மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தர் பாரதிதாசனின் காப்பியம் ⁠— குறிஞ்சித் திட்டு

தேமொழி

Aug 20, 2022

siragu Kurinji Thittu

‘குறிஞ்சித் திட்டு’ என்ற கவிதை நூல் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் வெளியானது. இந்நூலுக்கான முன்னுரையில் இக்கவிதைப் படைப்பைத் தாம் இரு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத் தொடங்கி, முக்கால் பகுதி போல முடிவடைந்த பிறகு அது குறித்து நினைவு இல்லாமல் போனதாக பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். பின்னர், நூலை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்ட பிறகு, பெரிதும் முயன்று, மீண்டும் முன்னர் எழுதியவற்றைப் பலமுறைப் படித்து நினைவிற்குக் கொண்டு வந்து தொடர்ந்ததாகவும் எழுதியுள்ளார். முதலில் எழுதிய வேகமும் ஆர்வமும் மட்டுப்பட்டுப் போனது குறித்து வருந்தி, நூலின் சுவை குன்றியிருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ச்சி விட்டால் ஏற்படக்கூடிய இத்தகைய இடையூற்றைக் கவனத்தில் கொள்ளுமாறும் இளங்கவிஞர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிக எளிய கவிதை வடிவில் எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலின் கதைக் களம் சமகாலத்துத் தமிழக வரலாற்றுக்கு இணையாகவே செல்கிறது. ஆனால், கதை நடப்பது குமரிக்குத் தெற்கே நடுக் கடலில் உள்ள ‘குறிஞ்சித் திட்டு’ என்ற கற்பனையானதொரு குட்டித் தீவில். சென்னையில் இருந்து தெற்கே மூன்று நாள் கப்பல் பயணத் தொலைவில் உள்ளது குறிஞ்சித் திட்டு. கதை நடக்குங் காலத்தில் இன்னமும் அங்கு முடியாட்சி நிலவுகிறது. குடிமக்கள் அங்குத் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பழங்குடித் தமிழ் மக்கள். அங்கு ஐரோப்பியர் போன்ற அயலார் வந்து குறிஞ்சித் திட்டின் ஆட்சியைப் பிடிக்கவில்லை, தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. ஏனெனில் குறிஞ்சித் திட்டு தீவைச் சுற்றிக் கடலில் சுழல்கள் அதிகம், அவை குறித்து அறியாது தீவை அணுகும் கப்பல்கள் கடலில் மூழ்கிவிடும் (பெர்முடா முக்கோணம்/Bermuda Triangle தீவுகளுள்ள கடற்பகுதி போன்றதொரு கற்பனை இது). அத்தீவு மக்களும் வெளி உலகத்துடன் அதிகத் தொடர்பு இல்லாதவர்கள், அயல்நாடுகளுக்குப் பயணிக்க விரும்பாதவர்கள். இருப்பினும், சமகாலத்து உலக நடப்புகளை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கே அக்கடற்பகுதி சுழலில் சிக்காமல் பயணிக்கும் முறை தெரியும்.

குறிஞ்சித் திட்டு இயற்கையழகு கொஞ்சும் வளமான ஒரு தீவு. இயற்கைப் பொழில்களின் இடையே இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அமைக்கப்பட்ட தங்குமிடங்கள் கொண்டது. ஆனால், இங்கு 20ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான மோட்டார்கார், தொலைபேசி, மின்விளக்கு, மின்விசிறிகள், வானொலி, துப்பாக்கி போன்றவையும் வந்துவிட்டதாக ஆங்காங்கே இடையில் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

