மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனத்தின் வாழ்வியல் முறைகள்

ஈ. ரமாமணி

Apr 23, 2022

நிகழ் முறைகளும், சடங்குகளும்

நாட்டுப்புற மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப இயல்பானதாக, கட்டாய மற்றதாக அமையும்.  திருமணம், குழந்தை பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகள் வாழ்வியல் முறைகளாக அமைகின்றன. பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்கள் தம் வாழ்க்கை முறையைத் தம் மரபிற்கு ஏற்ப அமைத்துக்கொள்கிறார்.

நாட்டுப்புற மக்கள் வாழ்க்கை முறையில் சடங்குகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. மங்கல நிகழ்ச்சிகளிலும், அமங்கல நிகழ்ச்சிகளிலும் சடங்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக ஒரு குலம் சார்ந்த மக்கள் தம் வாழ்க்கை முறையில் சடங்கு முறைகளுக்கு முக்கிய இடம் தரப்பெறுகிறது.  ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகள் செய்யப்படுகின்றன. இன்னார் இன்ன வகையில்தான் இந்த சடங்குகளை இந்த முறைப்படி செய்ய வேண்டும் என்ற நிலையில் சடங்குகள் தகுந்த கட்டுமானத்தைப்  பெற்றனவாக உள்ளன. அக்கட்டுமானத்தைக் கட்டிக்காப்பனவாகவும் சடங்குகள் விளங்குகின்றன.

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்களின் சடங்குகள் குறிக்கத்தக்க சில சிறப்பு இயல்புகளை, வேறுபாடுகளை உடையனவாக உள்ளன. பெண் பிள்ளைகள் பிறந்த வீட்டிலேயே இருக்கும் நிலையில் இச்சடங்குகள் இன்னும் கவனிக்கப்பட வேண்டியனவாக உள்ளன.

பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்கள் வாழ்வியல் நடைமுறைகள், சடங்குகள் போன்றனவற்றை இவ்வியல் எடுத்துரைக்கின்றது.

திருமணச் சடங்குகள்

siragu nigalvugal1இல்லற வாழ்வின் தொடக்கமாக விளங்கும் திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்நிகழ்வில் சடங்குகள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்களின் வாழ்விலும் திருமணச் சடங்குகள் முக்கியத்துவம் பெருகின்றன.

மாப்பிள்ளை கேட்டல்

அரும்பு கூற்றா இன மக்களின் திருமணச் சடங்குகள் மாப்பிள்ளை கேட்டல் என்ற நிகழ்வில் இருந்து ஆரம்பமாகின்றது.  பெண்ணின் தாய் மாமன்  உரிய மணமகனைத் தேர்ந்து அவரின் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்கச் செல்வார். அங்கு மாப்பிள்ளையின் தாயுடன் சம்மதம் பேசுவார். எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு உங்களது மகனைத் திருமணம் செய்து வைக்க  சம்மதமா என்று விசாரிப்பார்.

மணமகனின் தாய்க்கு திருமணத்தில் விருப்பம் இருந்தால் திருமணம் நடத்துவதற்கு ஒப்புக் கொள்வார். அதன் பின்  மாப்பிள்ளைக்குச் செய்ய வேண்டியன, தன் குடும்பத்திற்குச் செய்ய வேண்டியன ஆகியன பற்றி அவர் தன் விருப்பங்களைத் தெரிவிப்பார்.

தன் மகனுக்கு இன்ன இன்ன செய்ய வேண்டும் என்று மாப்பிள்ளையின் தாய் சொல்லும் நிலையில் பெண்ணின் தாய்மாமன் அவற்றைச் செய்ய இயலும் என்றால் அவர்களிடம் சம்மதம் தெரிவிப்பார் பெண்ணின் தாய் மாமன். இந்த முறைப்படியே மாப்பிள்ளை கேட்கும் சம்பரதாயம் அமையும்.

நிச்சயம் செய்தல்

மாப்பிள்ளை கேட்கும் நிகழ்ச்சியில் தொடங்கும் திருமண நிகழ்வு, நிச்சயம் செய்தல் என்ற நிலையில் நிலைப்படுத்தப்படும். மாப்பிள்ளை கேட்டலின் அடுத்த நிகழ்ச்சியாக நிச்சயம் செய்தல் என்பது நிகழ்த்தப்படுகிறது.

பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனமக்களின் வாழ்வில் திருமண நிச்சயம் செய்யும் நிலையில் சில நடைமுறைகள் பின்பற்றப்  பெறுகின்றன.

