மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள்

தேமொழி

Oct 15, 2016

 siragu-naattuppura-kalaigal

இந்தியாவில் நடத்தப்படும் விழாக்களில், கூட்டங்களில் அறுதிப் பெரும்பான்மையானவை இறைவணக்கப் பாடலுடன் கடவுளை வாழ்த்தி வணங்கித் துவக்கப்படும். சமயசார்பற்ற வகையில் விழாவைத் துவக்கும் தமிழக மக்களில் சிலரும் தமிழ்த்தாயை வாழ்த்தித் துவக்குவதை மரபாகக் கொண்டுள்ளனர். இது போன்ற நடைமுறைகள் ஓர் ஒழுங்கினை உணர்த்தும் முறையாக மக்களால் உலகெங்குமே எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் இடத்திற்கு இடம் இவற்றில் வேறுபாடுகளும் உண்டு. பொதுவாக இந்திய விழாக்களில் முதலில் வணக்கப்பாடல், பிறகு வரவேற்புரை, தொடர்ந்து விழா நிகழ்வுகள், இறுதியில் நன்றி நவிலல், நாட்டுப்பண் பாடி நிறைவு செய்தல் என்பது ஒரு நடைமுறை வழக்கம்.

இந்திய மக்கள் ஆன்மீகப் பற்றுள்ளவர்கள் என்பதால் எதைத் துவக்கும் பொழுதும் கடவுளை வணங்கித் துவக்குவது வழக்கம். தேர்வு எழுதும் பொழுது பிள்ளையார்சுழி போட்டு எழுதுவது முதற்கொண்டு, திரைப்படங்களிலும் நேரடியாக சில கடவுளர் பெயரைக் குறிப்பிட்டு ‘இந்த இந்த’ கடவுள் துணை என்று வாழ்த்தியோ, அல்லது மறைமுகமாக முதல்காட்சியில் திருமாலின் திருப்பள்ளியெழுச்சி பாடல் பின்னணியில் ஒலிக்கப் படம் துவங்கும் முறையோ இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய இறைவாழ்த்துடன் துவங்குவதால் பாடம் படிக்காமல் தேர்வு எழுதித் தேறிவிடமுடியுமா, அல்லது சிறந்த காட்சிப்பகுதிகளை வழங்காமல் படம் வெற்றியடைந்துவிடுமா என்பதெல்லாம் இங்கு விவாதமல்ல. இவ்வாறாக, மக்கள் மனதில் ஆழ வேரூன்றிவிட்ட இறைவணக்கத்துடன் துவக்கும் நம் நாட்டின் மரபையொட்டி, நாட்டுப்புறக் கலைகளில் வழங்கிவந்த இறைவணக்கப் பாடல்கள் சிலவற்றை மறுபார்வை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழிலக்கியங்களில்  இறைவணக்கப் பாடல்கள்:

பண்டைய தமிழிலக்கியங்களில் இறைவணக்கப் பாடல்கள் குறைவே என்றும், கடைச்சங்க காலம் தொடங்கியே  இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் தனது “சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்” என்ற கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். “வேதம், புராணம் சார்பான அறிவுக்கு ஒவ்வாத செய்திகளை விலக்கிய சங்க இலக்கியப் பாடல்களில் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் காணமுடிகின்றது. குறிப்பாக சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு கடவுள் வாழ்த்து பாடிய முறைமை ஆரியச்சார்பு உடையச் செய்திகளை அதிகமாகக் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடல்கள் பிற்காலத்தில் பாடப்பெற்றன, தொகுக்கப்படும் காலத்தில் பாடப்பெற்றன …” என்று குறிப்பிடுகிறார்.  பிற்காலத்தில் பாடல்கள் தொகுக்கப்பட்ட பொழுது இறைவணக்கப் பாடல் நுழைக்கப்பட்டது என்ற நிலை மாறி, பின்னர் தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தும் பொழுது ‘சமய இலக்கியங்களின் காலம்’ என்றே வகைப்படுத்தும் ஒரு நிலைமைக்கு இலக்கிய உலகம் சென்றுவிட்ட  நிலையை ஒரு வியத்தகு தமிழக பண்பாட்டு மாற்றம் எனக் கூறலாம்.

