மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாகசாமியும், அவர்தம் சமற்கிருத பற்றும்!

சுசிலா

Mar 9, 2019

siragu R-Nagaswamy1
சமீபத்தில், மத்திய மோடி அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது நினைவில் இருக்கலாம். அது நம்மில் பலரையும் ஒரு அதிர்ச்சியில் உறையவைத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. மிகவும் கண்டனத்துக்குரியதும் கூட. அது, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில், மேனாள் தொல்லியல்துறை அதிகாரி நாகசாமியை மத்திய பா.ச.க அரசு நியமித்திருக்கிறது என்பதாகும். இதனால் தவறுதலான செயல்களுக்கு வழிகாட்டக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேலும், இதில் பொருந்தாத உண்மையற்ற நபர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பும் அதிகமிருக்கிறது.

மத்தியில், அமைந்திருக்கும் பா.ச.க தலைமையிலான அரசு, ஆரம்பத்திலிருந்தே, சமற்கிருதத் திணிப்பை முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஆட்சியில் அமைந்த உடனே, சமற்கிருத வாரம் என்ற ஒன்றை கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. அதற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியதால், அத்திட்டத்தை கைவிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமற்கிருதத்தை கட்டாயபாடமாக வேண்டும் என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசு கொண்டுவரும் நலத்திட்டங்கள் அனைத்தையும் சமற்கிருதப் பெயரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர துடித்துக்கொண்டிருப்பதால், அந்தந்த மாநிலமொழிகளை அலட்சியம் செய்யும் போக்கை கடைப்பிடித்தது.

நம் தமிழ்நாட்டின் சிறப்பு, இரு மொழிக்கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் நம் மாநிலத்தில் மட்டும் இன்னமும், நவோதயா பள்ளிகளுக்கு இடமில்லாமல், எதிர்ப்பு நிலை இருந்து கொண்டிருக்கிறது. தற்போது, தமிழ் மொழியின் சிறப்பை தமிழர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை, வாழ்வியலை, மொழியை என அனைத்து வகையிலும் இருட்டடிப்பு செய்வதற்கு ஆரியம் சதிவலை பின்னுகிறது. அதன் பின்னணி தான், மேனாள் தொல்லியல் அதிகாரி நாகசாமி என்பவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் சேர்த்திருக்கிறது.

இவரை, இந்த குழுவில் சேர்த்ததினால், அப்படி என்ன பிரச்சினைகள் வரும் என்பதை பார்த்தோமானால், இந்த நாகசாமி என்பவர் ஒரு சமற்கிருத பற்றாளர். தமிழ்மொழியின்பால் அளவற்ற வெறுப்பை உமிழக்கூடியவர். தமிழ்மொழியைப் பற்றி தவறான தகவல்களை பரப்பக்கூடியவர் என்பதை இவர் எழுதிய, ‘தமிழ் மற்றும் சமற்கிருதத்தின் கண்ணாடி’ என்ற நூலின் மூலம் நாம் நன்கு அறியமுடியும். அதில் அவர் தமிழுக்கு எதிராக, பொருந்தாத, தவறான தகவல்கள் எழுதிய சிலவற்றை இங்கு பார்ப்போம்..

siragu tirukkural1

அவர் எழுதிய அந்த நூலில் தமிழ்மொழி எழுத்து முறையை பார்ப்பனர்களிடமிருந்து தான் பெற்றது என்றும், தொல்காப்பியம், புறநானுறு, அகநானூறு மற்றும் சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நுல்களைப்பார்த்து எழுதப்பட்டவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எல்லாம் போலியானவை. இட்டுக்கட்டி எழுதப்பட்டவை என்றும், தொல்காப்பியக் காலம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்றும் கூறியிருக்கிறார். இதற்கு எவ்வித சான்றும் சொல்லப்படவில்லை. சங்ககால இலக்கியங்கள் அனைத்தும் சனாதனத்தை பின்பற்றியே எழுதப்பட்டுள்ளன என்றும், அசோக சக்ரவர்த்தி புத்தமதத்தை தழுவியவர் இல்லை, அவர் பரப்பிய மதம் புத்தமதமல்ல, வேதங்களிலிருந்து சிலவற்றை எடுத்துக்கொண்டு, அதன்மூலம் தன்னுடைய கருத்தை பரப்பினார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலே அல்ல, வேதங்களிலிருந்து உள்வாங்கிய கருத்துக்களை, இந்த மண்ணிற்கேற்றாற்போல் மாற்றி எழுதப்பட்ட நூல் ஆகும் என்றும், அந்த நூலில் எழுதியிருக்கிறார்.

