மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீரியல்

முனைவர் வேல்.கார்த்திகேயன்

Aug 17, 2019

siragu neeriyal5

இலக்கியங்கள் காலந்தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் வரலாற்றுப் பெட்டகங்களாக விளங்குகின்றன. இலக்கியங்களின் வாயிலாக ஒரு நாட்டின் வரலாற்றையும், மக்களின் பழக்கவழக்கங்களையும் அறியலாம். குறிப்பாக பண்டைக்கால மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வினையே மேற்கொண்டான். இவ்வுலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. உலகில் தோன்றிய உயிரினங்களில் ஒன்றாகிய மனிதனும் இவற்றின் துணைகொண்டே செயல்படுகிறான். உலகமக்களின் உயிர் வாழ்விற்கு மட்டுமின்றி அனைத்துப் பயன்பாட்டிற்கும் நீர் உதவுகிறது. நீர் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. அத்தகைய நீரின் இன்றியமையாமையை விளக்குவதே இக்கட்டுரையாம்.

நீரின்றி அமையாது உலகம்

மனிதனை மகிழ்விப்பதும் வாழ்விப்பதும் இயற்கையாகும். இயற்கையின் இயக்கத்தில் தான் மனிதனின் வாழ்க்கையும் இயங்குகிறது. இலக்கியங்கள் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனிதவாழ்வினைப் போதித்தன. சங்ககாலப் புலவர்கள் மாந்தர்களை வருணிப்பதற்கும் வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் நிலத்தின் வகைப்பாட்டினைச் சுட்டுவதற்கும் இயற்கைக்காட்சிகளைப் பயன்படுத்தினர் என்றால் மிகையாகாது. இயற்கைக்கும் மனிதன் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தண்ணீர் தான். பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் நீருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் தந்து வருகின்றனர். மக்கள் வாழ்வு நீரையே நம்பி இருந்துள்ளமையையும் அதனைப் போற்றியும் பாதுகாத்தும் வந்துள்ளமையும் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றுவதனை அறிந்துணரலாம். இலக்கண நூல்கள் உணர்த்தும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய மூன்றனுள் கருப்பொருள்கள் பதினான்கனுள் ஒன்றாகக் கருதப்படுவது நீர்நிலையாம்.

குறிஞ்சி நில நீர்நிலையாகச்சுனையும் அருவியும், முல்லைநில நீர்நிலையாக காட்டாறும், மருத நில நீர்நிலையாக குளமும் பொய்கையும் பழனமும் ஆறும் நெய்தல் நில நீர்நிலையாக நீர்ச்சுழியும், கடலும் பாலை நில நீர்நிலையாக வறுங்கயமும் புலர்ந்த சுனையும் அக்கால மக்களின் தேவைகளை நிறைவு செய்துள்ளன என்பதனை அறியமுடிகிறது.

குறிஞ்சி நில மக்கள் மலைக்கண் அழகுற ஓடிவரும் அருவி நீரைப் பயன்படுத்தி மலைச்சரிவுகளில் பயிரினை விளைவிப்பதையும் மருதநில மக்கள் நீர்வளத்தைச் சிறப்பாக பயன்படுத்தி நெல் விளைவித்ததையும் நெய்தல் நில மக்கள் கடல்நீரைக் கொண்டு உப்பு விளைவித்ததையும் வாணிபம் செய்ததையம் சங்ககால இலக்கியங்கள் பறைசாற்றும்.

