மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நான்மணிக்கடிகை காட்டும் தனிமனித ஒழுக்கம்

சு. தொண்டியம்மாள்

Aug 7, 2021

siragu naanmanikadigai1
முன்னுரை

இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல் கருத்துக்களைக் கூறி அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது.

மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம் இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும்.

வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படை காரணமாக இருக்கும். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர். இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் தனிமனித ஒழுக்கம் பற்றிய செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தனிமனிதன் என்பதன் விளக்கம்
தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு, மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி .
ஒழுக்கம்

ஒழுக்கம் என்பதற்கு நன்னடத்தை என்பது பொருள். ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கை. நான்மணிக்கடிகையில் நல்லொழுக்கம் செல்வத்தை ஒத்தது ஆகும். இதனை நீங்கினால் செல்வம் தங்காது என்று கூறியுள்ளப் பாங்கு இங்கு நோக்கத்தக்கது ஆகும்.

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு (நான். 8;:1)

நல்லொலுக்கம் செல்வம் போன்றது .முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப்போன்றது பிறரைப் புறங்கூறுதல் அவரைக் கொலை செய்வதற்கு சமம் ஆகும்.தம்மை மதியாரிடத்தில் சென்று ஒன்றை நாம் பெறுவது இழிந்த செயலாகும் என்று நான்மணிக்கடிகை கூறுகிறது.

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் – பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின். (நான் .23)

ஒற்றுமையின்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும் பொய்மையான ஒழுக்கம் பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை வாடச்செய்யும், நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம் பாலின் இனிய சுவையைக் கெடுக்கும். கூடத்தகாதாரிடத்தில் நட்புக்கொண்டால் அது தன் குலத்தை அழிக்கும்.என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவா்களிடத்துச் செல்வம் தங்காது என்று

“திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்
கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற
மறைக்க மறையாதாம் காமம் முறையும்
இறை வகையான் நின்றுவிடும்” (நான். 42 )

என்ற பாடலடிகளின் மூலம் அறியமுடிகிறது.மேலும் மற்றொரு பாடலில்
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை. ( நான் . 88)

கொடுமையான துன்பங்கள் பின்பு உண்டாகும் என்று பிறர் பொருளைத் திருடக்கூடாது. தனக்கு தகுதியான ஒழுக்கங்களை தவராமல் கடைப்பிடிக்க வேண்டும்.சிற்றினத்தாரோடு நட்புக் கொள்ளாமை வேண்டும்.பிறரிடம் பகை கொள்ளக்கூடாது.

ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யாரகண்ணங்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணோட்டம் இன்மையும் இல் (நான்.96:1 )

நல்லொழுக்கம் என்பது கல்வியறிவின் பயனாகும். அறம் செய்வதோடு செல்வத்தாலான இன்பத்தை பெறுவது முறையாக செல்வத்தை ஆளுவதன் பயனாகும். யாரிடமும் கண்ணோட்டமில்லாமை நடுநிலையோடு ஆட்சி செய்யும் முறையாகும். பிறரை ஆராய்ந்து அரசால்வது முறையான ஆட்சி என்று தனிமனிதனுக்குரிய ஒழுக்கங்களாக எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார்.

மானம்
சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் மானத்துடன் வாழ்வதே சிறந்தது. ஒருவர் தாம் நின்ற நிலையினின்று தாழாமலும், அங்ஙனம் தாழ்வு வந்தவிடத்து வாழாமலும் இருப்பது மானம் ஆகும். நான்மணிக்கடிகையில் மானம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. இதனை,

பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் தனக்கு ஒவ்வாச்
சொற்பட வாழாதாம் சால்பு (நான்.4:)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறிவுடையோர் தம் நிலை தாழ்ந்தால் உயிர் வாழ மாட்டார்கள் என்றும் சான்றோர்கள் பழிச்சொல் உண்டானால் உயிர் துறப்பார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகிறது.
அன்புடைமை
தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்றே அன்பு நான்மணிக்கடிகையில் ஒரு பாடலில் அன்பின் மிக்கவரைப் பிரிந்து வாழ்தலை விட நெருப்பில் புகுந்து உயிர் துறத்தல் சிறந்தது என்று கூறுகிறது. இதனை

ஒரு பாடலில் அன்பின் மிக்கவரைப் பிரிந்து வாழ்தலை விட நெருப்பில் புகுந்து உயிர் துறத்தல் சிறந்தது என்று கூறுகிறது. இதனை

…………………………………………..பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று (நான்.15)

என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.இதன் மூலம் அன்பின் மிக்காரைப் பிரியாமல் இருப்பது சிறந்தது என்பது புலப்படுகிறது.
நடுநிலைமை
ஒருவர் பக்கம் சேராமல் இருவர்க்கும் பொதுமை உடையவராய் இருத்தல் நடுநிலைமை ஆகும். கோடி நன்மை கிடைப்பதானாலும் நடுநிலை தவறுதல் கூடாது என்று 27 ஆம் பாடல் எடுத்துரைக்கிறது. இதனை,

…………………………………………நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள் பெறினும் (நான்.27)

என்ற பாடல் அடிகளின் மூலம் அறியலாம்.
ஒற்றுமை உணர்வு
ஒற்றுமையே பலம் என்பது பழமொழி. இப்பழமொழிக்கு ஏற்ப அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை,

மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை (நான்.23)

என்ற பாடல் வரியின் மூலம் உணரமுடிகிறது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒற்றுமை உணர்வு இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளதை அறியமுடிகிறது.அதாவது சண்டையில்லாமல் இருப்பது சிறந்தது.

