மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 7

முனைவர் மு.பழனியப்பன்

Nov 21, 2020

siragu kathiresa chettiyar1மொழிபெயர்ப்புத் திறன்

பண்டிதமணி தானாகத் தமிழ் கற்றவர். வடமொழியை விரும்பி ஆசிரியர்பால் அணுகிக் கற்றவர். இதன் காரணமாக இருமொழி அறிவும் அவரிடம் நிரம்ப இருந்தது. இவ்விரு மொழியறிவைத் தமிழ்மக்கள் பயன்கொள்ளுமாறு பல வடமொழி நூல்களைத் தமிழாக்கம் செய்து தந்தார். இதன் காரணமாக தமிழும் தழைத்தது. வடமொழி இன்பமும் கிடைத்தது. அவ்வகையில் அவர் செய்த மொழிபெயர்ப்புகள் உதயன சரிதம், சுலோசனை, மண்ணியல் சிறுதேர், சுக்கிர நீதி, பொருள் நூல், மாலதி மாதவம் ஆகியனவாகும். இவற்றின் சிறப்புக்களை இப்பகுதி அறிவிக்கின்றது.

உதயன சரிதம்

பண்டிதமணியாரின் மொழிபெயர்ப்பில் முதலாவதாக உதயன சரிதமும், சுலோசனையும் வெளிப்பட்டன. உதயன சரிதம் என்பது உதயனன் என்பவனது கதையையும், அவன் மகன் நரவாகனதத்தன் வரலாற்றையும் விரித்துரைக்கும் கதையாகும். ‘‘வற்ச நாட்டிலே, கௌசாம்பி நகரத்திலே பாண்டவ குலத்திலே, சகக்கிரானீகன் என்னும் வேந்தற்கு மிருகாவதிபாற் றோன்றிய உதயனனது வரலாற்றை விரித்தும், அவன் புதல்வன் நாவாகனதத்தன் வரலாற்றைச் சுருக்கியும் கூறுவதாகும்’’ என்று இதன் நோக்கத்தைப் பண்டிதமணி அறிவிக்கின்றார். (உதயன சரிதம் முன்னுரைப்பகுதி) (உதயணன் என்பதே தமிழ் வழக்கு. ஆனால் உதயனன் என்ற வடமொழி ஒலிவழக்கை இந்நூலில் கையாள்வதாகப் பண்டிதமணியார் தெரிவித்துள்ளார்)

இச்சரிதம் வடமொழி வசனவடிவில் அனந்தாச்சாரியார் என்பவரால் ஸஹ்ருதயா என்னும் மதுரையில் இருந்து வெளிவரும் வடமொழி இதழில் எழுதப்பட்டிருந்தது. இதனைச் சன்மார்க்க சபையாரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பண்டிதமணி மொழிபெயர்த்து எழுதினார் என்பது இந்நூலின் வரலாறு ஆகும்.
திங்கண் மரபு சிறக்க பிறந்து நலம்
பொங்கு முதயனன்றன் பொற்சரிதம் – இங்கினிது
சொல்லுமுறையின் கட்டோன்றுந் தமிழப்புலவீர்
பல்லறங்க ளானும் பயன்
என்ற வெண்பாவில் தொடங்குகின்றது இக்கதை. பல்லறங்கள் சொல்லும் சரிதையாக இருப்பதால் இதனை மொழிபெயர்த்து அளித்தால் அறம்பெருகும் என்ற எண்ணத்தில் இதனைப் பண்டிதமணியார் மொழிபெயர்த்துள்ளார்.

வற்ச நாட்டின் மன்னன் சகச்சிரானீகன், இவ்வரசனின் மனைவி மிருகாவதி. இவ்வரசனுக்குத் திலோத்தமையின் வாயிலாக ஒரு சாபம் வந்து சேர்ந்தது. பதினான்கு ஆண்டுகாலம் இவன் மனைவியைப் பிரிய வேண்டும் என்பது அச்சாபம் ஆகும். இதன் காரணமாக இவன் மனைவி இமயமலைச்சாரலுக்குப் பிரிந்து போனாள். அப்போது அவள் கருவுற்றிருந்தாள். அவள் இமயமலைப் பக்கம் சென்று அங்குத் தவம் புரியம் சமதக்கினி முனிவர் ஆசிரமத்தில் தங்கினாள். அங்கே உதயனண் என்ற அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இக்குழந்ததை முனிவரின் குமாரனாக பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தது. குறிப்பாக யாழிசையில் மிகச் சிறப்புடன் விளங்கியது. இவனது யாழ் பயிற்றும் இனிமையைக் கேள்விப்பட்டு இவனின் தந்தை சாபம் தீரும் காலம் வந்துற்றபோது வருகை தந்து இவனையும் இவன் தாயையும் தன்னுடன் வாழ அழைத்துச்சென்றார்.

