மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுமைப்பித்தனின் கவிதைகள்

இல. பிரகாசம்

Feb 4, 2017

Siragu pudhumai piththan1

தமிழ்ச் சிறுகதை உலகில் புதுப்புது முயற்சிகளையும் புதுமைகளையும் கையாண்ட சொ.விருத்தாசலம் எனும் வித்தகரை தமிழ் இலக்கிய உலகம் புதுமைப்பித்தன் என அழைத்துக் கொண்டது, பெருமை கொண்டது.

மணிக்கொடி இதழில் எழுதியவர்கள் பலர் மேலை நாட்டு இலக்கிய அறிவினை கற்று அவற்றினை தமிழுக்குப் பழக்கிக் கொண்டு தங்களது முயற்சிகளை மேற்கொண்டனர். இக்குழுவினர் செய்த சோதனை முயற்சிகளை அக்கால இலக்கிய மரபியலாளர்கள் ஏற்கவில்லை என்பதும் அவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் “இம்முறை தமிழுக்கு ஏற்றதல்ல, இவை இலக்கண இலக்கிய மரபுகளை மீறியவை” என பல கடுமையான விமர்சனங்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

புதுமைப்பித்தன் கதைகள் பலவிதமான புதுமை நோக்கும் பார்வையும் கொண்டனவாக விளங்குவன. அவற்றிற்கு உதாரனமாக “செல்லம்மாள்” மற்றும் “பொன்னகரம்” ஆகிய கதைகளே சான்றாக விளங்குகின்றன என்பதை தமிழ் இலக்கிய உலகினர் யாவரும் அறிந்ததே.

தற்கால இளம்வாசிப்பாளர்கள் இலக்கிய சாதனையாளர்களின் ஓரிரு சில கதைகளை மட்டும் படித்துவிடுவதோடு மட்டுமல்லாமல் புதுமைப்பித்தனின் கவிதைகளை ஒரு முறையேனும் படிக்க வேண்டும். இன்னுஞ்சிலரோ புதுமைபித்தன் கவிதை எழுதியுள்ளார் என அறியாமல் இருப்பதையும் இங்கு நினைவுபடுத்தி தமிழ்வாசிப்பு என்பதன் ஆழம் எவ்வளவு அளவிற்கு பரந்துள்ளது என்ற கேள்வி நம்முன் எழாமல் இருக்கமுடியாது.

புதுமைப்பித்தன் எழுதிய கவிதைகள் எத்தன்மையுடையன என்று இன்றைக்கு விவாதம் செய்தல் வேண்டியதாகும். “வசன கவிதை” இலக்கியம் படைத்து வந்த சிலரும் புதுமைப்பித்தனின் புதிய கவிதையைக் கண்டு அவற்றை பின்பற்ற தொடங்கியதே அவரது கவிதைக்குக் கிடைத்த வெற்றி.

புதுமைப்பித்தனின் பார்வையில் கவிதை:

Siragu pudhumai piththan3

புதுமைப்பித்தனின் பார்வையில் கவிதை எத்தன்மையுடையதாக இருந்தது என்பதனை “கவிதை என்றால் என்ன?,யாப்பிலக்கண விதிகளைக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா?,கவிதையின் இலட்சணங்கள் என்ன? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது.

கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி. அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தையும் பொறுத்துத்தான்” என்று புதுமைப்பித்தன் விளக்கம் தருகிறார். அவரது பார்வையில், கவிதை எவ்வாறு இருக்க வேண்டும் என்று “உருக்கமுள்ள வித்தகரே” என்ற தலைப்பின் பின்வருமாறு கூறுகிறார்

                “ஆசைக் கனவெழுப்பும்

                அமிஞ்சிப் பையல்களின்

                காசுக்குதவா

                கவைக்குதவா

                கவிதையிலே

சொல்லாதீர்” என்று கவிதையைப் பற்றி கவிதை எத்தன்மையானதாக இருக்கக் கூடாது என்று ஒரு தெளிவான எண்ணத்துடனே ஆற்றுகிறார். அதே போல் அதே கவிதையில் மற்றொரு வரியில்

                “புத்தி சொலவந்தவர் போல்

                ஏனையா?

                வித்தாரக் கவிதை

                கையாண்டீர்?

                ஓத்துவராது ஓட்டாண்டிப் பாட்டு”

என்று கவிதையில் வித்தாரத் தனத்துடன் கருத்து கூறும் தன்மையினை அவர் ஏற்கவுமில்லை.

