மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாயும் காளை

தேமொழி

Jan 23, 2016

paayum kaalai1“ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்ற சிற்பி உருவாக்கிய “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் நியூயார்க் நகரின் “பாயும் காளை” சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு வெண்கல சிற்பம் (bronze sculpture). நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற சிற்பம் “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) எனவும், “பவுலிங் கிரீன் புல்” (Bowling Green Bull) எனவும் அழைக்கப்படுவதுண்டு. அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உருவாக்க இதன் சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா $360,000 டாலர்களைச் செலவிட்டார்.

paayum kaalai2பாயும் காளை நியூயார்க் நகரின் சின்னமாகவும், வால் ஸ்ட்ரீட்டின் சின்னமாகவும் கருதப்படுவதால் வால் ஸ்ட்ரீட் ஐகான் (Wall Street icon), ஃபைனான்சியல் டிஸ்ட்டிரிக்ட் ஐகான், நியூயார்க் ஐகான் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள காளையின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆளுமைத் தன்மையையும், செழிப்பையும், நிதிநிலை முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. உருவில் மிகப் பெரியதாக அமைந்ததால், பல பாகங்களாக செய்யப்பட்டு, அவையாவும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டச் சிற்ப வடிவம் இது.

paayum kaalai4“வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” (Occupy Wall Street Movement) இந்தப் பாயும் காளை சிற்பத்தின் மீது பாலே நடனமாடும் பெண்ணின் உருவத்தைக் கொண்ட படங்கள் கொண்ட பதாகைகளை உருவாக்கி, தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர் என்பது, எவ்வாறு இந்தக் காளை சிற்பம் வால் ஸ்ட்ரீட் என்பதன் மறு உருவமாகவே மாறிவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. ஆர்ட்டுரோ டி மோடிக்கா உருவாக்கத் திட்டமிட்ட ஐந்து பாயும் காளைகளில் ஒன்று இந்த வால் ஸ்ட்ரீட் பாயும் காளை. மற்றொன்று சீனாவின் ‘ஷாங்காய், (Shanghai) நகரிலும், மேலும் ஒன்று ஆம்ஸ்டர்டாமின் ‘ஹெட் போவர்ஸ்பிளைன்’ (Het Beursplein) நகரிலும் முறையே 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டதும், அது வால் ஸ்ட்ரீட்டில் நிறுவப்பட்டதும் கருத்தைக் கவரும் ஒரு வரலாற்றுக் கதை எனலாம். அமெரிக்கப் பங்கு சந்தை வரலாற்றில் “கருப்புத் திங்கள்” (Black Monday – Monday, October 19, 1987) என அழைக்கப்பட்ட 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் அன்று பங்குச்சந்தை ஒரே நாளில் அதலபாதாளத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இழப்பைத் தாங்க இயலாத பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு. அந்த நிகழ்விற்குப் பிறகு பங்குச் சந்தை இது போன்று மோசமான நிலையில் விரைவில் சரியும் போக்கில் திரும்பும்பொழுது, அதன் அதீதச் சரிவை முறையாகக் கட்டுப்படுத்தும் திட்டங்களும் விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இழப்பினால் கலங்காமல் மீண்டும் துடிப்புடன் உயிர்த்தெழுந்தது அமெரிக்க பங்குச்சந்தை. பொருளாதாரத்தில் அமெரிக்க மக்களின் வலிமையையும் சக்தியையும் சித்தரிக்கும் கருத்தை, சிற்பம் ஒன்றாக உருவாக்க விழைந்த ஆர்ட்டுரோ டி மோடிக்காவிற்கு முன்நோக்கி ஆளுமையுடன் பாயும் காளை ஒன்றை உருவாக்கும் திட்டம் தோன்றியது. பங்குச் சந்தை முன்னேற்றம் அடைவதை காளை அல்லது “புல் மார்க்கெட்” (bull market) எனவும், வீழ்ச்சி அடைவதை கரடி அல்லது “பியர் மார்க்கெட்” (bear market) எனவும் பொதுவாகக் குறிப்பிடுவதும், பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருப்பதை “புல்லிஷ் அவுட்லுக்” (bullish outlook) என்பதும் வழக்கம். எனவே துடிப்பு நிறைந்து சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயும் காளையின் சிற்பம் வால் ஸ்ட்ரீட்டைக் குறிக்க மிகவும் பொருத்தமாகவும் அமைந்தது.

