மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புத்தக அறிமுகம்: பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

இல. பிரகாசம்

Apr 29, 2017

Siragu-poonaachchi2

மனித மனம் எப்பொழுதும் உணர்ச்சிகளுக்கு அடிமைபட்டவைதான். மனதில் தோன்றும் பல்வேறு இனம் புரியாத உணர்ச்சிகளுக்கு உரை எழுதிவிட முடியுமா என்ன?

கூரை வீட்டின் மீது அமர்ந்து சீண்டிக் கொண்டு தன் இணையை தன் கவனத்தின் பக்கம் இழுக்க அவைகள் செய்கிற சேட்டைகள் நீள் இரவின் கனவில் நினைத்துப் பார்க்கிற போது அதிலிருந்தும் ஒரு கவிதையை எழுதிவிடலாம். அவை கொஞ்சல் மொழியுணர்ச்சிக்கு இடம் அளிப்பவையாகவே இருக்கக் கூடும். கோழி இனத்தில் பார்க்கிற போதும் கூட அவைகள் கிராம நாகரீக வாழ்வியலுடன் ஒன்றிப் போனவையே.

Siragu poonaachchi1

மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் கூறுகள் எங்கேயிருந்து ஆரம்பித்திருக்கும்? என்பதை தேடிப் பார்க்கச் சென்றாலும் அது ஆலஞ்சடை நுனியிலும் தொடரும் மற்றொரு தொடர்பாகவே நீண்டு செல்லும். நாம் வாழ்கிற வாழ்வு எல்லாவற்றிலும் ஏதோ ஒரு செயல் நம்முடன் பழக்கப்பட்ட அல்லது வாழ்வியலுடன் கலந்துவிட்ட உயிர்களின் செயல்பாடுகளைக் கொண்டே அமைந்திருக்கின்றன.

“மாதொருபாகன்” எனும் நூல் ஏற்படுத்திய பல சர்ச்சைகளுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து பெருமாள் முருகன் எழுதியுள்ள பத்தாவது நாவல் “பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை” மேற்கண்டத்தன்மை உடையதே.

பெருமாள் முருகன் நூலில் குறிப்பிட்டதைப் போல “புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்?” என்று ஒரு பீடிகையை முன்னே வைத்துவிட்டு நம்மை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார். “ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள் தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவை பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான்”. என்று தம் முந்தைய நாவலின் படைப்புக் களத்தை சற்றே தொட்டுக்கொண்டு நாவலினை புனைந்திருக்கிறார்.

அவற்றில் சிலவற்றை புதிய முயற்சிகளைப் பற்றி இங்கே நாம் பார்ப்போம்.

மனித இனம் சுயநலம் சார்ந்து எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது. அதுபோலவே பிற உயிர்களுக்கும் தான் இவ்வுலகில் வாழ்வதற்கான இருத்தலியலுக்கான செயல்கள் அனைத்திலும் சுயம் வெளிப்படும். அவ்வுயிர் சார்ந்த நிலம் அந்நாகரிகத்தைத் தீர்மானிக்கிறது.

“பொறப்பு ஒவ்வொண்ணுக்கும் எத்தனை வித்தியாசம்” அவ்வுயிர்களின் மனோ நிலையை அதனுடன் வாழ்கிறவனுக்கு மட்டுமே பிடிபடும். அவைகள் அவனுக்கு அஃறிணையாகத் தெரிவதில்லை. உயர்திணையாகவே அவனுடன் மேன்மையுறுகின்றன.

ஆட்டின் இனத்தில் இரண்டு வகை. ஒன்று செம்மறி, மற்றொன்று வெள்ளாடு. இயல்பிலேயே செம்மறி ஆட்டினைவிடவும் வெள்ளாடு ஓட்டம் உடையது. அதுபோலவே இந்நாவலிலும் தொடர்ச்சியான ஓட்டமும் நிறைந்தே உள்ளது.

தாய்மை நிலையானது எந்த ஒரு உயிரினத்திற்கும் பொது. அஃறிணை உயிர்களுக்கு ஏற்படுகிற விரகதாபம், கழிவிரக்கம், தாய்மை உணர்வு என்று அவற்றை (அவரது மொழியில்) அசுர மனிதர்களின் வாழ்விலிருந்து படைக்கப்பட்டிருக்கிறது. பூனாச்சியின் வாழ்வில் வருகிற அசுர குலத்தைச் சார்ந்தவர்களின் வாழ்வியல் நாட்டார் வழக்காறு சொற்களோடு முழுதும் நிறைந்து காணப்படுகிறது.

பூனாச்சியின் ஒரு பட்டியில் வாழ்கிற உழும்பன் அதனை வளர்த்து வரும் கிழவியின் மகளின் ஊருக்குச் சென்றுவிட்டு வருகிறபோது ஏற்படுகிற அசம்பாவிதத்தால் பூனாச்சியின் கண்ணெதிரிலேயே உழும்பன் செத்துப் போய்விடுகிறான். மேலும் அந்நிலையில் கிழவியின் மகளின் பட்டியில் தன்னுடன் வாழ்கிற ஊத்தன் உழும்பன் பீத்தன் கடுவாயன் இவர்களை விடவும் பூவனின் அன்பு நேசம் அவளை உணர்ச்சி கொள்ளச் செய்கிறது.

தனக்கு கிடைக்கிற நேசத்தை இழந்துவிடக் கூடாது என எல்லோரும் ஏங்குவது போன்ற நிலையானது பூனாச்சிக்குக் கிடைக்கிறது. பிரிகிற சூழ்நிலை ஏற்படுகிற போதும் அவன் தன் உதடுகள் மீது பதித்த முத்தங்கள் அன்பின் அடையாளமாக மாற்றப்படுகிறது. பிரிவின் ஏக்கம், வேதனைத் தீயை விடவும் கொடியதுதான்.

