மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

‘பாரதி’ கவிதை (கவிதை)

மீனாட்சி சுந்தரமூர்த்தி

Aug 13, 2022

siragu bharadhiyar1

 

பூத்திருக்கும் பூவிற்கும்
உனக்கும்
எத்தனை ஒற்றுமை?
பூவின் வாழ்நாளும்
புவியில் நீ
வாழ்ந்த நாளும்
சிலவே.

தென்றலும் நீயும்
ஒன்றுதான்,
வாடியோர் வாட்டம்
தீர்ப்பதில்,

தீயும் நீயானாய்
சாத்திரம் பேசுவோர்
மூடத்தனம் சாடி,

நதியாய் ஓடி
நாட்டினர்
மனங்களில் வீரம்
விளைத்தாய்,

வறுமை உனைப் புரட்டிட
முயன்றும்
மலையாய் நின்றாய்.

உளம் மறைக்க நகை
என்றால்,
துருத்தும் எலும்பு மூட
கோட்டணிந்தாய்.

பாட்டெழுதிய நீ
பணம்
பார்த்திருந்தால்
நூற்றாண்டு
கண்டிருப்பாய்.

செந்தமிழ் நாடிதை
செப்பமாய்
வைத்திருப்பாய்,
புதுமை
என்ற பேராலே
செய்யும்
புரட்டு ஓடியிருக்கும்.

தமிழினத்திற்குத்
தனியே
ஓர் குணமுண்டாம்
சரியாய்ச் சொன்னார்,

பாரதி நீ
இருந்த போது
உன் இதயம் தொட
மறுத்து
இல்லாதபோது
வருடுகிறோம்  உன்
பாக்களை..

 


மீனாட்சி சுந்தரமூர்த்தி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “‘பாரதி’ கவிதை (கவிதை)”

அதிகம் படித்தது