paayum kaalai6ஆனால், இதை வால் ஸ்ட்ரீட்டில் நிறுவ வேண்டும் என்பது ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் திட்டம் மட்டுமே. அமெரிக்க அரசோ, நியூயார்க் நகராட்சியோ சிற்பியிடம் கேட்டுக் கொள்ளவும் இல்லை, இந்தப் பொறுப்பை ஒப்படைக்கவுமில்லை. இதைச் செய்வதற்கு சிற்பிக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அனுமதியும் கிடையாது. சிற்பி தனது சொந்த விருப்பத்தில் சிற்பம் வடித்து அதிரடியாக நகரின் சாலையில் நிறுவி விட்டார். எனவே இதனை “கொரில்லா கலை” (guerrilla art) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. சிற்பத்தை டிசம்பர் 1989இல் வடித்து முடித்த ஆர்ட்டுரோ டி மோடிக்கா அதற்குப் பொருத்தமான இடம் என்று கருதிய வால் ஸ்ட்ரீட் பங்கு சந்தையின் முன் பிராட்வே இல் வைக்க விரும்பினார். நகராட்சியிடம் அனுமதி கேட்கும் எண்ணமே அவருக்கு இல்லாததால் யாருக்கும் தெரியாமல் இரவில் கொண்டு வந்து கிறிஸ்துமஸ் பரிசு போல விட்டுவிட்டுச் செல்ல எண்ணி, சிலையை ஏற்றிச் செல்ல தகுதி படைத்த ஒரு ட்ரக் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு அந்த இடத்தை வேவு பார்த்தார். அந்தச் சாலையில் ஐந்தாறு நிமிடங்களுக்கு ஒரு முறை காவல்துறை ஊர்தி கண்காணிப்பதைக் குறித்துக் கொண்ட ஆர்ட்டுரோ டி மோடிக்கா, சிலையை இறக்கி வைப்பதை ஐந்து நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்தார்.

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 15, 1989 அதிகாலையில் ஆர்ட்டுரோ டி மோடிக்கா தனது சிற்பத்துடன் குறித்த இடத்திற்கு வந்த பொழுது, அதற்கு முன்னர் அங்கு நியூயார்க் பங்கு சந்தை கிறித்துமஸ் விழாவிற்காக அலங்கரித்த 60 அடி உயரக் கிறித்துமஸ் மரத்தை நட்டு வைத்திருக்கக் கண்டார், தனது திட்டத்தைக் கைவிட முடியாமல் அந்த கிறித்துமஸ் மரத்தின் அடியிலேயே நவீன காலத்து சாண்டா கிளாசின் கிறித்துமஸ் பரிசு போல, தனது நண்பர்கள் உதவியுடன் சிலையை இறக்கிவைத்துவிட்டு மாயமாகிவிட்டார். மறுநாள் காலை நகரமக்களுக்கு அவர் அளித்த பரிசு பெரும் பரபரப்பை உண்டாக்கியது, யார் அங்கு நிறுவியது என்ற ஆராய்ச்சியும், சிற்பத்தின் கவரும் தோற்றமும் மக்களிடைய ஆர்வத்தைத் தூண்டியது. நகராட்சி தனக்கும் சிற்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதை தாங்கள் உருவாக்கி அங்கு வைக்கவில்லை என்று சொல்லி துப்பறியத் துவங்கியது.

