மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாலம் ஏன் பாடியது?

தேமொழி

Jun 20, 2020

சிவப்பு நிற ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ (golden gate bridge) என்ற பாலம் கலிபோர்னியாவின் புவியதிர்ச்சிகள் ஏற்படக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரு தொங்கு பாலம் (suspension bridge). இது நிலநடுக்க அசைவுகளைத் தாங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எளிய வடிவ தொங்குபால அமைப்பு என்பது வரலாற்றில் மிகப் பழமையானது என்றாலும், இத்தகைய தற்கால நவீன கட்டுமான அமைப்பில் செங்குத்தான கோபுரங்களுக்கு இடையில், பாலம் கிடைமட்டமாகத் தொங்கும் வகையில் அமைக்கப்படும் தொங்குபாலங்களின் தோற்றம் சுமார் 1800களில் துவங்கியது. ஒரு மைல் நீள இடைவெளி உள்ள நீர்ப்பரப்பின் மேலே, பசிபிக் கடலும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவும் இணையும் சந்திப்பில், சான்பிரான்சிஸ்கோ நகரையும் அதற்கு வடக்கே உள்ள மாரின் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தப் பாலம்.  இது அமெரிக்கத் தேசிய நெடுஞ்சாலை 101 என்பதன் ஒரு பகுதி.

siragu golden gate bridge2 சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன்னர் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தின் கட்டுமானம் துவக்கப்பட்டது.  ‘ஜோசப் ஸ்ட்ரவுஸ்’ (Joseph Strauss) என்ற பொறியாளர் தலைமையில் ஒரு பொறியாளர் குழு 1917 இல் கோல்டன் கேட் பிரிட்ஜ் (golden gate bridge) பாலத்தை வடிவமைத்தது. 1933 இல் பாலத்தின் கட்டுமானப்பணி துவங்கி நான்காண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது; மே 27, 1937இல் திறப்புவிழாவிலிருந்து 83 ஆண்டுகளுக்கு இது பயனில் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் மக்கள் இதனைக் கடக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரத் தகவல்.

