மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை

தேமொழி

Dec 16, 2017

நூல்: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்

ஆசிரியர்: சி. ஜெயபாரதன்

Siragu prapancham1

அறிவியல் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்துவரும் அணுவியல் விஞ்ஞானி திரு. சி. ஜெயபாரதன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2000 ஆண்டுகளில் அறிமுகமாவதற்கும் ஒரு கால் நூற்றாண்டிற்கும் முன்னரே எழுதுவதை ஒரு தன்னார்வப் பணியாகத் தொடங்கியவர் அவர். கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியப் பங்களிப்புகளும், அறிவியல் கட்டுரைகள் வழங்குவதிலும் இவருக்கு ஈடு இணை கிடையாது. அவர் எழுத்துக்களில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய பகுதி அவரது அறிவியல் பங்களிப்புகளே. தமிழில் கதையும், கவிதையும், கட்டுரைகளும் எழுத எண்ணிறைந்தவர்கள் உள்ளனர். ஆனால் தமிழில் அறிவியல் குறித்து எழுதுபவர்கள் மிகவும் சொற்பமே. ஆகவே அவரது அளப்பரிய பங்களிப்பின் தேவையை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

நாம் எதிர் கொள்ளும் சம கால நிகழ்வுகளான புவியதிர்ச்சி, ஆழிப்பேரலைகள், சந்திர கிரகணங்கள், சூரிய கிரகணங்கள், எரிமலை வெடிப்பு, துருவப்பனி உருகுதல், சுற்றுச் சூழல் மாற்றங்கள், செயற்கை விண்கோள்கள், செவ்வாய் கோளுக்குப் பயணம் என அறிவியல் உலகத்தின் தற்காலச் செய்திகளை, கடந்த 15 ஆண்டுகளாக இணையம் வழியாக விரைவில் அவர் தமிழுக்கு மாற்றும் இடையறா முனைப்பின் காரணமாக நாம் அந்த நிகழ்வுகளின் அறிவியல் பின்னணிகளை விளக்கமாக அவரது கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு அறிவியலாளர் ஆய்வு நோக்கில் செய்திகளைத் தொகுத்து, படங்களுடன் எளிமையாக விளக்கி, சான்றுகளுடன் இணைத்துத் தரும் முறை நம்பிக்கையுடன் அறிவியல் அறியும் வாய்ப்பாகவும் தமிழருக்கு அமைந்துள்ளது.

“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக்கில்லை! பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை” என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதுடன் ஒப்பிட்டால் …

வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சியைத் தமிழ் மொழி வழியே அறிய விரும்புபவர்களுக்கு வாய்ப்பில்லை! இன்னமும் அறிவியல் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து வளரும் இளைய தலைமுறைக்கும் பள்ளி வயது மாணவர்களுக்குத் தருவதில் நாம் பின்தங்கித்தான் உள்ளோம். இவற்றை யாராவது எழுத வேண்டும் என்று அனைவருக்கும் புரிகிறது. ஆனால் திரு. ஜெயபாரதன் போல விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அறிவியல் ஆர்வலர்களே இருப்பது ஏன் என்பதுதான் புரிய வில்லை என்றே கூறவேண்டியுள்ளது.

நமக்குப் புதிராகத் தோன்றும் பிரபஞ்சத்தின் வயதென்ன? அது எத்தனை பெரியது? எப்படித் தோன்றியது? அதன் வடிவம் என்ன? எத்தனைப் பிரபஞ்சங்கள் இருக்கின்றன? பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது? கருமைப் பிண்டம், கருந்துளைகள் என்றால் என்ன? பால்வீதி மண்டலம், ஒளிமந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின? நியூட்ரினோ என்றால் என்ன? விண்மீன்களின் தோற்றமும் முடிவும் எப்படி ஏற்படுகிறது? புவியில் விழும் விண்கற்கள், மோதக்கூடிய முரண்கோள்கள் (Asteroids) ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்திகள் எவ்வாறு இயங்குகிறது? சூரியனுக்கு முடிவுண்டா? சூரியக் குடும்பம் எப்படித் தோன்றியது? நிலவு எப்படித் தோன்றியது? சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின? செவ்வாய்க் கோளில் நீர் உள்ளதா? சுக்கிரன் ஏன் ஒரு வறட்சிக் கோளாக இருக்கிறது? வியாழக்கோள் ஒரு விண்மீனா? புவியில் கடல் தோன்றியது எப்படி? புவியின் வாயு மண்டலம் எப்படி ஏற்பட்டது? புவியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? என நாம் அறிய விரும்பும் தகவல், ஆர்வத்துடன் எழுப்பும் அறிவியல் கேள்விகளின் பட்டியல் நீளம்.