குறிஞ்சித் திட்டின் அரசன் திரைய மன்னன் என்பவன். அரசி மல்லிகை (மன்னன் என்பதன் பெண்பால் மன்னி, மன்னி என்று பாவேந்தர் பலமுறை இந்நூலில் குறிப்பிடுகிறார்). இவர்களுக்கு இளந்திரையன் என்றொரு மகனும் உள்ளான். இளம் வாலிபனான அவன், அரசி மல்லிகையின் அண்ணனும், தனது தாய்மாமனும், விளா மாவட்டத்தின் சிற்றரசனுமான திண்ணன் என்பவனுடைய நாட்டில் அவனுடைய மேற்பார்வையில் போர்ப்பயிற்சி பெற்று வளர்ந்து வருகிறான். அரசியின் உற்ற தோழி தாமரை என்பவள். திரைய மன்னனின் பாட்டனாருக்கும், அவனது தந்தைக்கும், இவனுக்கும் என ஆலோசனை கூறும் முதுபெரும் அமைச்சர் அறிவழகன். இவர் அறிவுரைகளும் கடுமையான சொற்களும் அரசனுக்கு அவர் மேல் சினம் தந்தாலும், அவர் சொல்லை மறுத்துப் பேச முடிவதில்லை என்பது அரசனின் நிலை.

இவர்களுடன் மேலும், வாய்மை நிறைந்த வீரனான நாட்டின் படைத் தலைவன் சேந்தன், வல்லான் என்னும் துணைப் படைத்தலைவன், சேந்தனின் தோழனும் உழைப்பாளர் தலைவனுமான செழியன், மக்கள் தலைவர்களான நெடுமாறன், வேலன் போன்றோர், அரண்மனையின் தலைமைப் பணியாள் சில்லி மூக்கன், இவன் மகன் தங்கவேல் போன்றோரும் கதை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர். ஆனால், கதையின் போக்கை நிர்ணயிப்பவள் என்னவோ விநோதை என்ற பேரழகிதான். இந்தியாவில் சென்னைக்கு வரும் திரைய மன்னன் இப்பேரழகியின் அழகால் ஈர்க்கப்பட்டு, தனக்கென்று மனைவி, மகன், ஒரு குடும்பம் இருப்பதை எல்லாம் அவளிடம் கூறாமல் மறைத்து, அவளைக் குறிஞ்சித் திட்டின் அரசியாக்குவதாகக் கூறி அழைத்து வருகிறான். அவளுடன் அவள் தோழி அம்புயம், சமயத் தலைவர்கள் சிலரும் வந்து சேர்கிறார்கள். அதன் பிறகு அமைதியான குறிஞ்சித் திட்டு பற்பல சோதனைகளை எதிர்கொள்கிறது. இறுதியில் பல இறப்புகளுக்குப் பிறகு, தீயவர்கள் ஒழிந்த பிறகு நாட்டில் குடியாட்சி மலர்கிறது என்பதை 66 பிரிவுகளில் (அத்தியாயங்களில்) பாடல்களால் விளக்கிச் செல்கிறார் பாரதிதாசன்.

குறிஞ்சித் திட்டு அரசர்கள் அயல்நாடு செல்லும் வழக்கமில்லை, வழக்கத்திற்கு மாறாக திரைய மன்னன் இந்தியப் பயணம் மேற்கொண்டு 50 நாட்கள் கழித்து நாடு திரும்புகிறான். அவனுக்காகக் குடிமக்களும் அரசு ஊழியர் பலரும் கடற்கரையில் காத்திருக்கிறார்கள். அன்று உடல்நலக் குறைவால் அரசியால் துறைமுகத்திற்கு வர இயலவில்லை என்று கதை தொடங்குகிறது. கரையிறங்கும் அரசனோடு இளைஞர் இருவரும் (இவர்கள் இருவரும் ஆண்வேடத்தில் வரும், விநோதை என்ற பேரழகியும் அவள் தோழி அம்புயமும்), சமயத் தலைவர்களும் (வைதீகர்கள், வடமொழி ஆர்வலர்களும் சைவர்களுமான சிவாநந்தர், அவர் மாணவர் சிவசம்பந்தர், வைணவரான திருமாலடியார் ஒருவர், மற்றும் தமிழ்ப்பற்றுடன் இறைப்பற்றும் மிக்க மடத்தலைவர் தம்பிரான் ஒருவரும்) சமயம் பரப்பும் நோக்குடன் உடன் வருகிறார்கள்.