கடவுள் வாழ்த்துப் பாடலின்றி எந்த இலக்கியமும் இயற்றப்படாத நிலையை எட்டியது தமிழிலக்கிய உலகம். அதிலும் தடைகளை நீக்குவதாகக் கருதப்படும்  பிள்ளையார் வாழ்த்துடன் துவக்குவது மரபு என்றே ஆனது. தமிழறிந்த அனைவரும் அறிந்த பாடலான ‘பாலும் தெளிதேனும்’ எனத் துவங்கும்  தனது நல்வழி கடவுள் வாழ்த்துப்  பாடலில் ஔவையார் (ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்தனர், அவர்களில் ‘நல்வழி’ என்ற நூலை இயற்றிய ஔவையார் கம்பர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆய்வாளர்கள் முடிவு), துங்கக் கரிமுகத்துத் தூமணியான பிள்ளையாரிடம் தனது காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு தமிழறிவு அருளச் செய்ய வேண்டுகிறார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
( கடவுள் வணக்கப் பாடல்: நல்வழி, ஒளவையார்)

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்ப் படைப்புகளையும்  இறைவணக்கத்துடன் துவக்குவது என்பது இன்றியமையாத ஒரு மரபு என்ற வகையில் தமிழர் பண்பாடு நடைமுறையானது.

நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள்:

இசைக்கச்சேரி துவக்கினால் முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘வாதாபி கணபதிம் பஜேகம்’ என்ற கீர்த்தனையுடன் இசைவிழா துவக்கப்பெறும். அதுபோன்றே சென்ற 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களின் பொழுதுபோக்காக இருந்த நாட்டுப்புறக் கலைகளிலும் இறைவணக்கத்துடன் துவக்கும் முறை அமைந்திருந்தது. திருவிழாக் காலங்களில் விடிய விடிய நடத்தப்பட்ட தெருக்கூத்துகள், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இவற்றுள் அடங்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் துணைக்கோள் வழியாகவும், இணையத்தின் வழியாகவும் விரும்பிய நிகழ்ச்சியைப் பொழுது போக்கிற்காக கண்டு மகிழ்கின்றனர் இக்காலத் தலைமுறையினர். இவர்கள்  முற்றும் அறிந்திராத கலைநிகழ்ச்சிகளில் ஒருசில என நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளை வகைப்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. அவற்றைக் காண விரும்பினால் அதற்கும் இக்காலத் திரைப்படங்கள், இணையக் காணொளிகள் வழியாகத்தான் கண்டுகளிக்க வேண்டும் என்ற  நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில்  1989-ஆம் ஆண்டு “கரகாட்டக்காரன்” திரைப்படம் கிராமிய மணம்  கமழும் வகையில் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வை, அவர்களது கலைப் பங்களிப்பை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தப்படத்தில் நாயகனுக்கும்  நாயகிக்கும்  இடையில் யார் சிறந்த கரகாட்டக் கலைஞர் என்ற போட்டி எழும். அந்த சூழ்நிலைக் காட்சிக்காக கங்கை அமரன் ஒரு போட்டிப் பாடலை எழுதியிருந்தார். அதனை அக்கால நாட்டுப்புறக் கலைஞர்களின் பாடல்கள் சாயலிலேயே மிகச் சிறப்பாகவும் அமைத்திருந்தார். அப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா அமைத்த  இசையும் மக்களின் மனத்தைக் கவரும் விதத்தில் இருந்தது.

ஆண்:

முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமைய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா

பெண்:

சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா

இப்பாடல் முழுமையாகக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.  “முந்தி முந்தி விநாயகனே” என இறைவணக்கத்துடன் துவங்குவது பற்பல தெருக்கூத்துகளின் மரபு. முந்தி முந்தி விநாயகனே என்ற வரியுடன்  துவக்காவிட்டாலும் கூட விநாயகர் துதியுடன்தான் தெருக்கூத்துகள் துவங்கியது என்பதை அக்கால தெருக்கூத்து நாடக நூல்களைப் படிக்கும் பொழுது அறிய முடியும்.

