மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும்

தேமொழி

Jun 26, 2021

siragu bharadhidasan1

‘முத்தமிழ் நிலையம்’ என்ற நிறுவனம் ஒன்றைத் துவக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் தனது நூல்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும் பாரதிதாசன் விரும்பியிருந்தார். பாரதிதாசன் எழுதிய கடிதங்களைத் தொகுத்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “பாரதிதாசன் கடிதங்கள்” என்ற நூலில் இடம் பெற்றுள்ள கடிதங்கள் மூலம் முத்தமிழ் நிலையம் குறித்த தகவல்களை நாம் அறியலாம் (பாரதிதாசன் கடிதங்கள், இளவரசு இரா, 2009, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம்). பாரதிதாசனின் முயற்சி ஒரு கலைந்த கனவு போன்றது. திட்டம் துவங்கி அது ஓராண்டு நிறைவை எட்டுவதற்குள் பல இன்னல்களுக்கு மத்தியில் பாரதிதாசன் தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்து, இந்தத் தொல்லைகள் போதும், வேறு யாரிடமாவது முத்தமிழ் நிலையம் என்ற அமைப்பை ஒப்படைத்து விடலாம் என்ற மனப்பான்மையை எட்டிவிட்டார் என்பதை அவரது கடிதங்கள் மூலம் அறிய முடிகிறது.

“‘முத்தமிழ் நிலையம் தமிழ்நாடு’ என்பது ஓர் நிறுவனம். அதன் நோக்கம் பாரதிதாசன் நூற்களை வெளியிடுவதும் அந்நூற்களை அரங்கு செய்தலும் ஆகும்” என்பது பாரதிதாசன் தன் கைப்பட எழுதியுள்ள விளக்கம்.

முத்தமிழ் நிலையம் பாரதிதாசன் படைப்புகளை அரங்கேற்றும், நிகழ்ச்சியின் அமைப்பு:

ஒவ்வோர் நாளும் இரவு ஒன்பதரை மணி முதல் ஒன்றரை மணிவரை, இயல் இசை நாடகம் என்று 3 ஆட்டங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலில் இசைப்புலவர் ஒருவரின் வாய்ப்பாடல் நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து ஒரு நாட்டிய நிகழ்ச்சி, மூன்றாவதாக இசையும் பாடலும் நாட்டியமும் கலந்த ஒரு நிகழ்ச்சி. இந்த மூன்றாவது நிகழ்ச்சியில் ஒரு பொருண்மை விளக்கபட்டு அது குறித்து கலைஞர் ஒருவர் உரையாற்றுவார், பிறகு மற்றொரு கலைஞர் அந்தப் பொருண்மையில் பாடல் பாடுவார், அதன் பிறகு மற்றொருவர் அதனை நாட்டியமாக நிகழ்த்துவார். இவ்வாறாக மூன்றாவது நிகழ்ச்சி இயல் இசை நாட்டியம் கொண்ட நிகழ்ச்சியாக அமையும். அதன் பிறகு நாடகம் தொடரும். ‘புரட்சிக்கவி’ என்ற தனது படைப்பை இவ்வாறான நிகழ்ச்சியாக நடத்த பாரதிதாசன் திட்டம் வகுத்திருப்பதையும் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

முத்தமிழ் நிலையம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த விரும்புவோர் கலைஞர்களை தங்கள் ஊருக்கு வரவழைத்து, முதல் இரண்டு நாட்கள் ஒத்திகை, மூன்றாம் நாள் நிகழ்ச்சி என்ற வகையில் குழுவினருக்கு உணவும் இடமும் தந்து ஏற்பாடு செய்ய வேண்டும். முதல் நாள் நிகழ்ச்சிக்கு 500 ரூபாயும், அதை அடுத்துத் தொடரக்கூடிய ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாயும் வழங்க வேண்டும். ஓரிடத்தில் நாலைந்து நாட்களுக்கு நிகழ்ச்சி நடத்தலாம், அந்த ஊரை அடுத்துள்ள ஊர்களிலும் நிகழ்ச்சி நடத்தலாம் என்பதை நிகழ்ச்சியின் கட்டமைப்பாக பாரதிதாசன் திட்டமிட்டுள்ளார்.