குறிப்பாக இயற்கைவளங்களில் நீரின் பங்கு முதன்மையானது. நாம் வாழும் இந்த பூமியில் தண்ணீரில் 97 விழுக்காடு கடல் நீராகவும் ஒரு விழுக்காடு துருவப் பிரதேசங்களில் பனிக்கட்டிகளாகவும் மீதமுள்ள இரண்டு விழுக்காடு தான் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளின் நீராகவும் அமைந்துள்ளது. இத்தகைய நீரைப் போற்றிப் பாதுகாப்பது நம்அனைவரின் கடமையாகும்.

siragu neeriyal4நீரின் இயல்பு

தமிழில் இன்று கிடைக்கும் முதல் நூலாக விளங்கும் தொல்காப்பியத்தில் உலகம் என்பது ஐம்பூதங்களின் கூட்டு என்பதனைத் தெளிவாக உணர்த்துகிறது. நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தின் கூட்டுக்கலந்த கலவை என்பதனைப் பின்வரும் நூற்பா உணர்த்துகிறது.
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் (தொல்காப்பியம் நூற்பா 635 )
மேலும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகள் கூறுமிடத்து உவகைக்குரிய நிலைகளன்கள் நான்கனுள் ஒன்றாக விளையாட்டு என்று சுட்டிக்குறிப்பிடுகின்றார்.

தலைவனும் தலைவியும் ஆறு, குளம், பொழில், தம் நாட்டின் எல்லைகடந்தும் நீர்நிலையில் விளையாடுதற்குரியர் என்றும் குறிப்பிடுவதனை நூற்பாவழி உணர்ந்தறியலாம்.
செல்வம் புலனே புணர்வு விளையாட்டெ
றல்லல் நீத்த உவகை நான்கே ( தொல். நூற்பா 1205 )
யாறும் குளனும் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப ( தொல். நூற் 1137 )
சங்க காலத்தில் ஆறு குளம் முதலான நீர்நிலைகள் தலைவனும் தலைவியும் நீராடி மகிழ்தற்குரிய நிலையாக இருந்துள்ளதனைப் பாடல்கள் வழி அறியலாம். இதனைப் புனலாடல் என்றும் இன்பவிழா என்றும் குறிப்பர்.

நீரின் முக்கியத்துவம்

உலகில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று நீர் ஆகும். இந்நீருக்காக இன்றைய மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பல. ஆறு, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளையும் விளைநிலங்களையும் இக்கால மக்கள் குடியிருப்பு பகுதிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நீரை சேமிக்கும் நில அமைப்புகள் அடியோடு மாற்றமடைந்து வருகின்றன. இக்காலத்தில் மக்கள் முறையாக சேமிக்காமலும், சேமித்த நீரை முறையாகப் பராமரிக்காமலும், தண்ணீருக்காகவும், தண்ணீராலும் பல்வேறு துன்பங்களை அடைகின்றனர். நீரின் பற்றாக்குறை ஒருபுறமும் மழைநீரினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் உடைமைகளை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாயினர் என்பது ஓருபுறமும் மறுக்கமுடியாத மறைக்கமுடியாத உண்மையாகும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் இன்றைய மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து அதனை முறையாகப் பராமரிக்காததே ஆகும். ஆனால் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் பருவம் தவறாமல் பெய்யும் மழைநீரைத் தேக்கி கயம், வாவி, தடாகம், குட்டம், குளம், ஏரி. கிடங்கு, மடு, மதகு, மடை, ஏந்தல், தாங்கல் போன்ற நீர்நிலைகளை உண்டாக்கி அவற்றிலிருந்து தேவைக்கு ஏற்ப நீரைச் சரியாகப் பயன்படுத்தினர். ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே பெய்யக் கூடிய மழைநீரைத் திட்டமிட்டு குளம், ஏரி முதலியவற்றில் தேக்கி அவற்றை முறையாகப் பாதுகாத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் பண்டைய மக்களின் நீர்மேலாண்மைத் திறன் வியப்பிற்குரியது.