இறைவணக்கப் பாடல்களின் அமைப்பு:

இப்பாடல்கள்  குறைந்த அளவு ஒளவையாரின் ‘பாலும் தெளிதேனும்’ பாடலைப் போல நான்கு அடிகளில் துவங்கி, ஒரு சில பாடல்கள் மிக நீண்டு நாற்பது அடிகளுக்கும் மேலேயே செல்கிறது. தவறாமல் அனைத்துப் பாடல்களும் விநாயகர் துதியுடன்தான் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து ஆடும் நாடகத்திற்கு ஏற்ப பிற கடவுளர் துதிகள் தொடர்கிறது. பெரும்பாலும் முதலில் விநாயகர், தொடர்ந்து முருகர், பிறகு சரசுவதி என்ற வரிசையில் துதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சில பாடல்கள் சிவன், திருமால், பார்வதி என மற்றும் சில கடவுள் துதிகளையும் இணைத்துக் கொள்கிறது. கரகாட்டக்காரன் பாடலும் இதே அமைப்பில் முந்தி முந்தி விநாயகனே எனத் துவங்கி நாயகன் பிள்ளையாரை வணங்க, நாயகி சிவகுருவான முருகனை வணங்குகிறார். அத்துடன் பாடலின் இடையில் சரசுவதி அருளால் வெற்றி பெற்றதாக ‘தேவி சரசுவதி பேரச் சொல்லிப் படிச்சேன்’ என்ற வரி மூலமும் குறிப்பிடுகிறார் கரகாட்டக்காரி.

கீழே காத்தவராயன் ஆரியமாலா கூத்தை நிகழ்த்திக் காட்டுபவர் பாடும் விநாயகர் துதிப்பாடல் கொடுக்கப்பட்டுள்ளது:

“முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் புத்திரனே
சத்தி விநாயகனே சரிந்த வயிற்றோனே
கந்தருக்குமுன் பிறந்த கற்பகமே மெய்ப்பொருளே
வேலவர்க்கு முன்பிறந்த விக்கின விநாயகரே
சாலை விநாயகர்க்குஞ் சண்முகர்க்கும் இப்போது

பாலும் பழவகையும் பருப்புருண்டை தேங்கனியும்
எல்லாப் பழவகையும் எள்ளுருண்டையும் மாங்கனியும்
அத்தனையும் நான் படைப்பேன்  சித்திவிநாயகர்க்கு
ஈசுவரனார் ஈன்றெடுத்த இருவர்த்திளையவனார்

இணையில்லாக் காத்தவனார் எழில் கதையை யான் பாட
“காத்தவனார் கதை”யைக் கலியுகத்தில்  யான் பாட
வேதியர்கள் தன் வயிற்றில் விலங்கி அவதரித்த
ஆதியர் கன்னிகையாள் “ஆரியமாலை கதை”
காத்தவசுவாமியார் கன்னிகையைச் சிறையெடுத்து
மகாதேவர் புத்திரனார் மாலை பெண்ணை  சிறையெடுத்து
சிறையெடுத்த நற்கதையைச் செந்தமிழால் பாடுதற்கு

கன்னியந்த மாலை கதை கருத்துடனே நான் பாட
வெண்தமிழால் பாடுதற்கு விக்கினரே காத்தருளும்
மூஷிக வாகனாரே முன்னம் வா விக்கினரே
கதையை நடத்துமென்று கணபதியைக் கைதொழுவேன்.”

புகழேந்திப் புலவர், காத்தவராயசுவாமி கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/katruv/page05.html

முந்தி முந்தி விநாயகனே என்று துவங்கும் நாட்டுப்புறக் கலையான  தெருக்கூத்துகளில் பாடப்பட்ட மேலும் சில பாடல்கள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் விநாயகர் துதி பெரும்பாலும் ‘நான்கு’ பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
(1) முதலில் முந்தி முந்தி விநாயகனே எனத் துவங்கி பிள்ளையாரின் சிறப்பை விவரிக்கிறது. இப்பகுதியில் இடம்பெறும் கருத்துகள் சிவனின் மகனே, பார்வதியின் மகனே, முருகனின் அண்ணனே, திருமாலின் மருமகனே என்று உறவுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. பிறகு பிள்ளையாரின் தோற்றத்தை  யானையின் தலையைக் கொண்டவனே, பானை வயிற்றோனே, ஒற்றைக் கொம்பனே, துதிக்கை கொண்டவனே, மூஞ்சுருவை வாகனமாகக் கொண்டவனே போன்ற வகையில் தோற்றத்தை விவரிக்கிறது.
(2) இதன் பிறகு, ஔவையார் பாடியது போலவே, நான் உனக்குக் கற்கண்டு,  சர்க்கரை, அவல்கடலை, பொறியுருண்டை, அதிரசம், தேன்குழம்பும், கொப்பரைத் தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை காணிக்கையாகத் தருகிறேன் ஏற்றுக் கொள்வாயாக என்று தொடர்கிறது.
(3)அடுத்து, நடத்தப்படும் கூத்தின் பெயரையும், அதன் கருப்பொருளையும் சிலவரிகளில் விளக்கி, இவரின் வரலாற்றை நான் சொல்லப்போகிறேன் என்று அறிவிக்கும் பகுதி தொடர்கிறது.
(4) இறுதியாக, இன்றைய நிகழ்ச்சியைத் தவறில்லாமல் செய்து முடிக்க தக்கதுணையாக இருந்து அருள் தருவாயாக என்று வேண்டி விநாயகர் துதி நிறைவுறுகிறது. இக்கருத்துகளை மிகச் சுருக்கமாகவோ, அல்லது காணிக்கை அளிப்பேன் போன்ற ஓரிரு பகுதிகளைத் தவிர்த்த சிறிய பாடலாகவும் அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. மேலே குறிப்பிட்ட நான்கு கருத்துப் பகுதிகளையும் விரிவாக உள்ளடக்கிய நீண்ட பாடலாகவும் பாடும் வழக்கமும்  இருந்திருக்கிறது.