காதல் பாட்டு

புதுமைப்பித்தன் ஒரு பெண்ணைப் பற்றி சொற்களின் மூலம் எழிலுற படம் பிடிக்க எத்தணிக்கிறார்.

                “ஆறுகெஜச் சேலை

                அங்கமெல்லாம் கவ்வி

                தோளில் உலாவி

                தோகையவள் மேனிதனை

விள்ளாமற் சொல்லி

                வினயமாய் அழகி வைக்கும்”

என்று அப்பெண்ணின் முதல் நிலை வரகோட்டு ஓவியம் வரைய முனைகிறார். மேலும் பின்வரும் வரிகளில் அவர்,

                “கரும்பட்டுப் பின்னல் வலை

                காரிகையின் கூந்தலினை

                கபோலச் சுருள் மட்டும்

                காற்றிலசைந் தாடவிட்டு

                பெட்டிக் கருநாகம்

                பிறழுவது போலடக்கும்”

என்ற வரிகளின் இறுதி இருவரிகளான “பெட்டிக் கருநாகம் பிறழுவது போலடக்கும்” என்ற வரியின் மூலம் அப்பெண்ணின் உருவத்தினை கண்ணருகே நிறுத்திவிடுகிறார் என்பதை அவ்வரிகளை சற்றே நிதானித்து படிப்பவர்களுக்கு அனுபவம்.

மேலும் அவர் இயற்றிய நிசந்தானோ சொப்பனமோ! என்ற தலைப்பில்

                “வட்டமுலை மின்னார்

                வசமிழந்த காமத்தால்

                நீலமணி மாடத்து

                நெடியதொரு சாளரத்தைத்

                தொட்டுத் தடவி வந்து

                தோயும் நிலாப் பிழம்பை

                எட்டி எடுத்து-

                இடைச்சுற்றிச் சேலையென

                ஓல்கி நடப்பதாய்

                உவமை சொல”

என்ற வரிகளை மீண்டும் படிக்கிற பொழுது முதல் மூன்று வரிகளும் அழகியல் எடுப்புகளோடு தொடங்கியும் இடையில் “தோயும் நிலாப் பிழம்பை எட்டி எடுத்து இடைச்சுற்றி சேலையென ஒல்கி நடப்பதாய்” ஆகிய வரிகள் இருள் சூழ்ந்த வானிடை மிதந்து செல்லும் நிலவுமகளை புவியில் தான் கண்ட பெண்ணுக்கு உவமை சொல்லவும் அவர் உள்ளளவிலே தன்னுணர்வினை வெளிப்படுத்துகிறார்.

கருத்தாழமும் கிண்டலும்:

புதுமைப்பித்தன் சிறுகதைகளில் கையாண்டுள்ள சிறுநகைப்புத் தன்மையினை தனது கவிதைகளிலும் ஆண்டுள்ளார். அவற்றுக்கு உதாரணமாக அவர் எழுதியுள்ள “இணையற்ற இந்தியா” என்னுந்தலைப்பில் எழுதியுள்ள வரிகளில் இந்தியாவின் நிலையினை பற்றியும் அதன் மீதான அவரது பகடித்தனமான பார்வையும் வெளிப்படுவதனைக் காணலாம். அவ்வரிகள் பின்வருமாறு

                “வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

                சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!

                ஆத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி

                வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

                இந்தியா தேசம்-அது

                இணையற்ற தேசம்”

மேற்கண்ட வரிகளில் அப்போதைய இந்தியாவில் நிலவிய சனாதன நிலையினால் ஏற்பட்ட அவல நிலையையும், அரசியல் நிலையைப் பற்றியும் கடுமையான விமரிசனத்தையும் அவர் செய்யத் தவறிவிடவில்லை.

திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப் பொடியாள்வார்”:

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் நிலவி வந்த நிலை பற்றி அவர் எழுதிய வரிகள்,

                “உற்றாரை யான்வேண்டேன் ஊர் வேண்டேன்

                                                                                பேர் வேண்டேன்

                மற்றுமிந்த வாணிபத்தின் புன் செல்வம்

                                                                                யான் வேண்டேன்

                பொற்றோளாய்! உன்னுடைய பெருமைமிகு “சர்வீஸில்

                சிற்றுவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ”!

எனப் பலவாறாக அரசினை விமர்சனம் செய்தும் அக்கால அரசாங்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய நிலையையும் கோடிட்டு காட்டுகிறார்.

