மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நல்லாயிடுவீங்க… (சிறுகதை)

ஸ்ரீதரன்

Dec 23, 2017

Siragu positive thinking3

நிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. படிப்பு பி.காம், எம்.பி.ஏ, வசீகரிக்கும்  குரல். இசை ஞானம் உடையவள். தெய்வீக  விசயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். கவிதையின் நயமுள்ளவள். சராசரி பெண்ணாக இல்லாமல் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தையுடைய அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஐந்து  வயதில்  நரேன், இரண்டு வயதில் ஸ்வாதி.  கணவர் முகுந்தன் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறான். அவர்களுடைய குடும்ப படகு, வாழ்க்கை என்னும் நதியில் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது.

அவள் கருணை உள்ளம் கொண்டவள். இல்லாவிட்டால் வீட்டு வேலைகாரிக்கு மிக்சி வாங்கிக் கொடுக்க மனம் வருமா?.

ஒரு நாள்  அவளின் மார்பில் உண்டான சிறு கட்டி  வலியைக் கொடுத்தது. டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சில காலம் தள்ளிப் போட்டாள்.

நாட்கள் ஆக ஆக அவளால் நெஞ்சு வலியைத் தாங்க முடியவில்லை. மார்பில் இருந்த கட்டி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து கொண்டே வந்தது.  மருத்துவரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் பணி செய்யும் அலுவலகத்தில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் அது முடிந்ததும் மருத்துவரிடம் கண்டிப்பாக போகலாம் என்று தள்ளிப் போட்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். வேலை, வேலை, வேலை …………….என்றிருப்பாள்.

”நரேன்  ஸ்கூல் போகணும்.  சீக்கிரம் வா.” .

”வாம்மா போகலாம்” என்று ஓடி வந்த நரேனை தன் இரு சக்கர வாகனத்தில்  கொண்டு போய் அவனை பள்ளியில் விட்டு விட்டு வந்தாள்.

அவள் காத்திருந்த விற்பனை விழாவும் முடிந்தது.

இன்று எப்படியும் மருத்துவரிடம் போய் விட வேண்டும். இதற்கு மேல் தாங்காது என்று டாக்டர் வேதவல்லியிடம்  போனாள்.

”எவ்வளவு நாளா வலியிருக்கு?”

”ஒரு வருசமாய் இருக்கு டாக்டர். ”

”உடனே வந்திருக்கக் கூடாதா? ரொம்ப லேட் பண்ணிட்டிங்களே. .

மார்பகத்தைத் தொட்டு  பரிசோதனை செய்த செய்த மருத்துவர், நிவேதிதா, ”உங்க குடும்பத்தில் யாருக்காவது பிரஸ்ட் கேன்சர் வந்திருக்கா?”

”யாருக்குமில்ல டாக்டர்”.

கட்டி வந்த உடனே ஏன் என் கிட்ட வரலே? நீங்க படிச்சவங்கதானே. ஆரம்பநிலையிலே வந்திருந்தா எந்த நோயானாலும் சீக்கிரம்  குணப்படுத்திவிடலாம்” என்று  சிடுசிடுத்தார். வேதவல்லி  கைராசி மருத்துவர். ஆனால் சிடுமூஞ்சி.

மமோகிராம் ஸ்கேனுக்கு எழுதிக் கொடுத்தார்.

”நாளை ரிப்போர்ட்டை என்கிட்ட கொண்டு வந்து காண்பீங்க. அப்போதுதான் என்னால் உறுதியாய் சொல்ல முடியும்”.

நிவேதிதா ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு மருத்துவர் சொன்னது போல் மமோகிராம் ஸ்கேன் செய்து விட்டு ரிப்போர்டை மருத்துவரிடம் கொடுத்தாள்.

ரிப்போர்டை ஒரு முறை பார்த்தவர்,  ”அட கடவுளே,  உங்களுக்கு………………… உங்க கணவரை கூப்பிடுங்க. அவர் கிட்டேயும் டிஸ்கஸ் பண்ன  வேண்டும்“.

நிவேதிதாக்கு திக்கென்றது. ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த முகுந்தனை அழைத்தாள்.

மருத்துவர் அவர்களைப் பார்த்துச்  சொன்னார்.

“செல்களில் ஏற்படக்கூடிய இயல்புக்கு அபரிமிதமான வளர்ச்சியே புற்று நோய்.  உங்க மனைவிக்கு மார்பக புற்று நோய் வந்திருக்கு. அதுவும் தேர்ட் ஸ்டேஜ். ரொம்ப சீரியஸ்”

”என்ன டாக்டர் சொல்றீங்க……………….?. கேன்சரா?. நிஜம்மா டாக்டர்”. முகுந்தன் அதிர்ச்சியடைந்தான்.

