மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 8

முனைவர் மு.பழனியப்பன்

Nov 28, 2020

siragu kathiresa chettiyar1மண்ணியல் சிறுதேர்

உரைப்பாட்டு மடையாக வடமொழியில் இருந்து மொழியாக்கம் பெற்றது மண்ணியல் சிறுதேர் என்ற நாடக நூலாகும். இந்நூலின் மொழிபெயர்ப்புத் திறனைப் பல்வேறு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். ‘வடமொழி நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களில் பெரும்பாலும் செய்யுட்களை வசன நடையிலேயே எழுதிவிடுதல் இதுவரை நிகழ்ந்து வந்த வழக்கம். ஆனால் மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பாளராகிய பண்டிதமணி அவர்கள் மேற்கூறிய வழக்கத்தை மேற்கொள்ளாது செய்யுட்ளை செய்யுட்களாகவே சமைத்துள்ளார். இதனால் முதனூலுக்குரிய இலக்கியப் பெருமை சற்றும் குன்றாமல் மொழிபெயர்ப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நூல் வழிநூலாயினும் முதனூல் போலவே விளங்குகின்றது.’’ என்று இதன் மொழிபெயர்ப்புத் திறனை மதிப்பிடுகிறார் வி. சுப்பிரமணிய அய்யர் (ஆ.பழநி, பண்டிதமணியின் நாடகத்தமிழ்.ப.282)

இந்நாடக நூல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பெற்றிருந்தது. இந்நூலினை அதன் அறங் கூறும் பாங்கிற்காக மொழிபெயர்த்ததாக பண்டிதமணி நூலின் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். இந்நூல் சுட்டும் அறங்களை அவரே தொகுத்துச் செய்யுளாரகத் தந்துள்ளார்.

‘‘நோதல் தவிர்த்து நுவல்கடன் ஆற்றலும்
அடைக்கலப் பொருளை ஆவியின் ஓம்பலும்
புகலடைந்தோரைத் தகவுறப் போற்றலும்
இன்னுயிர் நண்பர்க்கின்னல் நேர்ந்துழி
தன்னுயிர் வெறுத்தலும் மன்னுயிர் ஓம்பலும்
இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்தலும்
வினைப்பயன் நுகர்வுழித் தெய்வம் வெறாமையும்
ஈந்து பொருள் வறத்தல் இனிதெனக் கோடலும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை கடத்தற் கொல்லாதாதலும்
பெருமையும் சிறுமையும் பிறப்பான் அன்றிக்
கருமச் சிறப்பால் வருமெனத் தெளிதலும்
கற்பின் மாட்சியும் காதலின் பெருமையும்
உண்மைக் காதற் குயரிய குணங்களே’’ ( மண்ணியல் சிறுதேர்.ப.12)

என்று இக்காப்பியம் காட்டும் அறங்களைப் பட்டியலிடுகின்றார் பண்டிதமணி.

இக்காப்பியத்தின் கதை பல்வகை திருப்பங்களை உடையதாகும். உச்சயீனி நகரத்தில் வாழ்ந்து வரும் அந்தணன் சாருதத்தன் ஆவான். இவன் பிறப்பால் அந்தணன் ஆயினும் வணிகத் தொழில் புரிந்து செல்வமும் புகழும் ஈட்டிவந்தான். இவனின் மனைவி தூதை. இவர்களின் இல்லறத்தின் பயனாக ஒரு மகன் பிறக்கின்றான்.

வசந்தசேனை என்பவள் அந்நகரத்துக் கணிகை. இவள் பலருக்கும் உரிமையாகாமல் ஒருவருக்கே உரிமைப் பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். சாருதத்தனின் வள்ளல் தன்மை, குணங்கள் போன்றனவற்றைக் கேட்டு அவன் மீது காதலை வளர்த்தவள்.

வசந்த சேனையின் மீது சகாரன் என்பவன் காதல் கொள்கிறான். கணிகை என்பதால் அவளைப் பொருள் வழி அதிகார வழி அடைய எண்ணம் கொள்கிறான். இவன் அந்நாட்டின் அரசனின் மைத்துனன் ஆவான்.

ஒருநாள் தன் இல்லம் விட்டு வந்த வசந்தசேனையைத் தன் துணைவர்களுடன் பின் தொடர்ந்து அச்சுறத்தினான் சகாரன். அவனிடம் இருந்துத் தப்பிக்க சாருதத்தன் இல்லம் சார்ந்தாள் வசந்தசேனை. சாருதத்தன் அப்போதுதான் தன் இல்லத்தில் பூசை முடித்து ஊர்த்தெய்வங்களுக்குப் பலிதர தன் இல்லக் கதவுகளைத் திறந்தான். இவன் கதவு திறக்கவும் வசந்தசேனை இல்லத்தில் புகவும் சரியாக இருந்தது. இருவரும் சந்தித்தனர்.

