மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள்

தேமொழி

Oct 18, 2014

columbas1கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்கக் கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அது அமெரிக்க நாட்டின் தேசிய விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டிற்கு வைகிங் இன மக்கள் போன்ற சிலர் முன்னரே வந்து சென்றனர் என்று அறியப்பட்டாலும், பொதுவாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற ஐரோப்பியரே முதன் முதலில் ‘புதுஉலகம்’ எனப்படும் அமெரிக்க நாட்டைக் கண்டுபிடித்தார் என்று கருதப்பட்டு அவரை நினைவு கூரும் நாளாக இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

columbas4கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார். பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார். ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார். இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் அண்டை நாடாகிய போர்ச்சுகீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.

இருப்பினும், ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்கு கொலம்பஸ் செய்த உதவியே காரணம். அதனால், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழியும் கூட.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கக் கண்டத்தில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை.

கொலம்பஸ் வந்து செல்லும் வரை, ஐரோப்பியர்களுக்கு மேற்கில் ஒரு நிலப்பகுதி இருப்பதும், அங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிப்பதும், அந்த நிலத்தின் மேற்கு எல்லையாக பசிபிக் பெருங்கடல் இருப்பதும் தெரியாது. அட்லாண்டிக் கடலில் மேற்கு நோக்கிப் பயணித்தால் ஆசியக் கண்டத்தையும், சீன நாட்டின் கரையை அடையலாம் என்பதுதான் அவர்கள் எண்ணியிருந்தது.

கொலம்பஸ் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்தினால் இத்தாலி நாட்டில் இருந்து குடி பெயர்ந்து நியூயார்க் நகரில் வாழ்ந்த இத்தாலிய மக்கள் அவர் மீது பெருமதிப்பு கொண்டு, முதன் முதலாக அவர் அமெரிக்கா வந்தடைந்த 300வது ஆண்டு நிறைவு நாளான 1792 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியை “அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்ட நாள்” என மிகப் பெருமையுடன் கொண்டாடினார்கள். ஐரோப்பிய மக்களுக்குப் ஒரு புதிய வாழிடத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் அவர் என்று அப்படி ஒரு பெருமிதம் இத்தாலிய மக்களுக்கு.   பல நகரங்களிலும் தொடர்ந்து இக்கொண்டாட்டம் நடைபெறத் துவங்கியதும், குடியரசுத் தலைவர் பெஞ்சமின் ஹாரிசன் 1892 ஆம் ஆண்டு 400 வது ஆண்டின் கொண்டாட்டமாக அக்டோபர் 12 ஆம் தேதியைக் “கொலம்பஸ் நாள்” என அறிவித்தார். தொடர்ந்து சில ஆண்டுகள் பரவலாக அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அந்நாளைக் கொண்டாட, 1937 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அக்டோபர் 12 ஆம் தேதியை கொலம்பஸ் நாள் என நாடு முழுவதற்கும் தேசிய அளவில் விடுமுறை நாளாகவே அறிவித்தார். நீண்ட வார இறுதி விடுமுறையாகக் கொண்டாடும் பொருட்டு 1971 ஆம் ஆண்டு முதல் இது அக்டோபர் இரண்டாம் திங்களன்று கொண்டாடப்படுவதாக மாற்றப் பட்டது.

columbas3ஆனாலும் பல மாநிலங்கள் கொலம்பஸ் நாளை ஓர்அரசு விடுமுறை நாளாக அங்கீகரிக்க முன்வரவில்லை. இந்நாட்களில் பழங்குடியினர் அதிகமாக உள்ள மாநிலங்கள் பல அந்நாளை ‘பழங்குடியினர் நாள்’ என மாற்றி, அமெரிக்க பழங்குடியினரின் கலாச்சாரத்தையும் அவர்களது துன்பங்களையும் மதிக்கும் நாளாக கொண்டாடுகின்றன. அரசு தேசிய விடுமுறை நாளாக அறிவித்தாலும் தேசியஅரசு அலுவலகங்கள் மட்டுமே அன்று விடுமுறை எடுக்கும் அளவிற்கு இந்நாள் மிகக் குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பான்மையான மக்களும் இந்நாளைப் பொருட்படுத்துவதில்லை. அனைத்திற்கும் மேலாக கொலம்பஸ் நாள் கொண்டாடுவது இப்பொழுது ஒரு சர்ச்சைக்குரிய நாளாகவும் ஆகிவிட்டது.   இந்நாளை எதிர்ப்பவர்கள் அவர்கள் எதிர்ப்பிற்குப் பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.   முக்கியமான சில மறுப்புக் கருத்துகள்:

