மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பூ (சிறுகதை)

மா.பிரபாகரன்

Mar 10, 2018

siragu poo1
ஒருகாட்டில் செடி ஒன்று இருந்தது. அதில் சிறிதும் பெரிதுமாய் நிறையப் பூக்கள் இருந்தன. சிறிய கருவண்டு ஒன்று தேனுக்காக அந்தச் செடியைச் சுற்றிவந்தது. அப்போது பூ ஒன்று மிகுந்த வாட்டத்துடன் இருப்பதை அது பார்த்தது. வண்டு அந்தப் பூவிடம் “நீ ஏன் வாட்டமா இருக்க?”– என்று கேட்டது. அதற்கு அந்தப்பூ “பூக்களின் தோற்றம் வளர்ச்சில ஏழு நிலைகள் உண்டு! அதை நீ தெரிஞ்சுக்கிட்டாத்தான் என்னோட இந்த வாட்டத்துக்கான காரணத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்!”– என்றது.

“பூக்களின் வளர்ச்சில ஏழு நிலைகளா? கொஞ்சம் சொல்ல முடியுமா?”- ஆர்வத்துடன் கேட்டது வண்டு.

“சொல்றேன்! ஒரு பூ முதன்முதலா செடில உருவாகுறத அரும்புன்னு சொல்வாங்க! ‘அரும்பு’ பூக்களின் முதல்நிலை!”– என்றது பூ.

“நீ முதன்முதலா செடில உருவான அந்தத் தருணம் எப்படி இருந்துச்சு?”–கேட்டது கருவண்டு.

“ரொம்ப சந்தோசமா இருந்துச்சு! தாய்செடி என்கிட்ட ரொம்ப வாஞ்சையா இருந்துச்சு! என்னோட சகோதரிகள் என்கிட்ட பிரியமா நடந்துக்கிட்டாங்க! எனக்கு மழை, வெயில், காத்து, பனியினால கெடுதல் ஏதும் வரக்கூடாதுன்னு தாய்செடி கவலைப்பட்டுச்சு! தன்னோட அடர்ந்த இலைகளால என்னை மூடி பத்திரமா பாதுகாத்துச்சு! அரும்பு என்னோட மழலைப் பருவம்! மிகவும் இனிமையான பருவம்!”– என்றது பூ.

பூக்களின் இரண்டாம் நிலை? –கேட்டது கருவண்டு.

“பூக்களின் இரண்டாம் நிலை ‘மொட்டு’! இந்த நிலைல பூவோட இதழ்கள் வளர ஆரம்பிக்கும்! இதழ்கள் வளர்ந்தாலும் ஒரு மொட்டுல அது குவிஞ்ச நிலைலதான் இருக்கும்! இரண்டாம் நிலைலதான் முதன்முதலா என் உடல்ல வெளிர்நீல வரிகள் உருவாகுறத நான் கவனிச்சேன்! என்னோட சகோதரிகள்ல்லாம் அடர்த்தியான நீல வண்ணத்துல ரொம்ப அழகா இருந்தாங்க! நான் என் தாய்செடிக்கிட்ட கேட்டேன்! பெரிய பூவா வளரும்போது எனக்கும் அந்தநிறம் கிடைக்கும்னு தாய்செடி சொல்லுச்சு!”–என்ற பூ தொடர்ந்து “அப்ப தாய்செடில சிறிசும் பெருசுமா நிறைய மொட்டுக்கள் இருந்தோம்! நாங்க எல்லாரும் அடிக்கடி கூடிப் பேசுவோம்! எங்க எல்லாருக்கும் இந்த நிலைல நிறைய கனவுகள் இருந்துச்சு! ‘மொட்டு’ எனது உற்சாகமான சிறார் பருவம்!”– என்றது.

“உன்னோட கதை ரொம்ப சுவராசியமா இருக்கு! உன்னோட அடுத்தநிலை?”–கேட்டது கருவண்டு.

“பூக்களின் மூன்றாம் நிலை ‘முகில்’! ஒரு மொட்டோட இதழ்கள் முதன்முதலா அவிழ்ந்து விடுபடுவதைத்தான் முகிழ் அல்லது முகிழ்த்தல்னு சொல்றாங்க! இந்த நிலைல எனக்குத் தாய்செடியோட பராமரிப்பு அதிகம் தேவைப்படல! நான் தைரியமா இருந்தேன்! தன்னம்பிக்கையோட இருந்தேன்! நெக்டார் எனப்படும் தேன் என்னிடம் உருவாக ஆரம்பிச்சது! முகிழ் பருவத்தை இளமையின் ஆரம்பநிலைன்னு சொல்லலாம்!”– என்றது பூ.

வண்டு அமைதியாக இருந்தது. பூ தொடர்ந்து பேசியது. “பூக்களின் நான்காம் நிலை ‘மலர்’! இந்த நிலைல எனது இதழ்கள் மேலும் பெருசா வளர்ந்துச்சு! என் தாய்செடி சொன்னமாதிரி என்னோட நிறம் அடர்த்தியான நீலநிறமா மாறிப் பாக்குறவங்க மனசைக் கவர்ற அழகுராணி ஆனேன்! தினமும் காலைல சூரிய உதயத்தின்போது மலருவேன்! அந்திசாயும் வேளையில் இதழ்கள் குவிவேன்! இதுதான் என்னோட நித்ய கடமை! உன்னை மாதிரி வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் தேனுக்காக என்னைத் தேடிவரும்! மலர் ஒரு பூவின் துடிப்பான இளமைப் பருவம்!”–என்றது பூ.