இதற்கிடையில் அமைதியாக, சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா நியூயார்க் மக்களுக்கான பரிசாக, தான் உருவாக்கிய சிற்பம் பற்றிய தகவல்கள் நிறைந்த அறிக்கைகளை விநியோகிக்கத் தொடங்கினார். பொது இடத்தில், சாலையில் அத்து மீறி நிறுத்தப்படும் கார்களை அகற்றுவது போல சிலையை அகற்ற, சிலையின் அளவைக் கையாளும் ட்ரக் வரவழைக்கப்பட்டு, நகராட்சியும் நியூயார்க் பங்கு சந்தை நிறுவனமும் சிலையை அப்புறப்படுத்தின. அதற்குள் சிற்பத்தின் மீது பற்று மிகக் கொண்டுவிட்ட மக்கள் அதை அகற்றக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் செய்து, எதிர்ப்புக் குரல் எழுப்பத் துவங்கினர். சிற்பி சிலையை விட்டுச் சென்ற இடம் பொருத்தமாக இல்லை, அச்சிலை அந்த இடத்திற்கு இடையூறாக அளவில் பெரியதாக இருக்கிறது. எனவே பாயும் காளை பங்குச்சந்தையை நோக்குவது போல, பவுலிங் கிரீன் பகுதியின் பிராட்வே – மோரீஸ் சாலையில் அந்தச் சிலையை வைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்த நகராட்சியின் பார்க் நிர்வாகம் மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, டிசம்பர் 21, 1989 அன்று அகற்றிய சிலையைத் தானே மீண்டும் கொண்டு வந்து வைத்தது.

paayum kaalai3நிறுவப்பட்ட நாள் முதலே இந்தச் சிற்பத்தின் புகழும் வளரத் தொடங்கியது. திரைப்படங்களில், பத்திரிக்கைகளில் என எதிலும் நியூயார்க் நகரைக் குறிக்கும் சிற்பமாக இடம் பிடிக்கத் துவங்கியது. நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ‘சுதந்திர தேவி” (Statue of Liberty) சிலைக்கு நிகராக, அதிக சுற்றுலாப் பயணிகள் சிலையுடன் தங்கள் படங்களை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் புகழ் பெற்று விட்டது இந்தப் பாயும் காளை. அத்துடன் இந்தப் பாயும் காளையின் உறுப்புகளை வருடிக் கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற மூடநம்பிக்கையும் மக்களிடம் வளர்ந்து வருகிறது. பாலிவுட் படமான ஷாரூக்கான் நடித்த “கல் ஹோ நா ஹோ” (Kal Ho Naa Ho – 2003) படத்தின் இந்தச் சிற்பத்துடன் படம் எடுத்துக் கொள்வது பற்றிய பாடல் இடம் பெற்ற பிறகு இது இந்திய மக்களின் விருப்பமான சுற்றுலாத்தலமாக நியூயார்க்கில் மாறிவிட்டதாகவும் தெரிகிறது.

ஒரு கலைஞர் தனது கலைப்படைப்பை விலையின்றி நியூயார்க் நகருக்குள் காட்சிப்படுத்த ஒரு ஆண்டுக்கு மட்டுமே தற்காலிக அனுமதி உண்டு. எனவே அந்த ஓராண்டு காலக்கெடுவும் என்றோ முடிந்துவிட்டது. அதன் பிறகு ஒரு கால் நூற்றாண்டும் கூட கடந்துவிட்டது. இந்தச் சிற்பத்தை விலைக்கு வாங்கும் எண்ணமும் நியூயார்க் நகருக்கு இல்லை. அது சிலையை நன்கொடையாக ஏற்றுக் கொள்ளவுமில்லை. அதாவது சிற்பியும் சிற்பத்தை நன்கொடையாக நியூயார்க் நகருக்கு வழங்கவுமில்லை. சட்டப்படி தற்காலிக அனுமதி காலாவதியானது பற்றியெல்லாம் யாரும் இதுவரை அக்கறை கொள்ளவும் இல்லை. இருந்தாலும், அது நியூயார்க் நகர் வால்ஸ்ட்ரீட்டின் சின்னம் என்பது மட்டும் அனைவரது மனதிலும் ஆழப் பதிந்துவிட்டது. “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” போராட்டம் நடத்திய பொழுது சிலைக்குச் சேதம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் நகரக் காவல்துறையும் சிலைக்கு மூன்றாண்டுகள் பாதுகாப்பும் கொடுத்தது. சுற்றுலாப்பயணிகளைச் சிலையின் அருகே நெருங்கவும் அனுமதிக்கவில்லை.