columbas61. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. அது ஒரு புதிய, மக்களே வாழ்ந்திராத ஒரு நிலப்பரப்பாகவும் அவர் வந்திறங்கிய பொழுது இருந்ததில்லை. அங்கு முன்னரே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடித்தார் என்று கூறுவது மிகத் தவறான வரலாற்றுச் செய்தி.

2. கொலம்பஸ் நாள் என்று கொண்டாடும் அளவிற்கு அவர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை. அவர் செய்ததெல்லாம் இங்கு வாழ்ந்த மக்களை அடிமைப் படுத்தியதும், படுகொலை செய்ததுதான். அவரது வரவு பழங்குடி மக்களின் கலாச்சார அழிவைத்தான் துவக்கி வைத்தது. ஆகவே இதனை மகிழ்ந்து கொண்டாடத் தேவையில்லை.

3. தற்காலத்தில் இந்தக் கொண்டாட்டம் இங்குள்ள மக்களுக்குள் கலாச்சார பேதத்தை உருவாக்குகிறது. நாட்டின் பழங்குடி மக்களை அவமானப்படுத்துகிறது.

4. பள்ளியில் வரலாறு என்ற பெயரில் மாணவர்களுக்கு பொய்யுரைகள் வழங்கப்படுகிறது. கொலம்பஸ் உலகம் உருண்டை என்று தெரிந்து கொண்டதாகவும், துணிச்சலுடன் தனது குழுவினரை வழி நடத்தி புதிய உலகம் கண்டுபிடித்ததாகவும், அவர்கள் தொலைநோக்கிகளைக் பயன்படுத்தியதாகவும் (அவரது கடற்பயணம் நிகழ்ந்த பிறகு ஒரு நூற்றாண்டு கழித்துதான்தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது) உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பல குழந்தைகள் மனதில் திணிக்கப்படுகிறது.

5. பள்ளிகளில் சொல்வதற்கு மாறாக கொலம்பஸ் காலத்திற்கு முன்னரே பலர் உலகம் உருண்டை என்பதை அறிந்திருந்தார்கள். கிரேக்க அரிஸ்டாட்டில் அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சுட்டிக் காட்டியதுடன், நிலவில் விழும் புவியின் நிழலின் அளவை அடிப்படையாகக் கொண்டு புவியின் சுற்றளவையும் கணக்கிட்டுள்ளார்.

மேற்காட்டியது போன்ற தவறான தகவல்களை மக்களிடம் திணிக்கும் காரணத்தினால் பொறுமை இழந்த சியாட்டில் நகர மக்கள் நகரசபையிடம் வாதிட்டு அந்நாளைப் ‘பழங்குடி மக்களின் நாள்’ என மாற்றும்படி முறையிட்டனர். தீவிர விவாதத்திற்குப் பிறகு வரலாற்றைத் திரித்து பழங்குடியினரை அவமதிக்கும், பொய்வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கும் இந்த நாள் இனிமேல் பழங்குடியினர் நாள் எனக் கூறப்படும் என்றும், பழங்குடி மக்கள் கலாச்சாரத்தைக் காக்கும் போராட்டங்களை மதிக்கும் நாளாகப் போற்றப்படும் என்றும் இந்த மாதம் சியாட்டல் நகரசபையால் அறிவிக்கப்பட்டுவிட்டது.

