர்வுக் கல்வி என்று மனித இனத்தின் வாழ்வைப் பாதுகாப்பதில் கடந்த இரு நூற்றாண்டுகளில் அறிவியல் மருத்துவ வளர்ச்சிகள், எவ்வளவோ முன்னேறிவிட்டதால்; தொற்று நோய் பரவுகையில் உயிரிழப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. கடவுள் தண்டனை என்று நம்பிய மனித இனமும் இந்த கொரோனா காலத்தில் கோயில் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் புறக்கணித்து வீட்டில் ஒடுங்கியது மனித இன வளர்ச்சியில் மற்றுமொரு திருப்பு முனையாகவே அமைந்துவிட்டது. அறிவியல் வெற்றி பெற்றது என்பதற்கு இதுவே சான்று.

___________________________________________________________________________________________

REFERENCES:
Artificial intelligence systems aim to sniff out signs of COVID-19 outbreaks, Adrian Cho, May 12, 2020, Science Magazine.doi:10.1126/science.abc7698

https://www.sciencemag.org/news/2020/05/artificial-intelligence-systems-aim-sniff-out-signs-covid-19-outbreaks

Use of GIS Mapping as a Public Health Tool—From Cholera to Cancer, George J. Musa, et al., Health Serv Insights. 2013; 6: 111–116. Published online 2013 Nov 19. doi: 10.4137/HSI.S10471
PMCID: PMC4089751; https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4089751/

History of GIS, Caitlin Dempsey, May 14, 2012

https://www.gislounge.com/history-of-gis/

On the Mode of Communication of Cholera, 1855

https://www.bl.uk/learning/images/makeanimpact/publichealth/large12735.html

How the ‘Father of Epidemiology’ Made the Connection Between Disease and Geography, Deirdre Mask, April 14, 2020

https://time.com/5820194/addresses-epidemiology/

1854 Broad Street cholera outbreak

https://en.wikipedia.org/wiki/1854_Broad_Street_cholera_outbreak

Steven Johnson, The Ghost Map: The Story of London’s Most Terrifying Epidemic-and How It Changed Science, Cities, and the Modern World, 2007

https://www.amazon.com/Ghost-Map-Londons-Terrifying-Epidemic/dp/1594482691

Author Steven Johnson takes us on a 10-minute tour of The Ghost Map, his book about a cholera outbreak in 1854 London and the impact it had on science, cities and modern society.

https://www.ted.com/talks/steven_johnson_how_the_ghost_map_helped_end_a_killer_disease/transcript

How Florence Nightingale got Madras its drains, Sriram V., JANUARY 08, 2013

https://www.thehindu.com/news/cities/chennai/how-florence-nightingale-got-madras-its-drains/article4284011.ece


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொற்றுநோய் பரவலைக் காட்டும் மருத்துவ புவி-வரைபடங்களின் வரலாறு”

அதிகம் படித்தது