பின்பு வசந்தசேனை தான் வைத்திருந்த பொன் முடிப்பை சாருதத்தனிடம் தந்து அதனை ஒருநாள் மட்டும் பாதுகாக்கக் கூறினாள். அடைக்கலமாக வந்த பெண்ணையும் பொன்னையும் பாதுகாப்பதாக சாருதத்தன் கூறினான். இவளைப் பாதுகாப்பாக அவள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தான். பொன் முடிப்பை தன் வீட்டில் பாதுகாப்பாக வைக்கக் கூறி அதற்குக் காவலாக மைத்திரேயன் என்பவனையும் நியமித்தான்.

இப்பொன் முடிப்பு சாருவிலன் என்பவனால் திருடப்படுகிறது. இருந்தாலும் அது வசந்தசேனையின் வீட்டிற்கே திரும்பி வருகிறது. காரணம் வசந்தசேனையின் வீட்டில் அடிமையாக இருந்த மதனிகை என்பவளை அடிமைத்திறத்தில் இருந்து மீட்க இப்பொன் முடிப்பு சாலுவிலனால் வசந்தசேனைக்கு அளிக்கப்படுகிறது. இதனைக் கண்டதும் இது திருடப்பட்டது என்பதறிந்து வசந்தசேனை வருந்தினாள். காரணம் அடைக்கலப் பொருளை இழந்து சாருதத்தன் தவிப்பானே என்பது அவள் ஏக்கம். மதனிகையை சாலுவிலனுக்கு அளித்துவிட்டுக் காத்திருந்தாள் வசந்தசேனை.

பொன் முடிப்புத் தவறியதை அறிந்த சாருதத்தன் அதனை மறைத்து தன் மனைவி தந்த இரத்தினமாலையை அதற்கு மாற்றாக வசந்தசேனையின் வீட்டிற்கு அனுப்பிவைத்தான். பொன்முடிப்பு சூதினால் கவரப்பட்டதாகவும் அதற்கு மாற்றாக இரத்தினமாலையை வைத்துக்கொள்ளும் படியும் சாருதத்தன் வசந்தசேனையிடம் கூறச்சொன்னான்.

இதனையறிந்த வசந்தசேனை தன் பொருள் தனக்குக் கிடைத்ததை சாருதத்தனிடம் நேராகக் கூறிட வந்தாள். அன்றிரவு சாருதத்தன் இல்லம் தங்கி அவனுடன் இன்புற்றாள். காலையில் எழுந்து செல்லும்போது சாருதத்தனின் மகன் தனக்கு விளையாடப் பொன் வண்டி வேண்டுமென்று கேட்க வசந்தசேனை இரத்தினமாலையைத் தந்து பொன் வண்டி செய்துகொள்ள வேண்டினாள்.

இவளைக் கொண்டு செல்ல வண்டி ஒன்று வந்தது. ஆனால் அவ்வண்டியில் ஏறாமல் மாறாக சாகரன் அனுப்பிய வண்டியில் ஏறிவிடுகிறாள் வசந்தசேனை. சாருதத்தன் சோலையில் வசந்தசேனை வரும் வண்டிக்காகக் காத்திருந்தான். வண்டி வந்தது. ஆனால் அவ்வண்யில் இருந்தவன் ஆரியகன் என்பவன் ஆவான். இவன் முன்னர் சாருதத்தன் வீட்டில் திருடியவனின் நண்பன் ஆவான். இவனை அரசகுற்றத்திற்காக அரசினர் தேடிவந்தனர். இவன் சாருதத்தனிடம் அடைக்கலமானான். இவனுக்கு அடைக்கலமளித்து வசந்தசேனை வராததால் தன் இல்லம் சேர்ந்தான் சாருதத்தன்.

வண்டி மாற்றி ஏறிய வசந்தசேனை சகாரன் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு சகாரன் அவளைக் கட்டாயப்படுத்தி அடைய முயன்றான். அவள் இதற்கு உடன்படாதபோது அவளைக் கழுத்தை நெறித்துக் கொலை புரிய முயன்றான். இவனின் முயற்சியில் மயக்குமுறுகிறாள் வசந்தசேனை.

இவள் இறந்ததாக எண்ணி இவளைப் புதைத்துவிட்டுச் சருகுகளை அவள் உடலில் தூவிவிட்டு இவளின் கொலைப்பழியை சாருதத்தன் மீது ஏற்றி நீதிமன்றில் வழக்கினை வைத்தான் சாகரன்.

