மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தரும் அரங்கநாதரும்

தேமொழி

May 2, 2015

paavendharum aranganaadharum4புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் நாட்டுக்காக, தமிழுக்காக, தமிழினத்திற்காக, தமிழினத்தின் தன்மான உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக, பெண்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, உழைப்பாளர்களுக்காக என ஒவ்வொருவருக்ககாகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் என பாரதிதாசன் ஓங்கிக் குரல் கொடுத்த கவிதை வரிகள் யாவும் அவரை நினைத்தவுடன் பெரும்பாலோர் நெஞ்சில் ஊற்றெடுக்கும். அவரைப் போன்ற ஒரு கவி ஒருவரைப் பெற்றது தமிழகத்தின் பேறு என்று மனம் உவகை அடையும்.

ஆனால் மற்றும் சிலருக்கோ, பகுத்தறிவு என்ற பதத்தை உச்சரிப்பவர்களைக் கண்டால் சினம் கொண்டு சீறுபவர்களுக்கோ, பகுத்தறிவுப் பாசறை இயக்கத்தின் வீரரான புரட்சிக்கவியை, சொற்களையே போர்வாட்களாகக் கொண்டு பகுத்தறிவுப் போர் புரிந்த பாரதிதாசனை நினைக்குங்கால் உள்ளம் கொதிப்படையும்! அதற்குக் காரணம், அவர் கடவுளரை பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று கவிதை பாடினார் என்றும், ஆன்மீகவாதிகளின் உள்ளத்தை தனது கவிதையின் மூலம் இந்த நாத்திகவாதி புண்படுத்திவிட்டார் என்றொரு காரணமும் கூறுவர்.   அவ்வாறு அவர்களை பதைபதைக்க வைக்கும் வரிகள் …

‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும்

பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’

என்ற பாரதிதாசனின் சர்ச்சைக்குரிய வரிகளெனக் கூறப்படுவதாக சற்றொப்ப அறுபதாண்டுகளாகத் தமிழர் அறிவர்.

ஆனால் இவ்வரிகளை எழுதியவர் பாரதிதாசன் அல்லர் என்று பாவேந்தரை நன்கறிந்தவர் பலகாலம் மறுத்து வந்துள்ளனர். அவரது கவிதை எனக் கூறுவீர்களாகில் சான்றெங்கே? என்று கேட்போரும் உளர். சான்றுகளை முன் வைக்காமலேதான் இதுகாறும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வரிகளுக்குரியவர் பாரதிதாசன் என்று யாராலும் சான்றுகளுடன் சொல்ல இயலாது, அதையும்விட பாரதிதாசனே இவை என் வரிகளல்ல, நான் எழுதவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் அவ்வாறு வாய்மொழியாகக் கூறியதற்கு சான்றும் உண்டு. அதைக் கொடுப்பவர் “கவியரசர் முடியரசன்”.

பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம்:

paavendharum aranganaadharum1பெரியகுளம் என்ற ஊரில் 1920 (அக்டோபர் 7) இல் பிறந்து காரைக்குடியில் வாழ்ந்த கவியரசர் முடியரசன் அவர்களின் இயற்பெயர் துரைராசு. மதுரைத் தமிழ்ச் சங்கம், மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பயின்ற இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சிறுவயது முதலே தன்மான கொள்கைகளிலும், இயக்கத்திலும் பற்று கொண்டவர். கவியரசர் முடியரசன் இயற்கை எய்திய (டிசம்பர் 3, 1988 ஆம் ஆண்டு) பிறகு இவரது கையெழுத்துப் பிரதிகளுக்கு இவரது மைந்தர் ‘பாரி முடியரசன்’ நூல் வடிவம் கொடுத்துள்ளார். “கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும்” என்பார் பேராசிரியர் அன்பழகன் என்று குறிப்பிடுகிறார் பாரி முடியரசன். இச்செல்வங்கள் யாவும் கருணாநிதி காலத்தில் நாட்டுடைமையாக்காபட்டன.

