மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பறி போகும் இட ஒதுக்கீடு உரிமை அல்லது விரட்டி அடிக்கப்படும் திறமைசாலிகள்.

இராமியா

Jan 21, 2023

siragu reservation2

பொதுப் போட்டி முறையில் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற மாயையை உடைத்து எறிந்தால் அன்றி இட ஒதுக்கீடு பற்றியும், அதனால் ஒட்டு மொத்த சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை பற்றியும் புரிந்து கொள்ள முடியாது.

சாதி அடிப்படையில் ஒடுக்குமுறை நிலவும் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கும் ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான எதிர் நடவடிக்கைகளும் சாதி அடிப்படையில் தான் இருக்க முடியும் / வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளச் சராசரி அறிவுத் திறனுக்கும் குறைவான அறிவுத் திறனே போதுமானது. எனவே தான் இட ஒதுக்கீடு முறையைச் சாதி அடிப்படையில் இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். சாதி அடிப்படையில் என்றால் குழப்பம் விளைவிக்க முடியாதே என்று திகில் அடைந்த பார்ப்பனர்கள் பொருளாதார அடிப்படையைத் திணிக்கப் பலவாறு முயன்று தோற்றனர். ஆனால் இந்த இட ஒதுக்கீடு மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தில் (proportionately) இருக்க வேண்டும் என்பதை மாற்றிப் போதுமான அளவில் (adequately) என்று மாற்றுவதில் வெற்றி கண்டனர். எது போதுமான அளவு என்பதை அவாளே முடிவு செய்து இன்று வரை நம்மை ஏமாற்றி வருகின்றனர். இட ஒதுக்கீடு உரிமையின் முதல் சறுக்கல் அங்கேயே தொடங்கி விட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டு உள்ளது என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வழி வகை செய்யப்படவில்லை என்றும் கூறி, நீண்ட காலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் பேரறிஞர் என்று பெரியாரால் விளிக்கப்பட்ட ஆனைமுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து அரசியல் சட்டத்தில் உள்ள விதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடை செய்யவில்லை என்பதை விளக்கினார். மேலும் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரிடமும் விளக்கி தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி உடனடியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஓதுக்கீடு அளிக்கும்படி வாதாடினார். அதை மறுக்க முடியாத மொரார்ஜி தேசாய் மண்டல் குழுவை அமைத்தார்.

மண்டல் குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்த போது இந்திரா காந்தி ஆட்சியில் இருந்தார். அவர் அதை நாடாளுமன்றத்தில் வைக்காமல் காலம் கடத்தினார். அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங் தகுந்த நேரம் பார்த்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டார். (இதனால் கோபம் கொண்ட இந்திரா காந்தி பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்த ஜெயில் சிங்கை அதிகாரம் மிக்க உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக, அவரை அதிகாரம் இல்லாத குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கச் செய்தது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்ட செய்தி)

மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் இட ஒதுக்கீடு உரிமைக் கோரிக்கை வலுவடையத் தொடங்கியது. இருப்பினும் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு அதைக் கண்டு கொள்ளாமலேயே இருந்தது. இதைப் பொறுத்த மட்டில் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் பார்ப்பன ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள சரியான உத்தியாக இருக்கும் என அவாள் நினைத்தனர்.

இந்த நிலையில் தான் மாமனிதர் வி.பி.சிங் பிரதமர் ஆனார். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஒன்றிய அரசு அலுவலகங்களில் 27% இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தார். இது கட்சி வேறுபாடு இன்றி பார்ப்பனர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ,க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் தங்களைப் பிறவி எதிரிகளாகக் காட்டிக் கொண்டாலும் வெட்கத்தை விட்டு ஒன்று சேர்ந்து வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தன.