முத்தமிழ் நிலையம் அல்லது அரங்கம் (இரு வேறு வகைகளிலும் குறிப்பிடப்பட்டாலும், அச்சடித்த கடிதத் தாளில் முத்தமிழ் நிலையம் என்றே அச்சாகி உள்ளது) என்ற நிறுவனத்திற்கு ஆதரவாளர்களாகவும், இந்தத் திட்டத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் அவருடைய நாமக்கல் நண்பர்களையும், கானாடுகாத்தான் நண்பர்களையும் பாரதிதாசன் கருதுகிறார். நாமக்கல் தோழர்கள் எம்.செல்லப்ப ரெட்டியார், என்.கிருஷ்ணராஜ் ரெட்டியார் ஆகியோரைத் தவிர்த்து கா.கருப்பண்ண கவுண்டர், க. பெருமாள், சாமிநாதன் என்போரும் இவர்கள் குழுவில் உள்ளனர். செல்லப்ப ரெட்டியார் அவர்களை நிறுவனத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டும் பணியில் ஈடுபடக் கேட்டுக் கொள்கிறார் பாரதிதாசன். இத்திட்டத்தில் ஆர்வம் கொண்டுள்ளோரை நிறுவனத்தின் பங்குதாரர்களாக இணைக்க வேண்டும் என்பதும் பாரதிதாசனின் திட்டம். அப்பொறுப்பையும், நிறுவனத்தின் பங்குதாரராக விரும்புவோரிடம் இருந்து நிதியைத் திரட்டுவதற்குமான பொறுப்பையும் எம்.செல்லப்ப ரெட்டியாரிடமே ஒப்படைக்கிறார். எம்.செல்லப்ப ரெட்டியார், என்.கிருஷ்ணராஜ் ரெட்டியார் இருவரும் இந்தச் செயல் திட்டத்தில் முதன்மையானவர்களாக பாரதிதாசனால் கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு 500 ரூபாய் அளித்து பங்குதாரர்களாக வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். திரட்டப்படும் நிதியை செல்லப்ப ரெட்டியார் தனது வங்கிக் கணக்கிலேயே வைத்துக் கொண்டு பங்குதாரர்களுக்கு வழங்கும் ரசீதை மட்டும் தனது பார்வைக்கு வந்து சேருமாறு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறார்.

ஏப்ரல் 1943 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் உருவாகிறது அப்பொழுது பாரதிதாசன் பணி புரிவது புதுவையில், அக்காலத்தில் அவர் 88 பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகிறார். நண்பர்கள் அல்லது பங்குதாரர்கள் இருப்பது நாமக்கல்லில். முதலில் தோழர்கள் இருக்கும் நாமக்கல்லிலேயே ல் நிறுவனத்தைத் தொடங்க எண்ணுகிறார். ஆனால் அக்டோபர் 1943 இல் அவர் செய்த சென்னைப் பயணத்திற்குப் பிறகு, சென்னைதான் கலை தொடர்பான இவர்களது நிறுவனத்திற்கு ஏற்ற இடமாக இருப்பதாக முடிவு காட்டுகிறார்.

சென்னையில் நமக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது. நடிகர்கள், இசைக்கலைஞர்கள், ஆடல் வல்லவர்கள், பாடுபவர்கள் என்ற கலைஞர்கள் கூட்டமும் சென்னையில் இருக்கிறது. கலையில் ஆர்வமுள்ள பெரிய மனிதர்கள், செல்வாக்கு உடையவர்கள், பத்திரிக்கை துறையினர்களும் சென்னையில்தான் இருக்கிறார்கள். முன்னர் திட்டமிட்டபடி நாமக்கல்லில் தொடங்கினால் இவ்வாய்ப்புகள் எளிதாக அமையாது. சென்னையில் வாழும் கலைஞர்கள் எவரும் நாமக்கல்லிற்கு இடம் பெயரவும் விரும்பவில்லை.