இவை யாவற்றுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் இந்தநூலை எழுதியுள்ளார் நூலின் ஆசிரியர். திரு. ஜெயபாரதனின் கட்டுரை வரையும் விதத்திலும் அறிவியல் செய்தியைத் தரும் முறையிலும் அறிவியல் அணுகுமுறையைப் போலவே அதிலும் ஒரு சீரான வரைமுறையைக் கடைப்பிடிக்கும் பாணி வெளிப்படும். தான் எழுதும் ஒரு அறிவியல் கட்டுரையின் தகவலை முன்னுரையாக வழங்குவதை ஒரு சிறு கவிதையாக வடித்து அறிமுகப்படுத்துவார். இந்நூலில் உள்ள வால்மீன் குறித்த கவிதையும் அறிவியல் தகவலுடன் கவிதையின் அழகுக்காகவும் படித்து சுவைக்க வேண்டிய ஒரு கவிதை.

முன்னுரையைத் தொடர்ந்து கட்டுரையில் எடுத்துக் கொண்ட அறிவியல் கோட்பாடு குறித்த வரலாற்றுப் பின்னணியைக் காட்டும் நோக்கில், கி.மு. வில் வாழ்ந்த கிரேக்க மேதை பிளாடோ போன்ற பண்டைய அறிஞர்களின் அக்கால சிந்தனைகள் முதற்கொண்டு, அறிவியல் புரட்சிக் காலத்தில் பால்வீதி மந்தையின் விண்மீன்களைத் தொலைநோக்கியின் வழி முதன்முதல் கண்ட இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ, சென்ற நூற்றாண்டின் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், இந்த நூற்றாண்டின் அறிவியல் மேதை ஸ்டீஃபென் ஹாக்கிங், தற்கால பல்கலைக் கழக விண்வெளி ஆய்வாளர்கள் வரை அறிவியல் அறிஞர்கள் கருத்துகளை ஓரிடத்தில் தொகுத்து வழங்குவதைக் காண முடியும். இதனால், அறிவியல் கோட்பாடுகள் காலத்திற்கேற்ப புதுத்தகவல்களை இணைத்துக் கொண்டு, மெல்ல மெல்ல மாற்றம் பெற்று பரிணாம வளர்ச்சியடைந்து வருவதையும் அறிய இயலும். குறிப்பாகப் பிரபஞ்சம் குறித்த வரலாற்றுப் பார்வையாக ஆறு நாட்களில் உலக உருவாக்கம், உயிர்கள் தோற்றம் என்ற விவிலியக் கருத்தாக்கங்களில் தொடங்கி, அதனை இன்றைய அறிவியல் உலகம் தரும் பெருவெடிப்பு நிகழ்ந்தது குறித்த விளக்கங்களுடன் இணைத்து யாவற்றையும் ஒரு முழுமையான கட்டுரையாக திரு. ஜெயபாரதன் வழங்கும் முறை மிகவும் பயன்தரும் வகையில் அமைந்து விடுகிறது.

