மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)

பாவலர் கருமலைத்தமிழாழன்

May 28, 2016

2nd jan 16 newsletter1ஈழமெனும்   தலைப்பினிலே   இலங்கை நாட்டில்

இயங்குகின்ற   தடாகமெனும் கலைவட்   டத்தார்

வேழமெனும் சுவைதமிழில்   கவிதைப் போட்டி

வைத்துலகோர் கலந்துகொள்ள   அழைத்தி   ருந்தார்

ஆழமான கருத்துடனே   கவிதை யாத்தே

அனுப்பியதில்   முதல்வதாகத்   தேர்வு   பெற்று

சூழபுகழ்   கவியருவி   விருது   வாங்க

சுடர்மனையாள்   துணையுடனே   இலங்கை   சென்றேன் !

 

விருதுதனைப் பெறுவதற்கு   முன்பு   ஈழ

விடுதலைக்காய்ப்   போர்புரிந்த   புலிகள்   தம்மின்

திருவடிகள்   பட்டயிடம்   காண்ப   தற்கே

திருவான   யாழ்ப்பாண   நகர்க்குச் சென்றேன்

அருநூல்கள்   குவிந்திருந்த   நூல கத்தை

அனல்தீயால்   எரித்திட்ட   சுவடு   மாறி

பெருமையுடன்   நிமிர்ந்துநிற்கும்   அழகு   கண்டு

பெருமிதமாய்   நூல்களினைத்   தொட்டுப் பார்த்தேன் !

 

kaasi ananthan nerkaanal6

 

புவிவியந்து   பார்த்தவனின்   அடிகள்   தாங்கி

புலித்தலைவன்   பிரபாவைச்   சுமந்த   மண்ணாம்

நவில்தோறும்   நவில்தோறும்   நாவில் சூட்டை

நன்கேற்றி   மறவுணர்வை ஏற்றும்   மண்ணாம்

செவிகளிலே   இன்னுமவர்   முழக்கம் கேட்டுச்

செயலூக்கம்   பெற்றிருக்கும்   சிவந்த   மண்ணாம்

குவித்திரண்டு   கைகளிலே   வவுனியா   மண்ணைக்

கும்பிட்டு   நெற்றியிலே   திலக   மிட்டேன் !

 

உலகத்தை   அண்ணாந்து   பார்க்க வைத்தே

உயர்தமிழன்   வீரத்தைக்   கண்முன் காட்டிக்

குலம்காக்கப்   போர்புரிந்த   யானை யிறவு

குலைநடுங்கச் சிங்களரை அஞ்சச் செய்து

புலம்மீட்கப்   போர்புரிந்த   சாவகச் சேரி

புறம்காட்டா   கிளிநொச்சி முல்லைத்   தீவை

வலம்வந்து   வலம்வந்து   மண்ணைத்   தொட்டு

வணங்கிவீர   வணக்கத்தைச்   செலுத்தி   நின்றேன் !

 

பெண்களொடு   ஆண்களுமே   பயிற்சி   பெற்ற

பெருவன்னிக்   காட்டிற்குள்   கால்ப   தித்தேன்

கண்போன்ற   கடல்புலிகள்   பயிற்சி பெற்ற

கவின்நீச்சல்   குளம்தன்னைத் தொட்டுப்   பார்த்தேன்

உண்ணாமல்   உறங்காமல்   ஈழம்   காண

உயிர்த்தியாகம்   புரிந்திட்ட   புலிகள் தம்மின்

எண்ணத்தைச்   சுமந்தங்கே   வீசும் காற்றை

என்னுள்ளே   இழுத்தந்த   உணர்வைப் பெற்றேன் !

 

NYT2009042917502077C

 

வீடுநிலம்   முழுவதையும்   பறித்துக் கொண்டு

விடுதலைக்குத்   துணைநின்ற   தமிழர்   தம்மை

ஆடுமாட்டை   அடைத்துவைத்த   பட்டி போன்றே

ஆண்பெண்கள்   குழந்தைகளை   அடைத்து   வைத்த

ஏடுகளில்   படித்திட்ட   முள்ளி   வாய்க்கால்

எழுத்தினிலே   தரவியலா   துயர   மண்ணைக்

கேடுகெட்ட   தமிழகத்துத்   தமிழ   னாகக்

கேள்விகணை   துளைத்திடவே   பார்த்து   நின்றேன் !

 

வகைவகையாய்த்   துப்பாக்கி   ரவைகள்   குண்டு

வான்துளைத்த   ஏவுகணை   டாங்கி   என்றே

பகையான   சிங்களர்கள்   நடுந டுங்க

பாய்ந்திட்ட   வானூர்தி !   கடலுக்   குள்ளே

திகைக்கவைத்த   நீர்மூழ்கிப்   படகு   என்றே

தீரமுடன்   போர்புரிந்த   செய்தி   யெல்லாம்

மிகையன்று   வரலாற்றின்   உண்மை   யென்று

மீட்டுவைத்த  கருவிகளைச்   சான்றாய்க்   கண்டேன் !

 

maaveerar5

 

விதவையரே   நிறைந்திருக்கும்   முல்லைத்   தீவின்

வீடுகளின்   ஆண்களெல்லாம்   இராணு   வத்தின்

மதயானைத்   தாக்குதலில்   களப்பலி   யாக

மகன்களெல்லாம்   கொத்துகுண்டால்   எரிந்து   போக

நிதநிதமும்   செத்துசெத்து   இராணு வத்தின்

நீள்கண்ணில்   பட்டிடாமல்   பெண்பிள்   ளையை

விதவைத்தாய்   காக்கின்றாள்   பொத்தி   பொத்தி

வீதிகளில்   காப்பில்லா   அவலத்   தாலே !

 

உண்மைகளை   எழுதுதற்கோ   உரிமை   யில்லை

உரியவாழ்வு   இன்னுமங்கே   கிடைக்க வில்லை

கண்ணீரும்   சோகமுமே   நிறைந்தி   ருக்கும்

காட்சிகள்தாம்   என்கண்ணில்   பட்ட   தங்கே

புண்ணன்று   மறைவதற்கு   வடுக்க ளாக

பூத்தநீறு   நெருப்பாக   உள்ளா   ரின்றும்

எண்ணமெல்லாம்   ஈழமென்றே   உயிரை   ஈந்த

ஏந்தல்தாள் படைக்கின்றேன்   பெற்ற   விருதை !


பாவலர் கருமலைத்தமிழாழன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)”

அதிகம் படித்தது