விநாயகர், முருகன், சரசுவதி ஆகியோரை வணங்கும் தொடர் துதிகளைக் கொண்ட   இறைவணக்கப் பாடலை, இசை பின்பாட்டு ஆகியவற்றுடன் சேர்த்துப் பாடினால் குறைந்தது ஓர் அரைமணி நேரமாவது அதற்குத் தேவைப்படும். இதனால் நல்லதங்காள் கூத்தோ, மதுரைவீரன் கூத்தோ இவற்றை  நடத்தி முடிப்பதற்கு முழுஇரவும் தேவைப்பட்டிருக்கிறது என்பதை  அறிவதில் வியப்புக்கு இடமில்லை.

சான்றுகள்:
சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள், முனைவர் மு. பழனியப்பன், திண்ணை  – http://puthu.thinnai.com/?p=18401
தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்னூல்கள் தொகுப்பு -  THF eBooks collection: http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

******************************************
முந்தி முந்தி விநாயகனே – பாடல்களின் தொகுப்பு
******************************************

ஆண்:
முந்தி முந்தி விநாயகனே
முப்பத்து முக்கோடி தேவர்களே
வந்து வந்தெம்மை பாருமைய்யா
வந்தனம் வந்தனம் தந்தோமைய்யா

பெண்:
சக்தி உள்ள சிவகுருவே
நித்தம் கொடுப்பேன் வணக்கமைய்யா
பக்தியுடனே பதம் பணிந்தேன்
நிச்சயம் வெற்றியைத் தாருமைய்யா

ஆண்:
வானத்துல சுத்துதடி  ஒம்போது நவக்கிரகம்
பூமியில எடுத்து வந்தேன்  தலையில நான் கரகம்
ஊருலகம் மெச்சி வரும்  உத்தம பாளையம் சரகம்
உள்ளமுள்ள ஜனங்க இந்த பாட்டைக் கேட்டு கெறங்கும்

பெண்:
தேவி பெரியகுளம் தென் மதுர ஜில்லா
வெள்ளி மெடலு பல வாங்கி வந்தேன் நல்லா
தேவி சரசுவதி பேரச் சொல்லிப் படிச்சேன்
தேசாதி தேசமெல்லாம் மேடை ஏறி ஜெயிச்சேன்

ஆண்:
கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
சோடை சொணக்கமில்லை மேடை ஏறும் காலு
வாடிப் பழக்கமில்லை வாலிபமான ஆளு

பெண்:
என்ன எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு
பொன்னான காலுக்கொரு பதிலச் சொல்லிப் பாரு
பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
தன்ன மறந்து நின்னுத் தவிக்கும் வாழ நாரு

கங்கை அமரன், கரகாட்டக்காரன்
https://www.youtube.com/watch?v=iNohvdxeho4

******************************************

முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே
கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்
வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்
வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே
காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே
சீரான நல்மருகா செல்வக்கணபதியே
ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே
கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே
வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா
மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே
ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே
தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்
நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்
பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே
வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்
தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே
செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்.

