மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூற்றின் 163 ஆவது பாடல்

பேரா. ருக்மணி

Nov 29, 2014

puranaanooru2பெருஞ்சித்திரனார் என்ற புலவர். புலமை பெரிதுடையவர். வறுமையில் வாழ்கின்றார். தன் வறுமையைப் போக்கக் கொடைக்குப் பெயர்பெற்ற குமண வள்ளலிடம் செல்கின்றார்; கணக்கற்ற பரிசுப் பொருட்களோடு வருகின்றார். வந்தவர், அந்தப் பொருட்களைத் தானே வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் இன்பமாக வாழலாம் என்று கனவு கண்டாரா என்றால், அதுதான் இல்லை. வேறென்ன செய்தார்? மனைவியை அழைத்தார்;  செய்ய வேண்டியதைச் சொல்கின்றார்.

“என் மனைக்கு உரியவளே! இந்தப் பொருளையெல்லாம் உன்னிடம் அன்பு காட்டுகின்றவர்களுக்கும், நீ அன்பு செய்பவர்களுக்கும், உன்னுடைய உறவினர்களுக்கும்,  பசியால் நாம் வருந்தியபோது நமக்கு உதவிய நல்லோர்களுக்கும் மற்றும் இவர்கள் நமக்கு உறவினர்- உறவினர் அல்லாதவர் என்று நினைக்காமலும்,  நாம் வளமாக வாழ்வதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணாமலும் …இவர்களுக்குக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று என்னிடமும் கேட்காமல்,  எல்லோருக்கும் கொடுப்பாயாக” என்கின்றார். அவரின் பாடல் இதோ…

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்

பல்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும்

கடும்பின் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்

இன்னோர்க்கும் என்னாது, என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைக்கிழவோயே

பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.

புறநானூற்றின் 163 ஆவது பாடல் இது.

கருத்துரை: மனைக்கு உரியவளே!  தொங்குகின்ற பழங்கள் நிறைந்த  முதிரமலைத் தலைவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன்,  எனக்குக் கொடுத்த வளத்தையெல்லாம், உன்னிடம் அன்போடு வாழ்பவர்களுக்கும், நீ அன்பு காட்டுபவர்களுக்கும், பல்குணங்களும் மாட்சிமைப்பட வாழுகின்ற உன்னுடைய சுற்றத்தினருக்கும், நம் சுற்றத்தினரின் கடும்பசியைத் தீர்ப்பதற்கான உன் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு உனக்கு உதவியவர்களுக்கும், இவர் இப்படிப்பட்டவர் (நல்லவர், தீயவர்) என்று அவரின் தன்மையை மதிப்பிடாமலும், என்னிடமும் கேட்காமல், இந்தப் பொருட்களையெல்லாம் நாம் வைத்துக்கொண்டு செல்வ வளத்யோடு வாழலாம் என்றும் நினையாது,  நீயும் எல்லோருக்கும் கொடுப்பதற்குக் கருதுவாயாக!

சொற்பொருள் விளக்கம்:

நின் நயந்து- உன்னிடம் அன்பு காட்டி, உறைநர்க்கும்- வாழ்பவர்களுக்கும், நீ நயந்து – நீ அன்பு காட்டி, உறைநர்க்கும் –வாழ்பவர்களுக்கும், பல்மாண்- பல மாட்சிமைப்பட்ட, கற்பின் –சொன்ன சொல்லிலிருந்து மாறுபடாத, நின் கிளைமுதலோர்க்கும்- உன்னுடைய சுற்றத்தினர் முதலானோர்க்கும், கடும்பின் – சுற்றத்தின், பசிதீர –பசியைத் தீர்ப்பதற்கு, நின்நெடும் – உன்னுடைய நெடிய, குறியெதிர்ப்பு- எதிர்பார்ப்பு, நல்கியோர்க்கும் – வழங்கியோருக்கும், இன்னோர்க்கும் என்னாது- இவர் இப்படிப்பட்டவர் என்றும் நினையாமல் , என்னோடும் சூழாது- என்னிடம் கலந்து ஆலோசிக்காமல்,வல்லாங்கு வாழ்தும் – வன்மையாக வாழலாம், என்னாது நீயும்- என்றும் எண்ணாமல், எல்லோர்க்கும்- எல்லோருக்கும், கொடு-கொடுக்க, மதி –கருது, மனைக்கிழவோயே –மனைக்கு உரியவளே, பழம்தூங்கு –பழங்கள் தொங்குகின்ற, முதிரத்துக் கிழவன் –முதிரமலைக்குத் தலைவன், திருந்துவேல் – செம்மையான வேலையுடைய, குமணன் நல்கிய வளனே- குமணவள்ளல் வழங்கிய வளனே.

ஈத்துவக்கும் இன்பம் அறிந்த புலவனின் உண்மை மொழிகள் இவை. அவர் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் அவரின் உள்ளத்து உயர்வினையே பார்க்க முடிகின்றது.  தன்னுடைய மனைவி,  எங்கே தன்னிடம் கேட்டுவிட்டுத்தான் கொடுக்கவேண்டும் என்று தயக்கம்காட்டி கொடுக்க நினைப்பவர்களுக்குக்கூட கொடுக்காமல் இருந்துவிடுவாளோ என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகின்றார், “என்னோடும் சூழாது” என்று!

இன்பம் எது? என்பதை உணர்ந்திருந்த அப்பெரியோர்களின் பெற்றியை என்னென்பது?

இலஞ்சமும் ஊழலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படும் கயமையும் வாழ்கின்ற தமிழகத்திலா, இத்தகு சான்றோர்களும் வாழ்ந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூற்றின் 163 ஆவது பாடல்”

அதிகம் படித்தது