paavendharum aranganaadharum2இவ்வாறு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுல் ஒன்று கவியரசர் முடியரசனின் தன்வரலாறு கூறும் நூலாகும். “பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) கவியரசர் முடியரசன் படைப்புகள் – 10″   என்ற கவியரசர் முடியரசனின் நூலை “தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைய தளத்தில் (http://www.tamilvu.org/library/ln00110/html/ln00110ind.htm) பெறலாம். தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலில் கவியரசர் முடியரசன், “பாட்டு பறவையின் வாழ்க்கைப் பயணம்” என்ற நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பறவைகள் தொடர்பான பெயர்களில் … பயிலும் பூவை, கூண்டுக்கிளி, இணைபிரியா அன்றில், அன்புப் பார்ப்புகள், வலைப்படா மயில், மணிக்குயில், வானம்பாடி, புகழ்ச் சிட்டு, தோழமைப் புறா, குயிலும் குஞ்சும், அரங்கக் குயில், அளிபெறு தும்பி என்ற தலைப்புகளிட்டு எழுதியுள்ளார்.

‘இணைபிரியா அன்றில்’ என்ற அத்தியாயத்தில், தலைப்பிற்கேற்ப தனது மணவாழ்க்கை, வாழ்க்கைத்துணைவி பற்றி எழுதியவர், ‘தோழமைப் புறா’ பகுதியில் அறிஞர் தமிழண்ணல், ஈரோட்டு நடராசன், மழலைக் கவிச் செம்மல் வள்ளியப்பா போன்ற தனது அன்பு நண்பர்கள் பலரைப்பற்றிய நினைவுகளைத் தொகுத்துள்ளார். அவ்வாறே ‘குயிலும் குஞ்சும்’ என்ற அத்தியாயம் பாரதிதாசனுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது (http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=289&pno=239).

சீரங்கநாதனும் தில்லை நடராசனும்:

“குழந்தை மனங் கொண்டவர்” என்ற துணைத்தலைப்பிட்டு பாரதிதாசனின் குணநலனைப் பற்றி விளக்கும் பகுதியில் ‘சீரங்க நாதனையும் தில்லைநடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’ (பார்க்க பக்கம் 257) என்பதைப் பற்றிய உரையாடல் இடம் பெறுகிறது. காரைக்குடி அருகில் உள்ள கானாடுகாத்தான் என்னும் ஊரில், வை. சு. சண்முகம் செட்டியார் என்பவரது மாளிகையில் கவிஞருக்கும் அவரது நண்பர் தமிழண்ணலுக்கும் பாரதிதாசனைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அப்பொழுது பாரதிதாசன் தானே சுருட்டு திரித்து அதைப் புகைத்த வண்ணம் ஊஞ்சலாடிக்கொண்டே இளைஞர்களாக இருந்த இவர்களிடம், அவர்களைத் தமது சமகாலத் தோழர்கள் போல நட்புப் பாராட்டி மதித்துப் பேசியுள்ளார்.

அந்த வாய்ப்பை நழுவவிடாது கவியரசர் முடியரசன் “பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் என்ற பாடல் உங்கள் பாடலா” என பாரதிதாசனிடம் நேரடியாகவேக் கேட்டுள்ளார். அப்பொழுது பாரதிதாசன் அக்கவிதை தன்னுடையதல்ல எனவும் மறுத்துள்ளார். அத்துடன் நில்லாது, மீண்டும் பலகாலம் கழித்தும், இந்த வரிகள் யாருடையவை எனப் பாரதிதாசன் அவர்களின் மகன் கவிஞர் மன்னர் மன்னனிடம் இவர் வினவிய பொழுது, அது “நாகை அம்மையப்பன்” என்பாரின் பாடலில் வரும் வரிகள் என மன்னர் மன்னன் விளக்கமளித்துள்ளார்.

இனி கவியரசர் முடியரசனின் வரிகளாகவே நூலில் இருப்பது இங்கு தரப்பட்டுள்ளது …

‘சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும்

பீரங்கி வைத்துப் பிளக்கும்நாள் எந்நாளோ?’