இவன் காளைப் பருவம் எய்தியபோது, உஜ்ஜயினி அரசன் தன் மகள் வாசவத்தையை மணம் முடிக்கவேண்டினான். ஆனால் உதயனன் இதற்கு மறுப்பு தெரிவித்தான். இதன் காரணமாக இயந்திர யானை ஒன்றை ஏவி அதற்கு மதம் பிடித்தது போல ஒரு நாடகத்தை உருவாக்கி, அதனை அடக்க வந்த உதயனனை சிறைபிடிக்கச் சூழ்ச்சி செய்து இவ்வரசன் அதனில் வென்றான். உதயனன் சிறையில் அடைக்கப்பட்டான்.

உதயனன் சிறைப்பட்டதை அறிந்த அமைச்சன் யௌகந்தராயணன் சூழ்ச்சி பல செய்து வாசவத்தையும், உதயனனும் தப்பிக்க வழி ஏற்படுத்தினான். பின்பு இருவரின் திருமணமும் நடைபெற்றது. இதன்பின் உதயனன் அரசை விரிவுபடுத்த எண்ணம் கொண்ட அமைச்சன் யௌகந்தராயணன் வாசவத்தையை மறைத்து அவள் எரியுண்ணப்பட்டாள் என்று கதைகட்டிவி்ட்டான். இதனை நம்பிய உதயனன் வருத்தி உளம் நைந்தான். இந்நேரத்தில் மகத நாட்டு அரசன் மகள் பதுமாவதியை உதயனன் மணக்க ஆவன செய்தான் அமைச்சன்.

இதன்பின் வாசவத்தை இருக்கும் இடத்தை அறிந்து அவளை உதயணன் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். இதன்பின் நரவாகன தத்தன் என்பவனைப் பிள்ளையாகப் பெற்றான். அமைச்சனின் அறிவுத்திறம் உதயனனை எந்நாளும் காப்பாற்றி வந்தது என்பதே உதயன சரிதக் கதையாகும்.

உதயன சரிதம் பதினைந்து வகுப்புகளாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பெற்றுள்ளது. இப்பகுப்புகள் ஒன்வொன்றின் முடிவிலும் அவ்வகுப்பின் செய்திகளை உள்ளடக்கிய வெண்பா ஒன்றோ அல்லது இரண்டோ படைக்கப்பெற்றுள்ளது. இவ்வெண்பாக்கள் கதைச் சுருக்கத்தையும் பண்டிதமணியாரின் கவிதையாற்றலையும் புலப்படுத்துவனவாகும்.

‘‘உதயணன் மிக்க கூரிய அறிஞனாயினும் மாலைக் காலத்து இருளாற் கரிய நிறத்தினையுடைய காட்டில் அம்மாயக் களிற்றை உயிருள்ள யானையாக எண்ணி மெல்ல மெல்லச் சென்று அதன் பக்கலையடைந்தான். அப்பொறி யானையோ காதுக்கு இனிமை பயக்கும் அவ் யாழிசையால் இழுக்கப்பட்டதுபோல் முறம் போன்ற காதுகளை மிகவும் உயர எடுத்து மீண்டும் மீண்டும் பக்கல் அணுகியும், தூரச்சென்றும் மனிதர் இல்லாத அக்காட்டில் அரசனை நெடுந்தூரம் ஈர்த்தது. முடிவில் அப்பொறியானையினுள்ளே இருக்கின்ற போர்வீரர் வெளிப்பட்டு வாட்படை ஏந்திய கையினராய் நாற்புறமும் சூழ்ந்தனர். அவர்களை வற்சர்தலைவன் பார்த்துச் சினமுற்று உறையினின்றெடுத்த வாளினால் அவ்வெல்லோரையும் வீழ்த்தினான். இதற்கிடையில் அக்காட்டிலுள்ள புதரில் மறைந்திருந்த வேறு சில போர்வீரர்கள் விரைந்து ஓடிவந்து பிற்பத்தே பிடித்துக் கொண்டனர்’’ (உதயன சரிதம், ப.21) என்ற உதயன சரிதப் பகுதி படிப்பவர்க்கு சுவை கூட்டும் பகுதிகளுள் ஒன்றாக விளங்குகின்றது.

