மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சாகுல் அமீது

Dec 6, 2014

v.r.krishnayyar2உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரபல சட்ட நிபுணருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

1914 நவம்பர், 15ம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில், தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., இளநிலை படிப்பும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்தார். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இ.எம்.எஸ். நம்பூதிரி தலைமையிலான இடதுசாரி அரசில், அமைச்சராகவும் கேரளாவில் பணியாற்றினார். கேரளாவில் சட்ட அமைச்சராக பணியாற்றிய காலத்தில் நிலச்சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 1938ல் எர்ணாகுளம் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1952ல் எம்.எல்.ஏ., வாக சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் கேரளா தனி மாநிலமாக பிரிந்த 1957ல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் சட்டம், சிறைத்துறை, மின்சாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதவிக்காலத்தில் இருக்கும்பொழுது பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். உழைப்பு தான திட்டத்தை தொடங்கினார். ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டத்தை நிறைவேற்ற துணை புரிந்தார். மக்கள் தொண்டராக பயணித்தார்.

1965ல் அரசியலிலிருந்து விலகிவழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1968ல் கேரள ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். 1970ல் மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1973ம் ஆண்டில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று, ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். 742 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார். இவருக்கு பத்ம விபூஷன் விருது 1999ம் ஆண்டில் வழங்கப்பட்டது. விசாரணைக் கைதிகளுக்கு விதிமுறைப்படிபிணை வழங்குவதுதான் சரி என்று கூறினார்.

இவர் கேரளாவில் இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்தவர். பல தலையங்கங்கள் பல்வேறு ஊடகங்களில் ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் மற்றும் இந்திய அமைதிப் படையின் படுகொலைகள் குறித்து எழுதியுள்ளார்.

26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் சென்னை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அதை “நீதித்துறையின் பயங்கரவாதம்” என்று பகிரங்மாக விமர்சித்தார். அதன் பின்னர் தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தார்.

இன்றைய நீதித்துறையின் “பொதுநலன்” வழக்குகளுக்கு முன்னோடியாக இருந்தவர். தமது பணிக்காலத்தில் சிறைக் கைதிகளின் நலனைப் பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர். சுற்றுச் சூழல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இப்படி பன்முகம் கொண்ட பெருந்தகையாளர்!!

அத்தகைய பெருமகனாரின் இறப்பிற்கு சிறகு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்”

அதிகம் படித்தது