மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாதுகாப்பற்ற சூழலில் இன்றைய பெண்களின் நிலைமை!

சுசிலா

Mar 6, 2021

siragu-pengal1

உலக நாடுகள் அனைத்தும் மகளிர் தினம் கொண்டாடி வரும் இவ்வேளையில், இங்கும் பல ஊடகங்கள் வாயிலாக, இந்த வாரம் முழுவதும் மகளிர்தினம் என்ற ஒரு சொல் தினமும் நம் செவிகளில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. மகளிர் தினம் கொண்டாடும் இவ்வாரத்தில், பல அமைப்புகள், அலுவலகங்கள், ஊடகங்கள் என அனைத்தும், அதற்கான போட்டிகள், விளையாட்டுகள், பரிசுகள் என்று மகளிர் தினம் கொண்டாடத் தயாராகி வருகின்றன. ஆனால், மகளிர் தினம் கொண்டாடும் நிலைமையில் தான் நாம் இருக்கிறோமா?. நம் நாட்டின் பெண்களின் நிலை இன்றளவில் எப்படி இருக்கிறது, எவ்வளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்று சற்று சிந்தித்தால், தற்போதைய நிலை புலப்படும். இன்றைய பெண்கள் எப்படிப்பட்ட பேராபத்தான, பாதுகாப்பற்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நிலை விளங்கும். கடந்த சில ஆண்டுகளாக, மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் பல வழிகளில் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வைத்துக் கொண்டிருக்கின்றன. இயல்பாக ஒரு வாழ்வு வாழ முடியாமல், மக்களை அமைதியற்ற நிலையிலேயே, ஒருவித அச்சத்துடனே வைத்திருக்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், அனைத்திற்கும் மேலாக, பெண்களும், பெண் குழந்தைகளும் ஒவ்வொரு மணித்துளிகளும் பாலியல் ரீதியாக எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன!

கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது என்பது வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது. மத்தியில் பாஜக அரசு பதவிக்கு வந்தவுடன்தான், உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடு என்ற வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றது. அதிலும், பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில், தினமும் ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்படுகிறார்கள், அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. சில மாதங்களுக்கு முன்பு, உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற மாவட்டத்தில் ஒரு கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமையை, நாம் ஊடகங்கள் மூலமாக அறிந்து, எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானோம் என்பதற்கு சொல்லி தெரிவதற்கில்லை. அதைப்பற்றி எழுதுவதற்குக்கூட நம் மனம் பதைபதைக்கிறது, அவ்வளவு கொடூரமான முறையில், அப்பெண்ணை சித்ரவதைக்கு உட்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கடைசியில் கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில், விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பயனளிக்காமல், இறந்தவுடன், அப்பெண்ணின் பெற்றோர்க்குக் கூட உடலைக் காட்டாமல், அவசர அவசரமாக எரித்த கொடுமையெல்லாம் அங்கே நடந்தது. குற்றவாளிகள் யாரென தெரிந்து அரசு கைது செய்தவுடன், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தை மிரட்டி வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாவட்டத்தில் வாழும் ஆதிக்க சமூகத்தினர் செய்த அட்டுழியங்களை எல்லாம் சொல்லி மாளாது. அந்த வழக்கு இப்போதைக்கு எந்த நிலையில் உள்ளது என்ற உண்மைநிலைகூட தெரியவில்லை. இந்த கொடுமையான நிகழ்வுக்குப் பிறகும், தினமும் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், நடுத்தர வயது பெண்கள் என தினமும் பாலியல் வன்கொடுமை கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், அங்கு ஆட்சியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் பாஜக அரசு, இதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாமல், குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்கும் வகையில் தான் செயல்படுகின்றன.

siragu pengalukku1

சில நாட்களுக்கு முன்பு வந்த ஒரு செய்தி, பாஜக ஆளும், கர்நாடக மாநிலத்தில், நீர்வளத்துறை அமைச்சரே, வேலை கேட்டு வந்த ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குற்றசாட்டுகள் வந்தன. முதலில் அதை மறுத்த அமைச்சர், பின்னர், அதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன், வேறு வழியில்லாமல், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், நம்மை மிகவும் பாதித்த நிகழ்வு ஒன்று, காசுமீர் மாநிலத்திலுள்ள கத்துவா மாவட்டத்தில், ஆடு மேய்க்கும் , சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கோயில் கருவறைக்கு பின்புறமுள்ள ஒரு அறையில் அடைத்துவைக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொன்று வீசப்பட்ட செய்தி, உலகையே உலுக்கி, நம்மை சர்வதேச சமூகத்தின் முன்பு, தலை குனிய வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. அப்போதும் கூட, தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அங்குள்ள பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது எந்தளவிற்கு ஒரு இழிவான செயல். அந்த வழக்கும், தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று உண்மைநிலை தெரியவில்லை. கடந்த மாதம், மத்தியபிரதேச மாநிலத்தில், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக ஒரு வழக்கு. அதில், தீர்ப்பளித்த ஒரு பெண் நீதிபதி, ஆடைக்கு மேலே தொட்டால் , அது குற்றமாகாது, போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என தீர்ப்பளிக்கிறார்.
இந்த மாதத்தில், ஒரு வழக்கு, மகாராஷ்டிரத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு குற்றவாளியை, அப்பெண்ணுக்கு சட்டப்படி, திருமண வயது வந்தவுடன், அப்பெண்ணை திருமணம் செய்துகொள்கிறாயா, இல்லையெனில், உன் அரசாங்க பணி பறிக்கப்படும், சிறையில் அடைக்கப்படுவாய் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கேட்கிறார் என்றால், இந்த கொடுமையை என்னவென்று சொல்வது!