”எ…ன….க்…கா? என….க்….கா ? நிஜமாவா ……………… முப்பத்தி மூணு  வயசு தானே ஆறது டாக்டர். அதுக்குள்ளேயா……………. நாற்பது வயசுக்கு மேலேதானே ப்ரெஸ்ட் கேன்சர் வரும்னு கேள்விப் பட்டிருக்கேன். நல்லா பார்த்துச் சொல்லுங்க டாக்டர்.” என்றாள் நிவேதிதா.

”வியாதிக்கு வயசு தெரியுமா? இருபத்தி ஏழு வயசு பெண்ணிற்குக் கூட பிரஸ்ட் கேன்சர் வந்திருக்கு. எல்லாம் நம் கையிலா இருக்கு…நீ உடனே மருத்துவரைப் பார்க்காதது உன் தப்பு .”

அவளுக்குத்  தலையில் இடி விழுந்த்து போல் இருந்தது. ”எனக்குப் போய் புற்று நோயா?” என்று அதிர்ந்தாள்  அவளால்  ஜீரணிக்கவே முடியவில்லை”. .”ட்ரீட்மெண்ட எடுத்தாண்டால் சரியாய் போய் விடுமா? டாக்டர். எவ்வளவு பணம் செலவாகும்.?”

”எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை அவள் உடம்பு சீக்கிரம் குணமாகணும். சரி ஆயிடுமா டாக்டர்.?…………….”  கவலையுடன் கேட்டான் முகுந்தன்.

”கேனசர் வந்து விட்டால் நம் கையில் எதுவுமில்லை. கடவுள் விட்ட வழி. என்னால் முடிந்ததை  செய்யறேன். அதுதான் என்னாலே முடியும்.”

”டாக்டர் ஒரு ஐந்து வருசத்துக்கு என் உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியுமா? என் இரண்டு குழந்தைகளுக்கு ரொம்பச் சின்ன வயசு. அவர்களுக்கு விவரம் தெரியும்ன்னா ஐந்து வருசங்களாவது நான் உயிரோடு இருக்கணும்………………..”

டாக்டர் சிரித்தார். ”அது எப்படி முடியும்? என்னுடைய உயிருக்கு நீ ஐந்து வருசம் உத்திரவாதம் கொடுக்க முடியுமா? யாரும் யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. சில குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. சில குழந்தைகள் பிறந்தவுடன் ……………………… எல்லாம் அவன் செயல். ”

நிவேதிதாவுக்கு  ஆப்ரேசன் ஆகி இப்போது ஆஸ்பிட்டலில் இருக்கிறாள். இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போனாள். வேலை செய்யும் நிறுவனத்தில் நீண்ட விடுப்புக்கு எழுதிப் போட்டாள்.

அவள் செய்து கொண்ட கிமோ தெரபி, ரேடியோ தெரபி, அதனால் தலை மயிர் எல்லாம் கொட்டிப் போய் ஆளே உருமாறிப் போய்விட்டாள். அவளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம், வருத்தம்… எல்லாம்  எழுத வேணுமானால் அது நெடுங்கதையாய் போய் விடும். சுருங்கக்கூறின்  அவள் உடைந்து போய் விட்டாள். எனக்கு ஏன் வந்தது? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு அதற்குச் சரியான பதில் கிடைக்க வில்லை.

அவளைப் பார்த்த அவள் மாமியார் விமலா புலம்ப ஆரம்பித்து விட்டாள். ”அய்யோ எப்படி இருந்த நீ எப்படி ஆயிட்டே? உனக்குப் போய் இந்த நோய் வந்தடுத்தே. நீ என்ன பாவம் செஞ்சே? ”என்றாள் .

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவள் காதுபட கேன்சர் ஒரு கொல்லும் வியாதி. கேன்சர் வந்து விட்டால் ஒரு வருசமோ, இரண்டு வருசமோ நாட்களை எண்ண வேண்டியதுதான் என்றார்கள்.

”தன் குழந்தைகளைப் பார்க்கும்போது நிவேதிதாவுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது. நான் போனதும் அவங்களை யார்…? கணவர் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப் படணுமே”  என்று வருந்தினாள்.

