மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நைஜீரியா பொம்மைகள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 25, 2017

Siragu barbie-doll1

பெண் என்றாலே அழகு, மென்மை, தாய்மை என்று இந்தச் சமுதாயம் கட்டியமைத்ததின் எச்சம் தான் ஒரு பெண் குழந்தை விளையாட பொம்மைகள் வாங்கிப் பழக்குவது. அந்த பொம்மை கூட அழகாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதே இங்கு எழுதப்படாத விதி. இந்தச் சமூகத்தில் குறைபாட்டை எல்லாம் கொண்டாடும் வழக்கம் உண்டு. வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சிகப்பழகு பூச்சினை முகத்தில் பூசிக் கொள்ளும் பெண்களை நம்மால் காண முடியும்.

வெள்ளை தோல் மற்றும் சாம்பல் நிற முடி, இது அழகு அல்ல, அது ஒரு நிறமி குறைபாடு. ஒரு சில மாதங்கள் மட்டுமே கதிரவன் வெளிவரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த நிறமி குறைபாடு இருப்பதால் தான் அவர்கள் வெண்மை தோல் கொண்டு இருக்கின்றார்கள். அந்த மனிதர்களின் உருவ அடிப்படையில் உருவானவை தான் பார்பி பொம்மைகள்.

அந்த பொம்மைகள் அனைத்துமே வெள்ளை நிறத்தோடும், சாம்பல் நிற முடியோடும் தான் இருக்கும். அமெரிக்காவில் உருவான பொம்மை வேறு எப்படியும் இருக்க வாய்ப்பில்லை தான். இந்த பொம்மைகள் பல நேரத்தில் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை. ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் குழந்தைகள் தங்கள் நிறமும் இப்படி வெண்மையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவது அவர்கள் ஆளுமையை வளரும் பருவத்திலேயே சிதைத்து தனம்பிக்கையற்ற ஒரு வாழ்வினை அவர்களுக்குத் தருகின்றது.

இந்த நிலையினை மாற்றிக் காட்டியிருக்கின்றார் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு வணிகர். அவர் பெயர் டொபிக் ஒகோய (Taofick Okoya).

Siragu Taofick-Okoya

தன் உறவுக்காரக் குழந்தைக்காக கருப்பு நிற பொம்மை தேட, கடைகளில் ஒரு பொம்மை கூட கருப்பாக அவருக்கு கிடைக்கவில்லை, அதனால் 2007 ஆம் ஆண்டு நைஜீரிய பொம்மைகளை அந்த மக்களின் உருவ அமைப்போடு செய்து அதை கடைகளில் விற்க ஆரம்பித்தார்.

அந்த நாட்டின் மூன்று பெரிய பழங்குடி மக்களை இந்த பொம்மைகள் ஒத்திருக்கும் படி செய்தார். அதே நேரத்தில் பெண்ணியக் கொள்கைகளான அமைதி, அன்பு, சகிப்புத்தன்மை இவற்றை இந்த பொம்மைகள் பறைசாற்றுகின்றது, என்றும் தெரிவித்தார்.

Siragu barbie-doll4

இந்த வகை பொம்மைகள் இன்றைக்கு அதிக அளவில் பார்பி பொம்மைகளை விட வாங்கப்படுகின்றது. பிரேசில், அமெரிக்க, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்தும் இணையம் வழியே இந்த பொம்மைகள் வாங்கப்படுகின்றது என்றாலும் அமெரிக்காவில் விற்க இந்த பொம்மைகளுக்கு இன்னும் அனுமதி இல்லை.

உண்மையில் இந்த முயற்சியை பாராட்டியே தீர வேண்டும். வெண்மை நிற பொம்மைகள் மட்டுமே அழகு என்ற கோட்பாட்டினை உடைத்துக் காட்டி இருக்கின்றது.

Siragu barbie-doll6

ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண்ணியக் கொள்கைகள் என்று அவர் கூறும் அமைதி, அன்பு, சகிப்புத்தன்மை, பெண்ணுக்கு மட்டும் இருக்க வேண்டும் அதுவே பெண்ணியக் கொள்கை என்று கூறுவது ஏற்கத்தக்கது அன்று. அமைதி, அன்பு, சகிப்புத்தன்மை ஒரு போதும் புரட்சியை பெண்களிடம் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை அவர் புரிந்து கொண்டால் சிறப்பு.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நைஜீரியா பொம்மைகள்”

அதிகம் படித்தது