இப்படி ஒரு வழி இருக்கிறதென்றால், நாளை ஆண்கள், தாங்கள் விரும்பும் பெண்ணை, அப்பெண்ணின் விருப்பம் இல்லாமலேயே, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நானே திருமணம் செய்துகொள்கிறேன் என்று கேட்கமாட்டார்களா?

திருமணம் என்பது பாலியல் வன்கொடுமைக்கான ஒரு உரிமம் என்றல்லவா ஆகிவிடும் என்ற தெளிவு, ஒரு தலைமை நீதிபதிக்கு தெரியாத ஒன்றா?

மனைவியாக இருந்தாலும் கூட, அவள் விருப்பமில்லாமல், ஒரு கணவன் தொட முடியாது என்ற சட்டம் நம் நாட்டில் இருக்கிறது என்பது அந்த தலைமை நீதிபதிக்கு தெரியாமலா போய்விட்டது?

சற்று இறங்கி, தமிழ்நாட்டிற்கு வந்தால், இங்கு அதைவிட கொடுமை. இரு ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நம் அனைவரின் மனதையும் உலுக்கி, புரட்டிப்போட்ட சம்பவங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு, அதில் சில பெண்களின் கதறல்கள் இன்னும் நம் செவிகளில் கேட்டுக்கொண்டிருக்கின்றன. அதில், ஆளும் அதிமுக அரசின் முக்கிய பிரமுகர்கள், சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தன. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்புடைய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பிறகு, சில மாதங்களில், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்துவிட்டனர்.

நம் தமிழ்நாட்டிலேயே, மற்றுமொரு மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், காவல்துறையில் பணிபுரியும் ஒரு பெண் காவல் அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு செய்ததாக, சட்டம், ஒழுங்கு சிறப்பு காவல்துறை அதிகாரி (special DGP) மீது எழுந்திருக்கும் குற்றசாட்டு. அதிலும், புகார் அளிக்கப்போகும் அந்த பெண் காவல் அதிகாரியை தடுத்து, அச்சுறுத்தியதாக வரும் தகவல் நம்மை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. காவல்துறையில் பணிபுரியும், பெண் காவல் அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய பெண்களின் நிலைமை என்னவாவது!

இதில், மற்றுமொரு அதிர்ச்சி என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட, அந்த காவல்துறை சிறப்பு அதிகாரி இன்னும் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்பதுதான். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் அவ்வளவே!

இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது என்றாலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் அதிகாரி கொலை மிரட்டலுக்கு ஆட்படுகிறார் என்ற செய்தி வருகிறது!

இவையெல்லாம் சாமானிய மக்களுக்கு ஒரு பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது என்பது நிதர்சனம். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டுமல்லாமல், அதை புகார் செய்வதற்கு இனி, நேர்மையான வழிவகை இல்லாமல் போய்விடுமோ என்ற பேரச்சத்தை உருவாக்குகிறது!

நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை!
இங்கு, பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை!
மேலும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளில், பெண்களுக்கு சரியான முறையில் நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல… குற்றஞ்சாட்டப்படும், குற்றவாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!

காலங்காலமாகவே, பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பது உண்மை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகவே, வலதுசாரி சிந்தனை அதிகரித்தபிறகும், அச்சிந்தனை அதிகாரத்திற்கு வந்த பிறகும், இந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகவும் அதிகளவில், அதிகரித்த வண்ணம் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை!

இவைகளைத் தடுக்க வழிவகைகள் செய்யாமல், பெண்கள் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை!

இந்நிலையில், நாம் மகளிர்தினம் என்று கொண்டாடுவது எல்லாம் ஒரு சம்பிரதாய சடங்காகத்தான் இருக்குமேயொழிய, உண்மையான கொண்டாட்டமாகவோ, பெண்களின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு உதவும் விதமாகவோ இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவு!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாதுகாப்பற்ற சூழலில் இன்றைய பெண்களின் நிலைமை!”

அதிகம் படித்தது