மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும்

தேமொழி

Jun 11, 2022

siragu chicken

கீழடி அகழாய்வின்போது கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. ஆடு, மாடு, மயில், கோழி, மான் மற்றும் காட்டு பன்றிகளின் எலும்புகள் கிடைத்தன (கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கை -2019). சில எலும்பு மாதிரிகள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில் காட்டுப்பன்றி மற்றும் ஆடுகளின் எலும்புகளில் வெட்டு தடயங்கள் காணப்பட்டதால், அவை அசைவ உணவிற்காக அக்கால மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும், என்று சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த சங்க காலத் தமிழக மக்கள் வேளாண்மையையும், கால்நடை வளர்ப்பையும் முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

siragu keezhadi

ரோமப் பேரரசின் வெசுவியஸ் மலையில் கிபி 79ஆம் ஆண்டில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால், அதிலிருந்து வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் ‘பாம்பேய்’ நகரம் (City of Pompeii, Rome) ஓர் அடர்த்தியான சாம்பல் அடுக்கால் மூடப்பட்டது. இந்த சாம்பல் அடுக்குகளில் நிகழ்த்தப்பட்டு வரும் அகழாய்வின்போது 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேய் நகரில் துரித உணவகம் ஒன்று இருந்ததற்கான தடயங்கள் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது. ‘டெர்மோபோலியம்’ (Thermopolium) என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்கு சூடான உணவு வகைகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் முடிவு. இந்த உணவகத்தின் மேடையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இன்னமும் வண்ணம் மாறாமல் கண்ணைக் கவரும் அழகுடன் உள்ளன. அப்படங்களில் கோழி, வாத்துகள் போன்ற விலங்குகளின் உருவங்கள் வரையப் பட்டுள்ளது. கோழி மற்றும் வாத்து இறைச்சி உணவுகள் இங்கு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்களால் கணிக்கப்படுகிறது.

siragu pompeiஇதிலிருந்து, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் கோழியை உணவாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தக் கோழிகள் எவ்வாறு மனிதர்களின் வளர்ப்பு விலங்கானது, உணவில் இடம் பிடித்தது என்பது குறித்து அண்மையில் வெளியான ஓர் அறிவியலாய்வு பல புதுத் தகவல்களைத் தருகிறது. காட்டுக்கோழியானது வீட்டு வளர்ப்புக் கோழியாக ஆனது முன்னர் எண்ணியிருந்ததைக் காட்டிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மிகப் பிற்பட்ட காலத்தில் என்றும், இந்த கோழிவளர்ப்பு முயற்சியின் தொடக்கம் நெல் பயிரிடும் வேளாண்மையின் தொடக்கத்துடன் இணைந்தது என்றும் இப்புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.

தாய்லாந்தில் அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒன்றில் சிவப்பு காட்டுக் கோழிகள் (Wild red junglefowl — Gallus gallus spaedicus) வாழும் இடத்திற்கு அருகாமையில் நெல் பயிரிடத் தொடங்கிய பொழுது இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சீனா, பாகிஸ்தான் (சிந்து சமவெளி) பகுதிகள் முதற்கொண்டு உலகின் 89 நாடுகளின் 600 தொல்லியல் பகுதிகளின் ஆய்வுகளில், 8000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த கோழிகளின் எலும்புகள் கிடைத்தாலும், கோழி வளர்ப்பு எப்பொழுது, எங்கு தொடங்கியது என்பதை அறிய முடியாமல் இருந்தது. பரிணாம வளர்ச்சி ஆய்வாளர் சார்லஸ் டார்வின் சிவப்பு காட்டுக் கோழிகளில் இருந்து இன்றைய வளர்ப்புக் கோழிகள் (Gallus gallus domesticus) உருவாகியிருக்கலாம் என்ற தன் கருத்தை பறவைகளின் தோற்றத்தின் ஒப்பீடு அடிப்படையில் முன் வைத்தார். அத்துடன் கோழி வளர்ப்பின் துவக்கம் இந்தியா என்றும் அவர் கருதினார். இதுநாள் வரை தொல்லியல் அகழாய்வுகளில் இதற்கான சான்றுகள் கிடைத்து அவர் கூற்றை உறுதி செய்ய இயலாமல் இருந்தது.