நிவேதிதாவின் சித்தி நிர்மலா ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் தன் மகளுடன் வசிக்கிறாள். விசயத்தைக் கேள்விப்பட்ட அவள் அலைபேசியில்  நிவேதிதாவுக்கு ஆறுதல் கூறினாள். அவளிடமிருந்து ஆஸ்திரேலிய எழுத்தாளர் ப்ரெண்டா வாக்கர் எழுதிய ”ரீடிங் பை மூன்லைட்” என்னும் புத்தகமும் கடிதமும் வந்திருந்தது. கடிதத்தைப் படித்தாள்.

Siragu-positive-thinking4

சித்தி அனுப்பிய அந்தப் புத்தகத்தை முழுவதும் வாசித்தாள். அந்தப் புத்தகம் எப்படி புத்தகத்தை ஒரு ஆயுதமாக வைத்து கேன்சரிலிருந்து அதன் ஆசிரியர் எப்படி மீண்டார் என்பதை விளக்கும் சுயசரிதை. அதன் ஆசிரியர் அதில் பல்வேறு புத்தகங்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அதைப் படித்ததால் அவளுக்கு ஒன்று தோன்றியது. எப்படி புத்தகங்களை ஊன்றுகோலாக வைத்து  கேன்சர் நோயிலிருந்து மீளவது  சாத்தியமாகிறதோ அதைபோலவே   ஏதாவது ஒன்றை, ஒரு நம்பிக்கையை  வைத்து கேன்சரிலிருந்து மீள முடியும்  என்ற எண்ணம்  அவளுக்கு ஏற்பட்டது. இசை நோயை குணப்படுத்துவதைப் போல் ஏதோ ஒன்று…………………………. என்று அவளுக்குத் தோன்றியது. அவள் வெகு  நேரம் சிந்தித்தாள்.

தேடியவருக்குத்தான் புதையல் கிடைக்கும். பலரிடம் கலந்தாலோசித்ததில்   அவள் தேடலுக்கு  விடை கிடைத்தது. யோகாவைப் பயிற்சி செய்தால் கேன்சர் குணமாகும், உடலை சரியாககவும் ஹார்மோன்கள் சரியாக சுரக்க வைக்கும் என்று புரிந்தது.

ஒரு யோகா பயிற்சியாளரைப் போய்ப் பார்த்தாள். அன்று அவளுக்குத் தெரியாது அவள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்பட போகிறதென்று. தினந்தோறும் யோகாவைப் பயிற்சி செய்தாள். ”எனக்கு நல்லாயிடும், எனக்கு நல்லாயிடும்” என்னும் தாரக மந்திரத்தை அடிக்கடி மனசுக்குள் சொல்லுவாள்.

ஆறு மாதம் கழித்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவளின் கேன்சர் நோயின் தாக்கம் குறைந்திருந்தது தெரிந்தது. இன்னும் ஆறு மாதத்திற்குப்பின்  அவளுக்கு வந்த நோய் முற்றிலும் நீங்கி விட்டது,.

ஆம், நிவேதிதா கேன்சரை ஜெயித்து விட்டாள். அவளுக்கு ரொம்ப  மகிழ்ச்சி. அவள் வேலை செய்த அலுவலகத்தின் ஜெனரல் மேனேஜர் அவளுக்கு  ஏரியா மேனேஜர் புரமோஷன் கொடுத்து கார், டிரைவர் போன்ற சலுகைகளைக் கொடுத்து வேலையில் மீண்டும் சேர்ந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

வேறு யாராவதாகயிருந்தால் வர்ற லட்சுமியை வேண்டாமென்று என்று சொல்லாமல் உடனே வேலையில் சேர்ந்து கொள்வார்கள். நிவேதிதா  சராசரி பெண்ணில்லையே. அதனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தான் பட்ட கஷ்டம் மற்ற பெண்கள் படக்கூடாது என்று நினைத்தாள். மேலும் கிமோ போகுமிடத்தில் பார்த்த பெண்களின் துயரம் அவள் நெஞ்சில் பதிந்து விட்டது.   மற்றவர்களும் யோகாவைப் பின்  பற்றி  மார்பக கேன்சரிலிருந்து விடுதலை பெற உதவி செய்ய வேண்டியது தன் கடமை என்று அவளுக்குத் தோன்றியது. எனக்கு ஏன் கேன்சர் வந்ததுன்னு அன்னிக்குக் கேட்டேன், இன்னிக்கு அதுக்குப் பதில் எனக்குக் கிடைச்சிட்டது. மனிதத் தொண்டு செய்யத்தான் கேன்சர் எனக்கு வந்தது போலும். வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது. என்னால் முடிந்தவரை மற்றவர்களின் துயர் நீக்க உதவ வேண்டும்“ என்று உறுதி செய்தாள்.