“மொட்டுக்களா இருந்தப்ப உங்களுக்கு நிறைய விருப்பங்கள் இருந்துச்சுன்னு சொன்னேலயா? அது என்ன விருப்பம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”–கேட்டது கருவண்டு.

“வளர்ந்த மொட்டுக்களை தங்களோடத் தேவைக்காக மனுசங்க கொய்து எடுத்துட்டுப் போவாங்க! சில மொட்டுக்களுக்குத் தாங்கள் அழகான மாலையாத் தொடுக்கப்படனும்னு ஆசை இருந்துச்சு! சில மொட்டுக்;கள் இறைவனுக்கு அர்ச்சனைச் செய்யப்படும் பாதமலரா இருக்கனும்னு ஆசைப்பட்டாங்க!”

“நினைச்சது நடந்துச்சா?”–குறுக்கிட்டு கேட்டது கருவண்டு.

“எண்ணம்தானே வாழ்க்கை! எல்லா மொட்டுக்களுக்கும் அவங்க நினைச்சதே நடந்துச்சு!”–என்றது பெரிய பூ.

“பூக்களின் ஐந்தாம் நிலை ‘அலர்;’! ஒரு பூ எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருப்பது அலர்!”–என்றது பூ.

“ஒரு சந்தேகம்! அலருக்கும் மலருக்கும் என்ன வித்தியாசம்?”–கேட்டது கருவண்டு.

“அலர்ந்த நிலைல ஒரு பூ தன்னோட இதழ்கள் குவிந்து விரியும் தன்மையை இழந்துரும்! மலர் இளமைப்பருவம்னா அலர் முதுமையின் ஆரம்பம்னு சொல்லலாம்! அலர்ந்த நிலையில் ஒரு பூவிற்குப் பனி, காற்று, வெயில், மழைல இருந்து பாதுகாப்பு கிடைக்காது! இதுனால பூ வாடத் துவங்கும்! பூவோட மகரந்தத்தாள் காய ஆரம்பிக்கும்! ஒரு அலர்ந்த பூ வாடும் நிலைதான் பூக்களின் ‘வீ’ என்றழைக்கப்படும் ஆறாம் நிலை!”- என்றது பூ.

“பூக்களின் ஏழாம் நிலை”–கேட்டது கருவண்டு.

“பூக்களின் ஏழாம் கடைசி நிலை ‘செம்மல்’! வாடிய பூ வதங்கும் நிலைதான் செம்மல்! இதுல பூக்களோட இதழ்கள் சுருங்கி பூ குறுகி அளவுல சின்னதாயிரும்! அதன் மகரந்தத்தாளும் முழுசா வாடிரும்! நீ ஏன் வாடி இருக்கேன்னு கேட்டேல? நான் வாடி இல்ல, வதங்கியிருக்கேன்! இது எனது ஏழாம் கடைசி நிலை!”–என்ற பூ தனது கதையைச் சொல்லிமுடித்தது.

“உன்னோட கதையைச் சொன்னதுக்கு நன்றி! நான் வர்றேன்!”–என்றது கருவண்டு.

“நான் இப்ப இந்தச்செடில பெயரளவுக்குத்தான் ஒட்டிக்கிட்டுருக்கேன்! ஒரு சின்னக் காத்தடிச்சாலும் நான் உதிர்ந்திருவேன்! நீ என் பக்கத்துல வந்து உன் இறக்கைகளைப் படபடத்து விட்டுப்போ!”–என்றது பூ. பூ கேட்டுக் கொண்டபடி வண்டு செடியின் அருகில் வந்து படபடத்தது. அதன் அதிர்வில் பூ காம்பிலிருந்து உதிர்ந்து ஓசையின்றி தரையில் வீழ்ந்தது. விழுந்தபூவின் அருகே வண்டு சென்றது.

“மொட்டா இருந்தப்ப எல்லாரும் என்ன ஆசைப்பட்டாங்கன்னு சொன்ன! ஆனா நீ என்ன ஆசைப்பட்டேனு சொல்லவே இல்லையே?”–கேட்டது வண்டு.

“என்னோட ஏழு நிலைகளையும் தாய்செடியிலேயே கழிக்கனும்! அதோட காலடில விழுந்து காஞ்சு சருகாகனும்னு ஆசைப்பட்டேன்! நான் நினைச்சதே நடந்தது!”–சிரித்தபடி சொன்னது பூ. அதுவே சற்று இடைவெளிவிட்டு “பாக்குறதுக்கு இது முடிவுமாதிரி தெரிஞ்சாலும் இது முடிவு கிடையாது! இது புதிதான ஒன்றின் ஆரம்பம்! புரியுதா உனக்கு?”–என்று கேட்டது பூ.

“நல்லாப் புரிஞ்சது பூவே!”–என்றபடி பூவை ஒரு சுற்று சுற்றிவந்த கருவண்டு, வேற்றிடம் நோக்கி உற்சாகமாய் ரீங்காரமிட்டபடி பறந்து சென்றது.


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பூ (சிறுகதை)”

அதிகம் படித்தது