மேலும் நாமக்கல்லில் நிறுவனத்தைத் துவக்கினால் சென்னையிலேயே வாழும் கலைஞர்களிடம் இருந்தோ அவர்கள் குழுவினரிடம் இருந்தோ எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களை நாமக்கல்லில் தங்குவதற்குச் சம்மதிக்க வைக்கவேண்டும் என்றால்  உணவு, உறையுள் தந்து ஊதியமும் தரவேண்டிய கட்டாயமும் ஏற்படும். அது அதிகப்படியான செலவு.  சென்னையிலேயே அமைக்கும் நிறுவனத்தில் தேவையான மூன்று அல்லது நான்கு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டால் அலுவலகத்தில் அவர்கள் தங்கும் நேரங்களில் சாப்பாடு போன்ற செலவு மட்டுமே ஆகும். மற்ற கலைஞர்கள் தேவையானபொழுது வந்து பணியாற்றினால் தேவையான ஊதியமும், போக வர வண்டிச் சத்தமும் கொடுப்பதுடன் முடிந்துவிடும். நமது சென்னை நண்பர்கள் மேற்பார்வையும் இருக்கும். இரண்டு மாதங்களில் நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் தேவையானவர்களுடன் ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளலாம் என்று பல காரணங்களை விளக்கி கடிதம் எழுதி சென்னையிலேயே முத்தமிழ் அரங்கம் துவங்கவும் கலைநிகழ்ச்சிகளின் ஒத்திகையைத் துவக்கமும் முடிவெடுத்து விடுகிறார் பாரதிதாசன்.

தனது முடிவை பங்குதாரர்களாக அவர் கருதும் நாமக்கல் தோழர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். பாரதிதாசன் எழுதிய கடிதங்களில் இக்கடிதம் மிக நீளமாக பல பக்கங்கள் கொண்ட கடிதமாக அமைந்துள்ளது. அவர்களும் அது நல்ல திட்டம் என்றே உடன்படுகிறார்கள். போர்க்காலம் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இருக்கலாம் என்ற கருத்தும் நண்பர்களிடம் இருக்கிறது.

நாடகம் துவங்குவதற்கு முன் நிறுவனத்திற்கு இருமாதங்களில் ஆகக்கூடிய செலவு சுமார் 600 ரூபாய்கள் என்று மதிப்பிடுகிறார் (மாதம் ஒன்றுக்குச் செலவு ரூபாய் 300, இது 1943 ஆம் ஆண்டில்) இது பொதுவான செலவு, இதைத் தவிர்த்து, நாடகத்திற்கான விளம்பரச் செலவு (நோட்டீஸ் அச்சிடுவது, திரையரங்கில் விளம்பர ஸ்லைட் போடுவது குறித்து மற்றொரு கடிதத்தில் ஒரு குறிப்பு உள்ளது), நகை, உடை, வாடகை உட்பட மற்ற செலவுகள் ஒரு 1400  ரூபாய்கள். ஆக மொத்தம் 2000 ரூபாய்கள் தேவைப்படும் என்று கணக்கிடுகிறார் பாரதிதாசன். நாடகம் அரங்கேற்றத்திற்குப் பிறகு தேவையான வருமானம் கிட்டும், அதன் பிறகு நிறுவனம் மேலும் வளர்ச்சி பெறும் எனக் கூறி நிறுவனத்திற்காகப் பொருள் திரட்டுவதில் கவனம் செலுத்தும்படியும், சேரும் தொகையை ‘முத்தமிழ் நிலையம்’ நிர்வாகப் பொறுப்பாளரான, இராமநாதபுரம் ஆவினிப்பட்டி விவேகானந்த கல்விக்கழகத்தின் திரு. அ. பழ. பழநியப்ப செட்டியார் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறார். நண்பர்களுக்குத் தெரிந்த கலைஞர்களை, சென்னையில் தங்கக்கூடியவர்களை ஆயத்தம் செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறார். ஒரு வாரத்திற்குள் 1000 ரூபாய் திரட்ட வேண்டும் எனவும், கையில் ஒரு தொகையுடன் புதுவைக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறும் நண்பர்களுக்கு, குறிப்பாக எம்.செல்லப்ப ரெட்டியார் அவர்களுக்கு மடல் வரைகிறார்.