[ பார்க்க காணொளி: http://www.cnn.com/video/data/2.0/video/politics/2014/10/13/dnt-seattle-changes-columbus-day-name.king.html ]

சியாட்டில் நகரைப் போன்றே மின்னியாபோலிஸ் நகரமும் இந்நாளை பழங்குடியினர் நாள் (“Indigenous People’s Day”) என அறிவித்துவிட்டது. போர்ட்லாண்ட், சியாட்டில் நகரப் பள்ளிகள் கொலம்பஸ் நாளுடன் பழங்குடியினர் நாளும் சேர்த்தே கொண்டாடப்படும் என அறிவித்துள்ளன. தெற்கு டக்கோட்டா மாநில மக்கள் ‘அமெரிக்கப் பூர்வீக குடியினர் நாள்’ (Native American Day) என்றும், ஹவாய் மாநிலம் பொதுவான கோணத்தில் ‘கண்டுபிடிப்பாளர்கள் நாள்’ (Discoverer’s Day) எனவும் முன்னரே அறிவித்துள்ளன. மேலும் சில தென்னமெரிக்க நாடுகள் மக்களின் கண்டனத்திற்குச் செவி சாய்த்து ஹிஸ்பானிக் மக்களின் கலாச்சார பரவலைக் கொண்டாடும் நோக்கில் ‘டியா டி ல ராசா’ (Dìa de la Raza – “Day of the Race”) என்றும், எதிர்த்து நின்ற பழங்குடி மக்களின் வாழ்வியல் வரலாற்று நாளாக ‘டியா டி லா ரெசிஸ்டென்ஸ்சியா இன்டிஜெனா’ (Dìa de la Resistencia Indìgena – “Day of Indigenous Resistance”) என்று மாறுதல்கள் செய்து கொண்டாடுகின்றன.

அமெரிக்க பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பிழையான செய்திகளின் தொகுப்பும் அதற்கான சரியான விளக்கங்களும் …

கொலம்பஸ் இத்தாலியர் என்பது பிழையானது. கொலம்பஸ் இத்தாலியில் பிறக்கவில்லை. இத்தாலி என்ற நாடு உருவானதே 1861 ஆம் ஆண்டில்தான். கொலம்பஸ் பிறந்த 1451 ஆண்டு அக்டோபர் மாதம் அவர் பிறந்த பகுதி அந்நாளைய ஜெனோவா குடியரசின் பகுதியாக இருந்தது. பிறகு அப்பகுதி பிரான்ஸ் நாட்டின் வசமானது. பிற்காலத்தில்தான் இப்பகுதி இக்காலத்தில் உருவான இத்தாலி நாட்டின் பகுதியாக மாறியது. எனவே கொலம்பஸ் இத்தாலி நாட்டில் பிறந்து இத்தாலி நாட்டிற்காகக் கடற்பயணம் மேற்கொள்ளவில்லை.

கொலம்பஸ் அப்பகுதியில் பிறந்தாலும், கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிற்காக, அந்நாட்டின் வணிக நோக்கம் காரணமாக 1492 முதல் 1503 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு முறை அமெரிக்க கண்டத்திற்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து கடற்பயணம் மேற்கொண்டார். அவர் பயணம் மேற்கொண்ட காரணமும் இப்பொழுது முன்வைக்கும் காரணமான ஐரோப்பியர் வாழ புது நிலம் கண்டுபிடிப்பதற்காகவும் அல்ல. இந்தியாவுடன் வணிகம் செய்வதற்கு ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிப்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. ஆனாலும் அவர் கண்டுபிடித்த நிலபரப்பும் இந்தியா அல்ல, அத்துடன் அவர் இந்தியர் என அடையாளம் கண்ட மக்களும் இந்தியர்கள் அல்ல. அவர்கள் அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர். கொலம்பஸின் பயணத்தினால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாடுதான் அமெரிக்கக் கண்டத்தில் பலகுடியிருப்புகளை ஏற்படுத்தி பலன் கண்டது.

அத்துடன், முதன்முதலில் அமெரிக்க கண்டத்திற்கு வந்த ஐரோப்பியரும் கொலம்பஸ் அல்ல. அவர் வருவதற்கும் 500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘லீஃப் எரிக்சன்’ (Leif Erikson, 970- 1020) என்ற ஐஸ்லாந்து பகுதி கடற்பயணி ஒருவர் அமெரிக்க கண்டத்திற்கு வந்து சென்றுவிட்டார். நியூ ஃபௌன்ட்லாண்ட் பகுதியில் அந்த வைகிங் இன மக்கள் குடியிருப்புகளையும் ஏற்படுத்தினர். மற்றொரு சீன கடலோடியும் அமெரிக்காவின் மேற்குக் கரையை கொலம்பஸிற்கு முன்னரே அடைந்த தகவலும் உள்ளது. ஐரோப்பியர்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆசிய மக்கள் இரு கண்டங்களையும் இணைக்கும் நிலப்பகுதி வழியாக அமெரிக்க கண்டத்திற்கு குடிபெயர்ந்து பல பழங்குடி இனங்களாக மாயன், அஸ்டெக், இன்கா இனங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், கற்கால மனிதர்களின் ஆயுதங்களும் இங்கு கிடைப்பதும் அறிவியல் கூறும் உண்மை.