வேலைக்குப் போய்ப் பணம் சம்பாதிப்பதைவிட மனிதத் தொண்டு செய்யவே பிறவி எடுத்திருக்கிறோம் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் செயலில் இறங்கினாள். ஒவ்வொரு மனிதனையும் குறிப்பிட்ட நோக்கத்தோடு ஆண்டவன் படைத்திருக்கிறான். ”எனக்கு வந்தது யாருக்கும் வரக்கூடாது” என்ற எண்ணத்தில் ஆஸ்பிட்டல், பெண்கள் பள்ளிக்கூடம் போன்ற இடங்களுக்குப் போய் யோகாவின் மகிமையை எடுத்துச் சொன்னாள்.பாசிடிவ் எண்ணம், உடைந்து போக மாட்டோம் என்னும் நம்பிக்கை இதை யோகா மூலம் பெறமுடியும் என்றாள். ரேடியோ தெரபி நடக்கும் இடங்களுக்குச் சென்றாள். அங்கு வந்திருந்த நோயாளிகளின் சோகத்தை, எதிர் மறை சிந்தனையைப்  பார்த்து வருந்தினாள். நீ நல்லாயிடுவேன்னு நீ நம்பணும். ஆழ் மனதில் பதியணும். உறுதியான நம்பிக்கை நமக்கு ஆயுதம் போன்றது அப்போதுதான் கேன்சரிலிருந்து வெளியே வர முடியும்” என்றாள்.

”நான்  ஆறு முறை கிமோ செய்து கொண்டிருக்கிறேன். தேர்ட் ஸ்டேஜ் கேன்சரிலிருந்து குணமாகியிருக்கிறேன். நீங்களும் குணமாயிடுவீங்க. நானே அதற்கு உதாரணம்” என்பாள். நிவேதிதா வழிகாட்டலில் கேன்சரிலிருந்து வெளிவந்தவர்கள் நல்ல எண்ணத்துடன் மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு மார்பக புற்று நோயைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி ”நலம்” என்னும் ஒரு  குழுவை ஆரம்பித்து மார்பக கேன்சருக்கு ஆலோசனை, மற்றும் வீட்டு மாடியில் தினமும் பெண்களுக்கு  யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது.

அவள் மாமியார் மட்டும் “ஏன் இவள் ஊராருக்கு உழைக்கணும். குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு வேலைக்குப் போலாமே? நான் சொன்னா யார் கேட்கிறா இந்த வீட்டிலே” என்று கசந்து சலித்துக் கொண்டாள். அவளுக்கு மருமகளைப் பிடிக்காதென்று சொல்லமுடியாது. மருமகள் பொதுத்தொண்டு செய்வதை அவள் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் முக்கியக் காரணம்.

முகுந்தன் நிவேதிதாவிற்கு தோழப்பன் ஆகி விட்டான். வீட்டு வேலைகளில் பகிர்ந்து கொண்டான். அவளைப் பூ போல் தாங்கினான்.

மாமியார் மட்டும்  அடிக்கடி முணுமுணுப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. ஆனால் நிவேதிதா  அதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

”நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும் என்னும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. விமலா மனதில் குப்பையுடன் சுயநலத்துடன் தன் மருமகள் செய்யும் பொதுத்தொண்டைக் குறைக் கூறிக்கொண்டிருந்தாள். அவளுக்கு   ஒரு நாள் மார்பில் கட்டி வந்தது. அவள் தனக்குப் புற்று நோய் வந்து விட்டதோ என்று  பயந்து விட்டாள். டாக்டரிடம் போய் காண்பித்து பரிசோதனை செய்ததில், “நல்லகாலம், உங்களுக்கு மார்பக  புற்றுநோய் ஆரம்பநிலையில் இருக்கிறது. சரிப்படுத்திவிடலாம்” என்று மருத்துவர் மருந்து எழுதிக் கொடுத்தார். விமலா மருமகளின் அருமையை உணர்ந்தாள். தனக்கு வந்தால்தான் தலைவலியும் கால்வாலியும் தெரியும் என்பார்கள். அவள் மனசு மாறி மருமகளுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டுமென நினைத்தாள்.

நிவேதிதா தன் மாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு அன்புடன் ”தைரியம், தன்னம்பிக்கை இருந்தால் கேன்சரிலிருந்து வெளியே வந்து விடலாம். ’ நான்  நல்லாயிடுவேன்னு’ நீங்க நம்பணும். நல்லாயிடுவீங்க. கவலைப்படாதீங்க” என்றாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்லாயிடுவீங்க… (சிறுகதை)”

அதிகம் படித்தது