பிரபஞ்சத்தின் வயது, விரியும் பிரபஞ்சம், அது விரிந்து கொண்டே செல்லுமா? பிரபஞ்சம் தோற்றம் என்ன? என்பது போன்ற ஆர்வமிக்க வினாக்களுக்கு விடை அறிய உதவும் “கால யந்திரம்” பிளாங்க் விண்ணுளவி   பெருவெடிப்பின் காரணம் என்ன? பெரு வெடிப்பின் போது முதலில் தானாக விளைந்த ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள், முதன்முதலாக விண்மீன்கள் உருவாதல், 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பால்வீதி காலாக்ஸிக்குப் பிறகு உருவான முதிய விண்மீன்கள், புதிய விண்மீன்கள் பிரபஞ்சத்தின் மூலகங்கள் தோற்றப் புதிருக்கு விடையளிக்கும் விதம், எஞ்சியுள்ள கதிரியக்கத் தோரிய உலோகம் விண்மீனின் வயதைத் துல்லியமாகக் கணிக்க உதவுவது   நாசா என்னும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், ஈசா என்னும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தொடர்ந்து செய்து வரும் விண்வெளி ஆய்வுகள், அவை ஏவிய ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி, காலெக்ஸ் விண்ணோக்கி நட்சத்திரங்களின் தோற்றம் குறித்து அறிய உதவும் ஆய்வுத் தரவுகளை தருவதில் அவை ஆற்றும் பங்கு,   விண்மீன்களின் ஆயுட்காலம் நூறாயிரம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் வரை நீடிப்பது, வெடிக்கும் விண்மீன்கள், இறுதியில் தனது சக்தி இழந்து ஒடுங்கிடும் விண்மீன்கள்,   பால்வீதி மண்டலங்கள் மோதிக் கொண்டால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும்? பூமியைப் போல் வேறு நீர் உள்ள கோள்கள் அண்டவெளியில் உள்ளனவா? பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை எவ்வாறு நோக்குவது? அவ்வாறு ஆய்வுக்காக நோக்கும் முறைகள்,   சூரியப் புயல் உண்டாக்கும் விளைவுகள், 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட சூரியப்புயல் முதற்கொண்டு இந்நாள் வரை அவை புவியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடும் தகவல்கள், சூரியக் கோளத்தில் தெரியும் கரும் புள்ளிகளை முதலில் அறிந்து குறிப்பிட்டவர்கள் யார்? அது நிகழ்ந்தது எப்பொழுது,   கருந்துளைகள், விண்மீன் களைக் கவ்வி இழுத்துக் கொள்ளும் கருந்துளையின் ஈர்ப்பு விசை,   வால்மீன்கள் அவற்றின் பிறப்பும், அவற்றின் அமைப்பும்! மீண்டும் மீண்டும் வரும் ‘ஹாலியின் வால்மீன்’ போன்ற பிரபஞ்சம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த நூலைப் படித்து முடித்துக் கீழே வைக்கும் பொழுது நமது அறிவை மேம்படுத்திக் கொண்டிருப்போம் என்பது உண்மை.

பிரபஞ்சம் குறித்த கட்டுரையின் முன்னுரைக் கவிதையில் பிரபஞ்சத்தைக் “காலக் குயவன் வடித்த மர்மச் சட்டி” என்று குறிப்பிடுகிறார் திரு. ஜெயபாரதன். இதைப் படிக்குங்கால் அறிவியல் பனுவல்களை வடிக்கும் திரு. ஜெயபாரதன் என்னும் அறிவியல் குயவனைப் பாராட்டும் நோக்கில், “கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! … நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!” என்று பானை செய்யும் குயவனைப் புலவர் விளிக்கும் சங்க காலப் பாடல் வரிகளைச் சற்றே மாற்றி, “கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! அறிவியல் பனுவல் வனையும் கலஞ்செய் கோவே!” என்று பாராட்டலாம் என்றே தோன்றுகிறது.

திரு. ஜெயபாரதன் தாம் எழுதிய அறிவியல் கட்டுரைகளில் பயன்படுத்திய கலைச்சொற்கள் யாவற்றையும் தொகுத்து ஒரு கலைச்சொற்கள் தொகுப்பு நூல் ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். அதையும் அறிவியல் தமிழுக்கு அணுவியல் அறிஞர் திரு. ஜெயபாரதன் தரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். தமிழைப் பயிற்று மொழி யாகக் கொண்டு பள்ளியில் கல்வி பெற்று, பல்கலைக்கழக அறிவியல் மாணவியாகப் பட்டம் பெற்ற எனக்கு இந்நூலின் அருமை தெளிவாகப் புரிகிறது. ஒரு பயனாளர் கோணத்தில் அதனைப் பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்க திரு. ஜெயபாரதன் அவர்களின் அறிவியல் எழுத்துப்பணி. அதனால் சிறக்கட்டும் அறிவியல் தமிழ். அறிவியல் செய்திகளை, ஆய்வுகளை விளக்கமாகத் தமிழில் படிக்க விரும்பும் அறிவியல் ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாக அது அமையட்டும்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை”

அதிகம் படித்தது