மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களுக்கான தனித்த ஆளுமைகள்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 18, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150பெண்களுக்கான தனித்த ஆளுமைகள்

பெண்கள் எழுத்தில் அவர்களுக்கான ஆளுமைகள் பெருகிக் கிடக்கின்றன. அவர்களின் மணவாழ்விற்குப் பிந்தைய நிலையில் அவர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது அடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பல கவிதைகள் காட்டுகின்றன.

பெண்களின் கல்யாண வாழ்க்கை சிக்கலாகும் போது அவர்கள் தனித்து ஆளுமையுடன் வாழ வேண்டியவர்கள் ஆகிறார்கள்

‘‘திருக்கல்யாணம் இருபதுக்குள்
இரு பிள்ளைப்பேறும்
ஒரு சக கழுத்தியும் முப்பதுக்குள்
திருமாங்கல்யம் கழட்டல் நாற்பதில்
அடுத்து வரவிருக்கும்
மருமக்களை எதிர்கொள்ள
கற்றுக்கொண்டு வருகிறாள் ஐம்பதில்”
(இரா.மீனாட்சி, வாசனைப்புல், ப. 68)

இக்கவிதையில் வயதுகள் தோறும் தம்முடைய ஆளுமைகளை வளர்த்துக் கொள்கிறாள் பெண் என்பதை உணரமுடிகின்றது.

அப்பா என்பவர் ஆளுமை மிக்கவர் என்ற கோணத்தில் எல்லாக் குடும்பங்களிலும் அவருக்குப் பல விடுதலைகள் உண்டு. அவற்றை ஏளனமாகச் சித்தரிக்கிறது பார்வதி பாமாவின் கவிதை

அப்பாவாக இருந்தால்
தாமதமாக எழுந்துக்கலாம்
காலட்டியபடியே காபி குடிக்கலாம்
அம்மாவை மிரட்டி வேலை வாங்கி
சட்டை கசங்காம கிளம்பிப் போகலாம்.
… பிரண்ட்ஸோட சுத்தலாம் இஷ்டப்படி
யார் கேட்பார் அப்பாவைக் கேள்வி
அப்புறம் என்னதான் கவலை அப்பாவுக்கு

என்று கவிதை அப்பாவுக்குக் கவலைஇல்லை எனக் காட்டுகிறது.இருந்தாலும் இக்கவிதை முடியாவில்லை.
என்றாலும் அடிக்கடி சிடுசிடுத்து

அம்மா முகத்தில்
தட்டு வீசியெறியும் அப்பாவுக்குத்தர வேண்டும்
ஆயிரம் பக்கத்துக்கு ஹோம் ஓர்க்.
(க.பார்வதி பாமா, கடந்து போகாத மேகங்கள், ப. 80)

என்ற நிலையில் அம்மாவின் மேல் பச்சாதாபம் ஏற்படுத்துகிறது இக்கவிதை. அப்பா என்ற ஆளுமையைத் தன் பொறுமை என்னும் குணத்தால் ஆள்கிறாள் தாய். அதனைப் பெற்ற பிள்ளைகள் உணர்ந்தபோது கூட அப்பா உணரவில்லை என்பதே இங்கு வேதனையாகும்.

பெண்ணுக்கு அனைத்து ஆளுமைகளும் உண்டு என்று ஒரு கவிதை ஏளனப்படுத்துகிறது.

என் மனைவிக்கு
வீட்டில் முழுச் சுதந்திரம் உண்டு
எல்லா உரிமைகளும் உண்டு
அவள் விருப்பங்களுக்கு முழு மதிப்பு உண்டு
என்னிடம் அனுமதி பெறுகிற எல்லாவற்றிலும்
(ராணி, உயிரின் பிரவாகம். ப. 62)

என்ற கவிதையில் பெண்களின் ஆளுமை மேம்பாட்டு அளவு என்பது ஆண்களின் சட்டங்களுக்குள் உள்ளன என்பது தெளிவாகின்றது.

இன்னும் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களின் தற்கால நிலை குறித்து மதிப்பிடுகிறார் நிர்மலா சுரேஷ்
இன்னும் நாங்கள்
சித்திரங்கள் வரையப்படுகிற
சுவர்கள்தாம்
சித்திரங்கள் அல்ல

இன்னும் நாங்கள் மஞ்சள் பூசிக் கொள்கிறவர்கள்தாம்
எங்கள் சிந்தனைக்கு ஏது சொந்த நிறம்

இன்னும் நாங்கள் மருந்துகள் மட்டுமே
மருத்துவர்கள் அல்ல
இன்னும் நாங்கள் திசைகாட்டிகள் தாம்
திசைகள் அல்ல
இன்னும் நாங்கள் வீட்டின் நிறைகுடங்கள்தாம்
நாட்டின் வரைபடங்கள் அல்ல
இன்னும் நாங்கள் நிர்ணயங்களாய் அல்ல
வெறும் நிகழ்வுகளாகவே நின்றுவிடுகிறோம்
(பாலை வனப் பௌர்ணமிகள் –ப. 54-56)

என்று பெண்களின் ஆளுமை நிலையைக் காட்டுகிறது நிர்மலா சுரேஷின் கவிதை

பெண் ஒரு துளி என்று மாலதி மைத்ரியின் கவிதை சுட்டுகிறது.