என்ற பாடற்பகுதி, அக்காலத்தே எங்கும் பேசப்பட்டது. இது பாவேந்தர் பாட்டென்பது பலர் எண்ணம். பேராசிரியர் ஆ. முத்து சிவன் என்பார் தமது நூலொன்றில், இப்பாடல் பாவேந்தர் பாடலென்று கூறித்தாக்கியெழுதியிருக்கிறார். பாரதிதாசன் நூல்களில் இப்பாடல் யாண்டும் இடம் பெறவில்லையென்பதை நான் அறிவேன். எனினும் பாவேந்தரிடம் கேட்டுப் பார்ப்போம் எனக்கருதி,

ஐயா, ‘சீரங்கநாதன்’ எனத் தொடங்கும் பாடல் உங்களுடையதா? என்று வினவினேன். ‘அது என் பாட்டில்லப்பா, எவனோ நல்லாப்பாடியிருக்கிறான்’ என்று சிரித்துக் கொண்டார். இது 1956ஆம் ஆண்டு நிகழ்ந்ததென்று கருதுகின்றேன். ஆண்டு பல ஆகிவிட்டமையால் மீண்டும் ஒரு திங்களுக்கு முன் கவிஞர் மன்னர் மன்னனுக்கு எழுதிக்கேட்டேன்.

‘சீரங்கநாதரையும்…. என்று தொடங்கும் பாடல் வரி பாவேந் தருடையதன்று. நாகை அம்மையப்பன் பாடலில் வருகிறது. அப்படி இது குறித்தும் நான் ஆதாரம் தேடி இருக்கிறேன்,’ என்று 26-7-1987ல் மன்னர் மன்னன் மறுமொழி எழுதியிருந்தார். பாவேந்தர் பாடல்களிற் காணப்பெறும் வேகத்தையறிந்த பலரும், கடவுளர், பீரங்கியால் பிளக்கப்படும் பாடலும் அவருடையதாகத்தானே இருக்கும் என்று மயங்கிவிட்டனர். சிலருக்கு இன்னும் அம்மயக்கந் தீரவில்லை.

எனவே இந்த மயக்கம் இன்னமும் தீராது பாரதிதாசன் மீது கொதிப்படைபவர்களுக்கு, கவியரசர் முடியரசன் நூலின் மற்றொரு பகுதியில் அவர் இந்த வரிகள் குறித்து கொடுத்த பதிலையே சுட்டிக்காட்டி அமைவோம்….

“‘சீரங்க நாதனையும்’ எனத் தொடங்கும்பாடல் பாரதிதாசன் பாடலன்று … … கடவுளைப் பீரங்கியால் பிளந்தெறிந்து விட முடியும் என்று அஞ்சத் தேவையில்லை. கடவுளை அவ்வளவு எண்மையாகக் கருதவும் வேண்டுவதில்லை. பிறப்பால், செல்வத்தால் ஏற்றத் தாழ்வுகளைக் கடவுளர்தாம் படைக்கின்றனர் என்றால் அக்கொள்கையை உடைத்தெறிய வேண்டும் என்ற கருத்தில் பாடப்பட்டதே தவிரக்கடவுளை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்திற் பாடப் படவில்லை. சீரங்க நாதனும் நடராசனும் தான் கடவுள் என்று … நம்புவாரானால், அவ்வுருவங்களை உடைக்கலாமே தவிர உண்மையான கடவுளை உடைக்க முடியாது” (பக்கம் 45 – 46).

paavendharum aranganaadharum3பீரங்கிக் குண்டும் நடராசனும்:

கவியரசர் முடியரசன் இந்த வரிகள் பாரதிதாசன் நூல்களில் இல்லை என்றும், பாரதிசானனி மகன் அவை நாகை அம்மையப்பன் பாடலின் வரிகள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தெளிவுபடுத்திய பின்னரும், பாரதிதாசனே மறுத்த பின்னரும் கூட;   பீரங்கிக் குண்டும், நடராசனும் பற்றி அவர் எழுதியுள்ளாரா என பாரதிதாசனின் எழுத்துகள் மறு ஆய்வு செய்யப்பட்டது. அத்தேடலில் பீரங்கி பற்றி பாரதிதாசன் ‘இருமுறை’ குறிப்பிட்டுள்ளார் அந்த வரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது…

[1]

எவன் தமிழன்?

தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு

சமையல் அறையின் முள்ளங்கித் தண்டு

தமிழைத் தமிழன் தாய் என்பதாலும்

தமிழ் பழித்தானை அவன் நாய் என்பதாலும்

                         (-தமிழனை எதிர்க்கும்…)

[முழுப்பாடலும் இங்கே: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=114]

[2]

செட்டிநாட்டரசர் முத்தையா

துப்பாக்கியின் வயிற்றில் பீரங்கி தோன்றியது

மெய்ப்பாக்கி வேந்தர் அண்ணாமலையார் — இப்பார்க்கு

முத்தையா வைத்தந்தார் மூத்தோரும் என் அறிவின்

சொத்தையா என்னும் படி.

[முழுப்பாடலும் இங்கே: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=96]

அது போன்றே நடராசனைப் பற்றி இரு பாடல்களில் பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆனால் அது தில்லை பொன்னம்பலத்தில் ஆடும் நடராசனைப் பற்றி அல்ல; தமிழுக்காக உயிர்நீத்த நடராசன், தாலமுத்து நடராசனைப் பற்றியுமே. அந்தப் பாடல்களின் சில வரிகள் இங்கு…

தமிழுக்கு உயிர்தந்த நடராசன்

இந்தி எதிர்ப்புப் போரில் சிறைக்குச் சென்றான்.

இளங்காளை நடராசன்; சென்னை வாசி;

[முழுப்பாடலும் இங்கே: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=98]

***

தமிழர் ஓங்கினர் வாள்

தாலமுத்து நடராசனைத்

தந்ததும் போதாதா? — அவனுயிர்

வெந்தது போதாதா?

[முழுப்பாடலும் இங்கே: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=109]

பாவேந்தரும் அரங்கனாதரும்:

திருவரங்கப் பெருமாள் மீதும் பாரதிதாசன் கவிதை பாடியுள்ளார், ஆனால் கடவுளை பீரங்கியால் பிளக்கச் சொல்லி அல்ல … அப்பாடல்களில் சில இங்கு கொடுக்கப்படுகிறது. பாடலின் சுவை நயம் கருதி முழுப்பாடல்களுமே இங்கு கொடுக்கப்படுகிறது …

நகைச்சுவைப் பாடலாக சென்னையின் வீட்டுவசதியைப் பற்றி நையாண்டி செய்யும் பாடலில், ஒரு படி அளவு தினை வைக்க இடம் இருந்தாலும் அதையும்கூட வாடகைக்கு விட்டுவிடுவார்கள் சென்னைவாசிகள் என நையாண்டி செய்கிறார்,

நகைச்சுவைப் பகுதி: சென்னையில் வீட்டு வசதி

[ http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=49]

ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!

   திருவரங்கப் பெருமாள் நீரே!

சென்னையில் உங்கள் சிறந்த நாமம்

   தெரியாதவர்கள் ஒருவருமில்லை!

பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்

   பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்

தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி

   சேகரித்தேன்! ஆகையால் அதனை

வீட்டில் வைத்து வெளியிற் சென்று

   விடிய வந்து எடுத்துக்கொள்கிறேன்.

வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்

   “பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!

படித்தினைக் கிடமிருந்தால்,

   குடித்தனத்துக்கிடம் கொடுத்திருப்பேனே!!”

காதல் பாடல்கள்: சேவலைப் பிரிந்த அன்றில் பேடு

[http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=55]

ஏண்டி போனார் திருவரங்கம்? — அவர்

என்னாசைத் தங்கச் சுரங்கம்!’ ஏண்டி போனார்?

என் வேண்டுகோளைத் தாண்டி — மலை

தாண்டி, ஆற்றைத் தாண்டி அவர் ஏண்டி போனார்?

நான் எட்டிப் பிடித்த வட்டநிலா — நல்ல

இனிப்பினிலே பழுத்த பலா!

வட்டி கொடுத்தாலும் வாராச் செல்வம்

வாழ்ந்த வாழ்வும் இந்த மட்டிலா? ஏண்டி போனார்?