நீர் தாரத்தைப் பண்டைய மக்கள் உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரை முறையாகச் சேமித்து, சேமித்து நீரை திறம்படப் பயன்படுத்தியதன் மூலமே பண்டைய தமிழகத்தில் வேளாண்மை பெரிதும் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து பயிர்த்தொழிலுக்கும் உயிர் வாழ்க்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர். பண்டைய மக்கள் மழையின் வருகையினை வானத்தின் தோற்றம், மேகத்தின் இயக்கம், காற்று வீசும் திசை, கோள்களின் நிலைமை ஆகியவற்றைக் கொண்டு கணிக்கும திறன் பெற்றவர்களாகவும் விளங்கியதை இவ்விலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

சங்க காலப் புலவர்கள் இயற்கைவளம் சிறக்கவும் செழிக்கவும் ஆறுகளே அடிப்படை என்பதை உணர்ந்து பாடல்கள் பாடியுள்ளனர். குறிப்பாக காவிரி, பொருநை, வையை என்னும் ஆறுகளைப் புகழ்ந்து கூறியுள்ளனர். பரிபாடலில் வையையின் சிறப்பினையும் வையை புனல் விரிந்து பரந்தது எனப் பலவாறு நல்லந்துவனார் புகழ்ந்துரைக்கும் பாடலடிகள் பின்வருமாறு
நறுநீர் வையை (பரி 11:140 )
அந்தண் புனல் வையை ( பரி 12:10 )
தீம்புனல் வையை ( பரி 22:15)
பூமலி வையை ( பரி 20:11 )
பேநீர் வையை ( பரி 7 :84 )
தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையை ( பரி 17: 44)
மாசில் பனுவற் புலவர் புகழ்பல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரிந்து வினை நந்தத்
தாயிற்றே தண்ணம் புனல் ( பரிபாடல் :6 )
இரட்டைக்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் காவிரியின் சிறப்பினை வான்பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி எனப் புகழ்ந்துரைக்கின்றது. சங்ககால மக்களின் சேமிப்பினையும் பயன்பாட்டினையும் இன்று நாம் எண்ணிப்பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. பொருநாராற்றுப்படையில் சோழன் கரிகாலனின் சிறப்பினை முடத்தாமக் கண்ணியார் பாராட்டுகிறார். அப்பாடலடிகள்:
நுரைதலைக் குரைபுனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக்குடைய
ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கு நடுகிழ வோனே ( பொருநராற்றுப்படை 240-248 )

siragu neeriyal2

நீரானது குளத்திலும் கோட்டகத்திலும் புகுந்தோறும், நீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட நெற்கதிர்களை மலையாக அடுக்கிக் குவித்து வரம்பு கட்டப்பட்ட ஒரு வேலி நிலத்தில் ஆயிரங்கல் நெல் விளையுமாறு வளம் செய்யும் காவிரியால் பாதுகாக்கப்படும் நாட்டைத் தனக்கே உரியவன் கரிகாலன் எனப் புகழ்கிறார்.
சைவத்திருமுறைகளில் ஒன்றான சுந்தரர் தேவாரத்திலும் காவிரியாற்றின் சிறப்பு பேசப்படுகிறது.
வார்கொள் அருவி பலவாரி
மணியும் முத்தும் பொன்னுங் கொண்டு
ஆர்க்குந் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறே (சுந்தரர் தேவாரம் 60 )
அரசனைப் புலவர்கள் வாழ்த்துதல்

வறுமையால் வாடிய புலவரது ஏற்ற கைநிறைப் பொன்னை வாரிச் சொரியும் வழுதி மன்னனைப் போல தமிழ் வையை, நிலத்தின் கண் பொன்னைப் பரப்பும் சிறப்பான இயல்பு என்றும் குன்றாது நின்று ஒளிர்வதாக என்று வாயார வாழ்த்தித் தென்திசை நோக்கி நடந்தனர் என்று நீரின் சிறப்பினைப் பரிபாடலில் வாழ்த்துகிறார் புலவர்.