பெண் வீட்டார் தன் பக்கத்து உறவினர்கள் அனைவருக்கும் இன்னார் பெண்ணுக்கு, இன்னார் மகனைத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பெற்றுள்ளது என்று தகவல் தெரிவிப்பார்கள். இத்தகவல் தெரிந்த நிலையில்  மணமகள் உறவினர்கள் அனைவரும் மணமகளின் வீட்டில் சார்பாக ஒன்று கூடுவர். பின் அவர்கள் மணமகன் வீட்டிற்குத் திருமண நிச்சயம் செய்ய  செல்வார்கள். அவ்வாறு செல்லும்போது மங்கலப் பொருள்களை ஒற்றைப் படை எண்ணிக்கையில் எடுத்துச் செல்வர்.  பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றன கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

இச்சமுதாயத்தில் பெண் மாப்பிள்ளை வைத்து நிச்சயம் செய்யும் வழக்கம் கிடையாது. உறவினர்களே நிச்சயம் செய்து திருமணத்தை நடத்து முன்மொழிவர். மற்ற இன மக்களிடம் காணப்படும் பெண் பார்த்தல், வீடு பார்த்தல், மாப்பிள்ளை விசாரித்தல்,  பெண்விசாரித்தல், ஜாதகப் பொருத்தம் பார்த்தல்  போன்ற நிகழ்ச்சிகள்  நடைபெறச் செய்வதில்லை.

நிச்சயம் செய்தலின் முக்கிய நிகழ்ச்சி தாய் மாமன் மாப்பிள்ளை வீட்டாருக்கான பணத்தைத் தருதலாகும்.  பெண்ணை மணக்க மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்த பிறகு மணமகளின் தாய்மாமன் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தை மணமகனின் தாய் மாமனிடம் தட்டில் வைத்து கொடுப்பார். அதனை மாப்பிள்ளை வீட்டார் சார்பில் தாய் மாமன் பெற்றுக்கொள்ள நிச்சயம் செய்தல் என்ற நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இதன் பிறகு திருமணத்திற்கு நல்ல நாளைப் பெரியவர்கள் குறிப்பர்.

அழைப்பிதழ்

திருமணத்திற்கான அழைப்பிதழை மணமகள் வீட்டார்தான் அச்சடிக்கவேண்டும். அதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். திருவெற்றியூர் பாகம்பிரியாள்  துணையோடு இன்னார் மகனை இன்னார் மகனுக்கு இன்ன இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பெற்றுள்ளது. இதற்கு வருகை தரவேண்டும் என்று அழைப்பிதழ் அடிக்கப்படும்.

முகூர்த்தக்கால் நடுதல்

திருமணம் நடக்கும் நாளுக்கு  ஒரு வாரம் முன்பு வரும் நல்ல நாளில்  முகூர்த்த கால் நடும் சடங்கு நடைபெறுத்தப்படும். மணப்பெண் வீட்டின் வாசலிலும், மணமகன் வீட்டு வாசலிலும்  சொந்தங்கள் கூடி முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சியைச் செய்வர்.

ஒரு கம்பில் மஞ்சள் தடவி பொட்டு வைத்து மாவிலை கட்டி அது ஊன்றப்படும். இதில் இவ்வினத்தின் வயதில் மூத்தவர்கள் இணைந்து செய்வர்.  தேங்காய் உடைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும். இந்நிகழ்வின்போது இனிப்புகள்  வழங்கப்படும்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னான முதல் நாள்

திருமணத்திற்கு முதல்நாள் மதியம் மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்கு செய்த தாழி, முகூர்த்த புடவை போன்றவைகளை வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு முன் வைத்து கோழி அடித்து வீட்டுத் தெய்வங்களை வழிபடுவர். பின்  அவற்றைப் பெண் வீட்டில் கொண்டு வந்துச் சேர்ப்பர். அன்று  இரு வீட்டு சொந்தங்களுக்கும் இரவு விருந்து வைக்கப்படும்.

தாயப் பானை ஏற்றுதல்

திருமண நாள் அன்று வீட்டுச் சமையல் அடுப்பை மணப்பெண் தான் பற்ற வைக்க வேண்டும். இது அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறும் சடங்காகும் இந்த முறைக்கு பெயர்தான் தாயப்பாணை ஏற்றுதல் என்று பெயர். இது தாய்வழிச் சமுதாயம் இவ்வினத்தில் நடைபெற்றுவருகிறது என்பதைக் காட்டும் நிகழ்வாக உள்ளது.