siragu chicken1

அண்மையில் 2020 ஆம் ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 863 வாழும் கோழிகளின் மரபணு ஆய்வு முடிவுகளின் மூலம் தென்கிழக்காசியப் பகுதியில் வாழும் சிவப்பு காட்டுக் கோழிகளின் வழி வந்தவைதான் இன்றைய வளர்ப்புக் கோழிகள் என்பது தெரிய வந்தது. இந்த கண்டுபிடிப்பு முதன் முதலில் கோழி வளர்ப்பு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் துவங்கியது என்பதையும், சிவப்பு காட்டுக் கோழிகள்தான் வளர்ப்புக் கோழியின் மூதாதையர் என்பதையும் உறுதிப் படுத்தியது. புதிய கற்காலத்தில், சுமார் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் பயிரிட்ட சான்று கிடைத்த தாய்லாந்தின் மத்தியப்பகுதியான ‘பான் நான் வாட்’ (Ban Non Wat) பகுதியில் காலத்தால் பழமையான வளர்ப்புக் கோழிகளின் எலும்புகளும் கிடைத்தன. சற்றொப்ப 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பகுதிக்கு கோழிகள் அறிமுகமாகியுள்ளது என்றும், சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய ரோம் பகுதியில் கோழிகள் அறிமுகமானது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது (and that chickens were not domesticated in the Indian Subcontinent. Chickens did not arrive in Central China, South Asia, or Mesopotamia until the late second millennium BCE, and in Ethiopia and Mediterranean Europe by ∼800 BCE) என்கிறது ஆய்வறிக்கை (Joris Peters et al., 2022). ஆகையால் டார்வின் எண்ணியது போல கோழி வளர்ப்பு முறை இந்தியப் பகுதியில் தொடங்கவில்லை என்பதை இந்த ஆய்வின் முடிவால் அறிய முடிகிறது.

siragu chicken2நெல் வேளாண்மையும், கோழிகளும் சிந்து சமவெளி நாகரிகத்திலேயே இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. தொல்லியல் தடயங்களை மரபணு ஆய்வுகளுடன் இணைத்து ஆராய்ந்துதான் இன்றைய பெரும்பாலான ஆய்வுகளின் முடிவுகள் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவின் காலத்தால் முற்பட்டதாக தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த சிந்துவெளி நகரப் பண்பாட்டு (5000–3500 ஆண்டுகளுக்கு முன்னர் காலகட்டம்) முத்திரைகளில் கோழிகள் காணப்படுகின்றன. மேலும், சிந்துவெளியில் கோடைக் காலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்திய சிந்து சமவெளிப் பகுதியின் நெல் வேளாண்மையின் காலமும் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது (C.A. Petrie, et al., 2016). மரபணு அடிப்படையில் இக்கால வளர்ப்புக் கோழியின் நெருங்கிய மரபணு தொடர்பு தாய்லாந்து வகை சிவப்பு காட்டுக் கோழி என்பதால் கோழிவளர்ப்பின் துவக்கம் தாய்லாந்துப் பகுதி என்று கூறப்படுகிறது. சிந்துவெளியின் இந்திய வகை காட்டுக் கோழிகள் பிற்காலத்தில் தாய்லாந்து வகை கோழியுடன் இனக்கலப்பு கொண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் (A. Lawler, 2020). வரலாற்றுத் தகவலுடன் ஒப்பிடும் ஆய்வாளர்கள் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கோழி குறிப்பிடப்படப் படவில்லை என்றும் புதிய ஏற்பாட்டில் கோழி பற்றிய செய்தி இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