மயக்கமுற்றுக் கிடந்த வசந்தசேனை முன்னர் தன்னால் காப்பாற்றப் பட்டு பௌத்தத் துறவியான சம்வாகனனால் காப்பற்றப்பட்டு கொலைப்பழி சாருதத்தன் மீது சுமத்தப்பட்டதையும் அறிந்து அவளைக் காப்பாற்ற நீதிமன்றத்தில் முறையிட்டாள். இவளின் முறையீடு ஏற்கப்பட்டு, கொலைப்பழியின் வாயிலாக கழுவேற்றத் தண்டனை தரப்பட்ட சாருதத்தன் விடுதலையானான். வசந்தசேனையுடன் இணைந்தான்.

இதுவே இக்காவியத்தின கதையமைப்பாகும். இக்கதையின் வழியாக கணி்கை சமுதாயத்தில் நல்லறம் மிக்க ஒரு எல்லைக்குக் கொண்டுவரப்படுகிறாள் என்பது கவனிக்கத்தக்கது. இக்காவியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் நிறைய பொருத்தப்பாடுகள் உள்ளன. இதனை விரிவாக ஆராய்ந்து தன் பண்டிதமணியின் நாடகத்தமிழ் என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார் புலவர் ஆ.பழநி.

இந்நாடக பத்து அங்கங்களை உடையது. ஆங்காங்கே உரைநடை செய்யுள், உரையாடல் ஆகியன கலந்து வருகின்றன. குறிப்புரையாக மேல்விளக்கங்களைப் பண்டிதமணி வழங்கியுள்ளார். அவை அடிக்குறிப்பாக எண்ணிடப்பெற்றுத் தரப்பெற்றுள்ளன.

இந்நாடகத்தின் இனிமையான ஒரு பகுதி பின்வருமாறு

வசந்தசேனை;- இவன் எதற்காக அழுகிறான்?

இரதனிகை;- இவன் அடுத்த இல்லத்தில் வாழும் ஒரு செல்வனுடைய குழந்தையின் பொன் வண்டியை உருட்டி விளையாடினான். அச்சிறுவன் அப்பொன் வண்டியைக் கொண்டு போய்விடடான். அதன் பின் அப்பொன் வண்டியை விரும்பித் தேடும் இவனுக்கு இம் மண்வண்டியை நான் செய்து கொடுத்தேன். இதன்மேல் இவன் என்னைப் பார்த்து ‘‘இரதனிகே! எனக்கு இம்மண் வண்டி எதற்காக? அப்பொன்வண்டியினையே தரல் வேண்டும்’ என்று சொல்லுகிறான்.

வசந்தசேனை;- ஆ! துன்பம்! இவனும் பிறர் செல்வம் கண்டு வருந்துகிறானே! ஆ! தெய்வமே! தாமரை இலைக் கண் வீழ்ந்த நீர்த்திவலைகளைப் போன்ற மக்களுடைய செல்வங்களால் நீ விளையாடுகின்றாய் ( என்று கண்ணீருதிர்த்து) குழந்தாய்!அழல் வேண்டா. பொன் மயமான வண்டியினால் விளையாடுவாய்!

சிறுவன்;-இரதனிகே! இவள் யார்?

வசந்தசேனை;- நின் தந்தையின் குணங்களால் ஈடுபடுத்தப்பட்டப் பணிப்பெண்

இரதனிகை;- குழந்தாய்! இப்பெருமாட்டி உன் தாயாவாள்.

சிறுவன்;- இரதனிகே! நீ பொய் சொல்லுகின்றாய். இவ்வம்மை என் தாயாயின் எப்படி அலங்காரம் உடையவள் ஆயினாள்?

வசந்தசேனை;- குழந்தாய்! அழகிய முகம் உடையனாய் மிகவும் வருந்திக் கூறுகிறாய்! (நாட்டியத்தால் அணிகலன்களைக் கழற்றி அழுதுகொண்டு) இப்பொழுது யான் உன் தாயாயினேன். ஆதலின் இவ்வணிகலன்களைப் பெற்றுக்கொள். பொன்மயமான வண்டியினைச் செய்து கொள்.

சிறுவன்;- பார். நான் வாங்கிக்கொள்ள மாட்டேன் நீ அழுகின்றாய்

வசந்தசேனை;- (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) குழந்தாய்! யான் அழவில்லை. போ. விளையாடு. (அணிகலன்களால் வண்டியை நிறைவித்து) குழந்தாய் பொன்மயமான வண்டியைச் செய்துகொள்.’’ (ப.242)

இப்பகுதி இக்காப்பியத்திற்குத் தலைப்பு தந்த பகுதியாகும். மண்ணால் இயற்றப்பட்ட வண்டி  அதாவது தேர் என்பதே மண்ணியல் சிறுதேர் ஆயிற்று. மண்ணியல் சிறுதேர் என்று இக்காப்பியம் பெயர் பெற்றதற்கு யார் காரணம். சாருதத்தன் மகனா? அல்லது பரத்தையான வசந்தசேனை பொருளே பெற்றுப் பழக்கமான தன் குலப்பழியில் இருந்து நீங்கி அந்தணச் சிறுவனுக்குப் பொருள் அளிக்கிறாளே, அப்பொருள் மண்வண்டியில் ஏற்றி அனுப்பிகிறாளே அதனாலா? எவ்வாறு பொன் மண்வண்டியில் ஏறுகின்றது. மண்ணில் இருந்துத் தோன்றிய பொன் மீளவும் மண்வண்டியில் தன் பயணத்தைத் தொடங்குகின்றது.

