மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்.

தேமொழி

Sep 15, 2018

periyar

பெரியார் யார்? அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார்? அவரது கொள்கைகள் யாவை? இது போன்ற கேள்விகள் பெரியார் வழி நடக்க விரும்புவோருக்குத் தெளிவாக அவரது எழுத்தின் மூலம் புரிந்தாலும், அவரைக் குறித்து அவரே என்ன சொல்கிறார் என்பதை அறியாமல், அவற்றை அறிவதிலும் அக்கறை கொள்ளாமல், பலர் பலவிதமாகப் பேசுவதைக் கேட்டு தங்கள் கருத்தை வளர்த்துக் கொள்வோரே இந்நாளில் பலர்.

அவர் பிறந்து 139 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெரியாரின் 140 ஆவது பிறந்த தினம் துவங்கிய இந்த ஆண்டில் அவரது வாழ்வையும், அவரது நோக்கத்தையும், அவரது கொள்கைகளையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகக் கொச்சைப்படுத்திப் பேசும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகரிக்கின்றனர். ஒருவர் இன்று மறைந்தால் அடுத்த மாதம் அவரை யாரும் நினைத்திருக்கும் நிலை கிடையாது என்பதே இன்றைய உலக வழக்கு. இருப்பினும், பெரியாரின் பெயரைக் கேட்டாலே இன்றும் கதிகலங்கும் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது, சிலிர்த்துக்கொண்டு எதிர் விவாதத்திற்குக் கிளம்புவோரைக் காணும் பொழுது அவரது ஆதரவாளர்களுக்கு ஒருவகையில் உள்ளூர மகிழ்ச்சியே ஏற்படும்.

அவர் இறந்து இரு தலைமுறைகள் கடந்த பின்னரும், சரியாக 44 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது கருத்துகளின் தாக்கம் எவ்வாறாக மக்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை அறிய வேண்டும் என்றால், இன்றும் நடக்கும் அவரது சிலை உடைப்புகளின் மூலம் அதை அறிய முடியும். இதற்கு அவர் யாரையும் கொலை, கொள்ளை, திருட்டு, சூது என்று எதையும் செய்யச் சொன்ன ஒரு சமூக நச்சு சக்தியும் கிடையாது. அவர் பாடுபட்டது எல்லாம் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூக அமைப்பிற்காக மட்டுமே. அனைவரும் சமம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாக வேண்டும் என்றுதான் விரும்பினார். அது அமையக் குறுக்கே நிற்கும் எந்தக் கருத்தையும் கேள்வி கேட்கவும், அவற்றைச் சாடவும், அக்கருத்துகளை மக்களை உடைத்தெறியச் சொல்லவும் அவர் தயங்கியதேயில்லை.

பெரியார் ஒரு சாதாரணமான ஊழல் மலிந்த வாழ்க்கையை நடத்திய ஒரு மூன்றாந்தர சராசரி அரசியல்வாதி அல்லர். அவரைத்தேடி மாநிலத்தின் தலைமைப் பதவி வந்த பொழுதும், அதை மறுத்து சமூக சீர்திருத்தப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதையே விரும்பினார். தேர்தலில் தமது இயக்கத்தை ஈடுபடுத்தி ஆட்சியைப் பிடிக்கும் ஆசையும் அவருக்கு இருந்ததில்லை. அவரது வாழ்வோ மிக நீண்டது, 94 வயதில் மறைந்தார். அதில் அரசியலில் நுழைந்த 1919 ஆம் ஆண்டு முதல் முழுநேர அரசியலில் அவர் பங்கு கொண்ட காலமோ ஒரு அரை நூற்றாண்டையும் கடந்தது. அந்த நீண்ட அரசியல் பயணத்தில் எழுத்து பேச்சு என்று இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பியதும் அதில் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே குறைவு.

பெரியார் தன்னைப்பற்றி அவர் யார் எனக் கூறுகிறார் என்று அவர் கைப்பட எழுதிய செய்தியின் மூலமே நாம் அறியலாம். இந்தக் கையெழுத்துப்படி திரு. வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்து 1974 ஆம் ஆண்டு வெளியிட்ட “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (முதல் தொகுதி)” என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இனி பெரியாரின் கூற்றாக அவர் குறித்து அவர் கூறுவதன் மூலமே நாம் அறியலாம்:

“நான் யார்?

ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதைஇருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.”

Naan Yaar

Naan Yaar2Naan Yaar3

அவ்வாறே, பெரியார் மேற்கொண்ட அவரது இயக்கத்தின் கருத்து, கொள்கை மற்றும் நோக்கம் என்ன என்றும் அவரது ‘குடி அரசு’ முதல் இதழின் முதல் தலையங்கத்தில் (குடி அரசு – தலையங்கம்; மாலை 1 – மலர் 1; 02.05.1925) அவர் கூறுவதன் மூலமாகவே அறியலாம்.

“மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும் ; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச்சண்டைகள் ஒழிய வேண்டும். கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலையவேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்”

மேலும், மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக அவர் உழைக்குங் காலத்தில், அவரைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையாவது, செய்கைகளையாவது  சிறிதளவும் அச்சமின்றி நண்பர், பகைவர் போன்ற எண்ணங்களுக்கு இடங் கொடாது, எவரிடமும் வேறுபாடு காட்டாது எவரையும் கண்டிக்க தாம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் அதே தலையங்கத்தில் மேலும் கூறுகிறார். மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்றவேண்டும். ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் அகலவேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும் என்பது போன்ற அவரது கொள்கைகள் யாவும் சமுதாய நோக்கம் கொண்டது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வழியில்லை.

தனது முதல் இதழின் முதல் தலையங்கத்தில் தனது கொள்கைகள் என்னவென்று உலகுக்கு அறிவித்த பெரியார், இக் கொள்கைகளைத் தம் இறுதி மூச்சுவரை அச்சமின்றி கடைப்பிடித்தார். அதற்காகச் சிறை செல்ல நேரிட்டாலும் தயங்காது தனது நோக்கம் மனித நேயக் கொள்கை என்றால் அதை நாடெங்கும் தொடர்ந்து பரப்பியவர் பெரியார் என்பதுதான் அவர் குறித்த வரலாறு.

பெரியார் தமது கொள்கையில் கொண்ட உறுதிப்பாட்டை விளக்கும் திரு. வே. ஆனைமுத்து அவர்கள், “எந்த ஒரு நிலையை (stand) அவர் மேற்கொள்ள விரும்பினாலும் அதற்கு அவர் கொண்டிருந்த உரைகல் ஒன்றேயாகும். அதாவது, சுயமரியாதைக் கொள்கைக்கு ஆக்கமும்; பார்ப்பனரல்லாத மக்களின் சமுதாய இழிவு ஒழிப்புக்கும், நல்வாழ்வுக்கும் ஆதரவும் ஒரு இம்மி அளவு அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவருக்கு எப்போது தோன்றினாலும்-அதற்கு முன்னிடம் (Top Priority) கொடுத்து எந்த நிலையையும் மாற்றிக்கொள்வார்; எந்தப் புதிய நிலையையும் மேற்கொள்வார்” என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டின் போக்கை மாற்றியமைத்தவர் பெரியார் என்பதைப் பெரியார் வழியில் வந்த அவரது ஆதரவாளர்கள் மட்டும் சொல்கிறார்கள் என்பதில்லை; உலகெங்கிலும் உள்ள பெரியாரியல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தும் அதுவே.

பெரியார் புகழ் ஓங்குக.

_____________________________________

[1]

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (முதல் தொகுதி)

பெரியாரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு

பதிப்பாசிரியர்: வே. ஆனைமுத்து

பதிப்பு: முதற்பதிப்பு 1-7-1974

வெளியீடு: சிந்தனையாளர் கழகம், திருச்சிராப்பள்ளி – 2

திராவிடர் விடுதலைக் கழகம் மின்நூலகம் சேகரிப்பு

மின்னாக்கம்: பொள்ளாச்சிநசன்

www.thamizham.net – Free E book No: 3000

[2]

குடி அரசு – 1925

பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி – 1

இரண்டாம் பதிப்பு – 2008

பதிப்பாளர்: கொளத்தூர் தா. செ. மணி

பெரியார் திராவிடர் கழகம், சென்னை

_____________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்.”

அதிகம் படித்தது