மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நோய் விரட்டும் மூலிகை உணவகம்

நிகில்

Feb 13, 2016

mooligai-unavagam4சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூலிகை உணவகத்தில் ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம்,  கீரை, பொரியல், வாழைப்பூ வடை, பிரண்டைத் துவையல், மூலிகை மோர் என அனைத்து வித்தியாசமான சுவையுடன் பெண் பணியாளர்கள் பரிமாறுகிறார்கள். இது மட்டுமல்ல காலை உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவையும் மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

காலையில் தயாராகும் மூலிகை இட்லி, கம்பு தோசை,  மாலை மூலிகை தோசை, திணை அல்வா, உளுந்தங்களி, சோளமாவு பணியாரம், கேழ்வரகு புட்டு,  உடலுக்கு வலு சேர்க்கும் நில வேம்பு கசாயம், சர்க்கரை நோய்க்கான ஆவாரைக் கசாயம், வேம்பு கசாயம், கொள்ளு ரசம், தூதுவளை சூப், கேழ்வரகு புட்டு, சிறு பருப்பு பாயசம், மூலிகை தேநீர் ஆகியவை எங்களுடைய சிறப்பான வகைகள்.

mooligai-unavagam3நாள் ஒன்றுக்கு பொதுமக்கள், சென்னை சென்ட்ரல் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், அல்லிக்குளம் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆணையரக பணியாளர்கள், நேரு அரங்கத்தில் உள்ளவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வந்து  சாப்பிட்டுச் செல்கிறார்கள்.  எந்தெந்த மூலிகையால் என்னென்ன பயன் என்று போர்டிலும் எழுதி வைத்து இருக்கிறார்கள். உணவகத்தின் முன்பு மூலிகை மற்றும் மூலிகைப் பொடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.  ஒரு முறை இங்கு வந்து சாப்பிட்டு செல்பவர்கள் மறுமுறை கட்டாயம் எங்களைத் தேடி வருவார்கள். காரணம் இந்த மூலிகைகளின் அற்புதம் அப்படி.

நான் ஆரம்பத்தில் சாலிகிராமத்தில் இந்த மூலிகை உணவகத்தை நடத்தினேன். அங்கு வரும் முக்கிய பிரமுகர்களால் அந்தப் பகுதி ஸ்தம்பித்து விட்டது. இடப் பற்றாக்குறை காரணமாக அதில் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அப்போது உணவகத்திற்கு வந்த மேயர் சைதை துரைசாமி, இந்த மூலிகை உணவின் அற்புதம் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும், இதனை மாநகராட்சி நடத்த முடியுமா என்று கேட்டார். உடனே நானும் சரி என்றேன். தற்போது பதினாறு பெண்கள், நான்கு ஆண்கள் என இருபது பணியாட்களுடன் தொடங்கினோம். லாப நோக்கம் எதுவும் இல்லாமல்  முழுக்க முழுக்க ஆரோக்கியம் சார்ந்து மட்டுமே இந்த மூலிகை உணவகம் நடத்தப்படுகிறது.

mooligai-unavagam5இதற்கு முன் இங்கு உணவகம் நடத்தியவர்கள் முப்பது ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் பதினைந்து ரூபாய்க்கு வாழை இலை சாப்பாடு கொடுக்கிறோம். இங்கு தயார் செய்யப்படும் உணவுகள் அனைத்து மூலிகை சேர்த்துத்தான் தயார் செய்யப்படுகிறது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கொள்கையுடன் இது செயல்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

நான் சித்த மருத்துவர் என்பதால் தமிழகம் முழுவதும் சிறு கிராமங்களுக்குக் கூட சென்று விடுவேன். எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த மூலிகை கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த ஊரில் உள்ள விவசாயிகளின் தொடர்பு எண்ணை வாங்கி வந்து விடுவேன். எப்போது எனக்கு எந்த மூலிகை தேவையோ அதனை அவர்களிடம் சொல்லி எனக்கு அனுப்பச் சொல்வேன். அதற்கு பணத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்திவிடுவேன். இதனால் மூலிகைத் தட்டுப்பாடு என்பது எங்களுக்குக் கிடையாது.

mooligai-unavagam2லாப நோக்கில் இது தொடங்கப்படவில்லை. மூலிகை உணவின் மகத்துவம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். செலவை விட வரவு குறைவு தான். இந்த உணவகத்தைத் தொடங்கும் போதே மேயர் செலவை விட வரவு குறைவாக வரும் போது அதனை நானே கொடுத்துவிடுகிறேன் என எனக்கு ஊக்கம் தந்தார். இன்று வரை மாதத்திற்கு எவ்வளவு அதிக செலவு  ஆகிறதே அதனை அவரே கொடுத்துவிடுவார். இந்த மூலிகை உணவகம் வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை இயங்கும். அரிய வகை மூலிகைக் கசாயம் கிடைக்கும் ஒரே இடம் எங்களுடைய மூலிகை உணவகம் தான் என்று சொல்வது பெருமையாக உள்ளது.

mooligai-unavagam1எங்களது மூலிகை உணவகத்தைப் பற்றி கேள்விப்பட்டு சென்னையின் பல பகுதியிலிருந்தும் சாப்பிட வருகிறார்கள். சர்க்கரை நோயாளிகள், அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் எங்களிடம் தயாராகும் நில வேம்பு கசாயம், ஆவாரைக்கசாயம் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு குணமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். நாம் சாப்பிடும் உணவின் வழியாக கண்டிப்பாக நோய் தாக்கத்தை குறைக்க முடியும். தொடர்ந்து சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம் என்பது தான் நான் இங்கு வருபவர்களுக்கு சொல்லும் அறிவுரை என்கிறார் உணவகத்தை நடத்தும் சித்த மருத்துவர் வீரபாபு.


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நோய் விரட்டும் மூலிகை உணவகம்”

அதிகம் படித்தது