மாரியம்மன் தாலாட்டு
http://vkrishphysics.blogspot.com/2011/12/maariamman-thaalattu.html

******************************************

முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தம்மகனே
ஐந்துகரத்தோனே அருளும் உமையாள் புத்திரனே
விக்கின விநாயகனே வெண்ணை யுண்டோன் தன்மருகா
முக்கணனார் பெற்றெடுத்த மூஷிக வாகனனே
வெட்பாலைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப்பிள்ளையாரே
சப்பாணிப்பிள்ளையாரே பொற்பாதம் நான்மறவேன்
“கோவலனார் தம்கதை”யை குவலயத்தில் நான்பாட
வின்னங்கள் வாராமல்   விநாயகனே முன்னடவாய்

புகழேந்திப் புலவர், கோவலன் கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/page03.html

******************************************

முந்தி முந்தி  விநாயகனே முருகுழலாள் புத்திரனே
கந்தருக்கு முன்பிறந்த கணபதியே முன்னடவாய்
ஏடு தவறாமல் எழுத்தாணி சாயாமல்
கோடு தவறாமல் கொழுந்தோலை சாயாமல்
நாவுதவறாமல் நல்லோசை தாருமையா
குரலில் குடியிருந்து குரலோசை தாருமையா
மாலியணுகாமல் வரமீய்ந்து காருமையா
வெட்பாலைக் கீருக்குஞ் சப்பாணிப் பிள்ளையாரே
சப்பாணிப் பிள்ளையாரே பொற் பாதம்யான் மறவேன்
பொற் பாதம் யான் மறவேன் பொன்னின்  கணபதியே
தப்பாமல் இக்கதைக்கு தக்கோனே முன்னடவாய்
பஞ்சவர்கள் தன் கதையைப் பட்சமுடன் நான்படிக்க
செஞ்சொல் சிவனுடைய தேவிதிருமகனே
வர்னமருக நல்ல வளர்கொம்பொருகேனே
“கர்ணன் திருக்கதை”யைக் காசினியோர் தாம்படிக்க
குற்றங்கள் வாராமல் குறையொன்றும் சேராமல்
கற்றமட்டும் யான் படிக்க கணபதியே முன்னடவாய்

புகழேந்திப் புலவர், கர்ணமகாராஜன் சண்டை
http://www.tamilheritage.org/old/text/ebook/karnama/page02.html

******************************************

முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தன்மகனே
சத்திக்கணபதியே தையனல்லாள் புத்திரனே
கந்தருக்கு முன்பிறந்த கணபதியே முன்னடவாய்
என்றுயர் தீர்த்தருளு மெம்பிரான் தன்மகனே
வித்தைக்கு வல்லவனே வேழமுகத்தோனே
சத்திக்கணபதியே சண்முகர்க்கு மூத்தோனே
அத்திமுகத்தோனே அருள்சடையாள் புத்திரனே
செல்வக்கணபதியே செங்கண்மால் தன்மருகா
ஆலடிப்பிள்ளையாரே அரசடி விநாயகரே

எடுத்துப்பலகார மின்பமுடன் நான்படைப்பேன்
கசகசபணியாரங் கற்கண்டு சர்க்கரையும்
அவல்கடலைபொறியுண்டை அதிரசந்தேன்குழம்பும்
கொப்பரைத் தேங்காயும் கோதுபடா சர்க்கரையும்
வாழைப்பழமும் வகைக்கொரு செங்கரும்பும்
அப்பமுடன்தோசை ஆன சுகிவடையும்
இந்தப்பலகார மின்பமுடனமுது செய்வாய்
கூட்டியமுது செய்வாய் குளக்கரையிற்பிள்ளையாரே

பாரதத்தை எழுதி வைத்த பார்வதியாள்புத்திரரே
ஐவரிட நற்கதையை அன்பாகப்பாடுதற்கு
எனக்கு வரந்தருவாய் ஈஸ்வரியாள்புத்திரனே
“பஞ்சவர்கள் நற்கதை”யைப் பாடவரமருள்வாய்

நாவுதவறாமல் நல்லோசை நீதருவாய்
ஏடுதவறாமல் எழுத்தாணி சாயாமல்
உன்பாதந் தஞ்சமென்று உச்சரித்தேன் புத்தியிலே
பூவும்புதுமலரும் பொன்னருகு அட்சதையும்
கொண்டுமே நான்சொரிந்து கோலமுடி சாய்த்தேன்
நெஞ்சுதனில்நீயிருந்து நின்றிருக்கும்பிள்ளையாரே
வழுத்தினேனுன்பாதம் மலர்தூவிதெண்டனிட்டேன்.

புகழேந்திப் புலவர், ஆரவல்லி சூரவல்லி கதை
http://www.tamilheritage.org/old/text/ebook/arasura/page03.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள்”

அதிகம் படித்தது