தன்னை வரவேற்க வந்த அனைவரையும் நலம் விசாரித்து, அமைச்சரிடமும் படைத்தலைவனிடமும் நாட்டு நடப்பு தெரிந்து கொண்ட பின்னர் தான் அழைத்து வந்த விருந்தினர் அனைவருடனும் சிற்றுந்தில் ஏறி தரும இல்லம் செல்கிறான் திரைய மன்னன். வழியில் இருக்கும் தன் அரண்மனையில் இறங்கவில்லை, அரசியைப் பார்க்கவுமில்லை, நேரே சென்றுவிடுகிறான். அவனின் இத்தகைய புறக்கணிப்பு அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மன்னி மல்லிகைக்கும், அவள் தோழி தாமரைக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

தரும இல்லத்தில் ஆணுருவைக் கலைந்த விநோதையும் அரசனும் தனித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் அரசனின் காவலுக்கு இருக்கும் தலைமைப் பணியாளன் சில்லி மூக்கன் எதிர்பாராமல் நுழைந்து அரசனின் மனைவி மகன் குடும்பம் ஆகிய விவரங்களைப் பற்றிப் பேசிவிடுகிறான். அரசன் தன்னை பொய் சொல்லி ஏமாற்றியதையும், தான் ஆணுடையில் அழைத்துவரப்பட்ட காரணத்தையும் அறிந்து அதிர்ச்சி கொள்கிறாள் விநோதை. மன்னன் சமாதானம் செய்யும் நோக்கில், அவளை உறுதியாக மணமுடிப்பேன் என்றும், இனி அவள்தான் அரசி என்றும், அவளுக்குப் பிறக்கப்போக்கும் பிள்ளைதான் அரச வாரிசு என்றும் வாக்குறுதி தந்து விநோதையைச் சமாளிக்கிறான்.

மறுநாள் அரசியின் தோழி தாமரை தரும இல்லம் வந்து அரண்மனைக்கு அரசியைக் காண வராமல் விருந்தினருடன் தரும இல்லம் வந்து தங்கியிருப்பதும், அரசியை வருத்தமடையச் செய்வதும் முறையா, வாருங்கள் அரண்மனைக்கு என்று கூறி வாதிடுகிறாள். நாடு திரும்பிய என்னை வரவேற்க அரசி துறைமுகத்திற்கு ஏன் வரவில்லை. அவள் வருந்தினால் எனக்கென்ன, அவளை நான் பார்க்க விரும்பவில்லை, போய்விடு என மன்னன் தோழி தாமரையை விரட்டி விடுகிறான். தோழி கூறிய செய்தி அறிந்து வருந்தும் மன்னி, தரும இல்லம் சென்று அரசனிடம் மன்னிப்புக் கேட்க முடிவெடுக்கிறாள். மறுநாள் மன்னிப்புக் கேட்பதற்கு தரும இல்லம் செல்லும் மன்னியும் தோழியும் திறந்திருந்த சாளரம் வழியே தனியறையில் மன்னனும் விநோதையும் நெருங்கி உறவாடி இருந்த நிலை கண்டு உண்மை அறிந்து மனம் அதிர்ந்தவர்களாகப் பேசாமல் அரண்மனைக்குத் திரும்புகிறார்கள்.