காப்பு கட்டுதல்

திருமண நாள் அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். மணப்பெண்ணின் தாய் மாமன் ஐயர் மந்திரம் படிக்க மணப்பெண் கையில் காப்பு கட்டுவார்.  அதேபோல் மணமகனின் கையில் அவருடைய தாய்மாமன் ஐயர் மந்திரம் சொல்லக் காப்பு கட்டுவார்.

திருமண உடை

திருமணத்திற்கான மணமகன் வீட்டார் எடுத்த ஆடைகள் ஐயர் மந்திரம் படித்த பிறகு பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் கொடுப்பார்கள். இவற்றை அன்றைய தினம் மாப்பிள்ளையும் பெண்ணும் திருமண உடைகளை அணிந்து கொள்வர்.

தாரை வார்த்தல்

இதன்பின்பு தாரை வார்த்தல் என்ற சடங்கு நடைபெறும். மணமேடையில் மணமகனின் பெற்றோர்க்கும் மணமகனின் பெற்றோரும் மணமக்களும் கைகளை ஒன்றாக அடுக்கி வைத்திருப்பர்.அவர்கள் கையில் வெற்றிலை பாக்கு வைத்திருப்பர்.

ஐயர் மந்திரம் படிக்க காய்ச்சாத பாலை அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும் கையில் மணமகளின் தாயார் ஊற்றுவார். இதுவே தாரை வார்த்துக் கொடுத்தல் என்ற சடங்கு ஆகும்.

தாலி கட்டுதல்

இதன்பின் திருமணத்தின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்வு நடைபெறும். பெரும்பாலும் திருமணங்கள் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நடத்தப்பெறும்.

பன்னிரண்டரை கிராம ஆரம்ப கூற்றா பிள்ளைமார்களின் சமுதாயத்தில் மஞ்சள் கயிறு கோர்த்து தாலி உருவாக்கும் முறைமை இல்லை. அதற்கு பதிலாக தாலியை தங்கச் சங்கிலியில் கோர்த்து மாப்பிள்ளை பெண்ணுக்கு அணிவிப்பார்.

கருவமணி களைதல்

சங்க காலத்தில் நடைபெற்ற சிலம்பு கழி நோன்பு போன்று இத்திருமணத்தின்போது அதுவரை மணப்பெண் அணிந்து வந்த, கருகமணியைக் களைதல் நிகழ்ச்சி நடத்தப்படும். மணமகனின் சகோதரி மணமகள் கழுத்தில் இருக்கும் கருவ மணியைக் களைவார்.

ஆசீர்வாதம்

திருமண சடங்குகள் முடிந்த பிறகு மணமகன் மணமகள் இருவரும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம்  வாங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

முளைப்பாரி கரைத்தல்

முளைப்பாரியானது மணமகள் வீட்டில் ஒரு வாரமாக வளர்க்கப்படும். இவ்வாறு வளர்ந்து நிற்கம் முளைப்பாரியைத்  திருமணத்தன்று தாலி கட்டு முடிந்த பிறகு மணமகன் மணமகள் தலைமீதுத் தூக்கி வைப்பார்.  மணமகள் அதைத் தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் கரைப்பார்.

காலை உணவு

திருமணத்தன்று காலை உணவு செலவினை மணமகள் வீட்டார் ஏற்று நன்முறையில் விருந்து வைப்பர். இந்த விருந்தில் பலவகையான உணவு வகைகள் சொந்தங்கள் அனைவருக்கும் வழங்கப்படும்

மதிய உணவு

திருமணத்தன்று முளைப்பாரி போடுவதால் அசைவ உணவு தரப்படாது.  மதிய உணவாக பலவகையான காய்கறிகளுடன் பாயாசம் அப்பளம் வைத்து சைவ உணவு தரப்பெறும்.  இது இவர்களின் திருமண முறையில் சிறப்பம்சமாகும். இச்செலவையும் பெண்வீட்டாரே செய்து கொள்ளும் முறைமை உண்டு.

பால் பழம்  வழங்குதல்

திருமணம் முடிந்த பிறகு மணமகளுக்கும் மணமகனுக்கும் புது விரிப்பு விரித்து உட்கார வைத்துப் பால்பழம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக் குவளையில் பால் ஊற்றி மணமக்களுக்கு  பெண் வீட்டார் வழங்குவர் . அந்த வெள்ளிக் குவளை மணமகனுக்குப் பரிசாக வழங்கப்படும்.

பால்சோறு

திருமணம் முடிந்த பிறகு முதலில் மணமக்கள் மணமகன்  வீட்டிற்கு தான் செல்வார்கள். அங்கு  முக்காலி வைத்து அதன் மேல் வாழை இலை போட்டு பால் சோறும் சீனியும்  வைத்து பரிமாறுவார். மேலும் மணமக்களுக்கு மாமியார் பணமும் வைத்து முறை செய்வார்கள்.

