மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நதியும் நாகரிகமும்! (பகுதி -2)

முனைவர். ந. அரவிந்த்

Apr 17, 2021

இறைவன் முதல் மனிதனை படைத்த இடம் ‘குமரிக்கண்டம்’ என்றும், ‘ஆப்பிரிக்கா’ என்றும், ஆசியாவிலுள்ள ‘சிரியா’ அல்லது ‘சவுதி அரேபியா’ என்றும் பலவித கருத்துக்கள் உள்ளன. ஆதி மனிதர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக வாழ்ந்து பின்னர் உலகின் எட்டுதிசையில் உள்ள பல இடங்களுக்கும் பரவினர். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் வாழ இடம் தேடி, பல இடங்களுக்கு நாடோடியாக திரிந்தார்கள். அவர்கள் நாடோடிகளாக நடந்து கொண்டிருக்கும்போது, எந்த இடம் வாழ்வதற்கு உகந்த இடமாக இருந்ததோ, அதே இடத்தில் நிரந்தரமாகத் தங்கினர். அவர்கள் வாழ்வதற்கு உகந்ததாக நதிகளின் அருகில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். மனிதன் உயிர் வாழ தண்ணீர் மிக அவசியம். அதற்காக அவன் வற்றாத ஜீவநதியின் அருகே தங்குவது அவசியம் என கண்டு கொண்டான். இப்படித்தான் நாகரிகம் உண்டானது. நதிகளின் அருகே நிரந்தரமாக தங்கியவுடன் அவனுடைய நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் நதிகளின் கரையோரங்களில்தான் உருவாகியுள்ளன. நைல்நதி கரையோரம் ‘எகிப்திய நாகரிகம்’ உருவானது. சிந்து நதியோரம் உருவான நாகரிகம் ‘சிந்து நாகரிகம்’. சிந்து நாகரிகம் பல நகரங்களை உள்ளடக்கியது. அதில் ‘ஹரப்பா’ மற்றும் ‘மொகெஞ்சதாரோ‘ நகரங்கள் அடங்கும்.

ஆரியர்களின் பூர்வீகம், இப்போதைய ‘ஈரான்’ எனும் நாடு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெர்சிய மொழி பேசும் இவர்கள் கி.மு. 3000-7000 ஆண்டுகளில் ஈரானில் இருந்து இடம் பெயர்ந்து சிந்து நதிக் கரையில் குடியேறினார்கள் என்பது வரலாறு. ஆரியர்கள் சிந்து நதியை அடைந்து அங்கு ஏற்கனவே உள்ள இந்தியர்களுடன் இணைந்து சமஸ்கிருத மொழியை உருவாக்கினார்கள் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. இந்த சமஸ்கிருத மொழி ‘இந்திய-ஆரியர் மொழி’ எனவும் அழைக்கப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் மற்றொரு பெயர் ‘வேத நாகரிகம்’.

தாமிரபரணி, வைகை, காவிரி ஆறுகளின் அருகே தொடங்கப்பட்ட நாகரிகம் தமிழ் நாகரிகம். தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள ‘ஆதிச்சநல்லூர்’ என்ற ஊரிலும் மற்றும் தாமிரபரணி ஆறு வங்காள விரிகுடாக் கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகே உள்ள ‘உமரிக்காடு’ என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள ‘கொற்கை’ என்ற கிராமத்திலும் கிடைத்துள்ள ஆதி தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களும், எழுத்துக்களும் தமிழ் நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. அதுபோல், வைகை நதியின் கரையோரம் ‘கீழடி’ என்ற ஊரில் புதைந்து கிடக்கும் தமிழ் நாகரிகம் மிக முக்கியமானது. இந்த கீழடி நாகரிகம், தமிழர்கள் சங்க காலத்திலேயே எழுத்தறிவு பெற்றிருந்ததையும் கழிவறையைப் பயன்படுத்தி மிகவும் சுகாதாரமாக வாழ்ந்ததையும் எடுத்துக் கூறுகிறது.

siragu keeladi1சங்க கால கீழடி நாகரிகம்

siragu keeladi2ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள்

இன்றைய துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் (பாரசீகம்) பகுதிகளை உள்ளடக்கியதே ‘மெசபடோமிய நாகரிகம். யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே உள்ள பரந்து விரிந்த நிலப்பரப்பில் தான் ‘மெசபடோமியா நாகரிகம்’ தோன்றியது. ஈராக்கின் தென்பகுதியில் யூப்ரட்டீஸ் நதியோரம் அமைந்துள்ள ‘ஊர் – UR’ என்ற ஊரில் தான் முதன்முதலாக மனிதன் வீடுகளை கட்டி குடியமர்ந்தான் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ‘ஊர்’ என்ற ஊரில் தான் யூதர்களின் தந்தை ஆபிரகாம் பிறந்து வளர்ந்தார். அரேபிய மொழியில் ஆபிரகாமின் பெயர் ‘இப்ராஹிம்’ ஆகும்.

நாகரிகம் என்பது மனிதன் எல்லா துறைகளிலும் வளர்ந்து கலாச்சாரம், பண்பாடு, மனித மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். அது சில நாட்களில் வளருவதில்லை. பல தலைமுறைகள் தேவைப்பட்டது. நாகரிகம் தோன்றியதும், புதிய பண்பாடுகள், கலாச்சாரங்கள், கல்வி, கலை, ஓவியம், இலக்கியம், சட்டங்கள் மற்றும் விளையாட்டுகள் உருவாகின. இவை அனைத்தையும் தாண்டி இறை வழிபாடு தோன்ற ஆரம்பித்தன. இறைநம்பிக்கை வளர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் கோயில்களைக் கட்டினர்.

இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது யாதெனில், நதிகளே நாகரிகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஆதாரம். நதிகள் இல்லையேல் நாகரிகம் இல்லை. மனிதனை அவனுடைய நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வைத்தது நதிகளே. தமிழ் நாகரிகமும், யூத நாகரிகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நதியும் நாகரிகமும்! (பகுதி -2)”

அதிகம் படித்தது