மன்னன் உரைத்தது பொய்ச் சாக்கு என்று அறிந்த மன்னியின் மனம் துடித்தது. உண்ண இயலாமல் உறங்க முடியாமல் துடிக்கிறாள். அரசியின் நிலை அறிந்த அமைச்சர் வெகுண்டு மன்னனிடம் சென்று அவனைச் சாடி, அரசியின் உயிர் காக்க அரண்மனைக்குத் திரும்ப அறிவுறுத்துகிறார். அரண்மனை திரும்பி அரசியைச் சந்திக்கும் மன்னனைக் கடுமையாகக் கடிந்து கொள்கிறாள் மன்னி மல்லிகை. வாளை எடுத்து தற்கொலை செய்து உயிர் நீக்கிறாள். முதலில் அதிர்ந்து பழிக்கு அஞ்சி தானும் தன் உயிரைப் போக்கிக் கொள்ள மன்னன் முயல்கிறான். அவனை விரைந்து வந்து தடுத்து நிறுத்துகிறாள் பேரழகி விநோதை. அவள் முகம் கண்டு மதி மாறிய மன்னன், அரசி மறைவால் தனக்கிருந்த ஓர் இடையூறு நீங்கியது என்ற உண்மையை உணர்ந்து எவரையும் பொருட்படுத்தாமல் விநோதையுடன் சென்றுவிடுகிறான். மக்கள் துயருறுகிறார்கள். தோழி தாமரை துடிக்கிறாள்.

விளா மாவட்டத்தின் சிற்றரசனும் அரசியின் அண்ணனுமான திண்ணனுக்கும் அவன் மேற்பார்வையில் போர்ப் பயிற்சி பெற்றுவரும் இளவரசன் இளந்திரையனுக்கும் அரசியின் மறைவு தொலைபேசி வழியே தெரிவிக்கப்பட்டு அவர்கள் தம் சிற்றுந்தில் தலைநகர் நோக்கி விரைகிறார்கள். வரும் வழியில் இரு இளம்பெண்களின் அழுகுரல் அவர்களைத் தடை செய்கிறது. அவர்களின் துயர் நீக்க இறங்குகிறார்கள். ஆனால் அப்பெண்கள் அவர்களைச் சூழ்ச்சியாக நஞ்சு கொடுத்துக் கொன்று அவர்களது உடல்களை நீர்நிலையில் வீசிவிடுகிறார்கள். அந்த சூழ்ச்சிக்காரர்கள் வேறு யாருமல்ல விநோதையும் அவள் தோழி அம்புயமும்தான். விநோதையின் வழியில் தலையிடக்கூடிய அரசி, அவள் அண்ணன், இளவரசன் என அனைவரும் இறந்த பிறகு, விநோதை தன்னை எதிர்க்கக் கூடியவர்களை தன் வழிக்குக் கொண்டு வரும் அடுத்த கட்டத்தில் இறங்குகிறாள். தன் அழகைக் கருவியாகக் கொண்டு மோகவலை விரித்து சிலரைத் தான் ஆட்டுவிக்கும் கைப்பாவையாக ஆக்குகிறாள் விநோதை. அவள் ஆசைக்கு உடன்படாதவர்கள் மீது பழி சுமத்தி தான் கைப்பாவை ஆக்கிக் கொண்டவர் மூலமே தீர்த்துக் கட்டுகிறாள். அவளால் குறி வைக்கப்பட்டவர்கள் படைத்தலைவன் சேந்தன், சேந்தனின் நண்பன் செழியன், அரண்மனையின் தலைமைப் பணியாள் சில்லி மூக்கனின் மகன் தங்கவேல், இறுதியில் மடத்தலைவர் தம்பிரான் எனப் பலர்.

கூலி போதாமல் வறுமையில் வாடி, மன்னனிடம் குறைதீர்க்கக் கோரிக்கை வைத்துப் போராடும் ஏழைத் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சிறை நிரம்புகிறது. நாட்டில் விளைச்சல் இன்மை, வணிக வளர்ச்சி இன்மை எனப் பல சிக்கல்களும், அவற்றைச் சீர் செய்ய அரசின் கருவூலத்தில் செல்வமும் இல்லாத நெருக்கடி நிலையும் நிலவுகிறது. இந்நிலையைக் குறிப்பிட்டுப் பல துறைகளின் அதிகாரிகள் அரசனின் அவையில் வந்து முறையிடுகிறார்கள். ஆனால், மன்னனோ கொஞ்சமும் பொறுப்பின்றி விநோதையின் பேராசைக்கு இணங்கி, அவள் சொல் கேட்டு சமயம் பரப்பக் கோயில் எழுப்புவதிலும், அவளுக்கு விலையுயர்ந்த அணிகலன்கள் வாங்கி அணிவிப்பதிலும் இருக்கும் பொருளை விரயம் செய்து விநோதையை மகிழ்விக்கிறான். நாடு போகும் போக்கைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் மறைந்த அரசியின் தோழி தாமரை குமுறுகிறாள். நாட்டு மக்களைப் புரட்சி வழியில் நடக்கக் கோருகிறாள்.