அதன் பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இந்த அரசாணையை நீர்த்துப் போகச் செய்வதற்கான சதித் திட்டத்தைத் தீட்டத் தொடங்கினர். “அரசு வேலை என்று இருந்தால் தானே இட ஒதுக்கீடு கேட்க முடியும்? அனைத்தையும் முடிந்த வரை தனியார் மயம் ஆக்கி விட்டால் … ?” இவ்வாறு யோசித்த பார்ப்பன அதிகார வர்க்கம் பல பத்தாண்டுகளாக உலக வங்கி கூவிக் கூவி விற்றுக் கொண்டு இருக்கும் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் கொள்கைகளின் பால் தன் பார்வையைத் திருப்பியது. அது மட்டும் அல்ல; அரசு வேலை என்றால் நிம்மதியாக இருக்கலாம் என்ற நிலையை மாற்றி அரசு வேலையா வேண்டாம் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு பணிச் சூழலை மாற்றத் தொடங்கினர். இவ்வளவு தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். பல இடங்களில் அவர்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என மெய்ப்பித்துக் காட்டினர்.

இதனால் மிரண்டு போன பார்ப்பனர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை இம்மி அளவும் வெட்கப்படாமல் முன்னெடுக்கும் அரசியல்வாதிகளைத் தேடினர். பா.ஜ.க. அதற்குச் சரியான தேர்வு எனக் கண்டனர். நரசிம்ம ராவ் போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்கள் தங்கள் கட்சியைக் காவு கொடுத்து பா.ஜ.க,வை வளர்த்து ஆட்சிக் கட்டிலில் ஏற்றினர். பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகள் பறிப்பு வேகம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

இந்த இடத்தில் ஓர் அடிப்படை உண்மையை உற்று நோக்க வேண்டும். அறிவுத் திறன் என்பது அனைத்து வகுப்பு மக்களிடமும் சீராகவே உள்ளது. அதாவது  அனைத்து நிலை அறிவுத் திறன் உடையவர்களும் அனைத்து வகுப்பிலும் உள்ளனர். இது மாற்ற முடியாத இயற்கை நியதி. இந்த நியதியின் படி அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் இருக்க வேண்டும். ஆனால் இந்த இயற்கை நியதிக்கு எதிராக நம் நாட்டில் பொதுப் போட்டி முறையில் பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் கொடூரமான அளவில் ஆக்கிரமித்துக் கொள்ள முடிகிறது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களோ அடுத்த நிலை வேலைகளிலேயே இருக்க நேர்கிறது. அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகள் கீழ் நிலை வேலைகளைச் செய்ய நேர்கிறது. இதனால் மனித வளம் கடுமையாக வீணாகிறது. இதை விடக் கொடூரமானது என்னவென்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர் நிலை வேலைகளில் அமர்வதால் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடும் அதனால் விளையும் இழப்புகளுமே ஆகும்.

பொதுப் போட்டி முறை என்ற நச்சுக் கோட்டையில் சிறு வெடிப்பை ஏற்படுத்தி, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் சிலர் வெற்றிகரமாக அதிகார மையங்களில் நுழைந்து பணி செய்வதில் தமிழ் நாடே முன்னணியில் இருக்கிறது. மற்ற மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் இது நடைபெறவில்லை. இதன் விளைவாக தமிழ் நாட்டின் வளர்ச்சி மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக உள்ளது. மற்ற மாநிலங்கள், குறிப்பாக இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாத வட மாநிலங்கள் வளர்ச்சி குன்றி உள்ளன. தமிழ் நாட்டில் வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு உள்ள வாழ்க்கைச் சூழலையும், மின்சாரம், குடிநீர், வடிகால், மருத்துவம் போன்ற வசதிகளையும், வியந்து போற்றுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த அனுபவங்களை எல்லாம் கணக்கில் கொண்டால், இட ஒதுக்கீடு முறையாகச் செயல்பட்ட இடங்களில் வளர்ச்சி நன்றாக உள்ளதையும், இட ஒதுக்கீடு செயல்படாத இடங்களில் வளர்ச்சி குன்றி இருப்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.  மேலும் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டைப் போலவே இந்தியா முழுமையும் இட ஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்க, நேர்மையும் அறிவு நாணயமும் இம்மி அளவு இருந்தாலே போதும்.