கிழவியின் பேச்சு “போனவங்களோட கஷ்டமும் போயிருது. இருக்கறவங்களோட கஷ்டமும் இருக்குது” இத்துயர நிலையானது அக்குடும்பத்தின் “இழவின்” நிலையினை நம்மை துரத்தவும் அதற்கான வருத்தமும் உள்ளிருந்து பீறிட்டெழாமல் இல்லை.

பூனாச்சியின் பருவம் எய்துகிற நிலை. பூவனுடன் ஏற்படுகிற பழக்கத்தின் போதே ஏற்படுகிறது. இது உழும்பனின் செத்த துயரத்தை விடவும் மேலோங்கி நிற்கிற பூவனின் நினைவுகளை நினைவூட்டுகின்றன. இந்நாவலில் இருந்து அத்தகைய உணர்ச்சி ததும்பிய வரிகளை அப்படியே தந்துவிடுகிறேன்.

“அந்த இரவில் தன் உடலில் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள். பின் வயிற்றில் பெரும் வலி தோன்றியது. பிறகு ஏதோ வயிற்றிலிருந்து நழுவி அரத்தில் ஒழுக ஆரம்பித்தது. அவள் மனம் முழுக்க அப்போது பூவன் நிறைந்திருந்தான் அவனை நினைத்துத் தன்னையும் அறியாமல் கத்தத் தொடங்கினாள். இன்ப வேதனையின் முனகல் போல அவள் குரல் இருந்தது. ஆனால் அது கிழவிக்கு புரியவில்லை”. உணர்சி மேலீட்டின் நிலை இவ்வாறிருக்க பூனாச்சியானவள் கிழவிக்கு அஃறிணையாகத் தெரியவில்லை இன்னம் பால்குடி மறக்காத ஒரு குழந்தையாகவே தோன்றினாள். பூனாச்சியின் நிலை அறிந்த கிழவனின் நமட்டுச் சிரிப்பும் அவன் உணர்ந்தவாறே நம்மையும் உணரச் செய்கிறது.

“முகமே தெரியாத ஒரு கிழட்டுக்கும் தன் உடலுக்கும் என்ன தொடர்பு” என்றே அறியாதே பூனாச்சியின் உடல் புணர்ச்சியின் வலியும் அதன் பின் அவற்றின் மீதான ஏற்படுகிற வெறுப்பு தன் வாழ்வு இவ்வளவு தானா? எனவும் எண்ணுகிற பூனாச்சியின் மனோநிலை பரிதாபத்திற்கு உரியதாகவே இருக்கிறது.

தன் சதையுடன் பிறப்பெடுத்த ஏழு குட்டிகளைக் கிழவன் விற்பதனையும் பின் ஒருநாளில் அவற்றுள் சில இறந்து போவதனையும் கேட்டு பதற்றத்தின் நிலையை பூனாச்சியின் வெளிப்பாடு எவ்வாறிருக்கும்? நிச்சயம் யாவரையும் ஓர் நொடி நிலைகுலையவே செய்துவிடும். அத்தகைய உணர்ச்சி பூனாச்சியின் தாய்மை நிலையின் போது.

இதன் பின் ஏற்படுகிற அடுத்தடுத்த ஈற்றுகள் அவற்றை வளர்க்கவே சிரமப்படும் கிழவன் கிழவியின் நிலை. ஆவற்றுள் சிலவற்றை விற்று சொத்துக்களை சேர்த்துவைப்பது. இதிலும் மனிதனின் அசுர குணம் வெளிப்படுத்தப் படுகிறது. பஞ்ச காலத்தின் போது உணவின்றி அவைகள் தவிக்கிற போது மனித மனத்தின் பதற்ற நிலை உணரச் செய்கிறது.

பூனாச்சி தன் உடல் வழு முழுவதையும் இழந்து விட்டாள். நாளுக்கு நாள் அவளது மெலிவ அவளை மேலும் அச்சம் கொள்ளச் செய்கிறது. உடல் நலிவின் போது தவறிச் சென்று கொண்டிருக்கும் நினைவுகளில் தன் ஈற்றுக் குட்டிகளின் முகங்கள் பூவனின் நினைவுகள் பகாசுரனின் நெடிய உருவம் தோன்றுகின்றன. அவை ஓரு மையப்புள்ளியில் மறைந்து விடுகிறது.

பூனாச்சி தலை தொய்யப் படுத்தபடி தெரிந்தாள். கிழவி அவசரமாக ஓடிப் பூனாச்சியைத் தொட்டாள் அது பூனாச்சி அல்ல கற்சிலையாகவே பெருமாள் முருகனின் புனைவு மிளிர்கிறது.

ஓர் இனத்தின் பண்பாடு அது சார்ந்த நிலத்தின் அடிப்படையில் தீர்மமானித்துக் கொள்கிறது. அந்நிலத்தின் அடிப்படையில் அவர்களது மொழியியான் வடிவமும் அமைகிறது. அது போலவே கொங்கு வட்டாரப் பகுதி மக்களின் மொழிச் செறிவு நாவல் முழுவதும் காணப்படுகிறது. இந்நாவலின் ஆகப் பெரும் பலம் வழக்காறு சொற்களை அம்மக்களின் வாழ்வியலோடு உயிர்ப்பித்திருப்பது.

பின் நவீன காலத்தின் தமிழில் புனைவு நாவல்களில் கோடிட்டுக் காட்டக்கூடிய நாவல் என்று “பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை” யை நிச்சயமாகச் சொல்ல முடியும்.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புத்தக அறிமுகம்: பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை”

அதிகம் படித்தது