வேளாண் நெல் உற்பத்தியும், அதன் தொடர்ச்சியான தானிய சேமிப்பு முறைகளும் நெல்லை விரும்பி உண்ட காட்டுக் கோழிகளை வயல்வெளிகளில் உணவு தேடி வரச் செய்துள்ளது. ஆறே வாரங்களில் உணவுக்குத் தேவையான முதிர்ச்சியடையக் கூடிய விரைவான வளர்ச்சியையும், வேட்டையாட எளிதான கோழியின் இயல்புகளையும் அறிந்த மனித இனம் அவற்றை உணவுக்கான வளர்ப்பு விலங்குகளாக மாற்றிக் கொண்டது. பின்னர் மனிதப் பரவல் நடவடிக்கைகள், கடல் வணிக செயல்பாடுகள் ஆசியக் கோழிகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய இடங்களில் அறிமுகம் ஆகும் பொழுது கோழிகள் உணவுக்கான பறவையாகக் கருதப் படாமல் புதுமை நோக்கில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டும், சண்டைக் கோழிகளாக வளர்க்கப் பட்டும் வந்திருக்கிறது. பின்னர் கோழியின் மேல் கொண்டிருந்த புதுமை ஆர்வம் மங்கிய பின்னர் அது உணவுக்கான பறவையாக மாறியுள்ளது. இன்றைய உலக அளவில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரே பறவை கோழிதான்.

siragu chicken3சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் பயிரிடுதலின் தொடக்கமே கோழி வளர்த்தலின் தொடக்கம், அதற்கு முன்னர் கோழி ஒரு வளர்ப்புப் பறவை அல்ல என்பதே இந்த ஆய்வால் நமக்குக் கிடைக்கும் செய்தி. ஆய்வறிக்கை நெல் பயிரிடும் முறை வந்திராவிட்டால் கோழி இவ்வாறு மனிதர்களுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதையும் கூறுகின்றது. ஆக, அரிசி தானியங்களால் ஈர்க்கப்பட்ட காட்டுக் கோழிகள் மனிதர்களின் வளர்ப்பு வாழ்க்கைக்கும் உள்ளாகின. அதற்கான விலை; அவை தாமே மனிதர்களுக்கு உணவாகும் நிலையில் முடிந்துள்ளது. இன்று தாய்லாந்தின் ‘காவோ முங் கை’ (Khao Mun Gai), மலேசியாவின் ‘நாசி அயம் கோரெங் கம்பங்’ (Nasi Ayam Goreng Kampung), அல்லது தமிழகத்தின் கோழிப் புலவு (Chicken Biryani), ஆகியன அரிசிச் சோற்றுடன் கோழியையும் இணைத்து மக்கள் மிக விரும்பி உண்ணும் கோழி உணவுவகைகள் .

இரை போடும் மனிதருக்கே இரையாவது வெள்ளாடுகளின் நிலை மட்டும் அல்ல, கோழிகளுக்கும் அதே முடிவுதான்.

References:

[1] J. Peters et al. The biocultural origins and dispersal of domestic chickens. Proceedings of the National Academy of Sciences. Published June 6, 2022. doi: 10.1073/pnas.2121978119.

https://www.pnas.org/doi/pdf/10.1073/pnas.2121978119

[2] J. Best et al. Redefining the timing and circumstances of the chicken’s introduction to Europe and north-west Africa. Antiquity. Published June 6, 2022. doi: 10.15184/aqy.2021.90.

[3] M.S. Wang et al. 863 genomes reveal the origin and domestication of chicken. Cell Research. Vol. 30, June 25, 2020, p. 693. doi: 10.1038/s41422-020-0349-y.

[4] A. Lawler, Dawn of the chicken revealed in Southeast Asia. SCIENCE. 26 Jun 2020, Vol 368, Issue 6498, p. 1411; DOI: 10.1126/science.368.6498.1411

[5] C.A. Petrie et al. Feeding ancient cities in South Asia: dating the adoption of rice, millet and tropical pulses in the Indus civilisation. Antiquity , Volume 90 , Issue 354 , December 2016 , pp. 1489 – 1504. DOI: https://doi.org/10.15184/aqy.2016.210


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும்”

அதிகம் படித்தது