இப்பகுதியில் சிறுகுழந்தையின் அ்றியாமை, தாயன்பு, பிடிவாதம் ஆகியனவற்றைக் கவிதைகளால் சொன்னால் நலம் பயவாது. அது இயல்பாகவும் இருக்காது. குழந்தை கவிதை பாடுமா? அதனால்தான பண்டிதமணி இப்பகுதியை உரையாடலாக அமைத்துள்ளார்.

மண்ணியல் சிறுதேர் மனித நேயம் மிக்க ஒரு காப்பியமாகும். இது நாடகக் காப்பியம் என்பதிலும் ஐயமில்லை. இதன் நாடகக்காப்பியத் தன்மையை விபுலானந்த அடிகளார் பின்வருமாறு விவரிக்கின்றார்.

‘‘அணிகலன்கள் அடைக்கலம்’’ , ‘‘சூதர் நிலை’’, ‘‘கன்னமிடல்’’, என்னும் மூன்று அங்கமும் முகமாகச் ‘‘சருவிலகன் பேறு’, ‘புயன் மறைப்பு,, என்னும் இரண்டங்கமும் பிரதிமுகமாக அமைந்து நின்றன. ‘வண்டி மாற்றம்’, ‘ஆரியகனைக்கோடல்’, ‘வசந்தசேனை துன்பநிலை’, என்னும் மூன்றங்கமும் கருப்பம் என்னும் மூன்றாஞ் சந்தியாவன. ‘வழக்காராய்ச்சி’யும், ‘தொகுத்துக் கூறுதல்’’ என்னும் பத்தாம் அங்கத்தில் வசந்தசேனை தோற்றுதற்கு முன்னுள்ள பாகமும் விளைவு ஆகும். பத்தாம அங்கத்தின் எஞ்சிய பாகம் துய்த்தல் என்பதாகும்’’ (அணிந்துரை, ப.48 என்ற இக்கருத்து மண்ணியல் சிறுதேர் நாடக்காப்பியம் என்பதைத் தெரிவிக்கின்றது.

வடமொழி நாடகவகையில் மண்ணியல் சிறுதேர் சங்கீரணப் பிரகரணம் என்ற நாடகவகையைச் சார்ந்ததாகும் என்கிறார் பண்டிதமணி. அதற்கு அவர் தரும் இலக்கணம் பின்வருமாறு. ‘‘பிரகரணத்தின் கதை கவியினாற் கற்பிக்கப்பட்ட கதையாயிருத்தல் வேண்டும். தலைவன் அமாத்தியன்(மந்திரி), விப்பிரன், வணிகன் என்னும் வகையில் ஒருவனாய்த் தீர சாந்தனாய், அபாயமுற்றவனாய் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றினையும் கருதிய பொருளாகக் கொண்டவனாய் வருதல் வேண்டும். தலைமகள் தலைமகனது மனவைியாகிய குலமகளாகவாவது விலைமகளாகவாவது இருக்கலாம். குலமகள் மனையில் இருத்தல் வேண்டும். விலைமகள் புறத்தே இருக்கவேண்டும். குலமகள் தலைவியாயின் சுத்தம் எனவும், விலைமகள் தலைவியாயின் விகர்தம் எனவும், இருவரும் வரின் சங்கீர்ணம் எனவும் பிரகரணம் மூவகைப்படும். சங்கீர்ணப் பிரகரணத்திலே துர்த்தர் பலர் தோற்றுவர். மண்ணியல் சிறுதேர் சங்கீர்ணப்பிரகரணம் என்பது தெளிவாகின்றது’’ (மண்ணியல் சிறுதேர், ப. 20) என்று வடமொழி நாடகவகைகளை விளக்கி அவற்றுள் இவ்வகையானது இந்நூல் என்று ஆய்ந்து முடிகின்றார் பண்டிதமணி.

இக்காவியத்தில் கிளைக்கதைகளும் சுவை கூட்டுவனவாக உள்ளன. ஆரியகன் கதை, சம்வாககன் கதை போன்றன அவற்றில் குறிக்கத்தக்கன.
இவ்வாறு வடமொழியின் நல்ல காவியங்கள் தமிழில் வழங்கப் பண்டிதமணியார் இருமொழிப் பாலமாக விளங்கினார்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 8”

அதிகம் படித்தது