உதயன சரிதத்தைப் படித்த உ.வே.சா அவர்கள் ‘‘வடமொழியில் மிக விரிவாகப் பரந்து கிடக்கும் இச்சரிதத்தை யாவரும் எளிதில் உணரும்படி சுருக்கமாக தெள்ளிய இனிய நன்னடையிற் பலவகையான சுவைகளை அங்கங்கே அமைத்துப் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும், பண்டை உரைகளிலும் காணப்படும் இனிய வாக்கியங்களை உரிய இடங்களிற் சேர்த்துத் தமிழர்க்கு ஒரு நல்விருந்தாக இவர்கள் இயற்றியிருத்தல் மிகப் பாராட்டற்பாலது. இதில், இடையிடையே வாய்த்த இடங்களில் உலகத்தாரை நோக்கிப் புலப்படுத்தும் நீதி வாக்கியங்களும் ஒவ்வொரு பகுதியின் இறுதியிற் கதையின் சாரத்தைச் சுருக்கித் தெரிவித்திருக்கும் வெண்பாக்களும் உரிய இடங்களில் சிவபெருமானின் திருவருளின் பெருமையைப் புலப்படுத்திய பகுதிகளும் அறிந்து இன்புறற்பாலன’’ (உதயன சரிதம் அபிப்பிராய பத்திரங்கள்,ப.9) என்று பாராட்டுகின்றார்.

உதயன சரிதம் பண்டிதமணியாரின் முதல் மொழி பெயர்ப்பு நூல் என்றாலும் இதற்குக் கிடைத்த வரவேற்பு கருதிய மற்ற மொழிபெயர்ப்புகளை அவர் செய்தார் என்பது முக்கியமானதாகும்.

சுலோசனை

இராமாயணத் துணைக்கதையாக விளங்குவது சுலோசனையாகும். இராவணன் மகனான இந்திரச்சித்தனின் மனைவியான சுலோசனையின் கற்பின் மாண்பினை எடுத்துரைக்கும் சிறு கதைப் பகுதி இதுவாகும்.

சென்னையில் இருந்து வெளிவரும் ஸகிருதயா என்ற வடமொழி இதழில் வெளியான சமஸ்கிருதக் கதை இச்சுலோசனையாகும். இதனைப் பண்டிதமணியார் மொழிபெயர்த்து அளித்துள்ளார். இதன் காரணமாக பண்டிதமணியார் வடமொழி, தமிழ் இதழ்களை விரும்பிப் படிப்பவர் என்பதும் தெரியவருகின்றது.

சுலோசனை விரக தாபத்தில் இருக்கிறாள். அவளுக்கு அவள் கணவன் இந்திரசித்தன் இராம, இலக்குவனரை எதிர்த்துப் போர்புரிவதால் அவனை அவள் சந்திக்க முடியாத துயரம் மிகவும் வருத்தியது. போரில் வெற்றி கொள்ள நிகும்பலை யாகம் செய்ய வேண்டும் என்பதால் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு போக வந்தான் இந்திரசித்தன். அவனைப் பார்த்ததும் அவளின் விரகதாபம் குறைய ஆரம்பித்தது.

இந்நேரத்தில் நிகும்பலை யாகத்தினைச் செய்ய தான் போவதாகவும், மீளவும் வருவேன் என்ற நம்பிக்கையில்லை என்றும் இந்திரசித்தன் சுலோசனையிடம் கூறுகின்றான். இதனைக் கேட்ட சுலோசனை முன்னைவிடப் பெரிதும் வருந்துகிறாள். இராமனை, இலக்குவனை எதிர்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கின்றாள். சீதையை விடுதலை செய்ய அவன் தந்தையிடம் கேட்க அவள் வேண்டுகிறாள். ஆனால் இந்திரசித்தன் அது முடியாத செயல் என்று சொல்லிவிட்டு நிகும்பலை யாகம் செய்யக் கிளம்புகிறான். யாகம் முடியப்போகும் தருவாயில் அவனின் சிற்றப்பா வீடணன் கூறிய வழிகளால் இலக்குவன் யாகத்தைத் தடுக்க வந்தான்.