அரசனும் மக்களோடு நீராடி மகிழ்தல்

மதுரை மக்களுடன் பாண்டிய மன்னன் வையையில் நீராடிய சிறப்பை ஒரு புலவர் நயம்படச் சித்தரிக்கின்றார். ஆயிரம் கண்களையுடையவனாகிய இந்திரன் ஆகாய கங்கையாற்றில் தேவர் குழாத்துடன் கூடி நீராடியது போல, பாண்டியன் கூடல் மாநகரத்து மக்களுடன் கூடி வையையில் நீராடி மகிழ்ந்தான் என்று கூறுவதன் மூலம் பாண்டிய மன்னனின் சிறப்பு வெளிப்படுகிறது.
வெருவெரு சொல்யான் வீங்குதோள் மாறன்
உருகெழு கூட லவரோடு வையை
வருபுன லாடிய தன்மை பொருவுங்கால்
ஆந்தர வானியாற்று ஆயிரங் கண்ணினான்
இந்திர னாடுந் தகைத்து (பரி 2:90-97 )
மிகச் சிறப்பாக ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல்நீரை மேகம் முகந்து கொண்டு மலையைப் போல் குவித்து பெரு மழையைத் தந்து வளம் பெருக்கும் நிலையினைப் புறநானூறு கூறுகிறது.
நீண்டு ஒலி அழுவம் குறைய முகந்து கொண்டு
ஈண்டு செலல் கொண்மூவேண்டுவயின்
மன்பதையெல்லாம் சென்றுணர் கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு (புறம் 161:1-7 )
கங்கை கரையை மிகுதியான நீர் மிக்க வளமையுடையதாய் எடுத்துரைக்கின்றார்.
உருமுரறு கருவிய பெருமழை ( அகம் 158: 1 )
புதுமழையின் சிறப்பினை வம்பப் பெரும் பெயல் ( புறம் 325 ) என்று கூறுவதால் நீரின் வளத்தினை உணர முடிகிறது. பதிற்றுப்பத்தில் கார்கால இயற்கை நிகழ்வுகளை எடுத்துரைப்பது சிறப்பான ஒன்றாகும்.
உலகம் புரக்கும் உருகெழு சிறப்பின்
வண்ண கருவிய வளங்கெழுமஞ்சூல்
காலை யிசைக்கும் பொழுதொடு
என்று கூறப்படுவதன் வழி கார் காலத்துப் பெருமழை காலை நேரத்தில் பெய்யும் என்றும் அது மனத்திற்கு இனிமை தரும் என்று கூறுவதனை உணர முடிகிறது.
நீர் நிலைகளில் சங்க காலத்தில் பொய்கைகளும் நிறைந்து காணப்பட்டன. இதனை
தண்துறை ஊரன் ( குறுந் 91:3 )
தண்ணந் துறைவன் ( குறுந் 9:7 )
பொய்கை ஊரன் (குறுந். 61:5 )
என்னும் தொடர்களால் அங்கு இருக்கும் தலைவனை பொய்கையுடன் இணைத்துக் கூறுவதனை அறியலாம்.
ஊர்கள் முழுவதும் வண்டுகள் உறைந்து வளமலர்கள் நிறைந்த குளிர் பொய்கைகள் நிறைந்ததாக இருந்தன என்று ஐங்குநுறூறு குறிப்பிடுகிறது (88:1-2 )(439 :2-3 )
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே ( குறுந் . 113:1-2 )
என்பதனால் காட்டாற்றிலிருந்து வரும் வெள்ள நீர் பொய்கைபயில் சேர்ந்திருக்கலாம் என எண்ண முடிகிறது.

நீர் மேலாண்மை

தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையும் அறிந்து நம் முன்னோர்கள் நீர்த்தேக்கத்தையும் ஏற்படுத்தினர்.

ஏரிகளின் பங்கு மிக முக்கியமானது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும். இது ஏரி அமைப்பதில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பு சிறுபஞ்சமூலம் நூலில் காரியாசான் ஏரிகள் அமைக்கப்பட வேண்டிய வரைபடத்தைத் தருகின்றார்.
குளந்தொட்டு கோடு பதித்து வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி – வளந்தொட்டு
பாடுபடுங் கிணற் றோடொன்றில் வைம்பாற்
கடுத்தான் ஏகு சுவர்க்கத் தினிது. ( சிறுபஞ்சமூலம் )

siragu neeriyal1

இப்பாடலின் விளக்கம் ஓரு ஏரியைக் கீழ்க்கண்ட 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் என்பதாம்.