இதற்கிடையே, நாட்டில் வறுமையால் துன்புறும் குடிமக்களும், உழைப்பாளர் கூட்டமும், அரசு அதிகாரிகள் சிலரும் இனி நாட்டில் முடியாட்சி நீங்கி குடியாட்சி மலர்வதே நன்று என்ற திட்டமிடலுடன் படைத்தலைவன் சேந்தன் தலைமையில் கூடி விவாதிக்கின்றனர். மக்களுக்கு ஒருவேளை உணவிட்டு அவர்களைத் தன்வசப்படுத்த முயல்கிறாள் விநோதை. அத்துடன், தனது ஆசை வார்த்தைக்கு இணங்கி தன்னுடன் ஒத்துழைக்காத படைத்தலைவன் சேந்தனைச் சூழ்ச்சியாக, தன்னைத் தகாத உறவிற்கு அவன் அழைத்ததாக அரசனிடம் பொய் கூறி அரசனை விட்டே மறுநாள் காலைக்குள் சேந்தன் இறக்க வேண்டும் என்ற மரண தண்டனைக்கு உத்தரவிடச் செய்கிறாள். சேந்தனின் நிலைக்காக மனம் வருந்தும் விநோதையின் தோழி அம்புயம், விநோதை குறித்த உண்மைகளையும், குறிஞ்சித் திட்டுக்கும் அதன் அரச குடும்பத்திற்கும் விநோதை விளைத்த தீங்குகளையும் சேந்தன் முன் மக்களிடம் கூறி அவன் இறக்கும் தறுவாயில் அழுகிறாள். சேந்தன் தன் தோழன் செழியனைத் தனியே அழைத்து, புலி முத்திரை பதித்த தன் மோதிரத்தை அவனுக்கு அளித்து, மக்களைப் புரட்சி வழியில் நடத்திச் செல்லுமாறு மக்களைக் காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறான். பிறகு அரச கட்டளையை நிறைவேற்ற தோட்டத்தில் வளர்க்கப்பட்ட தீயில் பாய்ந்து தன்னுயிர் மாய்த்துக் கொள்கிறான்.

செழியன் மீதும் இச்சை மிகக் கொண்ட விநோதை மன்னனை மணம் முடிக்கும் முன் செழியனை மணக்க எண்ணி தன் வஞ்சகக் கருத்தை அரசனையும் ஏற்கச் செய்கிறாள். சோதிடம் பார்க்கையில் அவளது முதல் கணவன் மணமுடித்த சிறிது நாளில் மரிப்பான் என்று இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்தை அரசனும் நம்புகிறான். செழியனும் அவள் மீது கொண்டிருக்கும் மையலால் மணக்க உடன்படுகின்றான். கோவிலில் பார்ப்பனர் சடங்கு முறையில் திருமணம் நடத்தவும், அதனைத் தொடர்ந்து தான் அழித்த படைத்தலைவன் சேந்தன் வீட்டில் மணவிழா கொண்டாட்டம் நடத்தவும் எனத் திட்டமிடுகிறாள் விநோதை. செய்தி அறிந்த நாட்டுமக்கள் கொதிக்கிறார்கள். முடியாட்சியை நீக்க உதவுவதற்கு தங்கள் தலைவனாக நம்பியிருந்த செழியனின் அடாத போக்குக் கண்டு அவனை வெறுக்கிறார்கள்.