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகரின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் சிறப்புப் பெற்றது இந்த கோல்டன் கேட் பிரிட்ஜ்.  இன்றைய நவீன கைபேசி-இணையவழி காலத்தில், மக்கள் ‘எமோஜி’ (Emoji) என்ற பட முத்திரைகள் உதவியுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி சமூக வலைத்தளங்கள் உரையாடும் ஒரு காலத்தில், அந்த எமோஜி வரிசையில் இரண்டு முறை இடம் பெற்றுவிட்டது இந்தப் பாலம். இத்தகைய சிறப்பு உலகின் வேறு எந்த நில அடையாளச் சின்னத்திற்கும் கிட்டவில்லை.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்:  ஜப்பானின் ஃபுஜி மலை (Mount Fuji, Japan); பிரான்சின் ஈஃபில் கோபுரம் (Eiffel Tower, France), நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை (Statue of Liberty, New York), ஈஸ்டர் தீவின் மோவாய் சிலை (Moai of Easter Island), கஃபா என்னும் மக்கா நகர் பள்ளிவாசல் (Kaaba, Mosque in Mecca) ஆகிய இவை மட்டுமே “பயணம்-இடங்கள்” பிரிவின் எமோஜி படங்களாக இடம் பெற்றுள்ளன. இந்தியா என்றால் அதைக் குறிக்கும் தாஜ்மகால் கூட எமோஜி அடையாளச் சின்னங்கள் வரிசையில் இடம்பெறவில்லை. ஆனால் கோல்டன் கேட் பிரிட்ஜ் சின்னமோ, பாலம், பனி மூட்டம், இரவில் பாலம், பகற்பொழுதில் பாலம், சான்பிரான்சிஸ்கோ நகர் என்று பல குறியீடுகளாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இரு எமோஜிகளாக – Bridge at Night Emoji (U+1F309) மற்றும் – Foggy Emoji (U+1F301) ஆகக் கிடைக்கின்றன. இதையும் விட மற்றொரு சிறப்பு அண்மையில் நடந்தது. ஒரு பெருங்காற்று வீசிய நாளில் இந்தப் பாலம் பாடியது!!!! ஆம், ஒரு பெரிய இசைக்கருவி போல இசை எழுப்பியது.
siragu golden gate bridge
பாலத்தை மேம்படுத்திப் புதுப்பிக்கும் முயற்சியாக, பாலத்தின் மேற்குப் பகுதியில் புதிய கைப்பிடி பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன. புதிய கைப்பிடி வேலியின் இரும்புப் பலகைகள் பெருங்காற்று வீசுகையில் அதைத் தாக்குப் பிடிக்கும் நோக்கில் மாற்றப்படுகிறது. அதற்காக முன்னர் இருந்ததைவிட இதன் சட்டங்கள் அகலத்தில் குறைவாக, காற்று எளிதில் அதிக தடையின்றி ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பாலம் காற்றின் வேகத்தைத் தாங்கும் திறனை அதிகரிக்கும் என்பது இந்த புதுப்பிக்கும் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
siragu Wind Tunnel Testing Picture from Golden Gate Bridge Districtகடலிலிருந்து காற்று நிலம் நோக்கி வீசினால் இந்த கைப்பிடியின் வழியே காற்று ஊடுருவிச் செல்லும். ஜூன் 5 ஆம் தேதி அன்று ஒரு பெருங்காற்று வீசிய பொழுது பாலம் எழுப்பிய ‘ஊ .. ஊ.. ஊ.. ஊ..’ என்ற ஓர் ஒலி சான்பிரான்சிஸ்கோ நகர் முழுவதும் கேட்கப்பட்டதுடன், கிழக்கில் சான்பாப்லோ வளைகுடா பகுதியைக் கடந்து பெர்க்லி, ரிச்மாண்ட் போன்ற நகர்களில் வாழும் மக்களும் கேட்டதாகப் பதிவாகியுள்ளது. அன்று மேற்கு-வடமேற்குத் திசையிலிருந்து காற்று 43 மைல் (43 mph) வேகத்தில் வீசியுள்ளதும் பதிவாகியுள்ளது. இந்த சுட்டியில் உள்ள காணொளியில் https://youtu.be/mP0P5_q1BJ4 பாலம் எழுப்பும் ஓசையைக் கேட்கலாம்.  இப்பொழுது ஒரு 75% புதிய கைப்பிடிப் பலகை வேலிகள் பொருத்தும் பணி முடிந்துவிட்டன, வரும் நான்கைந்து ஆண்டுகளில் பணி முழுதும் நிறைவடைந்த பிறகு மேலும் அதிக தொலைவு உள்ளவரும் பாலம் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

இப்பொழுது காற்றின் வேகம் என்னவாக இருந்தால் இது போன்ற ஓசை எழும்பும் என்ற அறிவியல் நோக்கில் கேள்விகளும் எழும்புகின்றன. இனி இந்தப் புதிய கைப்பிடிப் பலகை சட்டங்களும் பாலத்துடன் பலகாலம் இருக்கப் போவதால், இது போன்ற மேலும் பல ஆய்வு கேள்விகளும் அவற்றுக்கான விடைகளும் கிடைத்தவண்ணம் இருக்கும்.

For more Info.Ref.:
Rafi Letzter, What’s causing a spooky hum to fill parts of San Francisco?, June 8, 2020, Live Science.

https://www.livescience.com/golden-gate-bridge-hum.html

Wilson Walker, Hum, Baby! Golden Gate Bridge Now ‘Sings’ During High Wind, June 6, 2020, San Francisco Chronicle.

https://sanfrancisco.cbslocal.com/2020/06/06/wind-baffles-on-golden-gate-bridge-creates-loud-humming-music-sound-heard-for-miles/

Video: SFO-Bridge Hums During High Wind: Video

Golden Gate Bridge – Wind Tunnel Testing: Video


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாலம் ஏன் பாடியது?”

அதிகம் படித்தது