பெண் வீடு

திருமணம் முடிந்த அன்று மணமக்கள் மணமகள் வீட்டில் தான் இருப்பார்கள் மறுநாள் காலை உணவாக பொங்கல் புளியோதரை வைப்பது வழக்கம் மதிய உணவாக அசைவ உணவு பரிமாறப்படும் .

ஆயிரம் பந்தி அரித்தல்

மாப்பிள்ளை வழியில் உள்ள உறவினர் ஒருவரை அழைத்து திருமணநாளன்று தாலிகட்டும் இடத்தில் குத்து விளக்கு ஒன்று வைத்து அதனை ஏற்ற சொல்லுவார்கள் அதற்கு என்று ஒரு பெண்ணை நியமனம் செய்வது இவர்களது சமுதாயத்தின் வழக்கமாகும்

அவ்வாறு ஆயிரம் பந்தி  ஏற்றும் மாப்பிள்ளை வழி உறவினருக்கு   பெண் வீட்டார் ஒரு சில்வர்  பாத்திரத்தில் ஐந்து கிலோ   சீனியும் இரண்டு தேங்காயும் வழங்குவது இவர்களது  வழக்கமாகும்.

மேளம்

பன்னிரெண்டரை கிராம மக்களான அரும்புக்கூற்றா பிள்ளைமார்கள் தங்களது இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ஸ்ரீபாகம்பிரியாள் ஆலயத்தில் உள்ள மேளங்களை வைத்துதான் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவர்.

அய்யர்

பன்னிரெண்டரை கிராம மக்களான அரும்புக்கூற்றா பிள்ளைமார்கள் தங்களது இல்லங்களில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிகளுக்கும் ஸ்ரீபாகம்பிரியாள் ஆலய அய்யரை வைத்துதான் நடத்தி முடிப்பர்.

சீர் வகை

ஒரு பெண்ணுக்கு திருமண சீராக பின்வருவன வழங்கப்படும்.

மளிகை சீர் வரிசை

  1. பத்து மூடை புழுங்கல் அரிசி
  2.  ஒரு மூட்டை பச்சரிசி
  3. அனைத்து வகையான பருப்புகள் பத்து கிலோ
  4.  வெள்ளம்  பத்து கிலோ
  5. மற்ற சமையல் பொருள்கள் பத்து கிலோ
  6. காபித்தூள் பத்து கிலோ
  7. சீனி பத்து கிலோ

என்ற கணக்கில் சீர்  வைக்கப்படும்.

வெள்ளி சீர் வரிசை

மாப்பிள்ளையின் தாயாருக்கு வெள்ளி  கிண்ணமும் மாப்பிள்ளையின் தந்தை மாப்பிள்ளையின் சகோதரி மணமகன் தோழன் மணமகள் தோழி மற்றும் மணமகனின் தாய் மாமனுக்கும் வெள்ளி டம்ளர் ஆகியன சீராக வழங்கும் பழக்கத்தை சடங்கு முறைகளில் ஒன்றாக இவ்வினமக்கள்    செய்து வருகின்றனர்.

வெங்கலச் சீர்வரிசை

மணமகன் வீட்டில் இருந்து மணமகன் வீட்டாருக்கு வெங்கல பாத்திரங்கள் சிலவற்றைச் சீராக வழங்குகிறார்கள்.இவை அனைத்தும் திருமணத்தன்று பெண் வீட்டாரின் சீராக வழங்கப்படுவதாகும்.

இவை தவிர தங்கத்தாலான பொருள்கள் எதுவும் சீராக வழங்கப்படுவதில்லை. மற்ற எந்த பொருள்களும் சீர்களாக வழங்கப் பெறா நிலை  இவ்வினத்தில் உள்ளது.

மாமியார் வீட்டுடனான தொடர்பு

மற்ற சமுதாயத்தில் திருமணம் முடிந்து பெண்கள் கணவர் வீட்டுக்கு சென்று தனது ஆயுள் காலம் முழுவதும் தங்களது வாழ்க்கை பயணத்தை கணவர் விட்டில் தான் கழிப்பர்.ஆனால் பன்னிரெண்டரை கிராம அரும்புக்கூற்றா பிள்ளைமார்கள் சமுதாயத்தில் ஒரு பெண் திருமணம் முடிந்தும் கூட தனது வாழ்க்கை பயணத்தை தனது சொந்த வீடான அம்மா வீட்டில் தான் தொடங்குவார்.எனவே தான் பிற சமுதாயத்தில் நடக்கும் மாமியார் கொடுமையெல்லாம் இப்பன்னிரெண்டரை கிராம அரும்புக்கூற்றா பிள்ளைமார்களின் சமதாயத்தில் இல்லை என்பது சிறப்பான ஒன்றாகும்.