இதனால்,   1492 ஆம் ஆண்டு வாக்கில் சாண்டா மரியா, நின்யா, பின்டா என்ற மூன்று கப்பல்களில் தனது குழுவினருடன் கொலம்பஸும் அமெரிக்கா வந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அதைவிடுத்து, அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று சொல்வது அபத்தமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பகுதியை, அதாவது கப்பலில் இருந்து படகை கரை நோக்கி செலுத்தி கரையிறங்கும் பொழுது, அங்கு கரையில் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருக்க, தனது கையில் உள்ள கொடியை நாட்டி, நான் இந்த இடத்தைக் கண்டுபிடித்தேன் என அவர் கூறினால் அது ஒரு வரலாற்றுப்பிழை.

கொலம்பஸைப் பற்றி கூறப்படும் தகவல்களில் மறைக்கப்படும் பல வரலாற்றுத் தகவல்கள் …

1. அவர் ஸ்பெயின் அரசியிடம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி நான்கு முறை கடற்பயணம் செய்தும் இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்காமல் அதில் தோல்வியைத்தான் அடைந்தார் என்பதும்,

2. அவர் தனக்குத் தங்கம் கொணர மறுத்த மக்களைச் சித்திரவதைகள், படுகொலைகள் பல செய்தவர், சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்றவர், பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்தியதுடன், முதன் முதலில் எதிர்கொண்ட பழங்குடி மனிதரையே கைதியாக்கி தனது வெற்றியைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாக ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றவர் என்பதும்,

3. ஏமாற்றுக்காரர் மற்றும் கொள்ளைக்காரர், தங்கத்தைத் தேடும் தனது முயற்சியில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதை பெருமையாக சொல்லிகொண்டவர், தான் நினைத்தால் பழங்குடிகளை அழிக்கமுடியும் என அகம்பாவத்துடன் தனது நாட்குறிப்பிலும் குறித்து வைத்தவர், இது போன்ற குற்றங்களுக்காக கைகால்களில் விலங்கிடப்பட்டு, ஆளுநர் பதவி பறிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும்,

4. அவரது அமெரிக்கப் பயணம் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஐரோப்பியர்களையும், அவர்கள் வரவால் அவர்கள் தங்களுடன் பல தொற்று நோய்களையும் கொணர்ந்ததில் பழங்குடியினர் பலர் உயிரிழக்க நேரிட்டதும், அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த 90 விழுக்காடு பழங்குடி மக்களும், அம்மக்களின் கலாசாரமும், மதமும், மொழிகளும் அவர்களால் அழிக்கப்பட்டன என்பதுவும்,

5. கொலம்பஸ் துவக்கி வைத்த ஐரோப்பியக் குடியேற்றத்தின் துவக்கம் அங்கு வாழ்ந்த மண்ணின்மைந்தர்களின் துன்பங்களின் துவக்கத்திற்கு காரணமானது, அவர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலை ஏற்பட்டு, அவர்களது வாழிடங்களைப் பறித்து அவர்களுக்கான முகாம்களை உருவாக்கி அங்கு அவர்களை விரட்டி சிறைப்படுத்தவும், பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பிரித்ததுவும், இன்றுவரை பழங்குடி மக்களை நடத்துவதில் அமெரிக்க மண்ணில் பேதங்கள் நிலைத்திருக்கிறது என்பதுவும் போன்ற தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