மணமான அன்று இரவே கணவன் செழியனுக்குத் தூக்க மருந்து கொடுத்து உறங்கச் செய்துவிட்டு, இரவோடிரவாக அரண்மனை நாடி வந்து அரசனிடமும் குலாவுகிறாள் விநோதை. இதைத் தலைமைப் பணியாள் சில்லி மூக்கன், முன்னாள் அரசியின் தோழி தாமரைக்குச் சொல்லுகிறான். வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும் அவள் செழியனுக்கும் அரசனுக்கும் அவர்கள் ஏமாற்றப்பட்டதை மொட்டைக் கடிதமாக எழுதி அவர்கள் அறையில் வீசிவிடுகிறாள். அதைப் படித்த அரசன் கோபத்துடன் விநோதையைக் கடிந்து கொள்கிறான். விநோதை மன்னனிடம் தான் அவன் மேல் கொண்டது குற்றமற்ற அன்பு என்பதை மறுநாள் மாலை, கடலோரத்தில் இருக்கும் மலைக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவன் அரசருக்கு அறிவிப்பார் என்று கூறி தரும இல்லத்திற்குச் செல்கிறாள். அங்குள்ள மடத்தம்பிரானிடம் உதவி கோருகிறாள். மறுநாள் மாலையில் சிவன் கோயிலில் அவளுக்குச் சாதகமாக சிவனின் அறிவிப்பு வெளியாக உதவ வேண்டியது தம்பிரானின் பொறுப்பு என்று கூறி அவனுக்கு ஆசை காட்டுகிறாள். விநோதைக்குத் தெரியாமல் அவளை மறைவாகப் பின்தொடர்ந்து அவள் நடவடிக்கையைக் கண்காணித்துக் கொண்டிருந்த தோழி தாமரை இதற்கு மேல் பொறுக்க முடியாமல் மறைவிலிருந்து ஈட்டி வீசி விநோதையைக் கொன்றுவிடுகிறாள். பிறகு அவள் உடலைக் கோயில் கருவறையில் சிவனின் திருவடியின் கீழ் கிடத்திவிட தம்பிரானிடம் சொல்லிவிடுகிறாள்.

மறுநாள் மாலை சிவனின் அறிவிப்பு என்ன என்பதை அறியும் ஆவலுடன் மலைக்கோயில் நிரம்பி வழிகிறது. அரசன் திரையன், அமைச்சன் அறிவழகன், செழியன், படைத்தலைவன் வல்லான், எண்ணிலடங்கா ஊர்மக்கள் பலரும் கூடியபின்னரும் விநோதை அங்கு வராததை அறிந்து அவர்கள் வியக்கிறார்கள். கருவறை மூடியிருப்பதைக் கண்டு அரசன் அதைத் திறக்கிறான். அங்கு இறந்து கிடக்கும் விநோதையைக் கண்டு கொதித்து இதற்குக் காரணம் செழியன் என்று அவனைக் கொல்ல முனைக்கிறான். அமைச்சர் தடுக்கிறார். தாமரை நான்தான் அக்கொடியவளைக் கொன்றேன் என்கிறாள். மக்கள் தலைவன் நெடுமாறன் செழியனை இடித்துரைக்கிறான். விநோதை மீது கொண்ட மதி மயக்கத்தால் படைத்தலைவன் சேந்தன் தன்னிடம் மக்கள் தலைவனாக நாட்டு மக்களை வழி நடத்த, நாட்டைக் காக்க ஒப்படைத்த கடமையிலிருந்து தான் தவறியதை எண்ணி வருந்துகிறான். நெடுமாறன் கையில் சேந்தனின் புலி முத்திரை பொறித்த மோதிரத்தைக் கொடுத்து அவனைப் பொறுப்பேற்கச் சொல்லும் செழியன் விரைந்து சென்று மலைக்கோயில் உச்சியிலிருந்து கடலில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்கிறான்.