ஆனால் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் என்ன செய்கிறது? ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு நேர் எதிராகவே விரைவாகவும் வலுவாகவும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது.  அது மட்டுமா? பொதுப் போட்டி முறையில் திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலை வேலைகளில் கொடூரமான அளவில் திணிப்பது போதாது என்று பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்று வழி செய்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைப் பறிப்பையும், திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலை வேலைகளில் அமர்த்தி நாட்டை நாசமாக்கும் பணிகளையும் மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தியாவில் இட ஒதுக்கீடு தேவைப்படுவதன் அடிப்படைக் காரணத்தையே கொடூரமாகக் கேலி செய்து உள்ளது.

சரி! நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி அதிகரித்து அனைவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்தால் அதில் பார்ப்பனர்களும் பயன் அடைவார்கள் அல்லவா? அந்தப் பயன்களைத் துய்க்கவாவது இட ஒதுக்கீட்டை அவாள் அனுமதிக்கலாம் அல்லவா? இந்த வினாவிற்கு விடை தேடினால் பார்ப்பனர்களின் உண்மையான கொடூரமான குணம் தெளிவாகத் தெரியும்.

சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற மிருகங்களைக் கூட மரக்கறி உண்டு உயிர் வாழும் விதமாக மாற்றி விட முடியும். ஆனால் பார்ப்பனர்களை மட்டும் அறநெறியில் கொண்டு வந்து நிறுத்தவே முடியாது என்பது விளங்கும்.

பெண் அடிமைத்தனத்தை / விடுதலையைப் பற்றிப் பேசும் போது மனதில் தங்கள் மகள் சகோதரிகளை நினைத்துக் கொள்ள வேண்டும்; மனைவியை நினைத்துக் கொள்ளக் கூடாது என்று பெரியார் கூறுவார். ஏனெனில் மகள் அல்லது சகோதரிகள் மீது உள்ள பாசத்தின் காரணமாக ஒருவன் பெண் விடுதலைக் கருத்தியலை ஏற்றுக் கொள்வான் என்று பெரியார் நினைத்தார்.

ஆனால் திறமை இருந்தாலும் இல்லா விட்டாலும் பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளைச் செய்ய வேண்டும், திறமை இருந்தாலும் இல்லா விட்டாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலை வேலைகளையே செய்ய வேண்டும். இதனால் எந்த விதமான விபரீதங்கள் ஏற்பட்டாலும் கவலைப்படக் கூடாது (பார்க்க பகவத்கீதை 18 : 45 – 48) என்ற வர்ணாசிரம அதர்மத்தை நிலை நிறுத்துவதற்காக அவாள் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள்

அரசகுருவின் மகளான தேவயானி என்ற பார்ப்பனப் பெண்ணுடன் எற்பட்ட சச்சரவில் சர்மிஷ்டை என்ற இளவரசி தேவயானியை அடித்து விட்டாள் என்ற காரணத்திற்காக, வாழ்நாள் முழுவதும் தன் மகள் அந்த பார்ப்பனப் பெண்ணுக்கு அடிமையாக இருக்கும்படி அந்த அரசனையே ஆணையிட வைத்தது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி எந்தவித வருத்தமும் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியது வர்ணாசிரம அதர்மம்.