நன்றி உணர்வு
ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது நன்றி உணர்வு ஆகும். நன்றி உணர்வு பற்றிய செய்திகளை விளம்பிநாகனார் பின்வரும் பாடல்களில் கூறியுள்ளார். இதனை,

…………………………………பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் (நான்.13:)
பிறர் செய்த தீமையை மறக்க வேண்டும். நன்மையை மறக்க கூடாது
……………
.தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான் (நான் . 61)
யார்க்கும் உதவி செய்யாதவன் துணையில்லாதவனாவான்.
………………………………………………………………… செய்தாரின்
நல்லர் சிதையா தவர். (நான் . 70)
நன்மை செய்தவர்களைவிட அந்நன்மையை மறவாதவர் மிக நல்லவர் ஆவார்.
என்று இப்பாடலடிகள் நன்மை செய்பவரின் தன்மைகளை புலப்படுத்துகிறது.

பிறரை மதிக்கும் குணம்
ஒவ்வொரு மனிதனும் பிறரை மதிக்க வேண்டும்.பிற்கால நீதி இலக்கியமான உலக நீதியும் மதியாதார் தலைவாசலை மிதிக்க வேண்டாம் என்கிறது நான்மணிக்கடிகையின் பின்வரும் பாடல் பிறரை மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனை,

……………………………..இகழ்ந்தொரு
பேணாது செய்வது பேதைமை (நான்.24)

மேற்கூறப்பட்ட பாடலடிகள் ஆனது பிறரை மதிக்காமல் இருப்பது பேதமை என்று குறிப்பிடுகிறது.

கடுஞ்சொல்
பிறர்க்கு துன்பந்தரும் கடுஞ்சொற்களை சொல்லாமல் இருப்பது சிறந்தது. ஒருவர் கூறும் கடுஞ்சொல்
பிறரை வருத்தும் தன்மை உடையது. நான்மணிக்கடிகையில் கடுஞ்சொல் குறித்த செய்தி ஒரு பாடலில்
இடம்பெறுகிறது.

………………………………..இனிப்பில்லா
வன்சொலால் ஆகும் வசைமனம் (நான்.106)

என்ற பாடலடியானது கடுஞ்சொல்லால் பழிச்சொல் உண்டாகும் என்பதை சுட்டுகிறது.

பிறருக்கு கொடுத்து உண்
ஒருவொரு மனிதனும் பிறர்க்கு கொடுத்து உண்ண வேண்டும் என்ற இக்கருத்து நான்மணிக்கடிகையில் இடம்பெறுகிறது.இதனை,

ஈத்துண்பான் என்பான் இசை நடுவான் (நான்.62)

என்ற பாடலடி சுட்டுகிறது. பிறர்க்கு கொடுத்து உதவும் பண்பால் ஒருவன் புகழ் பெறுவான் என்பது இங்கு நோக்கதக்கது.

பிறரை நாடி உண்ண கூடாது
ஒருவர் எப்போதும் பிறரை நாடியிருந்து உணவு உண்டு வாழ்வது சிறந்த பண்பு ஆகாது. இப்பண்பை தவிர்த்தல் வேண்டும் என்று பின்வரும் பாடல் எடுத்துரைக்கிறது. இதனை,

அருக்குக யார் மாட்டும் உண்டி சுருக்கு (நான்.89)

என்ற பாடலடி உணர்த்துகிறது.
முடிவுரை
நான்மணிக்கடிகையில் ஒழுக்கம் பிறரை மதித்தல், நட்பு கொள்ளுதல்,,,கொடுத்து உண்ணுதல், பிறரை நாடி உண்ண கூடாது பிறரிடம் அன்பு கொள்ளுதல்,புகழுடன் வாழ வேண்டும். பிற உயிர்களை கொள்ள கூடாது, பிறரை மதிக்கும் குணம் புறங்கூறுதல் கூடாது, கடுஞ்சொல் கூடாது நன்றியுணர்வு, ஒற்றுமையுணர்வு, நடுவுநிலைமை என்று தனிமனித ஒழுக்க நெறிகளை இப்பாடலடிகள் மூல் இக்கட்டுரை விளக்கியுள்ளது


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நான்மணிக்கடிகை காட்டும் தனிமனித ஒழுக்கம்”

அதிகம் படித்தது