நண்பர்கள் ஒவ்வொருவரும் சென்னையில் தங்கி நிறுவனத்தை மாற்றி மாற்றி மேற்பார்வை செய்யலாம் என்றும் முடிவெடுக்கிறார். இந்த ஏற்பாடு நண்பர்களுக்கும் ஏற்புடையதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு 35 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டையும், அலுவலகத்திற்கு சென்னை இராயப்பேட்டை அருகில் வாடகைக்கு ஓர் இடத்தையும் ஏற்பாடு செய்து விடுகிறார். 1944 ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் “முத்தமிழ் நிலையம்”, சாந்தோம் ஹைரோடு, சென்னை என்ற முகவரி உள்ளது.  அதாவது நிறுவனம் சென்னையில், இவர் புதுவையில், பங்குதாரர்களாகவும் நிர்வாகத்திலும் ஈடுபடும் இவரது நண்பர்கள் நாமக்கல்லில். இவ்வாறாகத் திட்டம் வகுக்கப்படுகிறது.

இதற்கு அடுத்து மாதமே, நவம்பர் 1943 இல் செல்லப்ப ரெட்டியார் அவர்களுக்கு எழுதும் கடிதத்தில் கிடைக்கப்பெறும் தகவலின்படி, செல்லப்ப ரெட்டியார் தனக்கு நிறுவன விவகாரத்தில் சிரத்தை குறைவதாக பாரதிதாசனிடம் குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. மற்றொரு கடிதத்தில் செல்லப்ப ரெட்டியார் கடிதத்திற்கு மறுமொழி எழுதாததும், சென்னைக்குச் சென்று நிறுவன செயல்பாடுகளில் பங்கேற்காதது பற்றிய செய்தியும் கிடைக்கிறது. பாரதிதாசனால் கதை எழுதப்பட்டது, பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு, நடிகர்கள் தேர்வு நடக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையான முன்பணம் அச்சரமாகக் கொடுக்கப்பட்டு, ஒப்பந்தம் போடப்படாததால் கலைஞர்கள் விலகிவிட நேர்வதும், கலைஞர்கள் சேர்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதும் தெரிகிறது. செல்லப்ப ரெட்டியார் அவர்களுக்கு எழுதும் கடிதத்தில் தான் எழுதிய கடிதத்திற்கு அவரிடம் இருந்து பதிலில்லையே என்ற பாரதிதாசனின் குறைபாடு தொனிக்கிறது. இக்காலகட்டத்தில் பாரதிதாசனின் மூத்த மகளின் திருமணமும் ஏற்பாடாகி ஜனவரி 1944 இல் நிகழ்கிறது.

ஒரு கடிதத்தில், 1944 ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த முத்தமிழ் அரங்கத்தின் நிகழ்ச்சி சரியாக நடைபெறவில்லை, பணத் தட்டுப்பாடு, நிதி திரட்டுவதில் மெத்தனம் எனப் பல இடர்களால் பாரதிதாசன் வருந்துவதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் செல்லப்ப ரெட்டியாருக்கு விரிவான கடிதம் எழுதி விவரங்கள் அறிய பாரதிதாசன் விழைந்ததும்,  பல கடிதங்களுக்குப் பிறகு செல்லப்ப ரெட்டியார் சுருக்கமாக ஏதேனும் கடிதம் எழுதுவதும், அவற்றிலும் முத்தமிழ் நிலையம் நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்பதை விவரமாக பாரதிதாசனுக்குத் தெரிவிக்க செல்லப்ப ரெட்டியார் அக்கறை காட்டவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ மனக்குறையால் நிர்வாகப் பொறுப்பாளரான திரு. அ. பழ. பழநியப்ப செட்டியார் நிதி திரட்ட வேறு வகையில் முயலும்படி தட்டிக் கழித்துவிட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்தமிழ் நிலையம் பொருளாதாரச் சிக்கலிலும், நிர்வாகச் சிக்கலிலும் சிக்கியிருக்கிறது. மேலும் இது போன்ற இழுபறி நிலையை விரும்பாத பாரதிதாசன். குறைந்தது 5000 ரூபாய் ரொக்கமாக கையில் பணம் வைத்திருக்கும் வேறு யாராவது முன்னெடுத்து முத்தமிழ் நிலையம் நிறுவனத்தை வாங்கி கலைப்பணியைத் தொடர்வது என்றால் அவர்களுக்கு அளித்துவிட்டு விலகிவிடலாம் என்றும் அந்தக் கோணத்தில் முயல்கிறார்.