columbas2இவ்வாறு தற்கால அமெரிக்காவில், கொலம்பஸ் ஓர் இணையில்லா வரலாற்று நாயகனா அல்லது மனித குல எதிரியா என சர்ச்சை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதற்கு உலக மக்களின் மனித பண்பாட்டு விழுமியங்களில் (human values ) காலப்போக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமான மாறுதல்களே காரணம். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பஸ் கையாண்ட கொத்தடிமைப்படுத்துதல், இனப்படுகொலைகள், பண்பாட்டுச் சிதைப்புகள் ஆகியவை அக்கால மக்களால் தவறாக கருதப்பட வாய்ப்பிருக்கவில்லை. உண்மையில் பல ஐரோப்பியர்கள் தங்கள் கிறிஸ்துவ மதமே மக்களை மீட்டெடுக்க வந்த மதம் என்று நம்பினார்கள். அவர்கள் நினைத்ததற்கு மாறான வழியில் வாழ்பவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று அவர்கள் முத்திரை குத்தத் தவறியதில்லை. அத்துடன் அவர்கள் கண்ணோட்டத்தில் இவ்வாறு ‘வழிதடுமாறிச் செல்லும்’ மக்களைக் காப்பது அவர்கள் பொறுப்பு எனவும், தங்களைப் போல அம்மக்களை நாகரீக மக்களாக மாற்றுவது அவர்களது கடமை எனவும் ஆணித்தரமாக நம்பினார். பிற இன மக்களை அடிமைப்படுத்துவதோ, பாலியல் வன்முறை செய்வதோ,   மதம் மாற்றுவதோ, அவர்கள் கலாச்சாரத்தைச் சீர்குலைவு செய்வதோ, இனப்படுகொலைகள் செய்வதோ மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே பலர் உணராது இருந்தனர். அக்குற்றங்கள் புரிபவர்களை, தங்களது இனம், மொழி, மதத்தின் பொருட்டு அரும்பணியாற்றும் நாயகர்களாகவும் போற்றினர். காலத்தின் மாற்றம் காரணமாக முன்னர், இச்செயல்களில் ஈடுபட்ட முன்நாள் வரலாற்று நாயகராகப் பார்க்கப்பட்ட கொலம்பஸ் இன்று மனித குல எதிரியாகப் பலருக்குத் தோற்றம் அளிக்கிறார்.

இந்நிகழ்ச்சிகள் உணர்த்துவது, காலம் மாறிவிட்டது என்பதையும், உலகம் முழுவதும் வரலாறுகள் மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்பதையும்தான். அவ்வாறு வரலாற்றை மீள்பார்வை செய்யும் பொழுது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் புதிய பண்பாட்டு விழுமியக் கண்ணோட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான அருவருக்கத் தக்க செயலாக தற்கால மக்களால் உணரப்படுகின்றன. கடந்தகாலத் தவறுகளை சீர் செய்யும் முயற்சி மக்களின் மனதில் வேரூன்றத் தொடங்கியதையே கொலம்பஸ் நாளைக் கைவிடும் நோக்கம் தெளிவு படுத்துகிறது. மனிதகுல வரலாற்றில் மனிதர்களின் பண்பாட்டு விழுமியங்களுக்கு, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது முக்கியத்துவம் பெற்றிருப்பது இதிலிருந்து கண்கூடு. இது ஒரு பண்பாட்டு பரிணாம வளர்ச்சி, இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்.

_____________________________________________________________________________________

மேலதிகத் தகவல்கள் வழங்கும் இணையதளங்களின் பட்டியல்:

Christopher Columbus

http://en.wikipedia.org/wiki/Christopher_Columbus

Christopher Columbus

http://academickids.com/encyclopedia/index.php/Christopher_columbus

Leif Erikson

http://en.wikipedia.org/wiki/Leif_Erikson

What to tell your kid about Christopher Columbus, By David M. Perry, October 11, 2014

http://edition.cnn.com/2014/10/10/opinion/perry-columbus-day-what-to-tell-your-kid/index.html

Instead of Columbus Day, some U.S. cities celebrate Indigenous People’s Day, By Emanuella Grinberg, October 13, 2014

http://edition.cnn.com/2014/10/12/living/columbus-day-indigenous-people-day/index.html

History vs. Christopher Columbus – Alex Gendler

http://youtu.be/GD3dgiDreGc

Ask HISTORY: Did Columbus Really Discover America?

Did Columbus really discover America? Get the full story.

http://www.history.com/topics/exploration/columbus-day


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள்”

அதிகம் படித்தது