மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரார்த்தனை

முனைவர் மு.பழனியப்பன்

Dec 29, 2018

Religious Leader Mahatma Gandhi 1869 - 1948

பிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் இருக்க, பிரார்த்தனை என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்பது உறுதி. ஒருவரின் மீது நம்பிக்கை வைக்கிறோம். நாளை இதனை இவர் செய்து தருவார் என்று நம்பிக்கை வைக்கிறோம். நாளை அந்த நேரம் வரும் வரை இந்த நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது. செயல் செய்து முடித்தபின்புதான் நம்பிக்கை செயல் வடிவம் பெற்று வெற்றி பெறுகிறது.
உலக வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்மபலத்தைத் தருவது பிரார்த்தனை. கடவுளின் மீது அசையாத நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரார்த்தனை.

காந்தியடிகளின் மொழிகளில் சொன்னால் ‘‘பிரார்த்தனை வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிராத்தனை. ஆகையால் அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு உள்ளத்தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின் எல்லாத் தந்திகளையும் தக்க சுருதியில் கூட்டி, வைத்துவிடுவோமாயின் தானே இனிய கீதும் எழுந்து இளைவன் அருளைக் கூட்டுவிக்கும்.

பிரார்த்தனைக்குப் பேச்சு தேவையில்லை. புலன்களின் முயற்சி எதுவும் அதற்கு வேண்டியதில்லை. உள்ளத்திலிருந்து காமக் குரோதிகளை எல்லாம் போக்கிப் புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை பிரார்த்தனை என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை. ஆனால் அத்துடன் முழுமையான அடக்கமும் அமைந்திருக்க வேண்டும்” காந்தியடிகள் பிரார்த்தனை என்பதை அன்பு, உள்ளத்தூய்மை கொண்ட சாதனையின் வடிவமாகக் காண்கிறார். அவரின் பிரார்த்தனை அவரை பல நெருக்கடியான நேரங்களில் கடவுளின் காட்சியைக் காட்டியிருக்கிறது.

‘‘சமயத்தின் சாரத்தைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ, அவர் நம்முள் எப்படி வேலை செய்கிறார் என்பதைப் பற்றியோ எனக்கு அப்பொழுது தெரியாது. அச்சமயம் கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்பதை மாத்திரம் தெளிவற்ற முறையில் நான் அறிந்தேன்.

சோதனை நேர்ந்த சமயங்களிலெல்லாம் அவரே என்னைக் காத்தார். ‘‘கடவுள் காப்பாற்றினார் ’’ என்ற சொற்றொடருக்கு நான் இன்று ஆழ்ந்த பொருள் கொள்ளுகிறேன் என்பதை அறிவேன். என்றாலும், அதன் முழுப்பொருளையும் நான் இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்றே உணர்கிறேன்.

அதன் முழுப்பொருளையும் அறிந்து கொள்வதற்கு, மேலான அனுபவம் ஒன்றே உதவமுடியும். என்றாலும், ஆன்மீகத்துறையிலும், வக்கீலாக இருந்தபோதும், ஸ்தாபனங்களை நடத்தியபோதும், ராஜீய விசயத்திலும் எனக்குச் சோதனைகள் நேர்ந்த சமயங்களிலெல்லாம் கடவுளே என்னைக் காப்பாற்றினார் என்று சொல்ல முடியும்.

நம்பிக்கைக்கே ஒரு சிறிது இடம் இல்லாதபோதும், உதவுவோர் உதவத் தவறித் தேற்றுவாரும் ஓடிவிட்ட சமயத்திலும், எப்படியோ அந்த உதவி வந்துவிடுவதைக் காண்கிறேன். ஆனால், எங்கிருந்து அது வருகிறது என்பதை நான் அறிவேன். இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்களோ அவை. அவை மட்டுமே உண்மையானவை. மற்றவையாவும் பொய்யனாவை என்று சொல்வதும் மிகையாகாது.”

பிரார்த்தனை எவ்வளவு அழகானது. எவ்வளவு வலிமையானது என்பது காந்தியடிகளின் சத்தியமாக உணர்ந்திருக்கிறார். உணரவும் வைத்திருக்கிறார்.

