மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நன்றி !!!

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jun 11, 2016

Siragu-nandri article1நன்றி என்ற தமிழ்ச்சொல்லை நான் எப்பொழுதும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகவே பார்ப்பது உண்டு. ஏனென்றால் உபயோகித்தவர்களுக்கே தெரியும் அதன் மகிமை. அப்படி என்ன அதனுள் ஒளிந்துகிடக்கிறது? அது நம் அன்றாட வாழ்வில் அப்படி என்ன செய்து விடப்போகிறது என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், இது உங்களுக்கான பதிவுதான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

நம் மனித எண்ணங்கள் எப்படிப்பட்டது என்றால், எங்கோ கிடைக்கும் ஒன்றை அரிதாகவும் அற்புதமாகவும் கற்பனை செய்துவிட்டு அருகில் இருக்கும் அற்புதமான ஒன்றை அற்பமாகவே எண்ணும் குணாதிசயங்கள் கொண்டது. இம்மாதிரியான எண்ணங்கள் தான் நம்மை, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தூரமாக வைத்திருக்கிறது. நன்றியுணர்வை நீங்கள் அதிகரிக்கும் பொழுதுதான் உங்கள் வாழ்வில் நீங்கள் வியத்தகு மாற்றம் ஏற்படப்போவதைப் பற்றி உணர்வீர்கள். எப்பொழுதும் எல்லாருக்கும் நாம் ஒரு வகையில் நன்றியுடையவராக இருக்கிறோம், ஆனால் யாரும் அதை வெளிப்படுத்துவதில்லை. அப்படி வெளிப்படுத்தும் நன்றியுணர்வு உங்களுக்குள் மகிழ்ச்சியை வரவழைக்கும். இரண்டாவது, குறை கூறும் பழக்கத்தை அடியோடு ஒழித்துவிடும்.

Siragu-nandri article3நன்றியுணர்வு அப்படி என்னதான் செய்யப்போகிறது என்று எங்கும் நீங்கள் தேட வேண்டாம், நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அதை நீங்கள் ஆராய்ந்து செயல்படுத்தினால் போதும். பழக்கடைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கே பழங்கள் வாங்கிவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கு முன் கடைக்காரரிடம் “தரமான பழங்களை உரிய விலையில் கொடுத்தமைக்கு நன்றி“ என்று உங்களுக்குத் தெரிந்த வட்டார மொழியில் சொல்லித் தான் பாருங்களேன். பிறகு தெரியும் அந்த கடைக்காரரின் நல்ல குணங்கள். அடுத்து நீங்கள் அந்தக் கடையில் எது வாங்கச் சென்றாலும் அவர் புன் முறுவலோடு உங்கள் மனம் திருப்திபடும் வரை நீங்கள் “எதிர்பார்த்தவாறே“ பொருட்களை உரிய விலையில் வழங்குவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, ஏனென்றால் எனக்கு இவ்வித அனுபவங்கள் நிறைய உண்டு.

அடடா! இதைப் பரிசோதிப்பதற்காக நாங்கள் ஏன் பழக்கடைக்குச் செல்ல வேண்டும்? என்று கேட்போருக்கு மாற்று வழி இருக்கிறது, அது தான் உங்கள் வீடு. உங்கள் அன்னையோ, மனைவியோ, அக்காவோ, தங்கையோ உங்களுக்கு உணவு பரிமாறும் வேளையில் “உப்பில்ல” “ஒரப்பில்ல“ “ஒண்ணும் சரியில்ல” என்பதாக சொல்லும் பொழுது அன்றாடம் அதையே நீங்கள் சொல்லும் அளவிற்கு அவர்களால் நிர்பந்திக்கப்படுவீர்கள். மாறாக இதை இன்று கையாண்டுதான் பாருங்களேன், ”நீ செய்த உணவும், பரிமாறும் உணவும் அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று (குடும்ப உறுப்பினர்களுக்குள் நன்றி தெரிவித்தல் தேவையில்லாதது, ஆகவே பாராட்டுக்கள் கொடுக்கலாம்) சொல்லிக்கொண்டு அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுதே” ஆனா என்ன கொஞ்சம் உப்பும், உரைப்பும் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடியிருக்கும்” என்று  மெதுவாக நீங்கள் சொல்ல வந்ததையும் சொல்லிவிட வேண்டும். அவ்வளவு தான், அன்று கிடைத்த மகிழ்ச்சியில் அவர்களால் உங்களுக்கு நாள்தோறும் பிடித்த உணவுகள் மட்டுமே பரிமாறப்படும்.

Siragu-nandri-article-fiநன்றியுணர்வையும், பாராட்டுக்களையும் அடிக்கடி உபயோகிக்கப் பழகிக்கொள்ளுங்கள். அது அலுவலகத்தில் சக ஊழியருடனான உரையாடலிலோ, உங்கள் குடும்பத்தினருடனோ, வெளியில் அன்றாடம் சந்திக்கும் தொடர்பு வைத்துக்கொள்ளும் மனிதர்களிடமோ எங்கு வேண்டுமானாலும் தேவைப்படும் சமயங்களில் நிச்சயம் பயன்படுத்துங்கள். பிறகு தான் தெரியவரும், உங்களைச் சுற்றி இருப்பவர்களின் அன்பும் அனுசரணையும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரின் அன்பிற்கும் பாத்திரமாக நீங்கள் என்றென்றும் நிலைத்தீர்ப்பர்கள்.

வாழ்க வளமுடன்

நன்றி!!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நன்றி !!!”

அதிகம் படித்தது