இந்தச் சிற்பத்தின் காப்புரிமை ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் வசம்தான் உள்ளது. இதனை விற்பதற்கும் அவர் தயாராக உள்ளார், ஆனால் சிலையை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்பது அவரது விற்பனையின் நிபந்தனை. இதற்கிடையில் இந்தச் சிலையின் படத்தைப் பயன்படுத்தி நூல் ஒன்றை வெளியிட்ட ராண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் மீதும், காளையின் உருவத்தை மாதிரிப் பொம்மைகளாக செய்து விற்ற வால்மார்ட்டின் மீதும், சிலையின் படத்தை விளம்பரங்களில் பயன்படுத்திய மற்ற சில நிறுவனங்கள் மீதும், முறையற்ற வகையில் அனுமதியின்றி தனது கலையை விற்று பொருளீட்டுவதாகக் குற்றம் சுமத்தி காப்புரிமையின் அடிப்படையில் இழப்பு கோரி ஆர்ட்டுரோ டி மோடிக்கா நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்ந்துள்ளார்.

சிற்பியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

paayum kaalai7சிசிலியைச் சேர்ந்த 74 வயதாகும் இத்தாலிய சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா, ஜனவரி 26, 1941 இல் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் ஜிஸ்செப்பி மற்றும் ஆஞ்செலா (Giuseppe and Angela), தந்தை ஒரு சிறு தொழில் வணிகர். தனது எதிர்கால விருப்பம் சிற்பியாவது என்று முடிவு செய்த ஆர்ட்டுரோ டி மோடிக்கா அவர்கள் செய்த சிற்பங்கள் யாவும் பதின்ம வயதிலேயே அவருக்குப் புகழைத் தேடித் தந்தன. இதனால் தனது கலைத்திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்பி கலைகளுக்கு வரலாற்றுப் புகழ் பெற்ற ஃப்ளோரன்ஸ் நகருக்குச் சென்று சிற்பக்கலைக்குப் புகழ்பெற்ற கல்லூரியில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். இத்தாலியின் புகழ் பெற்ற சிற்பிகள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆர்ட்டுரோ டி மோடிக்காவின் கனவாக இருந்தது. பயிற்சிக்குப் பிறகு ஃப்ளோரன்ஸ் நகரில் தனது கலைக்கூடத்தைத் துவக்கி வெண்கலம், பிற உலோகங்கள், பளிங்குச் சிற்பங்கள் ஆகியவற்றை உருவாக்கி புகழேணியில் ஏறத் துவங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் இத்தாலிய கலைவாழ்க்கையின் தொடர்ச்சியாக அமெரிக்கா சென்று அங்குத் தனது கலைத்திறமையைக் காட்டத் திட்டமிட்டார். அவரது அமெரிக்கக் கலைக்கூடத்தில் உருவான சிற்பங்களும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் அவருக்குக் கொண்டுவந்து சேர்த்தன. பாயும் காளை சிலைக்காக அமெரிக்காவின் எல்லீஸ் தீவு கௌரவ விருதினையும் 1999 ஆம் ஆண்டு பெற்றார் (United States the Ellis Island Medal of Honor). அடுத்து ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய சிற்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Broadway & Morris St, New York, NY 10004 என்ற இடத்தில் உள்ள புகழ் பெற்ற இந்தப் பாயும் காளை சிலையை விலைக்கு வாங்க விரும்புபவரோ, அல்லது மற்றத் தகவல்கள் வேண்டுவோரோ சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்காவை dimodica@earthlink.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இணையத்தின் வழி சிலையின் ஒளிக்காட்சி தொடர் ஒளிபரப்பை (live streaming broadcast by webcam) இங்குக் காணலாம் http://chargingbull.com/video.html

கட்டுரைக்கான தகவல்கள் பெற்ற தளங்கள்:

[1] Charging Bull

http://chargingbull.com/

[2] Charging Bull

https://en.wikipedia.org/wiki/Charging_Bull

[3] A New York story

How the Charging Bull “chose” Wall Street, by Tiziano Thomas Dossena

http://www.bridgepugliausa.it/articolo.asp?id_sez=2&id_cat=37&id_art=3483&lingua=en


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாயும் காளை”

அதிகம் படித்தது