அமைச்சர் திரைய மன்னனை நோக்கி பரத்தையர் நடத்தை கொண்ட அயலாள் ஒருத்திமேல் இச்சைக் கொண்டு நாட்டுக்கு அவளை அழைத்து வந்துதன் அரசி, மகன், குடும்பம் என யாவரையும் அழித்ததும் அல்லாமல் அவற்றுக்காக வருந்தாமல், மக்களின் துயர் துடைக்காமல், ஊதாரியாகத் தண்டச் செலவுகள் செய்து மக்களின் வெறுப்பிற்கும் ஆளாகி கடமை தவறியதைக்கூறி மன்னனைச் சாடுகிறான். தன் குற்றம் உணர்ந்த மன்னவனும் அவச்சொல் தாளாது தன்னைக் கொன்று விடும்படி மண்டியிட்டுக் கூறி தானே உயிர் துறக்கிறான். நெடுமாறன் அமைச்சருடன் கலந்தாலோசித்த பின்னர் முடியாட்சி விலகி, குறிஞ்சித் திட்டு மக்களாட்சிக்கு மாறுகிறது.

ஆட்சியைப் பிடிக்கப் பேராசை கொண்ட அயல்நாட்டுப் பெண் ஒருத்தியின் வலையில் சிக்கிய நாடு, நச்சுக் கொடி போன்ற அவளின் ஊடுருவலாலும், அவள் கொணர்ந்த சமயங்களின் ஊடுருவலாலும் நிலைகுலைந்து பல தற்கொலைகள், கொலைகள், பொறுப்பற்ற ஆட்சி ஆகியவற்றை எதிர்கொண்டு பின்னர் மக்களாட்சிக்கு மாறுகிறது என்ற கதைக் களத்தைத் தனது காப்பியக் கவிதைக்காக எடுத்துக் கொண்டுள்ளார் பாவேந்தர். அறுசீர் விருத்தம், எண்சீர்விருத்தம், அகவற்பா, வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா பாடல்களால் அமைந்த எளிய நடையில் உள்ள காப்பியமாக குறிஞ்சித்திட்டு அமைந்துள்ளது.

இக்கவிதைக் கதையில் தனது புலமை, பாவல்லமை, இலக்கியத் திறமை ஆகியவற்றைச் செம்மையாகக் காட்டியுள்ள பாரதிதாசன். தனது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் காட்சிகள் பலவற்றை அமைத்துள்ளார். பகுத்தறிவு கொள்கைகளை வலியுறுத்தல், வடமொழித் திணிப்பை எதிர்த்தல், பார்ப்பனீயம் எதிர்ப்பு, பொதுவுடைமைக் கொள்கை அறிவுறுத்தல், ஆலைத் தொழிலாளர் / உழைப்பாளர் நிலை உணர்த்துதல், பெண்ணியச் சிந்தனை, மக்களாட்சி ஆதரவு, தமிழ்ப் பற்று, பார்ப்பனத் திருமண முறையின் நம்பிக்கைகள் குறித்த எள்ளல், சென்னை திரைத்துறை பெண்களின் அவலநிலை, சென்னை நகரவாழ்வின் தீமை, சமகால அரசியல் எனப் பலவும் இவற்றில் அடங்கும். குறிஞ்சித்திட்டு காப்பியத்தில் பாரதிதாசன் யாத்த பாடல்களின் கவிதை நயம் பாராட்டலும், அவற்றின் கருத்து நயம் பாராட்டாலும் விரிவாக விரித்துரைக்கப்பட வேண்டியவை.

பார்வை நூல்:

குறிஞ்சித் திட்டு, கவிதை, பாரதிதாசன், (முதல் பதிப்பு-1958), ஐந்தாம் பதிப்பு, 258 பக்கங்கள், பூம்புகார் பதிப்பகம், 1985.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்; தமிழிணையம் – மின்னூலகம்: TVA_BOK_0023176

[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0023176_குறிஞ்சித்_திட்டு.pdf]

குறிஞ்சித் திட்டு-பாரதிதாசன் கவிதைகள்

(பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு)

https://www.tamilvu.org/node/154572?linkid=85329


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தர் பாரதிதாசனின் காப்பியம் ⁠— குறிஞ்சித் திட்டு”

அதிகம் படித்தது