யாகத்தின் நிறைவுப் பகுதி அணுகும் நேரத்தில் அவியுணவை வழங்கப்போகும் நேரத்தில் அவனது கையை அறுக்கிறான் இலக்குவன். அறுபட்ட கை சுலோசனையின் வீட்டில் வந்து விழுகின்றது.

இக்கையைப் பார்த்த சுலோசனைத் தன் கணவன் இறந்துவிட்டான் எனக் கருதி தானும் அவனுடன் சென்று சேர தீ மூட்டச் சொல்லுகிறாள். அதனைக் கேட்ட தோழியர் இது உன் கணவன் கை என்று எப்படிக் கூறுகிறாய் என்று கேட்க, இக்கை இதற்குப் பதில் சொல்லும் என்கிறாள். அப்போது அக்கை எழுந்து பல உண்மைகளைத் தெரிவித்து எழுதுகின்றது. இக்கை இந்திரசித்தனுடையதுதான், தன் தலை கொய்யப்பட்டு இராமன் கால்களில் கிடக்கின்றது என்றும் அது எழுதியது.

தன் கணவன் தலையைக் காணாது தான் தீ மூழ்கக் கூடாது என்று முடிவெடுக்கிறாள் சுலேசானை. இதற்காக இராவணனிடம் சென்று தன் கணவன் தலையை மீட்டுத்தர வேண்டுகிறாள். இராணன் மறுக்க, இராமனிடம் தானே செல்லுகிறாள்.

அடைக்கலம் தரும் அப்பெருமானிடம் அடைக்கலமாகியுள்ள தன் கணவனின் தலையைத் தரக் கேட்கிறாள். அதற்கு இராமன் உன் கணவன் இந்திரசித்தன் என்பதை எப்படி நம்புவது என்கிறார். இதற்குச் சுலோசனை தன் தலைவன் தலையைக் கொண்டு வந்து கேட்டால் அது பதில் சொல்லும் என்றாள்.

தலை கொண்டுவரப்பட்டது. அத்தலையும் சுலோசனை கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி சுலோசனையின் கற்பினை நிலை நிறுத்தியது.
இதன்பின் நெருப்பில் தன் தலைவன் தலை, உடல் ஆகியவற்றுடன் புகுந்தாள் சுலோசனை.  இதுவே இக்கதையின் சுருக்கமாகும். இதன் இனிமையான பகுதிகள் பல. அவற்றில் ஒன்று பின்வருமாறு.

‘‘அதனைக் கேட்டுச் சில வானரங்கள் ‘அறுபட்ட தலையின் நிகழ்ச்சிகளை அறுபட்ட கை எழுதியது என்னுமிது வியப்பே’ என்று சொல்லிச் சிரித்தன. வேறுசில வானரங்கள், இராவணனால் விடப்பட்டுச் சானகியொப்ப உருக்கொண்டு போந்த ஓர் அரக்கியாகிய இவன் நம்மை வஞ்சித்தற்கு ஈண்டுற்றாள். இப்பொழுதே இவளைக் கொல்வோம் என்று சினந்து கூறின’’ என்ற பகுதி அவற்றுள் ஒன்றாகும்.

இதன் வளத்தை ‘‘தங்கள் சுலோசனை மொழிபெயர்ப்பு நூலைப் பெற்றேன். கதை கவினிது, கற்பறிவுறுத்துங் கருத்துக்கள் செவ்விய, நடை அரிதிலினியது, பண்டிதரன்றிப் பலர்க்கரிது, படித்தறிபவர்க்கினிதே. கதைச் சுவை குன்றாது உயரிய நடையில் ஒழுகும் தி்ட்பமும் தூய்மையோடு இனிமையும்மலிய வட மொழியிலுள்ள தொன்றைத் தமிழ் வசனப் படுத்தியாளுந் திறமை வியக்குமாறுடைத்து’’ என்று சோம சுந்தர பாரதியார் கண்டுரைக்கின்றார். இவ்வகையில் சுலோசனை மிக்க இனிமை உடைய மொழிபெயர்ப்பாக்கமாகத் திகழ்கின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 7”

அதிகம் படித்தது