மேலும் அந்நூலில் கி,மு. 300 வரை தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை என்றும் செம்மொழிக்கான தகுதிகள் எதுவும் தமிழில் மொழிக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும் ஒரு நல்லுறவு இருந்தது. கொடுக்கல் வாங்கல் என்ற முறையில் இருந்த அந்த நல்லுறவை கடந்த 50 ஆண்டுகள் தான் கெடுத்துவிட்டது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட, உச்சபட்ச திரிபு வேலையாக அவர் சொல்லியது என்னவென்றால், சமற்கிருத சாத்திரங்களை படிக்காதவர்கள் திருக்குறளை புரிந்துகொள்ள முடியாது என்று சொன்னது தான்!

ஏனென்றால் திருக்குறளே, மனுதர்மம் முதலிய சமற்கிருத நூல்களின் சாராம்சமே ஆகும். அவைகளிருந்துதான் திருக்குறளே எழுதப்பட்டது. என்றும் அந்நூலில் கூறுகிறார். திருக்குறள் வேதங்களின் எளிமையான வடிவம் மற்றும் மொழிபெயர்ப்பு என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் அறிஞர்களின் கூற்றுப்படி, திருக்குறள் மனுதர்ம காலத்திற்கு முற்பட்டது என்பதை நாம் அறிய காண்கிறோம். இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும், மனுதர்மம் மனித தர்மத்திற்கு எதிரானது, பிறப்பால் மனிதர்களை வேறுபடுத்தி காட்டுவது, சாதிய படிநிலையை வலியுறுத்துவது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

திருக்குறள் அப்படி இல்லையே. சமத்துவத்தை அல்லவா போதிக்கிறது. மனிதர்களுக்குள் பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை எதுவும் கிடையாது என்றல்லவா கூறியிருக்கிறார் வள்ளுவப்பெருந்தகை,

‘ பிறப்பொக்கும் எல்லா வுயிருக்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’

மேலும் மனுதர்மப்படி உழவுத்தொழில் ஒரு பாவப்பட்ட தொழிலாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நம்முடைய திருக்குறள் படி,

‘ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.’

என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைகள் இவ்வாறிருக்க, தவறான பொய்யான செய்திகளை ஒரு புத்தகமாக எழுதியிருக்கும் நாகசாமி அவர்களை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுகளுக்கு தேர்வு செய்யும் குழுவில் அமர்த்திருப்பது என்பது ஆரியத்தின் எப்படிப்பட்ட செயல் என தெரிய வருகிறது.

ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை சரிவர வழங்குவதில்லை, மேலும் அந்த துறையை, மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்போகிறோம் என்றும் இந்த மத்திய மோடி அரசு கூறிவருகிறது. அடுத்து பார்த்தோமானால், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை செய்யவிடாமல் இழுத்தடிப்பது, கீழடி தொல்லியல் ஆய்வுகளை நிறுத்தி வைப்பது, அதற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது, அதன் அதிகாரியை இடம் மாற்றுவது என தமிழ் மொழிக்கும், தமிழர் நாகரிகத்திற்கும், தமிழர் வாழ்வியல் ஆதாரங்களை மறைப்பது எனவும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாஜக மோடி அரசின் பல வழிகளில் இதுவும் ஒன்று என்று தான், நாம் எடுத்துக்கொள்ள முடியும்!

இந்த நியமனத்தை எதிர்த்து, தமிழ் பற்றாளர்கள், அறிஞர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாகசாமியை மாற்றும்படி கோரியுள்ளார்கள். தமிழ்மொழிக்கு தீங்கு விளைவிக்கும்போக்கில் நடக்கும் இம்மாதிரி செயல்களை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்து நம் எதிர்ப்பை தமிழக அரசிற்கு தெரியப்படுத்துவோம். தமிழ் ஆரியமயமாக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழக அரசை வலியுறுத்துவோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாகசாமியும், அவர்தம் சமற்கிருத பற்றும்!”

அதிகம் படித்தது