தத்துவ மயக்கம் கொண்ட வரிகள்:

Siragu-pudhumai-piththan4

புதுமைப்பித்தன் “பாதை” எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள வரிகள்; மீண்டும் மீண்டும் படிக்கிற பொழுது அவைகள் ஏதோ ஒன்றை தத்துவ சாயத்தைப் பூசியது போன்றதொரு தோற்றம் ஏற்படுகின்றன அவை

“நாலு திசைகளிலும்

                இருட் படலம்

செல்லும் வழி இருட்டு

                செல்லும் மனம் இருட்டு

சிந்தை அறிவிலும்

                தனி இருட்டு”

மேற்கூறிய வரிகள் ஒருமுறைக்கு பலமுறை படிக்கின்ற பொழுது தத்துவ மயக்கம் ஏற்றிருப்பதாகவே தோற்றம் ஏற்படுகின்றன. மேலும் மற்றொரு கவிதையான “இருட்டு” எனுந் தலைப்பில்

                “நடையால் வழி வளரும்

                நடப்பதால் நடை தொடரும்

                அடியெடுத்து வைப்பதற்கு

                ஆதிவழி ஏதுமில்லை”

மேற்கூறிய வரிகளில் “அடியெடுத்து வைப்பதற்கு ஆதிவழி ஏதுமில்லை” எனும் வரிகளில் புதுமைப்பித்தன் தன் கவிதையில் வழியவே தத்துவ சாயத்தை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன என்று விவாதம் செய்யவும் தூண்டுகின்றதைக் காணமுடிகிறது.

புராணங்களைக் கையாளுதல்:

புதுமைப்பித்தன் தான் எழுதிய ஏறக்குறைய பெரும்பாலான சிறுகதைகளில் ஒருவரியேனும் புராணத்தினை கையாண்டுள்ள விதத்தினை “கடவுளும் கந்தசாமியும்” சிறுகதையில் காணலாம். அவ்வகையான உத்தியை தனது கவிதையிலும் தொடர்ந்துள்ளார்.

“நிசந்தானோ சொப்பனமோ” எனும் கவிதையில் “சிதம்பரத்துச் சிவனார் நடங்கூற” எனும் வரியில் புராணக்கதை உத்தியை கையாண்டுள்ளார்.

மேலும் புராணங்களைக் கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சி செய்பவர்களை பின்வரும் வரிகளில் நகையோடும் சாடுகிறார்.

                “சித்தே பசியாற

                செல்லரிக்கும் நெஞ்சாற

                மெத்தப் பழங்கதைக்கு

                மெத்தப் பழங்கதையை

                புத்தித்தடு மாறிப்

                புகன்றாலும்”

என்னும் வரியை தனது “ஓடாதீர்” என்னும் கவிதையில் பழமையின் வேர் கொண்டு பாமரர்களை ஏமாற்றும் வகையினரை சாடுகிறார். மேலும்,

                “துச்சா சனனுரிந்த

                துகில் என்னை சருகென

                தொட்டுரிய தொட்டுரிய

                தோன்றாத சு10னிய மாம்

                ஓன்றுமற்ற பாழ் வெளியை

                உள்ளடக்கும்

வெங்காயம் போல்

விகற்ப உலகமென

வித்தகர்கள் சொல்வது போல்”

மேற்கண்ட வரிகளின் இடையே புராணக் கதைகளை உட்படுத்தி வெற்றி பெற்றுள்ளமை கண்கூடு. மட்டுமல்லாது தனது படைப்புகளில் புதிய முயற்சிகளையும் சோதனைகளையும் முயன்று பார்த்திருப்பதனாலேயே தமிழ் இலக்கிய உலகம் பெருமை கொள்கிறது. மேலும் அவர் வாழுங்காலத்திலேயே பெரிதும் போற்றப்படவில்லை. புதுமைப்பித்தனின் மேற்கொண்ட சோதனை முயற்சிகள் அடியொற்றியனவாகவே இன்றைய இளம் எழுத்தாளர்கள் செய்துவருகின்றதை நாம் இன்றைக்குக் காண்கிறோம். இதுவே புதுமைப்பித்தனின் வெற்றிக்குத் தக்கதொரு சான்றாக அமைகின்றன.

இன்றைய இளம் வாசிப்பாளர்களிடத்தில் புதுமைப் பித்தனின் சோதனை முயற்சிகள் பற்றி தெளிவும் அவசியம் தேவை என்றே கருதுகிறேன்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுமைப்பித்தனின் கவிதைகள்”

அதிகம் படித்தது