1)குளம் (குளம்தொட்டு ) 2) கலிங்கு ( கோடு பதித்து ) 3) வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல்( வழிசித்து ) 4) பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆய்க்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல் ( உழுவயலாக்கி ) 5) பொதுக்கிணறு அமைத்தல் ( கிணறு ) முதல் நான்கு அங்கங்களும் கொண்டவை. நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஏரிகள் ஆனால் ஏரிகளில் நீர் குறைவாகும்போது ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது அதிக நீர் விரயமாக்கும் வழிஃ அந்த நேரங்களில் மதகுகள் மூலம் நீர்ப் பாய்ச்சுவதை விட நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது. சுpறந்த மேலாண்மை வழியாகும். எல்லோரும் கிணறு தோண்ட முடியாது. ஆகவே பொதுக்கிணறு அமைத்து அனைவரும் தண்ணீரைப் பாய்ச்சிக் கொள்வது சிறந்த வழியாகும். தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர் மேலாண்மை உத்தி சங்கம் மருவிய காலத்தில் இருந்ததென்பதும் அது இன்று மீண்டும் பயனுக்கு வருகின்றது என்பதும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

ஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்பதனைச் சங்கப் புலவர் கபிலர் வரையறுத்துக் கூறியுள்ளார். ஏரியின் நீளம் குறைவாகவும் ஆனால் அதிக கொள்ளளவு கொண்டதாகவும் சிக்கனமான வடிவமைப்புடன் எட்டாம் பிறை வடிவில் ஏரியின் அமைப்பு இருக்க வேண்டும் புறநானூற்றுப் பாடல் வழி தெரிவிக்கின்றார்.

அற்றையும் பொறையும் மணந்த தலைய
எண்ணாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ (புறம் 118).
அக்காலத்தில் அரசன் பெயரில் குளம் இருந்ததனை நற்றிணைப் பாடல் தெரிவிக்கின்றது.
கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர் ( நற். 340 )
குளங்களுக்குக் காவலர்கள் ( மடைவாரியர்கள் ) நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதனைப் பின்வரும் பாடலடி குறிப்பிட்டுள்ளனர்.
மடைவாரியர்கள் கண்மாய் குடும்பன் ( அகம் 252 )
நீர் வளத்தோடு இணைத்து ஊரையும் சிறப்பித்துள்ளனர் என்பதனை நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர் ( அகம் 237 ) என்ற அகநானூற்றின் வரியால் அறியமுடிகின்றது.

மன்னனின் தலையாய கடமை

மழைநீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமைகளுள் ஒன்று என்பதனைப் புறநானூறு உணர்த்துகிறது.
அடுபோர்ச் செழிய அகழாது இகழாது வல்லே.
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் ( புறம் 18: 27-28 )
சோழநாட்டில் காடுதிருத்தி நாடாக்கி, குளங்களை உருவாக்கி வளம் பெருக்கும் முயற்சி மேற்கொண்டதைப் பட்டினப்பாலை பாடல் புலப்படுத்துகின்றது. காடழித்து, நாடாக்கி, குளங்கள் பெருக்கி, நீர் வளம் கொண்டு குடிமக்களைக் காத்;த கரிகாலன் என்பது உணர்த்தப்படும் செய்தியாகும். காடு கொன்று நாடாக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ ( பட்டினப்பாலை : 283 286 )
நீரியல் சுழற்சிமுறை
நீரியல் சுழற்சி முறையைப் பட்டினப்பாலையில் உருத்திரங் கண்ணனார் ,கடலிலிருந்து ஆவியான விண்நீர் மழையாக வந்து நிலத்து உயிர்தந்து கடலில் கலந்து மீண்டும் ஆவியாகி மழைபொழியும் என்று நீரின் சுழற்சியை மிகத் தெளிவாக அன்றே கூறி இருக்கின்றனர்.
வான்முகந்த நீர் மழைப் பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம் போல் நீரின்றும்
நிலத்துஏற்றவும் நிலத்தினின்றுநீர்ப பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம் ( பட்டினப்பாலை 126-131 )
நீர் மேலாண்மை என்பது இந்தியாவை பொருத்தவரை மிகப் பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும் கலாச்சார வடிவமும் ஆகும்.