தன் மகளோ சகோதரியோ இளம் வயதில் கணவனை இழந்தால் அவர்கள் கைம்மை நோன்பு பூண்டு வாழ்நாள் முழுவதும் சொல்லொணா துன்பங்கள் படுவதைக் கண்டும் மனம் இளகாமல் அதற்கு எதிரான போராட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள் தான் பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்களைப் பொறுத்த மட்டிலும் சமூக / அரசியல் அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளும் வர்ணாசிரம அதர்மத்தை நிலைநிறுத்துவது ஒன்று தான் குறிக்கோள். அதனால் என்ன விபரீதங்கள் நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே இட ஒதுக்கீடு செயல்பட்ட தமிழ் நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறதே. இட ஒதுக்கீடு செயல்படாத மாநிலங்கள் படு பிற்போக்கான நிலையில் உள்ளதே என்பது போன்ற தர்க்க நியாயங்களை எல்லாம் எடுத்துக்காட்டி விவாதம் செய்வது வீண் வேலை. ஆனால் நம் மக்களிடம் இதை எடுத்துக்காட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது வெகு காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் சொன்னால் அது அறியாமை, பார்ப்பனர்கள் சொன்னால் அது அயோக்கியத்தனம்.

இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமை என்று நம் மக்கள் சொன்னால் அது ஓரளவு சரி, பார்ப்பனர்கள் சொன்னால் அது பாசாங்கு.

இட ஒதுக்கீடு என்பது உயர் நிலை வேலைகளுக்காக ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகளுக்குத் திறந்து விடப்படும் ஒரு சிறு வழி, திறமை இல்லாத பார்ப்பனர்கள் தகுதிக்கு மீறி உயர்நிலைகளுக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிறு உராய்வு என்பது தான் சரி.

இந்த உண்மையை நம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கும் பொழுது இன்று உள்ள இட ஒதுக்கீடு முறையில் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடியாது என்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தங்களுக்கு உரிய பங்கை முழுமையாகப் பெற முடிவது இல்லை என்றும் புரியும். அப்படி என்றால் இதற்குத் தீர்வு தான் என்ன?

அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்களும் இருப்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. இந்த இயற்கை நியதிக்கு ஒவ்வும் வகையில் அனைத்து நிலை வேலைகளிலும் அனைத்து வகுப்பு மக்களையும் பங்கேற்க வைப்பதற்காக, பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் அல்லாத முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகிய வகுப்பினருக்கு அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள், சமூக, பொருளாதார நடவடிக்கைகள் என அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலை வேலைகளும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இந்த முறை விகிதாச்சாரப் பங்கீடு முறை எனப்படுகிறது. இதுவே நம் சமூகத்தைக் கவ்விக் கொண்டு இருக்கும் வர்ணாசிரம அதர்மம் என்ற கொடூரமான நோய்க்குச் சரியான மருந்து.

இப்போராட்டத்தில் நமது முழக்கம் பின் வருமாறு இருக்க வேண்டும்.

பொதுப் போட்டி முறையில் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை.

ஒடுக்குமுறை சாதி அடிப்படையில் இருக்கையில் அதற்கான தீர்வும் சாதி அடிப்படையில் தான் இருக்க முடியும் / வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது கல்வி வேலை வாய்ப்புகளில் உள்ள ஏற்றத் தாழ்வைச் சமன்படுத்தவே ஒழிய பொருளாதார சமத்துவத்துக்கான திட்டம் அல்ல.

“அரிய வகை ஏழைகளுக்கு” ஏழ்மை நீங்க உதவலாம், ஏற்கனவே கொடூரமான அளவில் அனுபவித்துக் கொண்டு இருக்கும் கல்வி வேலை வாய்ப்புகளில் கொடுக்கக் கூடாது.

இட ஒதுக்கீடு போதாது,  விகிதாச்சாரப் பங்கீடு வேண்டும்.

மேற்கண்ட முழக்கங்களை முன் வைத்துப் போராடுவது பறி போய்க் கொண்டு இருக்கும் நம் உரிமைகளை மீட்டு எடுக்க மட்டும் அல்ல; திறமைசாலிகள் தங்கள் உழைப்பால் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், திறமைக் குறைவானோர் உயர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கொண்டு நாட்டை நாசம் செய்து கொண்டு இருப்பதைத் தடுக்கவும் தான்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பறி போகும் இட ஒதுக்கீடு உரிமை அல்லது விரட்டி அடிக்கப்படும் திறமைசாலிகள்.”

அதிகம் படித்தது