மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நண்பகல் தொடக்க வேளை சிற்றிடை உணவு

முனைவர். ந. அரவிந்த்

Jan 19, 2023

siragu nungu

நண்பகல் என்பது முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உள்ள வேளையாகும். நண்பகல் தொடக்க வேளையான முற்பகல் 11 மணிக்கு நாம் ஏதாவது சிற்றிடை உணவு உண்டு அதனுடன் தேநீர் குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளோம். அதிலும் முக்கியமாக அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்வோர் தவறாமல் இதனை செய்கின்றனர்.

முதலில், இது சரியா? அல்லது தவறா? என்று விவாதிப்போம். காலை 8 மணி அல்லது 9 மணிக்கு வேலையை தொடங்கி தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ஒருவருக்கு அதனால் உண்டாகும் சோர்வை நீக்க சற்று ஓய்வு தேவை. இந்த வேளையில் உடன் வேலை செய்யும் நண்பர்களுடன் சில நிமிடங்கள் செலவு செய்வதால் புத்துணர்ச்சி கிடைக்கும். மீண்டும் நல்ல முறையில் வேலை செய்ய இந்த இடைவெளி உதவும். எனவே வேலை செய்யும் இடத்தை விட்டு நண்பர்களுடன் பேச சற்று இடைவெளி அனைவருக்கும் அவசியம் தேவை.

இந்த இடைவெளியில் பெரும்பாலானோர் எண்ணெய் பலகாரங்களான பஜ்ஜி, வடை, போண்டா மற்றும் தேநீர் அல்லது காஃபி போன்ற சிற்றுண்டிகளை உண்பது வழக்கம். இந்த சமயத்தில் கூடுமானவரை எண்ணெய் பலகாரங்களை தவிர்த்திடுங்கள். ஏனெனில், சிறிய மற்றும் தெருவோர உணவகங்களில் சமையல் எண்ணெயை திரும்ப திரும்ப சூடு செய்து பயன்படுத்துவார்கள். இதனால் அது நச்சுத்தன்மையை வெளிப்படுத்தும். இதற்கு சமையல் எண்ணெயின் விலையே காரணம். இந்த வகை எண்ணெய்களில் தயார் செய்யப்படும் பலகாரங்களை உண்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பொதுவாக பயன்படுத்துகிறோம். அவற்றை உண்ட பின்னர் கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை பயன்படுத்துகிறோம். செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. நாம் செய்தித்தாள்களை பயன்படுத்துவதால் இந்த சமயங்களில் நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது. இந்த காரீயம் உலர்வாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், தண்ணீர் பட்டால், ஆபத்தினை விளைவிக்கும். எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துவதால் காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். (நன்றி: லங்காசிறி நியூஸ்)

நாம் காலையில் உண்ட உணவு செரிமானமாகி பசியெடுத்தால் 11 மணிக்குப் பிறகு ஏதாவது உண்பதில் தவறில்லை. பசி எடுக்காத நேரத்தில் எதையுமே உண்ண வேண்டாம். காலை 7 மணிக்கு காலை உணவு சாப்பிட்டால் 11 மணிக்கு பசி எடுப்பது இயற்கை. காலை 9 மணிக்கு உணவு உண்ட பின்னர், 11 மணிக்கு சாதாரணமாக பசி எடுக்காது. பசியெடுக்காமல் உண்ணாதீர்கள்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தேநீரைத் தான் அதிகளவில் விரும்பி அருந்துகின்றனர். காஃபி அல்லது தேநீர் போன்றவற்றை அதிகளவு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. தேநீரை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. ஒரு நாளுக்கு இரண்டு முறைக்குமேல் அதிகமாக எடுத்துக் கொண்டால் பசியின்மை தூக்கமின்மை, மலச்சிக்கல் மற்றும் பெண்களுக்கு கரு சிதைவு போன்ற விளைவுகளை உண்டுபண்ணும். காஃபி அல்லது தேநீர் அருந்துவதற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை அவற்றுடன் கலப்பதற்கு கறந்தவுடன் கிடைக்கும் பசு மாட்டு பாலினை பயன்படுத்துங்கள். நெகிழிகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் வேண்டாம்.

தேநீர் குடிக்க வேண்டுமானால் தரமான தேயிலையை வாங்கி பயன்படுத்துங்கள். இன்றைய காலகட்டத்தில் சிறு தாள் பைகளில் அடைக்கப்பட்ட தேயிலைகளை (Tea bags) வாங்கி அதை சூடான பால் அல்லது வெந்நீரில் மூழ்க வைத்து (tip tea) குடிப்பது வழக்கமாக உள்ளது. கண்ணுக்குத் தெரியும் தேயிலையிலேயே கலப்படம் உள்ளது. பைகளில் அடைக்கப்பட்ட தேயிலையில் என்னென்ன உள்ளது என்று நாம் கண்டறிவது அரிது. அது கெட்டுப்போனதாக இருந்தாலும் நமக்கு தெரியாது. எனவே, இந்த முறையில் தேநீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.

தேநீருக்கு பதிலாக இளநீர், நுங்கு, நன்னாரி சர்பத் போன்றவற்றை அருந்தலாம். நுங்கு வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. கிடைக்கும் காலத்தில் தவற விடாதீர்கள்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நண்பகல் தொடக்க வேளை சிற்றிடை உணவு”

அதிகம் படித்தது