மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நசுக்கப்படும் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள்

சுசிலா

Feb 10, 2018

தமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை திட்டமிட்டே அழிக்கும் செயலில், மத்திய அரசாங்கம்  ஈடுபடுகிறது என்பதில் எல்லோருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  அதிலும் கடந்த ஓராண்டாக, தமிழகத்தின் ஆட்சி, மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மக்கள் அனைவருக்கும் இந்த அச்சவுணர்வு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டிற்கு எவ்வித வளர்ச்சித்திட்டங்களும் போடப்படவில்லை, அமல்படுத்தபபடவில்லை. அது மட்டுமல்லாமல், அனைத்து ஆதாரங்களையும் சுரண்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

Siragu-farmers

முதலில் விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போம். விவசாயத்திற்கான முக்கிய ஆதாரமே நீர் தான். அதனை தேவையான சமயத்தில் வழங்குவதில் முனைப்பு காட்டவில்லை இந்த மத்திய பா.ச.க அரசும், மாநில அ.தி.மு.க  அரசும். மழை பொய்த்துவிட்டது. நமக்கு முறையாக, கர்நாடகத்திலிருந்து  வழங்கப்படவேண்டிய தண்ணீர் வழங்கப்படவில்லை. கர்நாடகத்திலிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய நீரை பெற்றுத் தர மத்திய, மாநில  அரசுகள் தவறி விட்டன. காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு, அதனை மறுத்துவிட்டது. தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயம் பொய்த்துவிட்டதால், வறுமையில் வாடும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையினை இந்த இரு அரசுகளும் ஏற்படுத்தி விட்டன. கடன் தள்ளுபடி கேட்டு இன்னமும், விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் உணவிடும் விவசாயிகள், இன்று உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மீத்தேன் எடுத்தல், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ என தமிழக விவசாய நிலங்களை அபகரிப்பதிலும்,  கூடங்குளம் அணு உலை என சுற்றுச்சூழலை அழிப்பதிலுமே குறியாக இருக்கிறது மத்திய பா.ச.க அரசு. இவ்வளவுக்கும், மாநில அரசு  செவிகளுக்கு இது எட்டாமலேயே இருக்கிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

Siragu tamilaga makkal1

அடுத்து பார்த்தோமானால், மீனவர்கள் பிரச்சினை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி, மீன்பிடி தொழிலுக்கு தொல்லை செய்து வரும் இலங்கை கடற்படை, நமது மீனவர்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி  வருகிறது. கடல் எல்லையைத் தாண்டுவதாக, நமது மீனவர்களைத் தாக்குவது, சுடுவது, கைது செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை கிழித்தெறிவது என பல அட்டகாசங்களை செய்து வருகிறது. இதற்கு நம் தமிழக அரசு கடிதம் எழுதுவது ஒன்றே தீர்வாக ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறது. தட்டிக் கேட்கவேண்டிய மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. இதில் மிகவும் கொடுமை என்னவென்றால், இந்திய கடற்படையே நம் மீனவர்களை சுடுகிறது என்றால், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதில் உச்சக்கட்ட கொடுமையாக, இலங்கை அரசு எல்லைத் தாண்டி வரும் மீனவர்களுக்கு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தை, அவர்களின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

அடுத்து, கல்வியில் கை  வைக்கிறது மத்திய அரசாங்கம். இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளை, கிட்டத்தட்ட அணைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டது தமிழ்நாடு தான். ஆனால், நீட் தேர்வின் மூலம் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நம் மாநில பாடத்திட்டத்தின் மூலம் படிக்கும், ஏழை, கிராமப்புற மாணவர்கள், மத்திய கல்வித் திட்டத்தின் மூலம், அவர்கள் படிக்காத, தெரியாத பாடத்திட்டத்திலிருந்து  கேட்கப்படும் கேள்விகளுக்கு, விடை தெரியாத காரணத்தால், மருத்துவப்படிப்பை இழக்க வேண்டிய நிலை  உருவாகிறது. தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டமுன்வரைவை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தால், அது எங்கே இருக்கிறது  என்றே தெரியவில்லை என்ற பொறுப்பற்ற பதிலை சொல்கிறது மத்திய பா.ச.க அரசு. அதற்கான காரணத்தைக் கேட்கவேண்டிய மாநில அரசோ, பயந்து  ஒதுங்குகிறது.

Siragu tamilaga makkal2

மேலும், வேலை வாய்ப்புகளில், தமிழக அரசு பணிகளில், தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையை சிறிது சிறிதாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. வடமாநிலத்தவர்களை பல தில்லுமுல்லு வேலைகள் செய்தாவது, நம் அரசுப்பணியில்  அமர வைத்துவிட வேண்டும் என்று திரைமறைவில் பல காய்களை நகர்த்தி வருகிறது. இந்தித்திணிப்பின் மூலம் தமிழ்மொழியினை அழிக்கும் வேலையிலும் இறங்கியுள்ளது. இந்தி கட்டாயமாகப் படிக்க வேண்டிய நவோதயா பள்ளிகள் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழையும், தமிழர்களையும் இரண்டாம்தரமாகக் கொண்டு வந்து  விட வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.!

கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து விடுவதன் மூலம் சிறு, குறு தொழில் முனைவோர்களை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் கூட தமிழகத்திற்கென எந்த ஒரு வளர்ச்சித் திட்டங்களும் போடப்படவில்லை. உண்மையாக சொல்லவேண்டுமென்றால், மத்திய அரசிற்கு அதிக வருவாய்  கொடுக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், நமக்கான நிதியினை ஒதுக்க, மத்திய அரசிற்கு  மனம்வருவதில்லை. ஒக்கி புயல், வார்தா புயல், சென்னை வெள்ளம் என எதற்குமே இன்னமும் நிதி கொடுக்கப்படவில்லை. நம் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதியை கொடுக்க மறுக்கிறது. அந்த ஆராய்ச்சியையே மூடி மறைக்க திட்டமிடுகிறது.

இப்படி, இயற்கை வளங்களை அழிப்பது, விவசாயம், மீன்பிடித்தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, இந்தித்திணிப்பின் மூலம் தமிழை புறந்தள்ளுவது, வடமாநில மக்களை இங்கு வேலை மூலமோ, கல்வி மூலமோ குடியேற செய்வது என தமிழர்களின் முன்னேற்ற பாதையிலுள்ள அனைத்து வழிகளையும் அடைக்க பார்க்கிறது மத்திய மதவாத பா.ச.க அரசு.!

நம் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது.!
இந்த அரசியல் வஞ்சகத்தைப் புரிந்து, செயல்பட வேண்டிய தருணம் இது.!
கட்சி வேறுபாடுகளை எல்லாம் கடந்து, தமிழால் இணைவோம்… தமிழராய் ஒன்றுபடுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நசுக்கப்படும் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள்”

அதிகம் படித்தது