உடை நகை – 500 ரூ

சீன் திரை – 500 ரூ

மரச்சாமான்கள் தளவாடங்கள் – 1000 ரூ

நாற்காலி, பெஞ்ச், பிரயாணப் பெட்டிகள் – 500 ரூ

வாத்தியக் கருவிகள் – 200 ரூ

வீதி விளம்பரங்கள் – 200 ரூ

ஸ்லைடுகள் – 2100 ரூ

ஆக மொத்தம் 5000 ரூபாய் ரொக்கம் நிகழ்ச்சி நடத்தத் தேவை என்பதை பாரதிதாசன் குறிப்பிட்டு அந்த அளவில் நிதிநிலை உள்ளவரிடம் மட்டுமே ஒப்படைக்க விரும்புகிறார்.

பிப்ரவரி 1944 கடிதம் வரை பாரதிதாசன் தனது படைப்பை நிகழ்ச்சிக்குக் கொடுத்து அவ்வப்பொழுது பணமும் நிறுவனத்திற்காகக் கொடுத்து வந்தாலும் அவர் முத்தமிழ் நிலையத்தின் பங்குதாரர் என்ற நிலையில் இல்லை. புதுவையை விட்டு அவர் வெளியேற முடியாத சூழலும் உள்ளது. இதனால் முத்தமிழ் நிலையம் என்ற அமைப்பு அவரது பெயரைக் கெடுக்கும் நிலைக்குச் செல்வதை உணர்ந்து தூக்கத்தைத் தொலைப்பதையும் குறிப்பிடுகிறார். தனக்கு ஏதும் அவமானம் ஏற்படக்கூடாது என்பது பாரதிதாசனின் கவலையாக இருக்கிறது. ஆனால் நிறுவனத்தைக் கலைத்துவிடுவது என்று நண்பர்கள் முடிவெடுப்பது அவருக்கு ஏற்புடையதாகவும் இல்லை. வேறு யாராவது நல்லமுறையில் நடத்தினால் அவர்களிடம் கொடுத்துவிடலாம் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது.

புதுவையில் நாடகம் நடத்தும் திட்டம் ஒன்றில் ஐரோப்பியர்கள் வருவதற்கு ஏற்றதாக சிறந்த அரங்கமாக கெப்ளே திரையரங்கம் அமையும் என்றும், அவர்களைக் கவர்தற்கு ஏற்ப நாடகக் காட்சிகள் பட்டியலிடப்பட்டக் கையேடு பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு எவ்வாறு அச்சிடப்படவேண்டும் என்பது வரையில் பாரதிதாசன் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார்.

சென்ற நூற்றாண்டின் மத்தியில் இயக்கங்கள் வளர்ச்சியடைய நாடகங்களே மிக உதவின என்பதைக் கவனித்த பாரதிதாசனை, எதார்த்தம் பொன்னுசாமி அவர்களின் நாடாகப்பணி கவர்ந்துள்ளது. மக்களுக்குப் பயன்படும் வகையில் தக்கவர் ஒருவர் பொறுப்பில் தனது நாடகங்கள் மற்றும் படைப்புகள் அனைத்தையும் ஒப்படைக்க விரும்பினால் அது எதார்த்தம் பொன்னுசாமி அவர்களின் பொறுப்பில் ஒப்படைப்பதாக இருக்கும் என்றும் எதார்த்தம் பொன்னுசாமி அவர்களுக்கு எழுதும் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார்.

முத்தமிழ் நிலையம் திட்டத்திற்குப் பிறகு தமிழிசைக் கழகம் என்ற திட்டம், திரைப்படத் தயாரிப்புத் திட்டம் என்றும், இதழ்கள் நடத்துவது, நூல்கள் வெளியிடுவது என்றும் தொடர்ந்து பாரதிதாசனின் கலை மற்றும் இலக்கிய ஆர்வம் அவரது மறைவு வரை தொடர்ந்து கொண்டிருந்தது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும்”

அதிகம் படித்தது