அவரும் நானும் பூவும் நாரும்

பிரிந்ததில்லை நொடி நேரம்;

எவர்க்குத் தெரியும் திருவரங்கம்!

இங்கிருந்து பத்துகாத தூரம் ஏண்டி போனார்?

அன்றில் பறவை பிரிந்ததில்லை,

ஆண் பிரிந்து பெண் வாழ்ந்ததில்லை,

என்ற சேதி தெரியாதா? — நான்

எப்படிப் பொறுப்பேன் இந்தத் தொல்லை?

ஏண்டி போனார்?

[மாமி அழைத்தாள் என்று சென்று திரும்பிய தலைவியிடம்

தோழி, உன் துணைவர் திருவரங்கம் போயிருக்கிறார் என்று

கூறிய அளவில், தலைவி தோழியிடம் வருந்திக் கூறிய பாட்டு இது.]

இப்பாடலும் கூட தவறானக் கருத்துப் பரவலுக்கு ஒரு காரணமாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது. பிரிந்த”தில்லை”, வாழ்ந்த”தில்லை”, திருவரங்கம் என்ற சொற்கள் குழப்பம் விளைவித்திருகவும் கூடும். தில்லையும் திருவரங்கமும்தான் ஒரே பாடலில் இடம் பெறுகின்றனவே.

பாரதிதாசன் பன்மணித்திரள் என்ற பகுதியில் இடம் பெறும் “திருவரங்கப்பெருமாள் செத்த பத்து!” என்ற ஒரு பாடலும் உண்டு. இக்கவிதையின் கருப்பொருள் திருவரங்கத்தில் நிகழ்ந்த ஒரு தீ விபத்தைக் குறிப்பது போன்ற தோற்றம் தருகிறது, நாத்திக நெடிவீசும் அப்பாடலின் சில வரிகள் இங்கே …

[முழுப்பாடலும் இங்கே: http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=84]

[...]

மலரவனை யும்சிவனை யும்படைத்த மாயன்

சிலர்வைத்த தீயணைத்த லின்றிக் — கலகலென

அத்தீயில் வேகையிலே ஆன திருச்சியினோர்

அத்தீ அணைக்கவந் தார்.

வருவதற்குள் மண்ணுண்டான் தீயுண்டான் மற்றும்

கருவறையில் எல்லாம் கரியாய்க் — கரிந்தனவாம்

நெட்டைக் கருங்கல்லே நீறாகும் போதுவண்ணப்

பட்டாடை என்ன படாது!

[...]

பாரதிதாசன் வரிகளலென அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு கூறுவோருக்கு, அவர்தம் கூற்றை மறுத்துச் சான்றுதரும் வகையில் தகவல்கள் இக்கட்டுரையின் வழி வழங்கப்பட்டுள்ளன. அதற்குத் துணை நின்ற கவியரசர் முடியரசன் அவர்கள் பாவேந்தரைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளை முன்வைத்து தமிழன்னையின் தவப்புதல்வன் புரட்சிக்கவி பாரதிதாசனைப் போற்றுவோம்.

“பாரதிதாசன் ஒரு பிறவிக் கவிஞர், அஞ்சாத் துணிவினர், பெரியார் தொண்டர். பொழுதெல்லாம் கற்பனையுலகில் பறந்து திரியும் வானம்பாடி. கனல் தெரிக்கப் பேசும் போர் மறவர், பெண்மையைப் போற்றும் பெட்பினர், தடைகளை மீறிப் படர்ந்து செல்லும் ஆற்று வெள்ளம், சூதுவாதறியாப் பச்சைக் குழந்தை, உலக நடை முறைகளுக்கு அப்பாற்பட்ட ஒளிக்கற்றை. இலக்கண மணிகள் நிறைத்து வைக்கப்பட்ட பொற்பேழை, வேகந்தடுத் தாளும் வித்தகர், பெருமிதங்குன்றாப் பீடு நடையார், பிறர் நலங்காக்கப் பணிந்துபோகும் பெற்றியர், பாட்டுச் சுரக்கும் வற்றா ஊற்று ” (பக்கம் 263).


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தரும் அரங்கநாதரும்”

அதிகம் படித்தது