இவ்வாறு திருமண நடைமுறைகளும் சடங்குகளும் பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இனமக்கள் சமுதாயத்தில் செய்து கொள்ளப்படுகின்றன.

இறப்பு கால நடைமுறைகளும், சடங்குகளும்

பன்னிரண்டரை கிரா அரும்பு கூற்றா இன மக்கள், மங்கல நிகழ்ச்சிகள் போலவே இழப்பு நிகழ்ச்சிகளிலும் சில நடை முறைகளை, சில சடங்குகளை நடத்திக் கொள்கின்றனர். அவற்றில் குறிக்கத்தக்க சில பின்வருமாறு.

ஆதாரம் காத்தல்

வீட்டில் இருக்கும் ஒரு நபர் இறந்தால் அந்த விட்டில் இருக்கும் நபர்கள் ஒரு வருடத்திற்கு சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாட்டார்கள் அவர்கள் வீட்டிலும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள். இதனை ஆதாரம் காத்தல் என்று பெயர்.

 ஒரு வருடத்திற்கு

o   பூ வைக்க மாட்டார்கள்

o   புதிய ஆடை உடுத்தமாட்டார்கள்

o   வீட்டில் எண்ணெய் பலகாரங்கள் செய்ய மாட்டார்கள்

o   அசைவ உணவுகளில் கறி சமைக்க மாட்டார்கள்.

மேலும் இச்சமுதாயத்தில் ஒரு ஆண் இறந்தால் அவரது மனைவி வீட்டை விட்டு ஒரு வருடத்திற்கு வெளியே செல்ல மாட்டார்கள். இந்நடைமுறை இன்னமும் பின்பற்றப்படுகிறது.

திருமணம் ஆகாதவரின் இறப்பு

திருமண ஆகாத ஒருவர் இறந்தால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்கு என்று எதுவும் கிடையாது.  அவர்களை மட்டும் எரிக்க மாட்டார்கள் கள்ளியையும் கத்தாழையையும் போட்டு இறந்தவரைப்  புதைப்பார்கள். இவருக்கு       பதினாராம் காரியம் கிருகை செய்யமாட்டார்கள்.           முப்பதுக்கு படையல் போடமாட்டார்கள். திவசம் (திதி) கொடுக்க மாட்டார்கள். ஒருவருடம் ஆன பின்     கடலில் சென்று குளித்து விட்டு தீட்டு மட்டும் கழிப்பார்கள். இதுவே திருமணம் ஆகாதவர் இறந்தால் செய்யும் வழக்கமாகும்.

திருமணம் ஆனவர் இறந்தால் முப்பதாம் நாள் படையல், பதினாராம் நாள் காரியம், திவசம், கடலுக்குச் சென்றுத் தீட்டு கழித்தல்  போன்றன நடத்தப்படும்.

தொகுப்புரை

பன்னிரண்டர கிராம அரும்பு கூற்றா இன மக்கள் திருமண நிகழ்ச்சியை பல நிகழ்வுகள் கொண்டதாக அமைத்துக்கொண்டுள்ளனர். மாப்பிள்ளை பார்த்தல் தொடங்கி, திருமணத்தின் அடுத்தநாள் நடைபெறும் விருந்துவரை பல்வேறு நிகழ்வுகள் இவ்வின மக்களால் நடத்திக்கொள்ளப்படுகின்றன.

தாயப்பானை ஏற்றல் என்ற நிகழ்வு மற்ற இனத்தாரிடம் காணப்படாத நிகழ்வாகும். மணப்பெண் திருமண நாளன்று அடுப்பி  பற்ற வைத்து உணவுக்கான வேலையைச் செய்யும் நிகழ்ச்சியாக இது அமைகிறது. இது தாய்வழிச் சமுதாயமாக இச்சமுதாயம் விளங்குவதைக் காட்டுகின்றது.

இறப்பின்போது ஆதாரம் காத்தல் என்ற முறைமையும் குறிக்கத்தக்கதாக இவ்வினத்தில் கொள்ளப்படுகின்றது.

இராமநாதபுர மாவட்டத்தில் வாழும் மூத்த குடிகளுள் ஒரு குடியினராக பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இனமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


ஈ. ரமாமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனத்தின் வாழ்வியல் முறைகள்”

அதிகம் படித்தது