இந்த தொழில் நுட்பங்கள் தான் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தை அந்த இடத்திற்கு தகுந்தவாறு அமைத்து இருந்தனர். ஆற்றுவெள்ளம் மழைபொய்த்துப்போகும் காலம், நிலத்தடிஆற்றல் இருந்து நீரை சேகரித்தல். நிலத்தடி ஊற்று நீரை சேகரித்தல் நீராவி ஆகாத அளவுக்கு கிணறுவெட்டி அமைத தினசரி உபயோகத்துக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்துதல் இப்படியாக மழைநீரை சேகரித்து அதை முறையாக பராமரித்தல் போன்ற அனைத்து நீர் மேலாண்மை உத்திகளையும் அறிந்து செயல்பட்டுள்ளனர்.

நீர் அரண்

நீர் மேலாண்மை நுட்பத்தில் நீர் உற்பத்தி செய்தல் , நீரைச் சேகரித்தல், நீரைப் பாதுகாத்தல் போன்றன மட்டும் நிர்வகிக்க வில்லை. நீரையே அரணாகப் பயன்படுத்தும் மேலாண்மையையும் அறிந்திருந்தனர். நீரும் ஒரு சிறந்த அரணாக இருந்தமைக்கு சான்றுகளாக ஆழமான ஆறும் கடலும் சில கோட்டைகளின் இயற்கை அரணாக இன்றும் விளங்குகின்றன. தென்திசையில் அமைந்த இலங்கை, கடல் சூழ்ந்த நாடு, பாரதநாட்டின் படையெடுத்த பகையரசர் பலர் இலங்கையின் மேல் செல்லாதொழிந்ததற்குக் கடல் அரணும் ஒரு காரணமாகும். இதுபோல பழங்கால மக்கள் அகழி, கிடங்கு போன்றனவும் நீர் அரணாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் .

நிறைவுரை

மனித வாழ்க்கைக்கும் நல்ல உடல்நலத்திற்கும் சுத்தமான நீர் தூய்மையான காற்று கலப்படமில்லா உணவு முக்கியமானது . இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய மனிதன் சுத்தமான நீரைப் பருகினால் தான் நோயின்றி வாழ முடியும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கூற்றுப்படி மகிழ்ச்சியான வாழ்வுக்கு நீர் முக்கியமான ஒன்றாகும். சங்காலத்தில்
அறியாமையின் காரணமாகவோ குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாகவோ, பாசிமூடிய நீர்நிலைகளில் மக்கள் தங்கள் குடிநீர்த்தேவையைப் பூர்த்திசெய்து கொண்டமை காணப்படுகிறது.
ஊர் உண்கேணி உண்துறை
பாசி அற்றே பசலை ( குறுந் 399 : 1-2 )
நீரின் அருமை பெருமையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. நீரின்றி நிலமும் நிலமின்றி நீரும் இல்லை என்பது கண்கூடு. இதனைக் கீழ்காணும் புறநானூற்றுப்பாடல் உறுதிசெய்கின்றது.
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோ ரீண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
என்று கூறுவதன்மூலம் நீரின் சிறப்பு உணரமுடிகிறது. ஒரு நாட்டின் வளம் அதன் நீர் மேலாண்மையைப் பொருத்தே அமைகின்றது. சுருங்கக் கூறின் நீரின் தன்மை இயற்கையோடு இணைந்த ஒன்றாக இருந்தமையால் மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் ஒன்றாக விளங்கியுள்ளமை உணர்ந்தறியலாம்.


முனைவர் வேல்.கார்த்திகேயன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீரியல்”

அதிகம் படித்தது