காந்தியடிகள் செல்லும் இடங்களில் எல்லாம் சர்வ சமய கூட்டுப் பிரார்த்தனை என்பது முன்னேற்பாடாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மக்கள் அமைதி, அன்பு, ஒழுக்கம், நன்னம்பிக்கை போன்றவற்றை அறிந்து நடந்திட பிரார்த்தனைக் கூட்டங்கள் உதவுவனவாகும்.

பிரார்த்தனைக் கூட்டங்களினால் மத, இன. சாதி வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படுகிறது. காந்தியடிகளின் இயல்பான குணங்களுள் ஒன்று அவர் யாரையும் வேறுபடுத்திப்பார்க்காதவர். பழகாதவர். அனைவரையும் ஒன்றென மதித்து நடந்தவர்.

‘‘உறவினர் என்றோ வேற்று மனிதர் என்றோ என் நாட்டினர் என்றோ பிறநாட்டினர் என்றோ, வெள்ளையர், வெள்ளையரல்லாதார் என்றோ, இந்துக்கள் மற்ற மதத்தினரான இந்தியர் என்றோ, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள் என்றோ வேற்றுமை உணர்ச்சி எனக்கு இருந்ததே இல்லை. இவ்விதப்பாகுபாபடு எதையும் கற்பித்துக்கொள்ள முடியாததாக என் உள்ளம் இருந்தது என்று சொல்லலாம் இது என் சுபாவத்தோடு ஒட்டியதாகவே இருந்ததால், இதை எனக்கு இருந்த விசேட குணம் என்று நான் கூறிக்கொள்ளுவதற்கில்லை. என்னளவில் எந்தவிதமான முயற்சியும் இல்லாமலேயே அது எனக்கு ஏற்பட்டதாகும். ஆனால் அகிம்சை, பிரம்மச்சாரியம், அபரிக்கிரகம் அதாவது உடைமை வைத்துக் கொள்ளாமை, புலனடக்கம் ஆகிய நற்குணங்களை வளர்த்துக்கொள்வதற்காக நான் இடைவிடாது முயன்று வந்தேன் என்பதையும் முற்றும் உணர்ந்திருக்கிறேன்”

இந்த உணர்வையே காந்தியடிகள் ஒவ்வொரு இந்தியரிடத்திலும், உலக மாந்தர் அனைவரிடத்திலும் காண விரும்பிய உணர்வாகும். மக்கள் அனைவரும் பாகுபாடற்றவர்கள், வேறுபாடு அற்றவர்கள் என்ற நல்லெண்ணம் வலுப்பட வேண்டும். வேண்டப்படுவதும் அறிவோனாக இறைவன் இருக்கிறான். வேண்ட முழுவதும் தருவோனாக இறைவன் இருக்கிறான்.

“வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும்,
அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும், உன் தன் விருப்பு அன்றே?”
என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

நான் எது வேண்டினாலும் தரக் கூடியவன் ஆண்டவன். அத்தகையவனிடத்தில் நான் ஒன்று கேட்கிறேன் என்றால் அதை அவன் தருகிறான் என்றால் கேட்கச் செய்தவனும் அவனே, கேட்டுத் தந்தவனும் அவனே தான்.  இவ்வகையில் பிரார்த்தனை பல வேண்டுதல்களைக் கேட்க வைக்கிறது. தர வைக்கிறது. பெற வைக்கிறது.

காந்தியடிகளுக்கு மிகப்பிடித்தமான பிரார்த்தனை வைஷ்ணவோ ஜனதோ என்ற பாடல். இளமை முதல் அவரின் மனதிற்கு விருப்பமான பாடலாக அது இருந்தது. அவர் சற்று சோர்வுறும் பொழுதில் எல்லாம் அந்தப்பாடலை இசைக்கச்சொல்லி புத்துணர்ச்சி பெறுவார்.
உறவென மனிதர்கள்
உலகு உள யாரையும்
வணங்குபவன்
உடல்மனம் சொல் இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன்
உண்மையான பக்தன்
என்று இந்தப் பாடல் முழங்குகிறது.
எனவே பிரார்த்தனை வலிமையாம். அந்த வலிமையை வேண்டிப் பெறுவது காந்திய வழியாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரார்த்தனை”

அதிகம் படித்தது