ஒரு துளிதான்
ஓடும்போது துளியல்ல நதி
ஒருதுளிதான் என்றாலும் கடல்
ஒரு துளிதான் என்றாலும் உலகு
நீரின்றி அமையாது உலகு
(மாலதி மைத்ரி,நீரின்றி அமையாது உலகு, ப. 59)

என்று பெண் உலகத்துளியாக விளங்குவதை இக்கவிதை காட்டுகின்றது.

ஆண்பாதி , பெண் பாதி

சமுதாயத்தில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் எனப் பலரும் வாழ்கின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்த வாழும் வாழ்க்கை முறைமையைப் பெற்றுள்ளார்கள். குறிப்பாக ஆண்கள் முதலாம் நிலையில் பெண்கள் ஆண்களின் சார்புநிலையிலும், குழந்தைகள் இவர்கள் இருவரையும் சார்ந்த நிலையிலும் வாழ்ந்துவருகின்றனர். ஆணைச் சார்ந்து வாழும் வாழ்க்கையின் இயல்புகளைசெல்வ நாயகி என்ற கவிஞர் எனக்கும் வேண்டும் பாதி என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

‘‘உன் பிரகாசிப்புக்குப் பெரும்பாலும்
என் இருப்பே காரணம்
வெளிச்சப் புள்ளிகளுக்கு அருகில்
இருட்டாய் இருக்கவும் சம்மதம்

உன் வாழ்வின் செழிப்பு
என் வளம் சாரந்து அமையும்
துளிர்க்கும் செடிக்கடியில்
மண்ணாய் இருப்பதிலும் மகிழ்ச்சி

உன் ஆராவரங்கள் ரசித்து
அமைதியாய் நடக்கிறேன்
இயல்பு சலித்து நீ சாயும்போது
தோள் தந்து உதவும் யோசிப்புடன்”
(பனிப்பொம்மைகள் ப. 43)

என்ற நிலையில் கணவனின் முன்னேற்றத்திற்கு அடிக்கல்லாக விளங்குவது மனைவியின் கடமை என்று இக்கவிதை குறிக்கிறது. நான் என்ற ஆளுமையை மறந்து கணவனுக்கான நான் என்ற ஆளுமையில் இக்கவிதை பெண்களை வழி நடத்துகிறது.

ஏறுபோல் பீடு நடை நடக்கும் ஆண்களுக்குத் துணையாக அமைவது புகழ் புரிந்த இல்லாளின் கடமை என்பதான கட்டுமானத்தை இக்கவிதை கொண்டுள்ளது.

ஆளுமை வளர்ச்சிக்கான தடைகள்

பெண்ணின் ஆளுமை வளர்ச்சிக்குப் பல தடைகள் ஏற்படுவதுண்டு. சோதிடமும் ஒரு தடையென்று ஜி .விஜயபத்மாவின் கவிதை காட்டுகிறது.
பெண் மூலம் நிர்மூலம்
கேட்டையா கேட்காதே
ஆயில்யம் ஆத்தாடி அத்தைக்கு ஆகாதாம்
ஆணுக்கு மூலம் அரசாளுமாம்
கேட்டை அவனுக்குக் கோட்டை கட்டுமாம்
தோஷங்கள் பரிகாரங்கள் பெண்ணுக்கு மட்டும் தானாம்
(விஜய பத்மா, அகத்தனிமை, ப. 31)

என்ற நிலையில் சோதிடம் என்ற பெயரில் பெண்ணின் ஆளுமைக்குத் தடை விதிக்கப்படுகிறது என்கிறது இக்கவிதை.
மரபுக்கட்டுப்பாடுகளே பெண்களுக்கு மிகப்பெரிய ஆளுமைத் தடை என்கிறது ஜெ.செல்வகுமாரியின் கவிதை

ஒரு தாய்க்கு இரு பிள்ளைகள்
பிறந்த மகனுக்குப் பாலோடு சேர்த்து ஊட்டினாள் ஆண் உணர்வை
பிறந்த மகளுக்குப் பாலோடு சேர்த்து ஊட்டினாள் பெண் உணர்வை
அவனைக் காவலனாக வளர்க்கிறாள்
அவளைக் காப்பதற்காக வளர்க்கிறாள்
(ஜெ. செல்வகுமாரி, பெண்ணியம் பேசுகிறேன்.ப. 16)
என்ற கவிதையில் தாயின் மரபு காத்தலே பெண்ணுக்கான ஆளுமைத் தடை என்று திட்டவட்டமாக உரைக்கிறார் கவிஞர்.

வாழ்வின் இணையாக இருக்கும் ஆண்கள் பெண்களின் ஆளுமையை மதிப்பதில்லை என்ற இயல்பினைக் காட்டுகிறது இக்கவிதை

போகிற போக்கில்
எத்தித் தள்ளுகிறாய்
சொட்டு சொட்டாய்த் தொடரும் சாதனைகளை முற்றிலும்
துடைத்தெறியப் பிரயத்தனப்படுகிறாய்.

தனித்து ஓடிய பல மைல்களைக் காட்டிலும்
உன்னுடன் ஓடும் சில அடிகளில்
ஆசுவாசமற்று மூர்ச்சையாகிக் கிடக்கிறேன்.
(ஏ. ராஜலட்சுமி, என்கான காற்று, சில அடிகளில் ப. 19)

என்ற கவிதை பெண்களின் ஆளுமையை ஏற்காத ஆண்கள் மனோபாவத்தைக் காட்டுகின்றது.

இவ்வாறு கவிதைகளில் பெண்களில் ஆளுமை சார்ந்த சிந்தனைகள் வெளிப்பட்டுள்ளன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கான தனித்த ஆளுமைகள்”

அதிகம் படித்தது